Published:Updated:

சி.இ.ஓ-வுடன் ஒரு நாள்... தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டிய சி.கே.ஆர்!

பயிற்சி

பிரீமியம் ஸ்டோரி

சிலபல ஆண்டுகளுக்குமுன்பு சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திவருகிறவர்களுக்குத் தங்களுடைய செயல்பாடுகள் குறித்து நிறையவே கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கவே செய்யும். இந்தக் கேள்விகளுக்கான பதிலை யாரிடம் போய்க் கேட்பது என்று தெரியாமலே, பலரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் தொழிலைச் செய்துகொண்டிருப்பார்கள். இது மாதிரியான தொழில்முனைவோர்களை, வெற்றிகரமாகத் தொழில் செய்துவரும் ஒருவரைச் சந்திக்க வைத்து, அவர்களுக்கு எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கச் செய்தால், மேற்கொண்டு தொழிலை வளர்க்க உதவும் அல்லவா!

இந்த ஐடியாவுக்கு செயல்வடிவம் தந்திருக்கிறது ‘டை சென்னை’ (TiE - Chennai) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘தி இன்டஸ் ஆந்த்ரபிரினர்’ அமைப்பு. மதுரையில் உள்ள ‘யெஸ்’ (Young Entrepreneur School) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 14 தொழில்முனைவோர்களைத் தேர்வு செய்து, அவர்களைக் கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதனைச் சந்திக்க வைத்தது ‘டை’.

சி.இ.ஓ-வுடன் ஒரு நாள்... தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டிய சி.கே.ஆர்!

‘எ டே வித் தி சி.இ.ஓ’ என்கிற இந்த நிகழ்ச்சியில் மதுரை, ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம் ஆகிய பல ஊர்களிலிருந்து 14 தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு தொழில்களைச் செய்துவரும் இவர்களுக்கு அந்தத் தொழிலைச் செய்யத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி, என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும், என்னென்ன தவறுகளைச் செய்யக் கூடாது என்பது பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னார் சி.கே.ஆர். அதில் அவர் பேசியதன் சுருக்கம் இனி...

விற்பனையைப் பெருக்கும் சூட்சுமம்

‘‘உங்கள் தொழிலில் நீங்கள் ஜெயிக்க வேண்டுமெனில், ஸ்ட்ராட்டஜி, கட்டமைப்பு என்று சொல்லப்படுகிற ஸ்ட்ரக்சர், மனிதவளம், பிராசஸ் ஆகியவை நான்கு விஷயங்களில் சரியாக இருக்க வேண்டும். ஸ்ட்ராட்டஜியைப் பொறுத்தவரை, மூன்று விஷயங்கள் முக்கியம். நீங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொருள் புதுமையானதாக இருக்கவேண்டும். நீங்கள் இருக்கும் ஊரில் உள்ள அனைத்துக் கடைகளிலும் விற்கப்படும் பொருளைத்தான் நீங்களும் விற்கிறீர்கள் எனில், மக்கள் உங்களைத் தேடிவந்து அந்தப் பொருளை ஏன் வாங்கவேண்டும்? அதை யாரிடம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமே! ‘நீங்கள் தயாரிக்கும் பொருள் அல்லது பிராண்ட் ரொம்ப ஸ்பெஷல். அது உங்களிடம் மட்டுமே கிடைக்கும்’ என்கிற நிலை இருந்தால்தான், உங்கள் தயாரிப்பைத் தேடி வந்து வாங்குவார்கள்.

இரண்டாவது, நீங்கள் விற்கும் பொருள் என்னதான் புதுமையானதாகவும் தரம் மிக்க தாகவும் இருந்தாலும், அது உங்களுக்கு மட்டுமே தெரிந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதை, கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள்மூலம் எடுத்துச் சொன்னால், நீங்கள் தயாரிக்கும் பொருளை மக்கள் தேடிவந்து வாங்குவார்கள். இருபது ஆண்டுகளுக்குமுன், எங்களுக்குத் தெரிந்த அளவில் நாங்கள் விளம்பரங்களை எடுத்தோம். ஆனால், இன்று மல்டி நேஷனல் நிறுவனங்கள் தயாரிக்கும் விளம்பரங்களுக்கு இணையாக எங்கள் விளம்பரங்கள் இருக்கின்றன.

