Published:Updated:

சரிகமபதநி டைரி 2022

ஸ்ரீரஞ்சனி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீரஞ்சனி

கச்சேரியில் ஐஸ்வர்யா அதிகமாகவும் விட்டல் ரங்கன், டெல்லி சாய்ராம், அனிருத் ஆத்ரேயா மிதமாகவும் சிரித்தபடியே காணப்பட்டது அபூர்வம்!

‘செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்’

என்ற குறள் டிசம்பரில் சென்னை சபாக்களுக்குத் தோதுபடாது. ‘எங்களுக்கு வயிற்றுக்கு மட்டும் உணவு போதும்... செவிக்குத் தேவையில்லை’ என்று சபா உணவகங்களை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள் பலர். மியூசிக் அகாடமியில் VR caterers, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் சாஸ்தா, நாரத கான சபாவில் சாஸ்த்ராலயா... இவர்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோதாவில் இறங்கியிருக்கும் என்.ஸ்ரீதரின் அறுசுவை கேட்டரிங்ஸ் பார்த்தசாரதி சபாவில் கடை விரித்திருக்கிறது. போண்டா பஜ்ஜிக்கு, சபாஷ் சரியான போட்டி!

மூன்று வயது இருக்கும்போதே சரளி வரிசை ஆரம்பித்துவிட்டது குழந்தை. பெங்களூரில் சீதாலட்சுமி வெங்கடேசன் முதல் குரு. பிறகு சென்னையில், பி.எஸ்.நாராயணசாமியிடம் பாட்டு தொடர்ந்தது. அதற்குப்பின் பிருந்தா (முக்தா) வின் மகள் வேகவாஹினி விஜயராகவன் குருவானார். இப்போது இளம் இசைக் கலைஞர்களுக்கு வேடந்தாங்கலாகத் திகழும் ஆர்.கே.ஸ்ரீராம்குமாரிடம் பயின்றுவருகிறார். அவர், பாடகி ஐஸ்வர்யா வித்யா ரகுநாத்!

அமிர்தா முரளி,  அருண்பிரகாஷ்
அமிர்தா முரளி, அருண்பிரகாஷ்

ராகசுதா ஹாலில் ‘நாத இன்பம்’ ஏற்பாடு செய்திருந்த இவரது கச்சேரி ‘சும்மா அதிருதில்லே’ ரகம்! எடுத்த எடுப்பில் பேகடாவில் சுப்பராய சாஸ்திரியின் ‘சங்கரி நீயே...’ கீர்த்தனை. ‘சசிவதனா ராவே...’ வரியில் நிரவல். தொடர்ந்த ஸ்வரங்களில் உளி கொண்டு பேகடாவைச் செதுக்கினார் ஐஸ்வர்யா. ஐஸ் போட்டு பாதாம் பால் குடித்த மாதிரி குளுமையான வெல்கம் டிரிங்க்.

அடுத்து வந்தது வராளி. ஒவ்வொரு பிடியிலும் அவ்வளவு ஆழம்... அழுத்தம். ‘கருண ஜுடவம்மா...’ என்ற சியாமா சாஸ்திரியின் பாடலை ஐஸ்வர்யா கையாண்ட விதத்தில் தர்மசம்வர்தனி நிச்சயம் கருணை காட்டுவாள்!

க்ளைமாக்ஸாக பைரவி. காலம் காலமாகக் கையாளப்பட்டுவரும் வின்டேஜ் பைரவி சங்கதிகளை, நாகஸ்வரத்தை இரு பக்கமும் வீசி வாசிக்கும் வித்வான்கள் மாதிரி ஆடிப் பாடிப் பரவசப்படுத்தினார் ஐஸ்வர்யா. தீட்சிதரின் ‘பாலகோபால பால யாஸீமாம்...’ பாடலில் ‘நீல நீரத சரீர...’ வரியில் அல்லாமல், சரணத்தில் வரும் ‘மாணிக்கமகுட...’வில் நிரவல் செய்தது, மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது வகை!

கச்சேரியில் ஐஸ்வர்யா அதிகமாகவும் விட்டல் ரங்கன், டெல்லி சாய்ராம், அனிருத் ஆத்ரேயா மிதமாகவும் சிரித்தபடியே காணப்பட்டது அபூர்வம்! மேடையில் முக்காலே மூணு வீசக் கலைஞர்கள் சிடுசிடு, கடுகடுவென்று இருப்பதுதானே வழக்கம்!

தியாக பிரம்ம கான சபாவின் 43வது இசை, இயல், நாடக விழா வாணி மகால் மெயின், மினி ஹால்களில் நடைபெற்றுவருகிறது.

ஐஸ்வர்யா வித்யா ரகுநாத்
ஐஸ்வர்யா வித்யா ரகுநாத்

மினி ஹாலில் தம்பதி சகிதமாக ஷ்ரேயா தேவநாத் - பிரவீன் ஸ்பர்ஷ் வயலின் - மிருதங்கம் வாசிக்க, கஞ்சிராவுடன் சுனில் குமார்.

சாரங்கா ராக வர்ணத்துடன் கச்சேரியைத் தொடக்கினார் ஷ்ரேயா. வயலினில் மோடி மஸ்தான் வேலையெல்லாம் காட்டுவதில்லை இவர். இனிமை மாறாத, இலக்கணம் மீறாத சம்பிரதாய நல்லிசை இவருடையது. நடுநடுவே சற்று டல்லடிக்கவும் செய்கிறது. இப்போதெல்லாம் ஸோலோ கச்சேரிகளில் மசாலா சற்றே தூக்கலாக இருந்தால்தான் மணம் பரப்புகிறது. அரங்கமும் ருசிக்கிறது.

முகாரி, ரீதிகௌள ராகங்களில் இரு பாடல்களை வாசித்துவிட்டு காம்போதிக்குள் ஷ்ரேயா நுழைந்ததும் அரங்கம் நுனி சீட்டுக்கு வந்தது. லால்குடி ஸ்கூலின் கனமான சங்கதிகள் வில்லில் வெளிப்பட்டு ‘ஆகா’ போட வைத்தன. பாபநாசம் சிவனின் ‘ஆடும் தெய்வம் நீ அருள்வாய்...’ பாடல் வரிகள் நடனமாட... ஷ்ரேயாவுடன் இணைந்து ரசிகர்களும் குஷியானார்கள். ஆக, கச்சேரிக்கு லிஸ்ட் போடுவதிலும் சூட்சமம் உள்ளது!

பிரவீன் ஸ்பர்ஷ்-சுனில் குமார் தனி ஆவர்த்தனம் ரொம்ப அலட்டிக்கொள்ளாத, கேட்போரை இம்சிக்காத வாசிப்பு. அது முடியும் தருணம் மிருதங்கமும் கஞ்சிராவும் இணைந்து கெட்டிமேளமாக ஒலித்து உற்சாகமூட்டின!

ஸ்ரீரஞ்சனி
ஸ்ரீரஞ்சனி

ஆழ்வார்பேட்டை Tag மையத்தில் பிரம்ம கான சபா நடத்திய சந்ததி விழாவில் ஒருநாள் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன். வாரிசு அரசியல் மாதிரி இசைவாரிசுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது சபாவின் நோக்கம்! மேடையும் மைக்கும் கொடுக்கப்படும். ஆனால் பேசாமல் பாட வேண்டும்.

ஸ்ரீரஞ்சனிக்கு ஃபீல்டில் அனைத்துக் கலைஞர்களிடமும் சீனியர், சமகாலம் என்ற பேதமில்லாமல் நல்லுறவு அதிகம் உண்டு. இந்த வருட சங்கீத கலாநிதிகள் நால்வரையும் ஒரே நாளில், ஒரே மேடையில் ஏற்றிய பெருமை இவருக்கு உண்டு. ‘Best coordinator’ விருதுக்கு முழுத் தகுதி உடையவர்!

