Published:Updated:

“கிருஷ்ணர் என்றாலே கலகம்தான்!”

நூல் வெளியீட்டு விழாவில்...
பிரீமியம் ஸ்டோரி
News
நூல் வெளியீட்டு விழாவில்...

நான் வெளியிடுகிறேன் என்பதால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தார்களோ என நினைத்தேன்.

இசையின் பின்னணியில் சர்ச்சை வெடிப்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில், ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழுவின் செயல்பாடுகளை விமர்சிக்கும்வகையில் சமூக வலைதளத்தில் பாடகர் ஒருவர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள ‘செபாஸ்டியன் & சன்ஸ்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு கலாக்ஷேத்ரா அனுமதி மறுத்தது, பெரும்விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

‘செபாஸ்டியன் & சன்ஸ்’  புத்தகம்
‘செபாஸ்டியன் & சன்ஸ்’ புத்தகம்

‘கர்னாடக இசைக் கலைஞர்கள், மிருதங்கத்தை புனிதமாகக் கருதுகின்றனர். ஆனால், மிருதங்கத்தை உருவாக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்னாடக இசை உலகம் எந்த அங்கீகாரத்தையும் கொடுப்பதில்லை. காரணம், சாதிய பாகுபாடு’ - ‘செபாஸ்டியன் & சன்ஸ்’ புத்தகத்தின் சாரம்சம் இதுதான். தவிர, தோல் இசைக்கருவிகளைச் சுற்றி பன்னெடுங்காலமாக நிகழும் மறைக்கப்பட்ட அரசியல் குறித்தும் விரிவாகப் பதிவுசெய்துள்ளது இந்த நூல்.

பிப்ரவரி 2-ம் தேதி மாலை சென்னை கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷன் அரங்கத்தில்தான் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. அதற்காக கலாக்ஷேத்ராவில் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. ஆனால், விழாவுக்கு ஒரு நாள் முன்பாக திடீரென அனுமதியை ரத்துசெய்தது கலாக்ஷேத்ரா நிர்வாகம். இதற்கு, பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. கலாக்ஷேத்ராவின் கதவுகள் சாத்தப்பட்டாலும், ‘ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம்’ கல்லூரியின் கதவுகள் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் திறக்கப் பட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘கலாக்ஷேத்ராவின் முடிவு வெட்ககரமானது’ என ட்வீட் செய்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அத்துடன், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே தன் மனைவி நளினி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருடன் விழாவுக்கு வந்துவிட்டார் சிதம்பரம். ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, அரிபரந்தாமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், இசைக் கலைஞர்களும், இசை ஆர்வலர்களும் பெரும்திரளாக வந்திருந்தனர். அரங்கம் நிரம்பியதால், அரங்கத்துக்கு வெளியிலும் திரையில் நிகழ்ச்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் ப.சிதம்பரம், ராம்
விழாவில் ப.சிதம்பரம், ராம்

இந்த நூலை வெளியிட்டுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘நான் வெளியிடுகிறேன் என்பதால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தார்களோ என நினைத்தேன். ஆனால், இந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துகள்தான் அனுமதி மறுக்கக் காரணமாக இருந்துள்ளன. இன்றைக்கு மனுதர்மம்தான் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. அதே மனுதர்மமே, கலாக்ஷேத்ராவில் நடைபெற இருந்த விழாவை ரத்துசெய்துள்ளது. ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்றார் கிருஷ்ணர். சமத்துவமும் ஜனநாயகத்தையும் பேசுகிறார் இந்த கிருஷ்ணா. கிருஷ்ணருக்குப் பிரச்னை என்றவுடன் அவருக்கு உதவி செய்ய ராமர் (என்.ராம்) வந்திருக்கிறார். கிருஷ்ணர் என்றாலே கலகம்தான். இப்போது எழுந்துள்ள கலகம் கேள்விகளை எழுப்பட்டும்; சிந்திக்கவைக்கட்டும். அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றியாக இருக்கும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நூலைப் பெற்றுக்கொண்ட வரலாற்று ஆசிரியர் ராஜ்மோகன் காந்தி, ‘‘மேல்தட்டு மக்கள் - கீழ்த்தட்டு மக்கள் இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் ஒருவருக்கொருவரின் தேவை இருக்கிறது. ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் இந்தியச் சமூகத்தின் படிநிலைகளை இந்த நூல் படம்பிடிக்கிறது” என்றார்.

நூல் வெளியீட்டு விழாவில்...
நூல் வெளியீட்டு விழாவில்...

டி.எம்.கிருஷ்ணாவிடம் பேசினோம். “என் முதல் புத்தகத்தில் கர்னாடக சங்கீதம்குறித்த வரலாற்றையும் அதிலுள்ள அரசியலையும் பதிவுசெய்திருந்தேன். ஆனால், இசைக்கருவிகளை உருவாக்குபவர்கள் குறித்து அதில் எதுவும் பதிவுசெய்யாதது எனக்கு ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், மூன்று ஆண்டுகளாக கள ஆய்வு மேற்கொண்டு இந்த நூலை எழுதியுள்ளேன்” என்றார்.

விழாவுக்கான அனுமதியை ரத்துசெய்தது குறித்து கலாக்ஷேத்ராவின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் பேசினோம். “கலாக்ஷேத்ரா அமைப்பு மத்திய அரசின் கலாசாரத் துறையின்கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனம். சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் விதத்தில் இருக்கும் எந்த நிகழ்வையும் எங்கள் நிறுவனத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம். எங்கள் தரப்பின் முழு விளக்கத்தையும் விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்” என்றார்.