சரி, புதுமையான பொருளை, தரமாக உற்பத்தி செய்து, அதனை எல்லோருக்கும் தெரியப்படுத்தி விட்டீர்கள். மக்கள் உங்கள் தயாரிப்பை வாங்கக் கடைக்குப் போகிறார்கள். கடையில் உங்கள் பொருள் இல்லை என்றால் எரிச்சல் அடையத்தானே செய்வார்கள்? எனவே, எல்லாக் கடைகளிலும் உங்கள் தயாரிப்புகள் கிடைக்கிற மாதிரி, விநியோகம் செய்யுங்கள். தொழில் ஆரம்பித்த காலத்திலேயே எல்லாக் கடைகளிலும் உங்கள் தயாரிப்புகள் இருக்கிறமாதிரி செய்வது சவால்தான். என்றாலும், தொடக்கக் காலத்திலிருந்தே இந்த விஷயத்தில் அக்கறையுடன் செயல்பட்டீர்கள் என்றால், உங்கள் தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்கள் உங்களிடமே காலகாலத்துக்கும் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

புதிதுபுதிதாக யோசியுங்கள்

புதுப்புது பொருள்களைத் தயாரித்து வெளியிடுவதற்கும் தயாரித்த பொருள்களை மார்க்கெட்டிங் செய்வதற்கும் புதிதுபுதிதாக யோசியுங்கள். ஒரு நாளைக்கு பத்து நிமிஷம் உட்கார்ந்து யோசித்தால், புதிய ஐடியாக்கள் வந்து கொட்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு பேக்கரி வைத்திருக்கிறீர்கள் எனில், காதலர் தின கேக் பற்றி விளம்பரங்கள் செய்யுங்கள். அது முடிந்தால், ‘அம்மாக்கள் தினத்தன்று உங்கள் அம்மாவுக்கு இந்த கேக்’ என்று விளம்பரப்படுத்துங்கள். அதுவும் முடிந்துவிட்டால், ‘அப்பாக்கள் தினத்தன்று உங்கள் அப்பாவுக்கு இந்த கேக்’ என்று சொல்லி, இன்னொரு விளம்பரத்தை வெளியிடுங்கள். இப்போதெல்லாம் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் சிறப்பானதொரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், விற்பனைக்குப் பஞ்சமே இருக்காது.

சி.இ.ஓ-வுடன் ஒரு நாள்... தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டிய சி.கே.ஆர்!

செலவைக் குறைப்பதில் மாற்றி யோசியுங்கள்

மூலப்பொருள்களை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனித்துச் செயல்படுவதன்மூலம் உங்கள் லாபத்தைக் கணிசமாக உயர்த்திக் கொள்ள முடியும். உதாரணமாக, நாங்கள் ‘சின்னி’ என்கிற பெயரில் கடலை மிட்டாய் விற்பனை செய்கிறோம். இதற்குத் தேவையான வெல்லத்தை நாங்கள் மொத்த விலை கடையில்கூட வாங்கி வந்தோம். ஆனால், இப்போதெல்லாம் நாங்களே கரும்பை வாங்கி, வெல்லம் தயாரித்துத் தருபவர்களிடம் தருகிறோம். அதை வெல்லமாக மாற்றித் தருவதற்கான கூலி மட்டும் தருகிறோம். இதனால் எங்களுக்குத் தேவையான தரத்தில் வெல்லத்தைத் தயார் செய்துகொள்வதுடன், எங்கள் தயாரிப்புச் செலவு மொத்த விலையை விடக் குறைந்துவிடுகிறது.

ஊழியர்களுக்கு முதல் மரியாதை

ஒரு நிறுவனத்தின் முதல் மரியாதை ஊழியர் களுக்குத்தான். சரியான நபர்களைச் சரியான வேலைகளில் நியமிக்க வேண்டும். நமக்கான ஊழியர்களை நாம் செய்துவரும் தொழில் களிலிருந்தே எடுப்பதைவிட வேறு தொழில் களிலிருந்து எடுத்தால், நல்ல ரிசல்ட் கிடைக்கும். உதாரணமாக, மார்க்கெட்டிங் செய்வதற்கு டெலிகாம் துறையிலிருந்து நாங்கள் ஆட்களை எடுத்தோம். அவர்களுக்கு எங்கள் துறை சார்ந்த மார்க்கெட்டிங் புதிது என்பதால், நான்கைந்து மாதங்களுக்கு அவர்களுக்கு எங்கள் துறை தொடர்பான மார்க்கெட்டிங்கை நன்றாக சொல்லித் தந்தோம். அதன்பிறகு, அடுத்த சில மாதங்களில் அவர்களுக்குத் தருகிற சம்பளத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாகச் சம்பாதித்துத் தருகிற அளவுக்கு நன்றாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். இதேபோல, பால் தொழில் தொடர்பான பிராசஸிங்கைக் கவனித்துக்கொள்ள அதே தொழிலிலிருந்து எடுக்காமல், ஆட்டோ மொபைல் தொழிலிலிருந்து எடுத்தோம். இவர்களால் எளிதாகத் தொழிலைக் கற்றுக்கொள்ள முடிந்ததுடன், சிறப்பாகச் செயல்பட்டு, எங்கள் தொழிலை வளர்த்தெடுக்க மிகவும் உதவினார்கள்.