Tag மையத்துக் கச்சேரியில் சந்தான கோபாலனின் வாரிசு ஸ்வீட்டான குரலில் பாடிய பைரவியில் அவரது சங்கீத ஞானம் வெளிப்பட்டது என்பது ஒரு புறம். பிருகாக்களும் நாகஸ்வரபிடிகளும் அசத்தியது மறுபுறம். தீட்சிதரின் ‘பாலகோபால...’வில் ரூட் மாற்றிச் செல்லாமல் ‘நீல நீரத...’வில் நிரவல் செய்தது... எல்லாமே நிறைவு தந்தன. உள்ளே நுழையும்போது ‘இன்னிக்கு நிறைய கூட்டம் எதிர்பார்க்கிறேன்’ என்றார் சபா செயலர். ஆனால் வந்திருந்த ரசிகர்களின் எண்ணிக்கை அவருக்கு நிறைவு தந்திருக்காது!

இந்தக் கச்சேரி நடந்த நாளுக்கு மறுநாளுக்கு மறுநாள் மியூசிக் அகாடமியில் மாலை நேர ஸ்லாட்டில் பாடியிருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. ஜனவரியில் தந்தை கலாநிதி விருது பெறுவதைக் கொண்டாடும் விதமாக, கலாநிதி ராகத்தில் ஸ்பெஷல் பல்லவி பாடியிருக்கிறார் மகள். ‘திருவடியே சரணம் என்று நம்பினேன்... கலையே நிதியே இசைவாணியே திருவடியே சரணம்...’ என்பது வரிகள். இந்த ஸ்பெஷல் பல்லவிக்கு அகாடமியின் தங்கப்பதக்கம் கிடைக்குமா என்பது ஜனவரி முதல்தேதி தெரிந்துவிடும். ஏற்கெனவே பாடகி கே.காயத்ரி, சண்முகப்ரியா ராகத்தில் ஸப்தி முகி தாளத்தில் பல்லவி வழங்கி, மெடல் அறுவடைக்குக் காத்திருக்கிறார்!

சஷாங்
சஷாங்

சீனியர் மிருதங்க வித்வான் அருண்பிரகாஷ் பன்முகத்திறன் கொண்டவர். பாடல்கள் இயற்றுகிறார்; பல்லவிகள் தயாரிக்கிறார்; லெக் - டெம் நடத்துகிறார்; இசையமைத்துக் கொடுக்கிறார்; முக்கியமாக மிருதங்கமும் வாசிக்கிறார்.

கடந்த 36 வருடங்களாக அகாடமியில் வாசித்துவருகிறார். இப்போதும் இங்கே வாசிப்பது தனக்கு ஸ்பெஷல் என்கிறார். சமீப காலம் வரை மேடையில் அவர் இருப்பதும் தெரியாது. வாசிப்பதும் கேட்காது. இந்த முறை பெரிய மாற்றம் தெரிந்தது.

எம்.விஜய் வயலின். அருண்பிரகாஷ் மிருதங்கம். என்.குரு பிரசாத் கடம். வாய்ப்பாட்டு அமிர்தா முரளி!

கால்பந்து மைதானத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருப்பது மாதிரி தோற்றம் தரும் மெஸ்ஸி, கோல் போட வேண்டிய நேரம் மிகச்சரியாக போஸ்ட் அருகே பிரசன்னமாகி பந்தை வளைக்குள் தள்ளுவார். அது மாதிரி, கச்சேரியில் அருண் தான் இருப்பதை உணர்த்துவது போல் சரியான நேரம் காலப் பிரமாணத்துக்கு ஏற்ப தாளத்தில் விஸ்வரூபம் எடுத்துக் கச்சேரியைத் தூக்கிவிட்டது க்ளாஸ்!

