Published:Updated:

ஏர் உழு, பானை செய், உறியடி - குழந்தைகளுக்கான பொங்கல் விளையாட்டுகள்!

குழந்தைகளோடு விளையாட சில பொங்கல் விளையாட்டுகள். நம்ம தமிழர் திருநாள் தொடர்புடைய விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொன்ன மாதிரியும் இருக்கும். ஜாலியாகவும் பொழுதுபோகும். முயற்சி பண்ணிப் பாருங்க...

பொங்கல்
பொங்கல் ( pixabay )

இந்தப் பொங்கலுக்கு சொந்த ஊரு, கடற்கரை, பூங்கா எனச் சுற்றப்போறீங்களா? இல்லே, வீட்டுக்குள்ளே இருந்துக்கிட்டு வழக்கம்போல டிவியில புதுப் புது படங்களை மாற்றி பார்க்கப்போறீங்களா? அப்படி வீட்டுக்குள்ளேயே கெட்ச் போட்டிருக்கிறவங்க, உங்க குழந்தைகளோட விளையாட சில பொங்கல் விளையாட்டுகள். இவை, நம்ம தமிழர் திருநாள் தொடர்புடைய விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொன்ன மாதிரியும் இருக்கும்; ஜாலியாகப் பொழுதும் போகும். முயற்சி பண்ணிப் பாருங்க...

ஜோடி சேர்க்கலாம்!

வயல், காளைகள், கலப்பை, மரக்கால், நெல், கிணறு, பம்புசெட் என உழவு சார்ந்த பெயர்களைத் தனித் தனித் தாள்களில் எழுதிக்கொள்ளுங்கள். புகைப்படங்களாகச் சேகரிக்க முடிந்தால் இன்னும் சிறப்பு.

பொங்கல்
பொங்கல்
pixabay

அதேபோல அரிசி, பானை, மஞ்சள், வெல்லம், உப்பு, கரும்பு என உணவு சார்ந்த பெயர்களையும் எழுதிக்கொள்ளுங்கள்.

அப்படியே பலூன், ஜல்லிக்கட்டு, கோயில், ராட்டினம் எனத் திருவிழா சார்ந்த பெயர்களையும் எழுதிக்கொள்ளுங்கள்.

இதைத் தவிர, உழவு, பொங்கல், திருவிழா என மூன்று பெயர்களைத் தனித் தனி அட்டையில் அல்லது பெரிய தாளில் எழுதிக்கொள்ளுங்கள். இனி, குழந்தைகளை மூன்று குழுவாகப் பிரித்து விளையாட ஆரம்பிக்கலாம்.

முதலில், திருப்பி வைத்திருக்கும் மூன்று அட்டைகளை ஆளுக்கு ஒன்றாக எடுக்க வேண்டும். அதில் என்ன வருகிறதோ, அதற்கான பெயர்களுடைய தாள்களை எடுத்து ஜோடி சேர்க்கணும்.

உழவு என வந்த குழு, வயலுடன் தொடர்புடைய பெயர்களைத் தேடி எடுக்கணும். இப்படி ஒவ்வொரு குழு எடுத்து முடித்ததும், அந்தப் பெயர்களுக்குத் தொடர்பாக நடித்துக் காட்ட வேண்டும். அல்லது அதுபற்றி தெரிந்ததைப் பேச வேண்டும்.

ஏர் உழுவதுபோல, நெல் அளப்பதுபோல பேசிக்கொண்டே நடித்தும் காட்டலாம். அதேபோல, இன்னொரு குழு பொங்கல் வைப்பதுபோல, அதற்கான பொருள்களைச் சேகரிப்பதுபோல அப்போது நடக்கும் விஷயங்கள் என்று நடிக்க வேண்டும். திருவிழா விஷயமும் அப்படியே.

நீங்களும் அவர்களுக்கு அவற்றைப் பற்றி இடையிடையே எடுத்துச் சொல்லுங்க. இப்படி விளையாடும்போது, குழந்தைகள் நம் மரபு சார்ந்த விஷயங்களையும் அவற்றின் பெயர்கள், நோக்கங்களையும் தெரிந்துகொள்வார்கள்.

game
game
pixabay

ஓவியங்களால் கொண்டாடலாம்!

