Published:Updated:

``செம்மஞ்சேரில அவ்ளோ அன்பு கொட்டிக் கெடக்கு!" - யதார்த்தத்தைப் பதிவு செய்த 3 மாணவர்கள்

``செம்மஞ்சேரில அவ்ளோ அன்பு கொட்டிக் கெடக்கு!" -  யதார்த்தத்தைப் பதிவு செய்த 3 மாணவர்கள்
``செம்மஞ்சேரில அவ்ளோ அன்பு கொட்டிக் கெடக்கு!" - யதார்த்தத்தைப் பதிவு செய்த 3 மாணவர்கள்

``உங்களுக்கு  நிலங்கள் கிடையாது. ஏனென்றால் மற்றவர்கள் அதைக் கைப்பற்றிவிட்டார்கள். உங்களுக்குப்  பதவிகள் கிடையாது, ஏனென்றால் மற்றவர்கள் அதை தங்களுக்கு மட்டுமானதாக ஏகபோக உரிமை கோருகிறார்கள்” என்ற அம்பேத்கரின் வசனமும், ``வறுமைக்கெதிரான என் ஆயுதம் தான் என் கேமரா..."  என்ற பிரபல புகைப்படக் கலைஞர் கோர்டன் பார்க்கஸின் வசனமும் உள்வாங்கிக்கொள்ளப்பட்டு  உயிர் பெற்றிருந்தது,  `செம்மஞ்சேரியிலிருந்து ....' என்ற அந்தப் புகைப்பட கண்காட்சி. 

கலை வடிவத்தை, ரசனையை, அதன் அழகியலை வரையறைக்குள் நிறுத்தி, இதுதான் ரசனைக்கானது என அதிகாரவர்க்கம் பழக்கப்படுத்திய  மனங்களின் பிம்பத்தை உடைத்து, ஒளியையும்,  நிறத்தையும், புகைப்படம்  பேசும் மொழியையும், புகைப்படங்களின் பொருளையும் அவை ஏற்படுத்த வேண்டிய விளைவையும், முற்றிலுமாக மாற்றி அமைத்திருந்தது அந்தப் புகைப்பட கண்காட்சி. 

கையால் மனிதக் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் பற்றிய தன் திரைப்படத்துக்காக அந்தப் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த ஒளிப்பதிவாளர் தீபக் பகவந்தின் மனதில்,  செம்மேஞ்சேரியில் வாழும் மக்கள்  பற்றிய பிம்பமும், புரிதலும் வெளியில் இருப்பவர்களுக்குத் தவறாக இருக்கிறது என்று தோன்றிய முதல் எண்ணமே இந்தக் கண்காட்சிக்கான தொடக்கப்புள்ளி. தோழமை அமைப்புடன் இணைந்து செம்மஞ்சேரி பகுதி மாணவர்களுக்கு கேமராக்களை அறிமுகம் செய்து, பயிற்சி அளித்து அதில் ஆர்வமிக்க கணேஷ், சரண், விண்ணரசு ஆகிய மூவரைத் தேர்ந்தெடுத்து சிறப்பு பயிற்சி அளித்திருக்கிறார். இவர்கள் எடுத்த 30 புகைப்படங்கள் சென்னையின் லலித் காலா அகடெமியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மூன்று நாள்கள் நடக்கும் இந்தப் புகைப்பட கண்காட்சியின் தொடக்கவிழாவுக்கு நேற்று இயக்குநர் பா.இரஞ்சித் வருகை தந்து சிறப்பித்தார். 

எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எதார்த்தத்தைப் பதிவு செய்ததுதான் இந்தக் கண்காட்சியின் தனித்துவம். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டாயமாக குடிபெயர்க்கப்பட்டவர்கள் கண்ணகி நகர், செம்மேஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று வசிக்கிறார்கள், அதிலும் செம்மேஞ்சேரியில் வாழும் மக்கள் மீது எப்பொழுதுமே ஒரு வன்முறை அடையாளமும் போர்த்தப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் தகர்த்து அவர்களின் வறுமையை, கலாசாரத்தை, வீட்டை, மனிதர்களை, அப்படி அப்படியே படம் பிடித்து அசத்தியிருக்கிறார்கள் இந்த மூன்று மாணவர்கள். அதில் வெளிப்படும் அரசியலும், கோபமும், மகிழ்ச்சியும், இயல்பும், வறுமையும்தான் இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம்.

கலை வடிவங்கள் கட்டாயம் அரசியல் பேச வேண்டும் எனச் சொல்லும் இயக்குநர் பா.இரஞ்சித், பல இடங்களில் கண்ணீர் கண்களில் திரையிட அனைத்து புகைப்படங்களையும் பார்த்துவிட்டு, புகைப்பட கண்காட்சி பற்றி பேசும்போது ``இங்குள்ள படங்கள் மிகத்திமிராக நான் செம்மஞ்சேரியிலிருந்து வருகிறேன் என்று சொல்கிறதுபோல உள்ளது. ஒரே ஃப்ரேமில் சுலபமாகப் பல விஷயங்களை சொல்லிட்டு போயிருக்காங்க. ஸ்டிரீட் போட்டோகிராஃபி ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்,அப்படிதான் இந்தப் புகைப்படங்கள் பல்வேறு தளங்களில் பல கதைகளை உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு புகைப்படங்களுடனும் என்னை பெர்சனலாக கனெக்ட் பண்ணிக்க முடியுது” என்று மிக எமோஷனலாகப் பேசினார்.

