Published:Updated:

செம டிஸ்ப்ளே, சொதப்பல் கேமரா... எப்படி இருக்கிறது விவோ S1?

விவோ S1
News
விவோ S1

18,000 ரூபாய் விலைக்கு நியாயம் செய்கிறதா இந்த விவோ S1!

இப்போதெல்லாம் ஆன்லைன் விற்பனை பெரும்பாலான மொபைல் நிறுவனங்களின் முதன்மையான டார்கெட்டாக இருந்தாலும் கூட ஆஃப்லைன் மார்க்கெட்டையும் அவை கவனிக்கத் தவறுவதில்லை. அப்படி விவோ நிறுவனம் ஆஃப்லைன் மார்க்கெட்டை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்தான் விவோ S1. தொடக்கத்தில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே கிடைத்து வந்த இது பின்னர் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்தது. எப்போதும் போலவே இதற்கும் பெரிய அளவில் விளம்பரம் செய்தது விவோ நிறுவனம்.

எப்படி இருக்கிறது விவோ S1?

வடிவமைப்பு

இந்த செக்மென்ட்டில் புதிதாக அறிமுகமாகும் மொபைல்கள் கிளாஸ் பில்டுக்கு மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் விவோ இன்னமும் பிளாஸ்டிக்கை மட்டுமே அதன் மொபைல்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. விவோ S1 போனும் பிளாஸ்டிக்கால் கட்டமைக்கப்பட்டதுதான். இந்த விலைக்கு ஒரு ப்ரீமியம் லுக்கை போன் வாங்குபவர்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள். ஆனால் அதற்கு மாறாக பிளாஸ்ட்டிக்கால் உருவாக்கப்பட்ட பின்பக்கம் மற்றும் ஃப்ரேம் ஆகியவை பெரிதாக ப்ரீமியம் லுக்கைத் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

விவோ S1 வடிவமைப்பு
விவோ S1 வடிவமைப்பு

அதுவும் மற்ற பிளாஸ்டிக் பேக் போன்களுடன் ஒப்பிடும் போது இது அவ்வளவாகத் தரமானதாகத் தெரியவில்லை. போனை கையில் வைத்திருக்கும்போது எடை குறைவாக, கைக்கு அடக்கமாகத் தெரிந்தாலும் இந்த போனில் பில்டு குவாலிட்டி சுமாராகவே இருக்கிறது. போனின் இடது பக்கமாக கூடுதலான ஒரு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது ஏழாயிரம் ரூபாய்க்குக் குறைவான போன்கள் கூட Type-C போர்ட்டை கொண்டிருக்க இந்த போனில் இன்னும் பழைய மைக்ரோ USB போர்ட்தான் இருக்கிறது.

டிஸ்ப்ளே

போனில் இருக்கும் முக்கிய நல்ல விஷயமாக இதில் இருக்கும் Super AMOLED டிஸ்ப்ளேவைச் சொல்லலாம். இதில் இருப்பது ஃபுல் வியூ டிஸ்ப்ளே கிடையாது சிறிய அளவிலான நாட்ச் ஒன்று இருக்கிறது. டிஸ்ப்ளேவில் நிறங்கள் நன்றாகத் தெரிகின்றன.

விவோ S1
விவோ S1

கூடுதலாக இன்கிளாஸ் ஃபிங்கர்ப்ரின்ட் சென்ஸாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்ப்ளே என்பதால் கேம் மற்றும் திரைப்படம் போன்ற எண்டெர்டெயின்மெண்ட் விஷயங்களுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.

பேட்டரி

விவோ S1
விவோ S1

4500 mAh பேட்டரியை இதில் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலமாக ஒரு முறை சார்ஜ் செய்தால் சாதாரணமான பயன்பாட்டில் ஒரு நாள் போன் தாக்குப்பிடித்து விடுகிறது. 18W சார்ஜிங் ஆப்ஷன் இருப்பதால் சார்ஜ் வேகமாகவே ஏறுகிறது. அதற்குத் தேவைப்படும் சார்ஜரும் போனுடன் கொடுக்கப்படுகிறது.

பர்ஃபார்மென்ஸ்

MediaTek Helio P65 SoC என்ற கொஞ்சம் பழைய ப்ராஸசரையே பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் பர்ஃபார்மன்ஸும் சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் சிறப்பாக இல்லை. PUBG போன்ற ஹைஎண்ட் கேம்கள் ஒரு சில நேரங்களில் தடுமாறுகின்றன.

Vivo S1கேமரா
Vivo S1கேமரா

மற்றபடி வழக்கமான பயன்பாட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை. இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் விவோவின் Funtouch இதில் இருக்கிறது. மற்ற இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது. சிலருக்குப் பழகிவிடும், சிலருக்குப் பிடிக்காமல் போகும். இது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்ததே!

கேமரா

இப்போது வெளியாகும் புதிய போன்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் கேமராவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தெரியும். காரணம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு போனில் முதலில் கவனிப்பது கேமரா குவாலிட்டியைத்தான். ஆனால் விவோ நிறுவனம் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 16 MP+ 8 MP+ 2 MP என மூன்று கேமராக்கள் இதில் இருக்கின்றன.

Vivo S1 camera
Vivo S1 camera

இதில் 8MP கேமரா அல்ட்ராவைடு கேமராவாகவும், 2 MP கேமரா டெப்த் சென்ஸாராகவும் இருக்கிறது. இத்தனை கேமரா இருந்தாலும் கூட போட்டோவின் தரம் சுமாராகவே இருக்கிறது. ரியர் கேமராவில் எடுக்கப்படும் போட்டோக்களும் சரி ஃபிரன்ட் கேமராவில் எடுக்கப்படும் போட்டோக்களும் சரி எதுவும் 'அட' சொல்லவைப்பதாக இல்லை.

ப்ளஸ்

  • பேட்டரி

  • டிஸ்ப்ளே

மைனஸ்

  • பில்டு குவாலிட்டி

  • கேமரா

  • பர்ஃபாமென்ஸ்

விலை

4GB + 128GB - 17,990

6GB + 64GB - 18,990

6GB + 128GB - 19,990

இறுதிக் கருத்து

கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற வசதிகள் இந்த போனில் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதே விலையில் இதை விடவும் சிறந்த ப்ராஸசர், கேமராக்களுடன் பல போன்கள் இருக்கின்றன. எனவே இந்த போனை வாங்குவதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்து விட்டு வாங்குவது நல்லது.