Published:Updated:

“இந்த சண்டே எங்க டே!”

ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி டே

நெல்லையில் `ஜாலி டே’... அன்லிமிடெட் கொண்டாட்டம்

“இந்த சண்டே எங்க டே!”

நெல்லையில் `ஜாலி டே’... அன்லிமிடெட் கொண்டாட்டம்

Published:Updated:
ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி டே

நெல்லை வாசகிகள் ஆர்வமுடன் எதிர் பார்த்துக் காத்திருந்த அவள் விகடன் `ஜாலி டே' வாசகிகள் திருவிழா ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குக் காலை 9 மணி யில் இருந்தே வாசகிகள் விழா அரங்கான பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கத்துக்கு வரத் தொடங்கினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், வன பாதுகாப்புப் படையின் உதவி வன பாதுகாவலர் ஹேமலதா, பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பத்மினி கிருஷ்ணன் மற்றும் விகடன் முகவர்கள் சீதாலட்சுமி, பேராட்சி செல்வி ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். ராம் அகாடமி பரதநாட்டிய குழுவைச் சேர்ந்த சத்யா மற்றும் சுபசங்கரியின் பரத நாட்டியத்தோடும் வாசகிகளின் ஆரவாரத் தோடும் தொடங்கியது `ஜாலி டே'.

‘கலக்கப்போவது யாரு’ பாலா மற்றும் திபிகாஷி விழாவை கலகலப்பாகத் தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். விழாவின் டைட்டில் ஸ்பான்சர் சத்யா ஹோம் அப்ளையன்சஸ். பவர்டு பை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சேவரிட், அசோசியேட் ஸ்பான்சர்ஸ் சுப்ரீம் பர்னிச்சர்ஸ், கலர்ஸ் தமிழ், வென்யூ பார்ட்னர் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, ரேடியோ பார்ட்னர் சூரியன் எஃப்.எம், கேபிள் டிவி பார்ட்னர் மா டிவி... சிறப்பாக ஆரம்பித்தது விழா.

தொடக்க நிகழ்ச்சியில் ஹேமலதா, பத்மினி கிருஷ்ணன்...
, பம்பர் பரிசு வென்ற கோலம்மாள்
தொடக்க நிகழ்ச்சியில் ஹேமலதா, பத்மினி கிருஷ்ணன்... , பம்பர் பரிசு வென்ற கோலம்மாள்

முன்னதாக, ஆகஸ்ட் 6-ம் தேதி பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளியில் முன்தேர்வுப் போட்டிகள் நடைபெற்றன. பாட்டு, நடனம், நடிப்பு, ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி, ரங்கோலி, மெஹந்தி, கவிதைப்போட்டி, அடுப்பில்லா சமையல், பட்டிமன்றம், ஸ்கிரிப்ட் ரைட்டிங், ரிப்போர்ட்டிங், ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட், செல்ஃபி, ஒரு நிமிட வீடியோ என அனைத்து போட்டிகளிலும் வயது வித்தி யாசம் இல்லாமல் அசரடித்தனர் வாசகிகள்.

ஆகஸ்ட் 7-ம் தேதி மெயின் நிகழ்ச்சியில், `இந்த சண்டே எங்க டே’ என உற்சாகத்தில் மிதந்த தோழிகளை, நாம் நடத்திய இறுதிப் போட்டிகளும், வழங்கிய பரிசுகளும் இன்னும் அதிக ‘வைப்’க்கு கொண்டுபோய் நிறுத்தின.சத்யா ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று திரையிடப்பட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த ஐந்து பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. சேவரிட் நிறுவனம் நடத்திய சமையல் போட்டியில் சேமியாவை வைத்து சேமியா வடகம், சேமியா பர்ஃபி, சேமியா கீர், சேமியா பிரியாணி என வித்தியாசமான உணவுகளை செய்து அசத்திய ஐந்து வெற்றி யாளர்களுக்கு, சேவரிட் நிறுவனத்தின் பிராண்ட் மேனேஜர் சுகேல் பரிசுகளை வழங்கினார். `கலக்கப் போவது யாரு’ பாலா மற்றும் விக்கி சிவாவின் மிமிக்ரி ஷோவால் அரங்கமே மகிழ்ந்து ஆர்ப்பரித்தது. பாலாவை பார்த்து, `பருத்தி எடுக்கையிலே...’ பாடலை ஆண், பெண் குரலில் பாடி சரஸ்வதி பாட்டி அழகாக அட்ராசிட்டி செய்தது, க்யூட்டு.

“இந்த சண்டே எங்க டே!”