புறக்கணிக்கப்பட்ட, துரத்தப்பட்ட, வன்முறைக்காரர்களாக சித்திரிக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட செம்மேஞ்சேரியைச் சேர்ந்த இந்த மூன்று மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள்தான் இன்று பரபரப்பாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறது. புகைப்படங்களில் இருக்கும் ஆத்மார்த்தமான நேர்மைக்கு அவர்கள் அந்நிலத்தினர் என்பதே காரணமாக இருக்க முடியும்.

இதுதொடர்பாக அந்த மாணவர்கள் நம்மிடம் பேசும்போது ``குடும்ப சூழ்நிலையால் செம்மஞ்சேரிக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் நாங்கள். செம்மஞ்சேரி பற்றிய பொதுவான பார்வைகளால் ஆரம்பக்காலங்களில் நாங்களே பயந்தோம், பின்பு அங்குள்ள மனிதர்களின் அன்பினால் மாறிப்போனோம். இவ்வளவு நல்ல மக்கள் இருக்கும் இடத்தை வெளியில் தவறாக சித்திரிக்கிறார்கள் என்ற வருத்தம் எங்களுக்கு இருந்தது. எல்லாருமே மக்கள்தான் எங்களுக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. தீபக் அண்ணா  எங்களுக்குக் கொடுத்த பயிற்சியின் மூலம் புகைப்படக்கலையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டோம். அதை நாங்கள் கருவியாக கொண்டு எங்கள் மக்களை நாங்கள் பதிவு செய்ய நினைத்தோம். ஏனெனில், எங்களின் வாழ்க்கையை, அதிலுள்ள வறுமையை, கோபத்தை, மகிழ்ச்சியை, அன்பை உணர்ந்தவர்கள் நாங்கள், எங்களால் அதைச் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பினோம். ஒவ்வொரு புகைப்படமும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தது” என்று கூறினர்.

அவ்வளவு கூட்டத்தில் மிகப் பரவசமாக தனித்துத் தெரிந்தார் புகைப்பட கலைஞர் மாணவர் சரண்ராஜின் அம்மா, அவரிடம் பேசியதும் ``என் புள்ள எதுல விருப்பமிருக்கோ அந்தப் படிப்பு படிக்கட்டும்னு நெனச்சோம், அவனோட எந்த விருப்பத்துக்கும் நாங்க தடை சொன்னதில்ல, அதே மாதிரி இன்னைக்கு இவ்ளோ பெரிய இடத்துல எங்களை கூட்டிட்டு வந்து நிக்கவெச்சுட்டான் " என நெகிழ்ந்தார். அவ்வளவு தெளிவும், வெகுளித்தனமும் ஒருசேர ஒருவரிடம் இருக்க முடியுமா என ஆச்சர்யமாக இருந்தது.

ஒவ்வொரு புகைப்படத்தின் வழியாகவும் ஒடுக்குமுறைக்கு எதிராக உரக்க ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. செம்மஞ்சேரியின் வாழ்வியலை மிக அழகாக அந்தப் புகைப்படங்கள் பிரதிபலித்துக்கொண்டிருந்தன. இருட்டை முன்னிலைப்படுத்தி இருட்டிலிருந்து தூரத்தில் நிற்கும் போலீஸ்காரர்களின் புகைப்படம் அவர்கள்மீது திணிக்கப்படும் அதிகாரத்தை, அவர்களிடையே தினம் படர்ந்திருக்கும் பயத்தைக் காட்டும். அந்த ஒற்றைப் புகைப்படம் போதும் அம்மக்களை நாம் அறிந்துகொள்ள, இந்தக் கண்காட்சியில் முப்பது புகைப்படங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பல்வேறு குறியீடுகளை உள்ளர்த்தங்களாக கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதையும் கான்சியஸாக அவர்கள் பதிவு செய்யவில்லை என்பதுதான் இதிலுள்ள அழகு.

புகைப்படங்கள் அழகை வெளிப்படுத்துவதைத் தாண்டி அரசியலையும் பேச முடியும் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இந்தக் கண்காட்சி. நகர வாழ்க்கையின் அடிப்படையாகச் சுழன்றுகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் அறிமுகம் வேண்டுமெனில் நீங்களும் செம்மஞ்சேரியிலிருந்து.....  கண்காட்சிக்குப் போயிட்டு வாங்க, செம்மஞ்சேரிக்கே போய் வந்த சின்ன ஃபீல் நிச்சயம் கிடைக்கும்.