கரும்பலகையையோ, சார்ட் பேப்பரையோ சுவரில் சாய்த்தோ ஒட்டியோ வெச்சுடுங்க. அதில் பொங்கல் தொடர்புடைய ஓவியங்களை ஒவ்வொருவராக வரைந்து வரைந்து முழுமையாக்கணும். இதையும் குழுவாகப் பிரித்து விளையாடலாம். அல்லது எல்லோருமாகச் சேர்ந்து விளையாடலாம்.

உதாரணமாக, `பொங்கல் வைத்தல்' என்று தலைப்பு எழுதி, ஒரு பானையை முதலில் வரைந்துவிட வேண்டும். இனி விளையாட்டு ஆரம்பம். அடுத்து, ஒரு குழந்தை அந்தப் பானைக்குக் கீழே அடுப்பும் நெருப்பும் வரையலாம். இன்னொரு குழந்தை, தோரணம் வரையலாம், ஆட்களை வரையலாம். இப்படி, பொங்கல் பண்டிகை தொடர்புடைய வெவ்வேறு தலைப்புகள் கொடுத்து ஓவியத்தை ஆரம்பித்து வைத்து முழுமையாக்கச் சொல்லுங்க. இதிலும் அவர்களுக்கு இடையிடையே எடுத்துச் சொல்லி உதவுங்க.

ஓவியத் திறமையும் வெளிப்படும். அந்தப் பண்டிகைச் சார்ந்து சுற்றியும் நடக்கும் விஷயங்களைச் சிந்தித்து அறிந்துகொள்ளவும் செய்வார்கள்.

இதே விளையாட்டை வேறு மாதிரியாக, இன்னும் ஜாலியாகக் கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடச் சொல்லலாம். ஒரு பானையை வரைந்துவிட்டு, கண்களைக் கட்டி விடுங்கள். அந்தப் பானையில் சரியான இடத்தை கணித்து பொங்கல் பொங்குவது போலவோ, அடுப்பு எரிவது போலவே வரைய வேண்டும்.

இப்படியே காளையை வரைந்து வால் அல்லது கொம்புகள் வரைதல், கரும்பை வரைந்து தோகை வரைதல் எனப் பலமுறை விளையாடலாம்.

kids
kids
pixabay

வீட்டுக்குள்ளே வீர விளையாட்டு!

வீட்டுக்குள்ளேயே அல்லது வராண்டாவில் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய உறியடித்தல், ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற வீர விளையாட்டுகளை ஜாலியாக நடத்தலாம். மிகவும் கவனமாக, நிபந்தனைகளைச் சரியாகச் சொல்லி நடத்த வேண்டும். அப்போதுதான் அடிபடுவது, சண்டை போட்டுக்கொள்வது மற்றும் வீட்டுப் பொருள்கள் உடைபடாமல் தவிர்க்க முடியும்.

உறியடித்தல் என்றால், வீணான ஒரு வாட்டர் பாட்டிலில் கொஞ்சமாகத் தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டிவிடுங்கள். ஹாலுக்குள் எப்படியும் துணிகள் காயப்போட கொடிக் கயிறு கட்டி இருப்பீர்கள். அந்தக் கயிற்றின் வழியாகப் பாட்டிலை இறக்கி இறக்கி ஏற்ற வேண்டும். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு கண்களைக் கட்டிக்கொண்டோ, அப்படியேவோ அடித்து வீழ்த்த வேண்டும். தண்ணீர் பாட்டில் ரிஸ்க் என்றால், காலி அட்டைப் பெட்டியில் காகிதத் துண்டுகளைப் போட்டு உறியடிக்கலாம்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குக் காளையாகவும் காளையை அடக்குபவர்களாகவும் எல்லைக் கோடுகள், நிபந்தனைகளை வகுத்து பெரியவர்களும் குழந்தைகளும் சேர்ந்து விளையாடலாம். இதேபோல ரேக்ளா ரேஸுக்கு வண்டிகளாகப் பெரியவர்கள், குழந்தைகளை முதுகிலோ தோளிலோ சுமந்து ஓட்டப்பந்தயம் விடலாம்.

இப்படி இந்தப் பொங்கல் பண்டிகையை வீட்டுக்குள்ளே குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடுங்கள். அதன்வழியே நம் பண்டிகையின் பெருமைகளையும் அவர்களுக்குச் சொல்லுங்கள்!