Published:Updated:

நல்லதம்பி டெய்லரும்... மில் பெரியப்பாவும் - தீபாவளி அன்றும் இன்றும்! #MyVikatan

சின்ன வயசில் தீபாவளி என்றாலே ஒரு மாதத்துக்கு முன்பே உற்சாகம் குடி வந்துவிடும் நம் மனசுக்குள். ஆனால், இப்ப அப்படியில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாளை மறுநாள் தீபாவளி. குடும்பத்துக்கே புதுத்துணி எடுத்த நான், ஏனோ எனக்கு மட்டும் எடுக்கவில்லை. "ஏங்க... தீபாவளி பர்ச்சேஸ் கிளம்புணும் வர்றீங்களா?" என்றாள் மனைவி. "நான் வரலே இந்தா கார்டு, உனக்கு, பசங்களுக்கு எது வேண்டுமோ எடுத்துக்க. எனக்கு எதுவும் வேண்டாம்" என்றேன். சொன்ன சொல் தட்டாத மனைவி, அப்படியே செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து, "உங்களுக்கு தேவையான டிரெஸ்ஸை ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கோங்க" என்றாள். எனக்கோ ஆன் லைனிலும் டிரெஸ் எடுப்பதில் ஆர்வம் இல்லை.

Representational Image
Representational Image

"ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து 8-ம் கிளாஸ் படிக்கிற வரைக்கும் ஒவ்வொரு தீபாவளிக்கும் மில் பெரியப்பா (பாரதியார் கூட்டுறவு மில்லில் வேலை பார்த்தவர்) தான் எனக்கு சட்டை எடுத்து கொடுப்பார். தம்பி பிள்ளைகளை தான் பெற்ற பிள்ளைகளாகப் பாவித்து ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு 15 நாளுக்கு முன்னரே புதுத்துணி எடுத்துக் கொடுத்துடுவார். ஆனால், இந்த நல்லதம்பி டெய்லர் இருக்காரே, பாவி மனுசன் "பேருக்கு மாறாக" நடந்துக்குவார். தீபாவளிக்கு முந்தின நாள் நைட்டுதான் சட்டையை தைச்சுக் கொடுப்பார். இப்பவும் அப்படித்தான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது டெய்லர் முன்னாடி நிப்பேன். "இந்தச் சட்டையை அடிச்சு முடிச்ச உடனே அடுத்து உன் சட்டை தான்" என்பார். நம்பி நானும் கிளம்பிடுவேன். கடைசி நாளில் சட்டையை வாங்காமல் போவதில்லை என்றும் கடை முன்னே காத்திருப்பேன். நாம கொடுத்த துணியை வெட்டி சில துண்டுகளை அங்கே போட்டிருப்பார். அப்பாடா நம்ம துணியைத் தச்சிருப்பார்னு நினைப்போம். ஆனால், பல நாள்களுக்கு முன்னர் வெட்டி வச்சுகிட்டு, அன்றைக்குத்தான் அதை தைக்க ஆரம்பிப்பார். ஒரு வழியாகத் தச்சு வாங்கிட்டு வந்த பிறகு எப்படா விடியும், புதுத்துணியைப் போட்டுக்கிறணும் என்கிற ஆவல்ல தூக்கமே வராது.

Representational Image
Representational Image

ஒருபக்கம் எங்க வீட்டு ஆட்டு உரல்ல பக்கத்து வீட்டுக்காரங்க வரிசை முறையில் மாவு ஆட்டுவாங்க... (அப்ப எங்க வீட்டிலதான் பெரிய ஆட்டு உரல் இருந்தது). இன்னொரு பக்கம் மருதாணி அரைச்சு டிசைன் டிசைனா பொம்பளப்பிள்ளைங்க கைளில் வைப்பாங்க. ஐப்பசி மாசம் அப்பிகிட்டு பிடிக்கும்னு எனக்கும் மருதாணி வச்சுவிடுவாங்க. இன்னும் சிலர் அப்பவே வெடி வெடிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இதனாலே நைட்டு பூராவும் முழிச்சிருந்து காலையில் அசந்து தூங்கிடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரியா 7 மணிக்கு எங்க பாட்டி (அப்பனை பெத்தவ) அரை கிலோ ஆட்டுக்கறி, அரைக்கிலோ நெஞ்செலும்பை ஓலைக் கொட்டானிலும், கொஞ்சம் ரத்தத்தை தூக்குவாளியிலும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்திடும். எங்க பாட்டிக்கு 3 மகன்கள் என்றாலும், நடு மகன் அதாவது எங்க அப்பா மேலேயும், எங்க மேலையும்தான் பிரியம் ஜாஸ்தி. எங்களுக்கு எண்ணெய் தேச்சு குளிக்க வச்சு, புதுச்சட்டை போட்ட பிறகு 5 ரூபாய் கையில கொடுக்கும். அந்த 5 ரூபாய்க்கு ஓடைகடையில் (ஓடைத் தெருவில் உள்ள கடை) பட்டாசு வாங்கி பகல் முழுக்க வெடிப்போம்.

Representational Image
Representational Image

அந்த பட்டாசு தீர்ந்த உடன் மில் பெரியப்பா வீட்டுக்குப் போவோம். அவர் பெரிய பை நிறைய பட்டாசு வாங்கிக் கொடுப்பார். மீண்டும் வீட்டுக்கு வந்து பட்டாசு வெடிப்போம். அப்பயெல்லாம் யாரும் கட்டுப்பாடு விதிப்பது கிடையாது. ஆனால், இப்ப காலையிலே ஒரு மணிநேரமும் சாயந்திரம் ஒரு மணிநேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்னு அரசாங்கமே கெடுபிடி காட்டுவதால், தீபாவளிக்கான உற்சாகமே குறைந்துவிட்டது. "30 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒவ்வொரு வருஷமும் புதுத் துணி எடுத்துக் கொடுத்த மில் பெரியப்பாவுக்கும், அவங்க குடும்பத்தினருக்கும், இந்த வருஷ தீபாவளிக்கு நான் புதுத்துணி எடுத்துக் கொடுத்திருக்கேன். அது மட்டும் கொஞ்சம் மனசுக்கு நிறைவாக இருக்குது!.

- சி.அ.அய்யப்பன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு