சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

சிக்கில் குருசரண்
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கில் குருசரண்

படங்கள்: ராஜப்பேன் ராஜூ

சொர்க்கவாசல் மாதிரி சென்னையில் சபா வாசல்களைத் திறக்கப்போகிறார்கள்!

‘என்ன ஜன்மமிது? இது என்ன பிறப்பு? இதை ஏன் நான் எடுத்தேன்? ஈடில்லாத கர்நாடக இசைக்கலைஞர்களின் வசீகரக் குரலை சபா அரங்கில் அமர்ந்து அடிக்கடி கேட்க முடியாத எனக்கு ஏனிந்த ஜன்மம்? விதவிதமான ஜிமிக்கிகள் அசைந்தாடும் காதுகளையும், கண்கவர் பட்டுப் புடவைகளையும், கலர் கலர் ஜிப்பாக்களையும் கண்ணாரக் காணமுடியாத என்ன ஜன்மமிது?’ என்றெல்லாம் தியாகராஜரின் ‘ஏடி ஜன்மமிது' பாடல் ஸ்டைலில் இசை ரசிகர்கள் முறையிட்டிருப்பார்களோ என்னவோ, பதினெட்டு மாதங்களுக்குப் பின்னர் லைவ் கச்சேரிகள் நடக்கப்போகின்றன. ‘அண்ணாத்த' வெளியான சமயம் தியேட்டர்களில் 100 சதவிகிதம் அனுமதியளித்தது சபா நிர்வாகிகளுக்கு சாதகம். மணிக்கதவம் தாழ் திறக்கப் போகிறது!

மங்கல இசையில்...
மங்கல இசையில்...

கடந்த டிசம்பர் மாதிரி இந்த முறையும் ஆன்லைன் நிகழ்வுகள்தான் அதிகமெனினும், மார்கழி பிறக்கும் சமயத்தில் ரஞ்சனி காயத்ரிகளும், சஞ்சய் சுப்ரமணியன்களும் சில சபாக்களில் நேரில் கேட்கக் கிடைப்பார்கள். ஆனால், மியூசிக் அகாடமி, முத்ரா மாதிரியான ஒரு சில சபாக்களில் இந்த முறையும் ஆன்லைன் மட்டும்தான். ஆஃப்லைன் கிடையாது. முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்!

லஸ் கார்னர் ஆர்.கே கன்வென்ஷன் மையத்தின் (மதுரத்வனி) 11வது ஆண்டு விழா, இதுவரை இங்கே 3,000 நிகழ்ச்சிகள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 2,500 நிகழ்வுகள் வெப்காஸ்ட் செய்யப்பட்டதாகவும் தகவல் பரிமாறினார்கள். இந்தமுறை மதுரத்வனிக்காக ஒரு மாதத்துக்கு மேலாக கச்சேரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் ஹாலுக்குச் சென்றும் கேட்டு மகிழலாம்; அல்லது, வீட்டில் சோபாவில் உட்கார்ந்து வெங்காயப் பக்கோடா சாப்பிட்டபடியே ரசிக்கலாம். அதாவது, ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டுமே உண்டு!

தொடக்க விழாவுக்கு முன்னதாக மங்கல இசை. ஜி.கே.ரகுராமன் - ஆர்.தேவராஜ் நாகஸ்வரம். ஸ்பெஷல் தவில் திருவல்லிக்கேணி சேகர். உடன், மாஸ்டர் கே.எஸ்.டி.பிரசாந்த் சாய்ராம் இன்னொரு தவில்.

பிரசாந்த் சாய்ராம்
பிரசாந்த் சாய்ராம்

பளீரென்ற வெள்ளை வேட்டி சட்டையில், 13 வயதுச் சிறுவன் பிரசாந்த் தவில் வாசித்தது இனிய ஆச்சரியம்! தவிலின் கனம் மடி தாங்குமா தெரியவில்லை! இவனிடம் சரக்கு இருப்பது தெரிகிறது. விரலிலிருந்து சொற்கள் அநாயாசமாக வெளிப்படுகின்றன. எதிரில் உட்கார்ந்து வாசிக்கும் சீனியர் சேகர் கண்களாலேயே கிளாஸ் எடுப்பதை உற்றுப் பார்த்து, அவர் கொடுப்பதை வாங்கித் திருப்பி வாசிக்கும் திறமை நிறைய. வாய்ப்பாட்டு ஃபீல்டாக இருந்தால் ‘ப்ராடிஜி’ என்று இவனைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்! நாகஸ்வரம், தவிலுக்கெல்லாம் பாவம், அந்தக் கொடுப்பினை இல்லை! வயது வளர வளர, மற்ற வித்வான்கள் வாசிப்பைக் கேட்க கேட்க, தவிலில் பிரதான இடம் பெறுவான் பிரசாந்த் சாய்ராம்.

திருவள்ளூர், பூண்டிக்கருகில் ஒதப்பை கிராமத்தில் வசிக்கும் தவில் வித்வான் திருநாவுக்கரசின் மூத்த மகன் பிரசாந்த். அப்பாதான் குரு. எட்டாவது படிக்கிறான். பக்கத்து கிராமங்களில் அவ்வப்போது கோயில் கச்சேரிகளில் வாசித்துக்கொண்டிருப்பவன், சபா மேடையேறியது இதுவே முதல் தடவை! சிறுவனின் இளைய சகோதரன் பிரதீப் சாய்ராமும் தவில் கற்றுவருகிறான் என்பது உபரித் தகவல்.