பொறுப்பைத் தெளிவாக்குங்கள்

நிறுவனத்தின் ஊழியர் என்பதற்காகப் பல வேலைகளை ஒருவரிடமே தருவது கூடாது. எங்கள் மார்க்கெட்டிங் பிரிவில் பால் விநியோகத்தைக் கவனிப்பவர் காலை நான்கு மணிக்கே களத்தில் இருப்பார். இவரிடம் இந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தரமாட்டோம். காலை 10 மணிக்கு மார்க்கெட் செய்யச் செல்பவரிடம் நெய், மில்க்சேக் போன்றவற்றைத் தருவோம். இவர் பால் பற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை. இப்படி ஒவ்வொரு வேலைக்கும் ஊழியர்களை நியமனம் செய்து செயல்படச் செய்வதன்மூலம் அவர்களிடமிருந்து அதிகமான வருமானத்தைச் சம்பாதித்துத் தருகிறமாதிரி உழைப்பைப் பெறமுடியும். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினம் என்றாலும், ஓரளவுக்கு வளர்ந்தபிறகு இதைச் செய்தால், வளர்ச்சி பிரமாதமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று விதமான ஊழியர்கள்

உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதலாமவர்கள், வேல்யூ கிரியேட்டர்கள். உதாரணமாக, விற்பனையாளர்கள். இவர்கள்தான் நிறுவனத்தின் வருமானத்தை யும் லாபத்தையும் அதிகரிக்க உதவுபவர்கள். இரண்டாமவர்கள், என்ஹான்சர்கள் (enhancer). இவர்களால் விற்பனையை அதிகரிக்க முடியாது என்றாலும், மதிப்பைக் கூட்டுவதன்மூலம் லாபத்தை அதிகரிப்பார்கள். உதாரணமாக, மூலப் பொருள்களை வாங்கும் பர்ச்சேஸ் மேனேஜர்கள். இவர்கள்தான் தரமான மூலப்பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்குவதன்மூலம் லாபத்தை அதிகரிப்பவர்கள். மூன்றாமவர்கள், புரடக்டர்கள். அதாவது, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், ஆபீஸ் அசிஸ்டன்டுகளைப் போன்றவர்கள்.

இந்த மூன்று வகையான ஊழியர்களில், வேல்யூ கிரியேட்டர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் இழக்கக் கூடாது. அதேபோல, வருமானத்தை அதிகரிப்பதிலோ அல்லது லாபத்தை அதிகரிப்பதிலோ எந்த வகையிலும் உதவாத ஓர் ஊழியரைத் தொடர்ந்து வேலையில் வைத்திருக்கவும் கூடாது. அடுத்த ஆறு மாதத்தில் அவர் தன்னை மாற்றிக்கொள்வார் என்று நீங்கள் உறுதியாக நினைத்தால் மட்டுமே அவர்களை வேலையில் தொடர அனுமதிக்கலாம்.’’

இப்படிப் பல விஷயங்களை ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துச் சொன்னார் சி.கே.ஆர். ஒரு நிறுவனத்தின் மனிதவளப் பிரிவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதை அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர் மேனேஜரும், பட்ஜெட் போட்டு சரியாகச் செலவுசெய்து, கணக்குவழக்குகளைச் சரிபார்ப்பது குறித்து அந்த நிறுவனத்தின் இன்டர்னல் ஆடிட்டரும் எடுத்துச் சொன்னது சிறப்பான விஷயமாக இருந்தது.

தங்கள் தொழிலில் இருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வை சி.கே.ஆரிடம் தெரிந்துகொண்ட இந்தத் தொழில்முனைவோர்கள், தங்கள் தொழிலை இன்னும் சிறப்பாகச் செய்யத் தேவையான உற்சாகத்துடன் தங்கள் ஊருக்குக் கிளம்பிச் சென்றார்கள்!

சி.இ.ஓ-வுடன் ஒரு நாள்... தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டிய சி.கே.ஆர்!

இது இரண்டாவது நிகழ்ச்சி!

‘‘டை ரீச் இனிஷி யேட்டிவ்’ என்பதன் ஓர் அங்கம்தான் இந்த நிகழ்ச்சி. கடந்த 12-ம் தேதியன்று நடந்த நிகழ்ச்சியில் செர்வியான் நிறுவனத்தின் ரங்கராஜன் மதனகோபால், கேரட்லேன் நிறுவனத்தின் மிதுன் செட்டி, ரேஜ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கார்த்திக் குமார் ஆகியோரைத் தொழில்முனைவோர்கள் சந்தித்துப் பேசினார்கள். இன்று நடப்பது இரண்டாவது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு இன்றைய தொழிலதிபர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகம் முழுக்க இருக்கும் தொழில் முனைவோர்கள் இதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார் ‘டை’ சென்னை அமைப்பின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் அகிலா ராஜேஷ்வர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு