
படங்கள்: கலாகேந்திரா, முத்ரா பாஸ்கர்
அண்மையில் ஒரு கச்சேரிக்காக வாரணாசி சென்றிருந்தபோது அங்கே பாடிக்கொண்டே படகு சவாரியும் செய்திருக்கிறார்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள். இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரல்!
இங்கே சென்னையில் பாரதிய வித்யா பவனில் இவர்களின் லைவ் கச்சேரி. அரங்கம் நிரம்பிவழிந்தது. முக்கால்வாசிப் பேர் மாஸ்க்குடன். ஒரு சிலர் அது இல்லாமல். மாடவீதி மாடிவீட்டு லேடி ஒருவர் கையோடு எடுத்து வந்த சானிட்டைசரில் உள்ளங்கையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.
தொடங்க 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டதற்கு ஸாரி சொல்லிவிட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின் ரசிகர்களை நேரடியாகப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு, சரஸாங்கியில் `ஜெய ஜெய பத்மநாப...' முதல் பாடல் (இம்முறை ஆன்லைன் அழைப்புகளுக்கு நோ சொல்லி விட்டார்கள் இவர்கள்).

அது என்னவோ தெரியவில்லை, ரஞ்சனியும், காயத்ரியும் பாடுவதைக் கேட்டதுமே உடம்பில் புது ரத்தம் பாய்வது போன்ற புத்துணர்ச்சி. ஒருவர் பாடுவதை மற்றொருவர் ரசிப்பதும், பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு பலே சொல்லிப் பாராட்டுவதும், எப்போதும் ஒருவித மென் புன்னகையுடன் கச்சேரியை நகர்த்திச் செல்வதும்... மகிழ்ச்சி!
பந்துவராளி ஆலாபனையில் ராக சொரூபத்தைப் பிழிந்து தந்தார் ரஞ்சனி. உருட்டி விட்ட பந்து மாதிரி சங்கதிகள் உருண்டோடி வந்தன. சுகமான ராகம் கேட்க ஜிலுஜிலுவென்றிருந்தது. பாபநாசம் சிவனின் ‘அம்பா மனம் கனிந்து' பாடலில் ‘பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்' வரிகளை நிரவலுக்கு எடுத்துக்கொண்டார்கள். இருவரும் மாறிமாறி நிரவல் செய்து பைந்தமிழுக்குக் கதம்ப மாலை சூடி பாத மலர் பணிந்தபோது அரங்கில் பூக்களின் மணம் கமகமத்தது! ஸ்வரங்கள் கேட்கவே வேண்டாம் என்பதைவிட ‘கேட்டுக்கொண்டே இருக்கலாம்’ என்று சொல்வதே நியாயம்.
வரலாற்றுப் புகழ்மிக்க தோடியை இளையவர் காயத்ரி குத்தகைக்கு எடுத்தார். இத்தனை வருட அனுபவத்தில் எத்தனை தோடி பாடியிருப்பார்! ஆலாபனை மியூரல் பெயின்டிங் மாதிரி துளித்துளியாக வளர்ந்து நிறைவடைந்தபோது... அப்பா! அத்தனை அடர்த்திக் கைத்தட்டல் கேட்டு எத்தனை மாசமாச்சு!
‘நின்னே நம்மி நானு' பாடலில் ‘காமாட்சி கண்டதலாய தாட்சி...' வரிகளில் சியாமா சாஸ்திரி பெண் உருவம் தாங்கி சியாமளா சாஸ்திரிகளாக உருகுவது போன்ற உணர்வைத் தந்தார்கள் ராகா சிஸ்டர்ஸ்.
சாருமதி ரகுராமன் - சாய் கிரிதார் - எஸ். கிருஷ்ணா வயலின், மிருதங்கம், கடம் காம்போவில் முதலிடம் கிருஷ்ணாவுக்கு. மேடையில் சாருமதி இதுவரை சிறு புன்முறுவல்கூட பூத்துப் பார்த்தது இல்லை. அன்று அடக்கமாட்டாமல் சிரித்தபடியே இருந்தது ஸ்வீட்! அவரது வாசிப்பும் அப்படியே!

தீபாவளி சமயத்தில் ஜவுளிக் கடைகளில் அகிலா, ஆஷா, இந்து, ஈஸ்வரி என்று விதவிதமான பெயர்களில் புதுப்புதுப் புடவைகள் அறிமுகமாகும். டிசம்பர் வந்தால் சபா வட்டத்திலும் இதுவே. மாவட்டத்தில் எப்படியோ தெரியாது!
இந்த முறை சங்கீத கோதாவில் இறங்கியிருப்பது - சவுண்ட் க்ரீடு (sound creed). இதற்கு முன்பு ‘பெருமாள் அண்ட் பிராவிடன்ஸ்’ என்ற ஆல்பத்தைக் கேட்டிருப்பவர்கள் இதை அறிந்திருப்பார்கள். கோவையிலிருந்து ஆதித்யா பாலசுந்தரம், சென்னையிலிருந்து மிருதங்கக் கலைஞர்கள் சுமேஷ் நாராயணன், ஜி.ரவி மூவரும் கூட்டணி அமைத்து ‘ஏழிசை’ என்ற பெயரில் ஒன்பது நாள் திருவிழா ஆன்லைனில் நடத்தினார்கள்.
‘தீமாடிக்' நிகழ்வு இது. ச முதல் நி வரையிலான சப்த ஸ்வரங்களில் ஒவ்வொரு ஸ்வரத்தை ஒவ்வொரு பாடகர் எடுத்துப் பாடினார்கள். அதாவது, கச்சேரியில் தேர்வு செய்யும் பாடல்களில் குறிப்பிட்ட ஒரு ஸ்வரம், ஜீவ ஸ்வரமாக இருக்கும். இந்த ஏழு போக முதல் நாளும் கடைசி நாளும் ஆதி, ஆனந்தம் என்று பெயரிட்டு இரு கலைஞர்கள் பங்கேற்றார்கள். இதற்குமேல் விவரித்தால் ரிசர்ச் பேப்பர் மாதிரி ஆகிவிடும்!
ஆழ்வார்பேட்டை சங்கரா ஹால் மாடியில் அசத்தலாக செட் போட்டு (விக்டர் பால்ராஜ்) கச்சேரிகளை ஹைடெக்காகப் பதிவு செய்திருக்கிறார்கள். வெளி மனிதர்களுக்கு அனுமதி கிடையாது அருணா சாய்ராம் மட்டும் நட்பு ரீதியில் ஒரு நாள் வந்து சென்றதாகத் தகவல்!
முதல்நாள் ‘ஆதி’யில் மயிலை கார்த்திகேயன் நாகஸ்வரம். இரண்டாவது நாகஸ்வரம் கோலேரி வினோத்குமார். சிவன் வாயில் எம். ராஜரத்தினமும், மங்கலம் கே.ஆசனும் இரண்டு தவில்கள்.

மொத்தம் ஐந்து பாடல்கள். கொடுக்கப்பட்ட நேரமோ ஒரு மணி நேரத்துக்கும் கம்மியாக! நாகஸ்வரத்திற்கு இது எம்மாத்திரம்? ஒரு ராகத்தையே ஒரு மணி நேரம் வாசிக்கக் கூடியவர்கள் நம் நாயனமார்கள்!
கன பஞ்ச ராக மல்லாரியுடன் தொடக்கம். அந்த நாளில் நாகஸ்வர மேதை குளிக்கரை பிச்சையப்பா டியூன் போட, மற்றொரு மேதை ஆண்டாங்கோவில் செல்வரத்தினம் வரிகள் எழுதிக் கொடுத்திருக்கிறார். இளையராஜா டியூனுக்கு கவிஞர் வாலி பாட்டு எழுதியது மாதிரி! (கம்பீர) நாட்டையில் ஆரம்பித்து, கௌள, ஆரபி, வராளி, ராகங்களில் பயணித்து மல்லாரி முடிந்தபோது திருவையாறு தியாகராஜ ஆராதனை நினைவுக்கு வந்தது. தொடர்ந்த பாடல்கள் அனைத்தும் விடுவிடு விறுவிறுவென ஒரே ஓட்டம். காரணம், நேரமின்மை!
சின்ன பொழுதில் தவில், நாகஸ்வரம் இரண்டையும் கற்க விரும்பியிருக்கிறார் கார்த்திகேயன். ‘வேண்டாம்டா... தவில் வாசிச்சா கை கொப்புளிச்சுப்போயிடும். நீ நாகஸ்வரம் மட்டும் கத்துக்க, போதும்’ என்று அவரின் அப்பா சொல்லிவிட, தந்தை சொல் தட்டவில்லை மகன்!
சபாக்களின் கூட்டமைப்புடன் (Federation of city sabhas) இணையாமல், கலாகேந்திராவுடன் தனிக்குடித்தனம் (மியூசிக்கலி மார்கழி!) வந்திருக்கிறது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ். ஆன்லைன் சீசன்! தொடக்க விழா, விருதுகள் வழங்குவது போன்ற சடங்குகளையும் முன்கூட்டியே நடத்தி ஷூட் செய்துவிட்டார்கள்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு வருவது மாதிரியான டிரஸ் அணிந்து காணப்பட்டார் சாகேத்தராமன். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் அதன் பூர்வீகம் குறித்து லெக்சர் கொடுத்ததில் சகோதரி விசாகா ஹரியின் பாதிப்பு?