வழக்கம்போல் சுலோகத்துடன் தொடங்கி, ‘ராரா மாயிண்டிதாக’ என்று அசாவேரியில் ராமனை அழைத்து, ரகுவீரனுக்கு ஸ்வரம் பாடிக் குளிர்வித்து ஆடியன்ஸின் ‘பலே'வை வரவில் வைத்துக்கொண்டார் அமிர்தா!

நான்கு நாள்களுக்குள் மெயினாக அடியேன் கேட்ட மூன்றாவது பைரவி. Raga of the season? ‘ரக்‌ஷ பெட்டரெ‌ தொரகு’ பாடலில் சங்கீதப்ரியன் என்று தியாகராஜர் விளிப்பது படு சுவாரஸ்யம்.

பேகடாவில் ராகம் தானம் பல்லவிக்கு தன் மாணவி அமிர்தாவுக்குக் கன்னட மொழியில் வரிகள் எழுதிக் கொடுத்தவர் ஆசான் ஆர்.கே.ஸ்ரீராம்குமார். வரிகளின் நடுவே பேகடா எனும் ராகத்தின் பெயரையும் அவர் இடம்பெறச் செய்திருப்பது தீட்சிதர் டச்!

ஷ்ரேயா தேவநாத்
ஷ்ரேயா தேவநாத்

நிற்க, அமிர்தா முரளி, கே.காயத்ரி, நிஷா ராஜகோபால், ஸ்ரீரஞ்சனி நால்வருடன் இணைந்து ஐவராகியிருக்கும் ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் ஆகியோருக்குள் வருங்கால இசை உலகில் பலத்த போட்டி இருக்கப்போவது உறுதி. சும்மா கொளுத்திப்போடுவோம்!

மழலை மேதையாக அறியப்பட்ட புல்லாங்குழல் சஷாங் சுப்ரமணியன், நான்கைந்து குழல்களை வெவ்வேறு நீளத்தில் மேடையில் வைத்துக்கொண்டு மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் படுகெத்தாக உட்கார்ந்திருந்தார். அடுத்தடுத்து என்ன பாடல் எந்த ராகத்தில் இவர் வாசிக்கிறார் என்பதில் சந்தேகமே வருவதில்லை. காரணம், மறக்காமல் அவற்றை அறிவித்து விட்டுத்தான் வாசிக்கவே ஆரம்பிக்கிறார்.

அன்றைய ராகம் தானம் பல்லவி காவதி ராகத்தில். பிந்துமாலினிக்கு நெருங்கிய சொந்தம். இரண்டுக்கும் ஒரே ஒரு ஸ்வரம்தான் வித்தியாசம். பழைய ராகம் இது. ஜி.என்.பி. நிறைய பாடியிருக்கிறார். மேண்டலின் ஸ்ரீனிவாஸ் நிறைய வாசித்திருக்கிறார். வட இந்திய இசைக் கலைஞர்கள் மத்தியில் பாப்புலரான ராகம்.

சரஸ்வதி ராக ஆலாபனையில் சொக்கினார் சஷாங். ‘அநுராகமு லேநி’ தியாகராஜர் பாடலை தம்பி வாசித்தபோது வரிகள் அத்தனை தெளிவாகப் புரிந்தன. மெயினாக கீரவாணி. இளையராஜாவின் இசை அமைப்பில் புல்லாங்குழலில் கீரவாணி அவ்வளவு சுகமாக இருக்கும். சஷாங்கின் குழல் அதற்குத் துளியும் சளைத்தது அல்ல! தியாகராஜரின் (மறுபடியும்) ‘கலிகியுண்டே...’ பாடலில் ‘பாகுக ஸ்ரீரகு ராமமுநி...’யில் நிரவல், ஸ்வரங்கள் வாசித்து விட்டு, ‘தனி'க்கு வழி விட்டார் சஷாங்.

அது ஒருபுறமிருக்க வீணை, வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளின் ஸோலோக்களுக்கு ஆதரவு எப்பவும் கம்மியாக இருப்பதேன்? யார் இட்ட சாபமோ இது!

- பக்கங்கள் புரளும்...