உணவு இடைவெளிக்குப் பிறகு ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிகளின் சிறப்பு நடனம் விழாவின் கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. தொடர்ந்து, ஆன் த ஸ்பாட் போட்டிகள் நடத்தப்பட்டன. சுப்ரீம் ஃபர்னிச்சர்ஸ் நடத்திய மியூசிக்கல் சேரில் போட்டியாளர் பானுமதியும் பாலாவும் மாறி மாறி செல்ல வம்பு இழுத்துக்கொண்டே போட்டியை கூடுதல் கலகலப்பாக்கினர்.

ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த ஓரங்க நாடகத்தில் முத்துலட்சுமி நடித்து முடித்த போது, அசந்துபோனது அரங்கம். கரூரைச் சேர்ந்த வாசகி நதியா கோமாளி வேடமிட்டு அழுது உருண்டு நடித்தபோது, கைதட்டல்கள் அடங்க நேரமானது.

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் தங்க நகை எடையைக் கணிக்கும் போட்டி, 'மேட்ச் தி பேங்கிள்', லக்கி ட்ரா போட்டியில் வெற்றி பெற்ற மூன்று பேருக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.

அடுத்தது, பெண்களுக்குப் பிடித்த சீரியல் ஏரியா. கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பதில் கூறி பரிசுகளை வாங்கிக் குவித்தனர் வாசகிகள். மாலை நேர சிறப்பு அழைப்பாளர்களான சூரியன் எ.ஃப். எம் தொகுப்பாளர்கள் ஆர்ஜே ரம்யா மற்றும் ஆர்ஜே கார்த்திகா வாசகிகளுடன் கலகல உரையாடி மேலும் உற்சாகப்படுத்தினர். இடையிடையே பாலா மற்றும் விக்கி சிவாவின் காமெடியால் அரங்கமே வயிறு வலிக்க சிரித்தது, ஜாலி கலாட்டா.

இறுதியாக, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பம்பர் குலுக்கல் பரிசு நேரம். சத்யா மற்றும் அவள் விகடன் இணைந்து வழங்கிய இந்தப் பரிசுக்கு உரியவரை, குலுக்கல் முறையில் தேர்ந் தெடுத்துக் கொடுத்தது ஒரு சுட்டிக் குழந்தை. பெயர் அறிவிக்கப்படவிருந்த கவுன்ட் டவுன் நிமிடங்களில், அரங்கத்தின் இதயத் துடிப்பு வெளியே கேட்பது போல ஒரு சஸ்பென்ஸ் மொமென்ட்.

`மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கோலம்மாள்...’ என்று பெயர் அறிவிக்கப்பட, சந்தோஷ அதிர்ச்சியுடன் மேடைக்கு வந்தார் கோலம்மாள் பாட்டி. ஒன்றல்ல, இரண்டல்ல இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் பம்பர் பரிசாக பாட்டியின் கைகளில் குவிக்கப்பட, ‘`இதையெல்லாம் வண்டி பிடிச்சுத்தான் வீட்டுக்கு அள்ளிட்டுப் போகணும் போல’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்ன பாட்டி,

``நா ஆனந்த விகடன், அவள் விகடன் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். இதுக்கு முன்னாடியும் நான் ஜாலி டேல கலந்துட்டிருக்கேன். இனியும் வருவேன். சொல்லப்போனா, ஒவ்வொரு `ஜாலி டே'யுமே எங்களுக்கெல்லாம் பம்பர் பரிசுதான்’’ என்றார் முகம் கொள்ளாத சிரிப்புடன்.

“இந்த சண்டே எங்க டே!”

மேலும், விழாவில் கலந்துகொண்ட அனைத்து வாசகிகளுக்கும் கிஃப்ட் ஹேம்ப்பர் வழங்கப்பட்டன. ‘`திறமைக்கு போட்டிகள், கொண்டாட்டத்துக்கு நிகழ்ச்சிகள், சந்தோஷத்துக்கு பரிசுகள், வயித்துக்கு சாப்பாடு, ஸ்நாக்ஸ்னு வழக்கம்போல இந்த ரெண்டு நாளும், அம்மா வீட்டுக்குத் திருவிழாவுக்கு வந்துட்டுப் போறது போல ஒரு சூப்பர் சந்தோஷத்தை பேக் பண்ணி கொடுத்துடுச்சு ஜாலி டே’’

- இப்படி பலவித பகிரல்களுடன் நன்றி தெரிவித்து விடைபெற்றுச் சென்றனர் நெல்லை ராணிகள்.

கேட்கிறது... ‘அடுத்த ஜாலி டே, எந்த ஊர்ல, எப்போ..?’ என்ற உங்கள் குரல் கேட்கிறது. அறிவிப்பு விரைவில்!