Published:Updated:

`எங்க ஊரைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டோமே..!' - சுட்டி விகடன் போட்டியில் அசத்திய தஞ்சை சுட்டீஸ்

தஞ்சையில் நடந்த சுட்டி விகடன் போட்டியில் அசத்திய சுட்டீஸ்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

School Children's
School Children's

சுட்டி விகடன் நடத்திய தஞ்சை 200 இன்ஃபோ புக் போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று (19-10-2019) தஞ்சாவூரில் சுட்டி விகடன் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தியது. தான் வாழும் மாவட்டத்தின் பெருமைகளைப் படித்துத் தெரிந்து, அதை வைத்து நடத்திய போட்டியில் வெற்றியையும் கண்டு, சக சுட்டீஸோடு பரிசுகளைப் பெற பெற்றோர்களோடும் ஆசிரியர்களோடும் உற்சாகமாக தஞ்சாவூரில் அமைந்துள்ள மத்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகத்தின் அரங்கத்தில் திரண்டனர்.

`எங்க ஊரைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டோமே..!' - சுட்டி விகடன் போட்டியில் அசத்திய தஞ்சை சுட்டீஸ்

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, IIFPTயின் இயக்குநர் ஆனந்தராமன், காவல்துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன், மீனாட்சி மருத்துவமனையின் குழந்தைநல மருத்துவர் டாக்டர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

15,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சுட்டி விகடன் நடத்திய இப்போட்டியில், பிற மாவட்டங்களைவிட தஞ்சையில்தான் அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் சமமாக 50-50 பங்குபெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அதிகபட்ச பெண்குழந்தைகள் பங்குபெற்ற பெருமையும் தஞ்சைக்கே! மேலும் தஞ்சாவூர் தாமரை இன்டர்நேஷனல் பள்ளி 27 வெற்றியாளர்களை கொடுத்து சிறப்பு பாராட்டுகளைப் பெற்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்களுக்கு இவ்விழா நிறைய வெற்றிகளைப் பெற ஊக்குவிக்கும் விதமாக உள்ளதென உற்சாகம் அடைந்தனர். தங்கள் ஊரைப்பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொண்டதாக நெகிழ்ந்தனர். தான் அரசுப் பள்ளியில் படித்தவன் என்று பெருமையாகக் கூறி மாணவர்களை கௌரவித்து உற்சாகமூட்டும் விதமாக சிறப்புரையாற்றினார், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, ஹெல்மட் அணிவதன் அவசியம், ஸ்மார்டஃபோன் உபயோகம், போட்டித்தேர்வை எதிர்கொள்ளுதல் குறித்தும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மாணவர்கள் மத்தியில் பேசினர்.