சினிமா
Published:Updated:

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

ஆலாபனைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலாபனைகள்

படங்கள்: முத்ரா பாஸ்கர்

இனி சபாக்கள் தயக்கமில்லாமல் நித்யஸ்ரீ மகாதேவனுக்கு தேதி கொடுக்கலாம். இசைப்பிரியர்கள் அவரது கச்சேரிகளுக்கு சந்தேகமில்லாமல் திரண்டு வரலாம். நித்யஸ்ரீ back in form! நடுவில் மக்கர் செய்த குரலைப் பழையபடி சரிசெய்துகொண்டுவிட, எப்போதோ கேட்ட நித்யஸ்ரீயின் ‘மின்சாரக் கண்ணா...’ கம்பீரக் குரலை இப்போது மறுபடியும் கேட்க முடிகிறது.

பாரதிய வித்யா பவனில் ‘கம் கணபதே’ என ஜம்மென்று ஹம்சத்வனியில் தொடங்கியவருக்கு, அவருடைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட் எம்.ஏ.கிருஷ்ணசுவாமி வயலினில் பரூர் ஸ்கூல் பிரதிநிதியாகப் பாடகியை அழகாகப் பின்தொடர்ந்தார். நித்யஸ்ரீயின் தந்தையார் சிவக்குமார் மிருதங்கம். மகளுக்கு லயத்தில் பாதுகாப்பு அரண்! ஹெச்.சிவராமகிருஷ்ணன் கடம்.

தர்மவதி ஆலாபனையில் விஸ்வரூபம் எடுத்தார் நித்யஸ்ரீ. கீழ் ஸ்தாயி சஞ்சாரத்தில் குரல் கிணற்றுக்குள் மூழ்கி மூச்சுத் திணறாமல் தெளிவாக உழன்று சுழன்றது. ராகம் வளர வளர தர்மவதி சங்கதிகள் நதியாகப் பெருக்கெடுத்து ஓடி முன்னாடி சித்ரக் குளம் முதல் பின்னாடி கபாலி குளம் வரை பயணித்தன. ராகத்தின் முப்பரிமாணங்களையும் நித்யஸ்ரீ வெளிப்படுத்தியது, சொந்த அனுபவம் பிளஸ் பாட்டி டி.கே.பட்டம்மாள் கொடுத்த சங்கீத வரம். அண்ணமாசார்யாவின் ‘மங்காம்புதி அனுமன்தா’ என்ற தர்மவதி ராகப் பாடலை அபூர்வமாகக் கேட்டு மகிழ முடிந்தது.

நித்யஸ்ரீ
நித்யஸ்ரீ

பாபநாசம் சிவனின் ‘தணிகை வளர் சரவணபவா’ (தோடி) பாடலின் ‘துள்ளி விளையாடி வரும் தோகைமயில் மேலே’ என்ற சரண வரிகளை நித்யஸ்ரீ நிரவலாக எடுத்து வண்ண வண்ணத் தோகையாக விரித்தார்!

கொள்ளுத் தாத்தாவுக்குத் கொள்ளுப்பேரன் பரிசு கொடுப்பது மாதிரி, 92 வயது ‘கிளாரினெட் எவரெஸ்ட்’ ஏ.கே.சி.நடராஜனுக்கு ஆறு வயது கேதாரம் அமைப்பு, ‘நாத மூர்த்தி’ விருது வழங்கியது. இவருடன் பாடகர் பரத்சுந்தர், கஞ்சிரா ஆலத்தூர் ராஜ கணேஷ் இருவரும் ‘நாத மூர்த்தி’, ‘லய மூர்த்தி’ விருதுகளைப் பெற்றார்கள். இந்த வயதிலும் கணீரென்ற குரலில் ஏ.கே.சி ஏற்புரைத்தது ஏ ஒன்!

விழா முடிந்ததும் பரத்சுந்தர் கச்சேரி. பாட்டு - வயலின் - கடம் - கஞ்சிரா என்று அத்தனை வித்வான்களும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மேடையில் உட்கார்ந்திருந்தது பார்க்க அத்தனை ஜோர்! ( தம்புராவுடன் ஒரு பெண்மணி) இந்த யூனிஃபார்மை எல்லோரும் பின்பற்றலாம். மாறாக, ஒருவர் அடர் நீலத்தில் உட்கார்ந்தால் இன்னொருவர் ஊதாப் பூவில் கண்சிமிட்டுவதும்... அல்லது கோவிந்தா மஞ்சள், கரும்பச்சையில் இருவர் இருப்பதும் உறுத்தல்! இதில் கச்சேரியும் அப்படி இப்படி அமைந்துவிட்டால் கடுப்பு இரட்டிப்பாகி விடுகிறது!