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

சிக்கில் குருசரணுக்குத் தோற்றப்பொலிவு கூடியிருக்கிறது. கெத்தாக இருக்கிறார். பாடும்போது சேட்டைகள் செய்வதில்லை. மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஸ்டாலின் சென்றபோது கூடவே போன சேகர்பாபு மாதிரி, குருசரண் பாடும்போது வில்லுடன் கூடவே பயணித்த வயலின் எல்.ராமகிருஷ்ணன் ஒவ்வொரு ராகத்தையும் குழைத்தது சந்தனக் குளுமை! பக்கத்தில் உட்கார இவரும் வயலின் விட்டல் ரங்கனும் பலராலும் வைத்துக்கொள்ளப்படுகிறார்கள். குரு கன்யாகுமரி கண்டெடுத்த இரண்டு நன்முத்துக்கள்!

மிருதங்கம் கே.வி.பிரசாத்துக்கு வயதே ஆகாதா? பல வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியே இன்றும் இருக்கிறார். படிய வாரிய தலை, இஸ்திரி மடிப்புக் கலையாத வேட்டி ஜிப்பா, வாசிப்பில் அர்ப்பணிப்பு இவரின் ஸ்டைல்! பிரசாத் மற்றும் கடம் கிருஷ்ணா, குருசரணுக்கு செம நாத உபசாரம்! அன்று ஸாவேரி உட்பட சரண் பாடிய ஒவ்வொரு உருப்படியும் குணம், மணம் கொண்டவை.

ஜெயந்த்
ஜெயந்த்

கிருஷ்ணா போட்டுக்கொடுத்த புது ரூட்டில் பலரும் இப்போது பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது, மேடையில் லே-அவுட் மாற்றம். கடம், கஞ்சிரா கலைஞர்கள் பாடகரின் முதுகுக்குப் பின்னால் உட்கார்ந்து, வாசிக்காத நேரம் பார்த்து காபி குடித்தல், வெற்றிலை சீவல் போடுதல், மொபைலில் மெசேஜ் பார்த்தல் போன்ற விவகாரங்களில் ஈடுபடமுடியாது.

ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடும்போது அவருக்குப் பக்கத்தில் வயலின் ஆர்கே.ஸ்ரீராம்குமார். மிருதங்கம் நெய்வேலி நாராயணனும், கடம் வி.சுரேஷும் எதிர் எதிரில். உப பக்கவாத்தியத்துக்கு சமூகத்தில் சம அந்தஸ்து!

எப்போதும் சுருதிக்கு இரண்டு தம்புராக்கள் வைத்துக்கொண்டு பாடும் ராமகிருஷ்ணன் மூர்த்தி மதுரத்வனியில் ஒரு தம்புராவும், அந்த நாள் மர சுருதிப்பெட்டி ஒன்றும் வைத்துப் பாடியது பார்க்க அபூர்வம்.

ஞானம் அதிகம் மிக்கவர் ரா. மூர்த்தி. முரட்டுத்தனமற்ற மென்மையான குரல். கேட்க சலிக்காது. பேகடா வர்ணம் நெட் பிராக்டீஸ் மாதிரி. யோசநா கமல லோசந (தர்பார்), மா ரமணன் (இந்தோளம்) என்று பட்டியல் விரிந்தது. தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பைரவியில் மையம் கொண்டது. மழைநீரில் ஊர்ந்து செல்லும் கார்கள் போல ஆலாபனையை மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக வேகமெடுத்து உச்சம் தொட்டது கிரேட்! தியாகராஜரின் ‘உபசாரமுலநு'வில் கபட நாடக சூத்திரதாரியாக உலகை ஆட்டுவித்து விரும்பிய பலன்களை அளிக்கும் ராமனைப் போற்றிப் பாடும் வரிகளில் நிரவல் செய்து பாடலைத் தொடர்ந்து நிறைவு செய்ததில் திருப்தி!

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

மியூசிக் அகாடமியும், HCL நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் புல்லாங்குழல் ஜெயந்த். எல்.ராமகிருஷ்ணன் (வயலின்), சாய்கிரிதர் (மிருதங்கம்), கார்த்திக் (கடம்) மூவரும் குழலுக்குத் துணையாக உட்கார்ந்தவர்கள்.

தலைமுடி, முன் நெற்றியை முழுவதுமாக மறைக்க, அடிக்கடி அதை நீவி விட்டுக்கொள்வது ஃப்ளூட் மாலியோட ஸ்டைல்! பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் கடை பரப்பியது மாதிரி பக்கத்தில் வெவ்வேறு நீளத்தில் ஐந்தாறு புல்லாங்குழல்களைப் படுக்க வைத்திருந்தது யாரோட ஸ்டைல்?

ரீதிகௌள, தர்மவதி, காம்போதி... ஜெயந்த் குழலில் ஊதிய ராகங்கள். விரிவான ஆலாபனையில் காம்போதி. கனமழை மாதிரி கனமான ராகமிது. பிய்த்து உதறிவிட்டார். கீழ், மேல் ஸ்தாயிகளில் துளியும் பிசிர் / அபஸ்வரம் இன்றிக் குழைத்துக் கொடுத்தது அத்தனை சுகம். தியாகராஜரின் ‘ஓ ரங்க சாயீ' கேட்கும் போதெல்லாம் சிலிர்ப்பூட்டும். ஜெயந்த் வாசிப்பிலும்!

கவிஞர் வாலியின் ‘கூவி அழைத்தால்’ டபுள் பேஸ் புல்லாங்குழலில் வாசித்தது சொக்க வைத்தது.

நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் உட்கார்ந்த மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே வாசித்தார்கள் சாய்கிரிதரும் கார்த்திக்கும். தனி, கொஞ்சமானாலும் இனிமை!

ஆன்லைன் கச்சேரிகள் எல்லாமே ஒன்றரை மணி நேரம்தான். திரும்பிப் பார்ப்பதற்குள் முடிந்துவிடுகிறது.

- ஆலாபனைகள் தொடரும்