Published:Updated:

`சுட்டி விகடனும் எங்களுக்கு ஆசிரியர்தான்!' - திருவாரூர் இன்ஃபோ பரிசளிப்பில் நெகிழ்ந்த மாணவர்கள்

திருவாரூர் இன்ஃபோ பரிசளிப்பு
திருவாரூர் இன்ஃபோ பரிசளிப்பு

``எதிர்காலத்தில் நீங்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள இது உறுதுணையாக இருக்கும்”

சுட்டி விகடன் நடத்திய திருவாரூர் இன்ஃபோ தேர்வு பரிசளிப்பு விழா, திருவாரூர் அம்மையப்பனில் உள்ள பாரத் கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டார்கள்.

சுட்டி விகடன் விழா
சுட்டி விகடன் விழா

சுட்டி விகடன், பள்ளி மாணவர்களிடம், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தைப் பற்றிய பொது அறிவை வளர்க்கும் நோக்கத்துடன், அந்தந்த மாவட்டங்களின் ஆச்சர்யத் தகவல்களை தொடுத்து இன்ஃபோ 200 என்ற தலைப்பில் சிறப்பிதழை வெளியிட்டு, தேர்வு நடத்தி, பரிசு வழங்கி வருகிறது. திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்ஃபோ 200 தேர்வு நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்திலும் தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடத்தப்பட்டது.

`கூகுளிலும் கிடைக்காத தகவல்கள்; OMR ஷீட்டில் தேர்வு'!- களைகட்டிய சுட்டி விகடன் `தூத்துக்குடி 200'

இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், ``மாணவர்கள் தங்களுடைய பாடநூல் வழியாக வெளிவுலகத்தைப் பற்றிப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சொந்த மாவட்டத்தைப் பற்றிப் பெரும்பாலும் அறிந்துகொள்வதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாகத்தான், பள்ளியில் படிக்கும்போதே, தங்கள் மாவட்டம் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்ள, உங்களுக்கு அற்புதமான வாய்ப்பை சுட்டி விகடன் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ள இது உறுதுணையாக இருக்கும்” என்றார்.

`சுட்டி விகடனும் எங்களுக்கு ஆசிரியர்தான்!' - திருவாரூர் இன்ஃபோ பரிசளிப்பில் நெகிழ்ந்த மாணவர்கள்

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன், பாரத் கேட்டரிங் கல்லூரிச் செயலாளர் காலைக் கதிரவன், திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா, வேலுடையார் கல்வி நிறுவனங்களின் சேர்மன் தியாகபாரி, ரோட்டரி கிளப் ஆஃப் திருவாரூர் மிட் டவுன் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். பரிசுபெற்ற மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு, ``இந்த இன்ஃபோ தேர்வு எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு. எங்க மாவட்டத்தைப் பத்தி இதுவரைக்கும் எங்களுக்கே தெரியாத பல தகவல்களை சுட்டி விகடன் சொல்லிக்கொடுத்திருக்கு. சுட்டி விகடனும் எங்களுக்கு ஆசிரியர்தான்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு