உங்கள் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் (know your district) என்ற தலைப்பில், சுட்டி விகடனுடன் ஒவ்வொரு மாவட்டம் பற்றிய 200 தகவல்கள்கொண்ட இணைப்பிதழ், சுட்டிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. பிறகு, நீட் மற்றும் இதரப் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் OMR ஷீட், வினாத்தாள் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, `நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்’ என்ற தலைப்பில், சென்னைப் பள்ளிகளில் தேர்வு நடத்தி, அதன் வெற்றியாளர்களுக்குப் பரிசு அளிக்கும் விழாவை, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறை, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐகான்ஸுடன் சுட்டி விகடன் இணைந்து வழங்கியது. டிசம்பர் 9-ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் சியூஐசி அரங்கத்தில் நடந்த நிகழ்வு, மாணவர்களின் அறிவுத் திருவிழாவாக இருந்தது.
இந்த விழாவில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் என 800-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்கள்.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய தமிழக அரசின் கூடுதல் நிதிச் செயலர், மருத்துவர் ஆனந்தகுமார்ஐ.ஏ.எஸ், “மாணவர் களாகிய நீங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் போய் நிற்கும்போது, உங்களுக்கான வெற்றி வந்துசேரும்’’ என்றார்.
சென்னைப் பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பி.குமாரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ் “இந்தச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அதைக் கல்வியானது சமமாகக் கட்டமைத்துக் கொடுக்கிறது. நாம் கற்கும் கல்வி, போக்குவரத்து விதிகளை மதிப்பதில் தொடங்கி, எதிர்கால இந்தியாவைக் கட்டமைப்பது வரை வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும்” என்றார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன், “கற்பனை இல்லாமல் படிக்கும் பாடம், செரிமானம் ஆகாத உணவைச் சுவைப்பதற்குச் சமம். அதனால், எப்போது படித்தாலும், அதுசார்ந்த கற்பனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் எவ்வளவு முன்னேற வேண்டும் என நினைக்கிறோமோ, அதற்கேற்ப தேடித் தேடிப் படிக்க வேண்டும். நான் ஒரு கால்நடை மருத்துவர். ஆனால், கல்வி தொடர்பாகத் தேடித் தேடிப் படித்ததால்தான், இன்று நமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இணைந்திருக் கிறேன்” என்றார்.
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, “வாழ்க்கையை எதிர்கொள்ள நான்கு விஷயங்கள் போதுமானது. முதலாவது அறிவு. இரண்டாவது அணுகுமுறை. மூன்றாவது திறன். நான்காவது பழக்கவழக்கம். நாம் பெற்ற கல்வியின் மூலம் இந்த நான்கையும் முறைப்படுத்தினாலே வாழ்வில் வெற்றியடைய முடியும்” என்றார்.

அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர் சரோஜா தேவி, “இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் எனத் தகவல் தொடர்பு பெருகியிருக்கிறது. இதனைப் பிள்ளைகள் சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி விரிவடையும்” என்றார்.
‘ஷீரடி இன்ஃப்ரோ புராஜெக்ட்ஸ்’ சிஇஓ சாய் சுதாகர், ‘`பெற்றோர்கள் தங்களுடைய இறுதிக் காலத்தில் பிள்ளைகளிடம் கேட்பது, அன்பு ஒன்றே. அவர்களுடைய உணர்வை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.
‘சென்னை டே’ இன்ஃபோ புத்தகத்துக்கான விவரங்களைத் தொகுத்து கொடுத்த பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார், “சென்னைக்கு வருபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கனவோடுதான் வருகிறார்கள். அப்படி வருபவர்களின் கனவை நிறைவேற்றித் தரும் நகரம் சென்னை” என்றதும், அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

மிடெக் பஸ்ட்டோர் பிரைவேட் லிமிடெட், ஜி.வி.என்.சங்கர் அண்டு கோ மற்றும் எஸ்.பாலாஜி சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் நிறுவனங்களின் சார்பில் 2000 சென்னை மாநகர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வெழுத சுட்டி விகடன் சென்னை இன்ஃபோ புத்தகத்தை வழங்கி உதவியது.
‘நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்’ நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள், சென்னையின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டும், பரிசுகளைப் பெற்றுக்கொண்டும் உற்சாகத்துடன் விடைபெற்றனர்.
- மு.பார்த்தசாரதி, படங்கள்: பா.காளிமுத்து, ரவிக்குமார்