வெங்கட் நாகராஜன்
வெங்கட் நாகராஜன்

பூர்ணசந்திரிகா ராகத்தில் எஸ்.ராமநாதன் இயற்றிய பாடலுடன் ஆரம்பித்த பரத், இந்த சீசனில் அதிகமான இடங்களில் பாடுபவராக இருப்பார். காதுகளை இம்சிக்காத, மென்மையான குரல் இவருக்கு. இசையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். தோடி மெயின். வின்டேஜ் சங்கதிகளைத் தோண்டி எடுத்துத் தோரணம் கட்டிக் கலகலப்பாக்கினார். தமது மாஸ்டர் பீஸ் பாடலான ‘ஸ்ரீகிருஷ்ணம் பஜமானஸ...’வில் குருவாயூரப்பனை ‘புல்லாங்குழல் இசையில் இன்புறுபவர்’ என்பார் தீட்சிதர். பரத்சுந்தர் பாடியதைக் கேட்டிருந்தாலும் அப்பன் குஷியாகியிருப்பார். ‘பங்கஜாஸ்னாதி தேவ மஹிதம்ஸ்ரீ குருகுகவிஹிதம்...’ வரிகளைப் பாடியபோது இவரின் எதிர்காலம் வானவில்லாகத் தோன்றி மறைந்தது!

என்.சி.பரத்வாஜின் மிருதங்க வாசிப்பில் ஏன் அவ்வளவு சத்தம்? முக்கியமாக ஆரம்பத்தில்! மைக்கை சரியாக கவனிக்கவில்லையா?

மஹதி
மஹதி

மனைவி க்ருதி பட் மையமாக உட்கார்ந்து பாட, இடதுபக்கம் கணவர் விட்டல் ரங்கன் அமர்ந்து வயலின் வாசித்துப் பார்க்க க்யூட் (sound creed)! இளசுகளின் இந்த ஒற்றுமை வாழ்க பல்லாண்டு! பத்ரி சதீஷ்குமாரும், கே.வி.கோபாலகிருஷ்ணனும் தம்பதியருக்கு மிருதங்கம், கஞ்சிராவுடன் நாத சாமரம் வீசினார்கள்.

இடது பக்கம் வகிடெடுத்து வாரிய தலை... இடது தோள்பட்டையில் தொங்கும் மல்லிகைச் சரத்தின் வாசம் நாம் பார்த்துக்கொண்டிருந்த மடிக்கணினிக்கு வெளியேவும் மணக்க, பாலில் தேன் கலந்த இனிமைக் குரலில் லால்குடி ஜெயராமனின் அமிர்தவர்ஷணி வர்ணத்தில் கச்சேரியைத் தொடங்கினார் க்ருதி பட். பட், பெய்த மழை போதாதா என்ற கேள்வி எழும்பியது நிஜம்!

க்ருதி கையாண்டது ‘நி’ ஸ்வரம். வசந்த பைரவி ராகத்தில் ‘நீ தயராதா’ என்று கல்யாணராமனிடம் தியாகராஜர் வழியே கேட்டார். அடுத்து நாயகிக்கு முதலில் வயலினில் ரோடு போட்டுக் கொடுத்தார் விட்டல் ரங்கன். ஆலாபனை ஆனதும் ‘நீ பஜனகான ரசிகுலனே...’வைப் பிழையின்றிப் பாடினார் க்ருதி.

க்ருதி பட் மற்றும் குழு
க்ருதி பட் மற்றும் குழு

ரீதிகௌள ராகத்தை எடுத்ததும்தான் க்ருதியின் பலவீனம் வெளிச்சத்துக்கு வந்தது. மந்திர ஸ்தாயியில் மிகவும் சிரமப்பட்டார். வாய் அசைப்பது மட்டும் தெரிந்ததே தவிர, பாட்டு கேட்கவே இல்லை. அசுரப் பயிற்சி செய்தால் போதும், இந்தக் குறையிலிருந்து மீண்டு வந்து விடலாம்.

ராகத்தை விட்டல் ரங்கன் தானமாக வழங்க, ‘ஜனனி நின்னுவினா...’ பாடினார் க்ருதி. எம்.டி.இராமநாதன் நினைவுக்கு வந்தார். அதி அற்புதமாக இந்தப் பாடலைப் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார் அந்த மேதை!

நாள் தவறாமல் தினம் ஒரு கச்சேரியை ஒளி/ஒலி பரப்பி வரும் முத்ரா செய்துவரும் நற்பணி, ஒவ்வொரு பாடலுக்கும் இயற்றியவரின் பெயரையும், அதன் ராகத்தையும் திரையில் ஓட விடுவது. வேண்டாத வேலை, ஒவ்வொரு பாடல் முடிந்ததும் எப்போதோ பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல்களை ஒலிக்கச் செய்வது. ரெக்கார்டு செய்யப்பட்ட போது இந்த விவகாரம் தெரியாது. ஸோ, கலைஞர்கள் கைத்தட்டலின்போது கைகூப்பி நன்றி தெரிவிக்காமல் பேந்தப் பேந்த விழிப்பது வேடிக்கை!