காட்டுக் கத்தல் கத்திய நாள்கள் காற்றோடு கலந்து மிகவும் மென்மையாகிவிட்டது சாகேத்தராமனின் குரல். ஹெச்.என்.பாஸ்கர் - பத்ரி சதீஷ்குமார் - பி.எஸ்.புருஷோத்தமன் என்று பக்காவான செட் பக்கவாத்தியமாக அமைய, வேற லெவலுக்குப் போய்விட்டார் இந்தப் பாடகர். சண்முகப்பிரியாவுடன் கொஞ்சிக் குலாவினார். ஹைபிட்ச் சங்கதிகளையெல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு நடுஸ்தாயியின்போது ராகத்தில் சர்க்கஸ் செய்து அசத்தினார்.
பட்தீப் ராகத்தில் ராகம் - தானம் - பல்லவி. சற்று நேரம் வடக்கு திசையில் பயணித்து இந்த இந்துஸ்தானி ராகத்தை அனுபவிக்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன் மறைந்த தன் தந்தை சந்தானத்துக்கு அர்ப்பணிக்கும் விதமாக ‘மகன் தந்தைக் காற்றும் உதவி...' என்ற திருக்குறளைப் பல்லவி வரிகளாகக் கொண்டு சாகேத்தராமன் பாடியது உருக்கமான அஞ்சலி.
எல்லாம் சரி. ‘ச'வை ‘ஷ'வாக்கும் கெட்ட பழக்கத்தை மட்டும் இவர் விடவேமாட்டார் போலிருக்கு!

முத்ராவுக்கு வயது 27. ஆன்லைனில் 31 நாள்களுக்கு 2 ப்ளஸ் மணிநேர கச்சேரிகள். பக்கவாத்தியக் கலைஞர்கள் 96 சதவிகிதம் ரிபீட் கிடையாது. ஒவ்வொரு வருடமும் பாஸ்கர் - ராதா தம்பதி நடத்தி வைக்கும் திருக்கல்யாண வைபோகம்!
மகராஜபுரம் சந்தானத்தின் சீடர் டாக்டர் ஆர்.கணேஷ், எம்.ஏ.கிருஷ்ண சுவாமி - குருராகவேந்திரா - சிவராமகிருஷ்ணன் துணை உட்கார பாடினார். மினியேச்சர் மகா பெரியவா உருவத்தை மேடையில் நமக்கு முதுகு தெரிய நிற்க வைத்திருந்தார் கணேஷ். இன்னொரு கச்சேரியில் வீணை ரமணா பாலசந்திரன், நமக்கு முகம் தெரிய ரமண மகரிஷியின் போட்டோவை வைத்துக்கொண்டு வாசித்தார். பக்தி மனதளவில் இருந்தால் போதுமே! எதற்கு ஷோ?
முதலில் கல்யாணி, பிறகு கீரவாணி என்று இரு ராகங்களுக்கு ‘ட்ரீட்மென்ட்’ கொடுத்தார் டாக்டர். இரண்டிலும் சந்தானம் ஸ்டைலில் அழகழகான குழைவுகள். இன்னும் சற்று விரிவாகப் பாடியிருக்கலாம் என்று நினைக்கும் அளவு ஆலாபனைகளை சட்டென்று முடித்துக்கொண்டார். Mild dose! கீரவாணியில் ‘புரோவு... புரோவு...’ என்று தொடங்கும் சியாமா சாஸ்திரியின் பாடல். மிகவும் அபூர்வமானது. பாட்டுப் புத்தகத்தில்கூட இல்லை. சந்தானம்தான் கற்றுத் தந்தாராம்.
‘‘அந்த நாளில் கற்கும்போதே பாடலை எழுதி வைத்துக்கொண்டுவிட்டீர்களா’’ என்று கேட்டேன். ‘‘இல்லை... மனப் பாடமாகிவிட்டது. சார் சொல்லிக் கொடுத்தது கல்வெட்டு மாதிரி மனதில் பதிந்துவிட்டது’’ என்றார் கணேஷ்.
(பின்குறிப்பு: மயிலைவாசிகளுக்கு ஜாலி! அவர்கள் இருக்குமிடம் சுற்றி பாரதிய வித்யா பவன், ஆர்.ஆர்.சபா, மதுரத்வனி ஆகிய இடங்களில் ஆஃப்லைன் கச்சேரிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. தி.நகர், மேற்கு மாம்பலம் வாழ் மக்கள் பாவம், ஆன்லைன் மட்டுமே!)
- ஆலாபனைகள் தொடரும்