Published:Updated:

ஆன்லைன் இசைவிழா: களைகட்டுமா கச்சேரிகள்?

ஆன்லைன் இசைவிழா
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் இசைவிழா

இதுதொடர்பாகக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம். டிசம்பர் 18-ல் தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை ஆன்லைனில் விழா நடக்கும். தினமும் இரண்டு ஸ்லாட்டுகள்.

ஆன்லைன் இசைவிழா: களைகட்டுமா கச்சேரிகள்?

இதுதொடர்பாகக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம். டிசம்பர் 18-ல் தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை ஆன்லைனில் விழா நடக்கும். தினமும் இரண்டு ஸ்லாட்டுகள்.

Published:Updated:
ஆன்லைன் இசைவிழா
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் இசைவிழா
கோவிட் கலவரச் சூழலில் ‘நியூ நார்மல்’ என்கிற ஆங்கிலச் சொற்றொடர் வைரலாகியிருக்கிறது. கர்னாடக இசை உலகமும் இந்த நியூ நார்மலுக்குப் பழகிவிட்டது. எல்.கே.ஜி வகுப்பில் ஆரம்பித்து, மற்ற பல துறைகள் மாதிரி வரும் டிசம்பர் இசை விழாவும் ஆன் லைனில்தான்.

உலகம் முழுவதும் பிரபலமாகியிருந்தாலும் கலைஞர்கள் காலி நாற்காலிகள் முன்தான் பாட வேண்டும். கச்சேரி முடிந்ததும் சூழ்ந்து நின்று கைகுலுக்கவோ ஆட்டோகிராப் நோட்டை நீட்டவோ ஈ காக்கா இருக்காது. முகநூலில் வந்து குவியப்போகும் லைக்தான் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் பாராட்டு.

டிசம்பரில் ஒரு மாதத்துக்கு சபா சபாவாக நுழைந்தும் கேன்ட்டீன்களில் பஜ்ஜி, போண்டா என்று வெரைட்டியாக உள்ளே தள்ளும் இசை/ டிபன் பிரியர்கள் இந்த ஆன்லைன் சீசன் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நாராயணன் வேதாந்தம் ஒரு சோறு பதம்.

ஆன்லைன் இசைவிழா: களைகட்டுமா கச்சேரிகள்?

‘`இந்த மார்கழியில் சங்கீதம் வீடு தேடி வரும். ஆனால், சபாவில் அமர்ந்து கச்சேரியை அனுபவிப்பதற்கு இணையே கிடையாது. சாயாரஞ்சனி ராகத்தைப் பாடகர் பாட ஆரம்பித்தவுடன், ரசிகர்களிடம் ஒரு பரபரப்பும் சலசலப்பும் ஏற்படும். இது என்ன ராகம், ஒரு தினுசா இருக்கு என்பார் ஒருவர். சுபபந்துவராளி என்று இன்னொருவர் சத்தியம் செய்வார். இந்தப் பட்டிமன்ற அனுபவம் வீட்டில் கிடைக்காது.” என்கிறார் நாராயணன் வேதாந்தம் .

நாராயணன் வேதாந்தம்
நாராயணன் வேதாந்தம்

ஆளில்லாத ஹாலில் பாட்டு கேட்கும் அனுபவம் எப்படி இருக்கும்? ஆர்.கே. கன்வென்ஷன் சென்டர் சென்றேன். இங்கே மதுரத்வனிக்காக மறைந்த பாடகர் எம்.பாலமுரளி கிருஷ்ணாவின் சீடர் ராகவன் மணியனைப் பாட வைத்துப் பதிவு செய்தார்கள். உள்ளே நுழைந்தபோது, மாஸ்க் போட்டுக்கொண்டு ராகவன் மணியன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். சற்று இடைவெளி விட்டு இன்னொரு நாற்காலியில் மிருதங்கம் வாசிக்கப்போகும் உமையாள்புரம் மாலி, மாஸ்க் வழியே பாடகருடன் பேசிக்கொண்டிருந்தார். அன்று சிரத்தா ரவீந்திரன் வயலின். வெங்கட ரமணன் கஞ்சிரா... மாஸ்க் போட்டுக்கொண்டு மேடையில் பாட இயலுமா? நோ சான்ஸ்... பாடகர் குரல் உயரத்திப் பாடும்போது மாஸ்க் கிழிந்து கந்தல் ஆகிவிடும்.

ஆன்லைன் இசைவிழா: களைகட்டுமா கச்சேரிகள்?

கச்சேரி ஆரம்பமானபோது மேடையில் நால்வர், அரங்கில் மூவர். மதுரத்வனியின் நிர்வாகி ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவுக்கு இருவர். இரண்டு மணி நேரம் கச்சேரி. காலி நாற்காலிகளுக்குப் பாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் பாடினார் ராகவன்மணியன். ஊரடங்கு ஆரம்பமான புதிதில் ஏற்கெனவே இங்கு பதிவு செய்யப்பட்ட கச்சேரிகள் முகநூலிலும் யூடியூபிலும் மறுபடியும் அப்லோடு செய்யப்பட்டன. இப்போது லாக்டௌன் எப்போது முடியும் என்பது தெரியாத நிலையில் வாரத்துக்கு மூன்று நாள்கள் புதியதாகப் பாடவைத்துப் பதிவுசெய்து அவற்றை ஒரு வாரத்துக்குள் அப்லோடு செய்துவிடுகிறார்கள். ``30 பேருக்கு அரசு அனுமதி கொடுத்தால்கூட நான் பழையபடி அரங்கில் ஜனங்களுடன் கச்சேரி நடத்த ஆரம்பித்துவிடுவேன்” என்கிறார் ராமகிருஷ்ணன்.

மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதும் மற்ற விருதுகளும் இந்த வருடம் ஒருவருக்கும் கிடையாது. மற்ற சபாக்களும் விருது வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கின்றன.

அகாடமியில் ஆன்லைன் இசைவிழாதான். வழக்கமான 18 நாள்கள் என்பது இந்த முறை குறைக்கப்படும். காலை நேர லெக் டெம்களும் கிடையாது. நாட்டிய விழாவும் ரத்து.

சபாக்களின் கூட்டமைப்பு (Federation Of City Sabhas) என்ற குடைக்குள் இயங்கும் நாரதகான சபா உள்ளிட்ட 8 சபாக்கள் இணைந்து, டிசம்பர் இசை விழாவை ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டுவருகிறார்கள். பாரத் கலாச்சார், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், நாதசுதா மாதிரியான வேறு சில சபாக்களும் கூட்டமைப்பில் இணைய உள்ளன.

அரசியலில் கூட்டணி சார்பாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவது மாதிரி, கூட்டமைப்பு சார்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடகர் என்ற கணக்கில் உட்கார வைக்கப்படு வார்கள். பத்து ப்ளஸ் சபாக்களில் தனித்தனியாகக் கச்சேரி செய்யும் வாய்ப்பைப் பாடகர்கள் இழக்கவே வேண்டும்.

“இதுதொடர்பாகக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம். டிசம்பர் 18-ல் தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை ஆன்லைனில் விழா நடக்கும். தினமும் இரண்டு ஸ்லாட்டுகள். எங்கே ரிகார்டு செய்வது, எந்த பிளாட்பார்மில் வெளியிடுவது, லைவ் ரிலே செய்ய முடியுமா அல்லது பதிவு செய்யப்பட்ட கச்சேரிகள்தானா போன்ற விவரங்களைத் தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து வருகிறது. அனைத்தும் இறுதி வடிவம் பெற இன்னும் சில நாள்கள் ஆகும்” என்றார் கூட்டமைப்பின் செயலாளர் ஹரிசங்கர். கடந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடிய முத்ரா இந்த முறை கூட்டமைப்புடன் இணையாமல் தனியாக கோதாவில் குதிக்கப்போகிறது.“நாங்கள் ரிஸ்க் எதுவும் எடுப்பதாக இல்லை. கைவசமிருக்கும் பதிவுகளிலிருந்து கச்சேரிகளைத் தேர்வு செய்து டிசம்பர் முழுவதும் வலைதளத்தில் ரிலீஸ் செய்யப்போகிறோம். எங்கள் டிஜிட்டல் நூலகத்தில் இல்லாத ஜூனியர்களை மட்டும் தனியாகப் பாட வைத்து ரெக்கார்டு செய்யவிருக்கிறோம்” என்றார் முத்ரா பாஸ்கர். அவர் வழி எப்போதும் தனி வழி!

ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் பாரதி வித்யாபவனில் இசைவிழா கோயில் திருவிழா மாதிரி களைகட்டும்... அனுமதி இலவசம் என்பதால் தினமும் கூட்டம் அலைமோதும். ஏ.சி அரங்கம் என்பதால் இந்த முறை இதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. பதிலாக, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமத்தில் அங்கிருக்கும் திறந்தவெளியில் 20 நாள்களுக்குக் கச்சேரிகள் நடத்தும் யோசனையில் இருக்கிறார் பாரதிய வித்யாபவன் டைரக்டர் கே.என் ராமசாமி.

“ஆன்லைன் இசைவிழாவில் எனக்கு விருப்பமில்லை. ஏற்கெனவே யூடியூபில் ஏராளமான கச்சேரிகள் கொட்டிக்கிடக்கின்றன. விரும்புவதைக் கேட்டுக்கொள்ளலாம். தவிர, வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார யாருக்கும் பொறுமை இருக்காது. சபாவில் பாட்டு கேட்கும் அனுபவமும் கிடைக்காது.கீழ்ப்பாக்கம் பவன்ஸ் வளாகத்தில் உள்ள மரங்களில் சீரியல் விளக்குகள் எரிய விட்டு, ஒரு விழாச் சூழலை உருவாக்கி விடுவேன். சமூக இடை வெளிக்கு ஏற்ப நாற்காலிகள் போடப்படும்” என்கிறார். தினமும் ஒரு கச்சேரி மட்டும் இருக்குமாம். அதையும் 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்குள் முடித்துவிடுவார்கள். கச்சேரி முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு டின்னர் பார்சல் செய்து தரப்படும்.மயிலை, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தி. நகர் பகுதிகளிலிருந்து வர விரும்பும் இசை ரசிகர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படும்.

‘`இது மட்டுமல்ல, சென்ற வருடம் டிசம்பரில் பங்குகொண்ட சில கலைஞர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அவர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிடும் எண்ணமும் இருக்கிறது. பார்க்கலாம்... திறந்தவெளியில் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி அளித்து மற்ற விஷயங்களும் சாதகமாக வந்தால், நிச்சயம் பவன்ஸ் விழா நடக்கும். நவம்பர் வரை நேரம் இருக்கே’’ என்றார் ராமசாமி, நம்பிக்கையுடன்.

‘நம்பிக் கெட்டவர் எவரய்யா?’ பாபநாசம் சிவனின் பாடல் காற்றில் தவழ்ந்து வந்தது!