இவ்விடத்தில் பாடிய ஸ்ரீரங்கம் வெங்கட் நாகராஜன் அண்மையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி-யில் பிஹெச்.டி முடித்த படிப்பாளி. கூடவே, பாட்டாளியும்கூட!

திருப்புல்லாணியிலுள்ள ராமர் மீது நாராயண கௌள ராகத்தில் தீட்சிதர் இயற்றிய ‘ஸ்ரீராமம் ரவிகுலாப்தி ஸோமம்’ பாடலை மனதில் பதியும்படி பாடினார் ஸ்ரீவெநா. குரலில் முதிர்ச்சியும், சீக்கிரம் முன்னேறிவிட வேண்டும் என்கிற இளமைத் துடிப்பும் கண்கூடு!

ஆலாபனைகளின்போது இந்த இளைஞர் கவனம் செலுத்த வேண்டும். ‘வாய்திறந்து பாடவேண்டும்’ என்று பெரியவங்க சொல்வாங்கதான். ஆனால், அகில உலகமே தெரியும்படி வாயைத் திறந்தால் அது விபத்தில் முடியும் அபாயம் உண்டு. அன்று பூர்வி கல்யாணியின் ஆலாபனையில் லேசாகப் பிசிர் தட்டியது போல்!

பரத் சுந்தர் மற்றும் குழு
பரத் சுந்தர் மற்றும் குழு

வெங்கட் நாகராஜன் மெயினாகப் பாடியது கரஹரப்ரியா. ராகத்துக்கே உரிய கம்பீரத்துடன் சங்கதிகள் பிரவாகமெடுத்தன. ஆனால், தொடங்கும்போது ‘ஐயா நான் கரஹரப்ரியா ஆஜர்...’ என்று கைதூக்கியிருக்கவேண்டும். இவரது ஆலாபனையில் ஆதார் அட்டையைத் தொலைத்துவிட்டது போல் அடையாளம் தெரிய சிறிது காத்திருக்க வேண்டியதாயிற்று.

செம்மங்குடி இந்த விஷயத்தில் ஜித்தர். ஒரே இழுப்பு... கரஹரப்பிரியா துள்ளி ஓடிவந்து ‘ஹாய்...’ சொல்லும்!

லைவ் கச்சேரிகள் நடத்தும் ஒரு சில சபாக்கள் நாளேடு விளம்பரத்தில் ‘ஆன்லைனிலும் இதைக் கேட்கலாம்’ என்று குறிப்பிட்டு வலைதள முகவரியும் கொடுப்பது உண்டு. ஒருவகையில் இது same side goal! பக்கத்துத் தெருவில் வசிப்பவர்கள்கூட ‘போனில் பார்த்துக்கலாம்’ என்று சபா அரங்கம் பக்கம் வருவதில்லை. விளைவு, அதிகமான காலி நாற்காலிகளுக்குப் பாட வேண்டிய பரிதாப நிலை கலைஞர்களுக்கு!

வீட்டிலிருந்து புறப்பட்டு சபாவுக்கு வரும் வழியில் பியூட்டி பார்லரில் விசிட் அடித்துவிட்டு வருவார் போலிருக்கு எஸ்.மஹதி! ஆர்.ஆர். சபா மினி ஹாலில் புத்தம் புதுசாக டி.வி ஷோவில் உட்காரும் ஜட்ஜ் மாதிரி காணப்பட்டார் அவர்!

இசையின் முடிவற்ற தன்மை (Music in perpetuity) என்ற தலைப்பின் கீழ் ஆர்.ஆர். சபா கச்சேரிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பட்டணம் சுப்ரமணியம் ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரி ஆகிய மூன்று மகான்கள் எழுதிய பாடல்களை மட்டும் கொண்டு தன் கச்சேரியை அமைத்துக்கொண்டார் மஹதி. மும்மூர்த்திகளுக்கும் மற்றவர்களுக்கும் அன்று லீவ்! ஹெச்.என்.பாஸ்கர், டெல்லி சாய்ராம் - அனிருத் ஆத்ரேயா உடன் இருந்து ஆதரவு.

ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு அல்லது பின்பு அதை இயற்றியவரின் பெயர், ராகத்தை மஹதி அறிவித்தது, கேட்போருக்குக் குழப்பம் தவிர்த்தது. அப்படியும் கரஹரப்ரியா ராகத்தை அறிவிக்க மறந்துவிட்டார். அது முத்தையா பாகவதர் இயற்றிய தமிழ் உருப்படி என்று பிறகு தெரிந்தது. இன்றைய சூழலில் தமிழை மறக்கலாகுமோ?

இம்மூவரின் மந்தாரி, மாளவி போன்ற ராகங்களில் அபூர்வமாகப் பாடப்பெறும் கீர்த்தனைகளைத் தேடி எடுத்துவந்து மஹதி பாடியது சிறப்பு. தீமாடிக் வட்டத்தில் சிக்கிக் கொண்டுவிட்டதால் அவரால் வழக்கமான உற்சாகத்துடன் பாட இயலவில்லை.

-ஆலாபனைகள் தொடரும்