
தியாகராஜரின் ‘மாருபல்க...' காலத்தைக் கடந்து நிற்கும் கல்வெட்டுப் பாடல். இதில் அனுபல்லவி, சரண வரிகள் தோழமை பாராட்டும் இயல்பு கொண்டவை
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் நடத்தும் 70-ம் வருட இசை விழா. நுழைவாயிலில் லெஃப்ட் எடுத்து ரைட் திரும்பினால் சாஸ்தா உணவகத்தில் உருளை போண்டா வாசத்தை முகர்ந்துகொண்டே ஹாலுக்குள் நுழைய வேண்டும். நானும் புகைப்படக்காரரும் நான்காவது வரிசையில் உட்காருவதைப் பார்த்ததும் ஓடோடி வந்தார் ஒருவர். ‘‘சார், ஒரு வரிசை பின்னால் தள்ளி உட்காருங்க. இங்க சீட்ல நம்பர் ஒட்டியிருக்கு... அதுக்கான ஆளுங்க வருவாங்க’’ என்றார். அவர் சொல்படி கேட்டோம்.
திரை விலகியது. மேடையில் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன். அரங்கின் பின் வரிசைகளில் ஆங்காங்கே சிதறி உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தவர், ‘‘எல்லோரும் முன்னாடி வந்து காலியா இருக்கற நாற்காலிகளில் உட்காருங்க ப்ளீஸ்’’ என்று சொல்ல, பின்னாலிருந்தவர்கள் விமானத்தில் பிசினஸ் கிளாஸுக்கு அப்கிரேடு ஆகிவிட்ட மகிழ்ச்சியுடன் விரைந்து வந்து முதல் சில வரிசைகளில் உட்கார்ந்தார்கள்! முதலில் எங்களுக்கு வழிகாட்டியவரைத் தேடினேன். காணவில்லை!

அசாவேரி, நாட்டை ராகங்களில் தலா ஒரு பாடலை முடித்துக்கொண்டு ஸ்ரீரஞ்சனி அரவணைத்துக்கொண்டது லதாங்கியை! வசீகரமான இனிமைக் குரலில் லதாங்கியை வசப்படுத்திக்கொண்டார். நாகஸ்வர பிடிகளில் சங்கதிகள் நங்கூரம் பாய்ச்சின. ஒவ்வொரு ஸ்தாயியிலும் லதாங்கியின் அழகுக்கு அழகூட்டினார். ‘மரிவேர திக்கெவரு' பாடலில் வரும் ‘தரலோனி நீசாடி தெய்வமு நேகான’ வரியை நிரவல் செய்தபோது லதாங்கி ராகத்தின் signature சங்கதிகள் அடுக்கடுக்காக வந்து விழுந்தன.
வயலினில் எல்.ராமகிருஷ்ணன் வாசித்த லதாங்கியும், கரஹரப்ரியாவும் ‘வாவ்' ரகம். இவரின் வயலின் நாதம் எப்போதும் ஸ்பெஷல்! கவி குஞ்சர பாரதியின் ‘இவராரோ அறியேன் சகியே' என்ற காம்போதி ராக ஜாவளியை இடைச் செருகிவிட்டு, ஸ்ரீரஞ்சனி பாடிய கரஹரப்ரியா ஆலாபனையும், தியாகராஜரின் ‘சக்கநி ராஜ மார்க...’வும் ஒரே போட்டியில் இரண்டு செஞ்சுரிகள் அடிப்பதற்குச் சமம். நெய்வேலி சந்தானகோபாலனின் சீமந்த புத்ரி சங்கீத உலகில் உச்சம் தொட வாழ்த்துவோம்!
லயம் பொறுத்தவரை மிருதங்கம், கடம் தவிர இன்னொரு பக்க வாத்தியமும் உண்டு. அது, வெளியே உணவகத்திலிருந்து வந்த கிரைண்டர் உருளும் சத்தம்!

ஸ்ரீரஞ்சனிக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து மிடுக்குடன் அழைத்துவந்தார் விஜய் சிவா (கிருஷ்ண கான சபா). அதிகம் கனமில்லாத இந்த ராகத்தை கவனத்துடன் கையாண்டார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் படிப்படியாக வளர்த்தி வளமாக்கினார். எந்த ராகத்தை எடுத்துக் கொண்டாலும், விஜய் சிவா குரல் வழியே ஒலிக்கும்போது அந்த ராகத்திற்குத் தனி அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. ஒரு சில பண்டிதர்களின் பகவத்கீதை லெக்சர்களில் தெரியும் மேதா விலாசம் அது!
தியாகராஜரின் ‘மாருபல்க...' காலத்தைக் கடந்து நிற்கும் கல்வெட்டுப் பாடல். இதில் அனுபல்லவி, சரண வரிகள் தோழமை பாராட்டும் இயல்பு கொண்டவை. ‘தாரிநெறிகி’ வரிகளை நிரலுக்கு எடுத்துக்கொண்டு மனோ தர்மத்துடன் விஜய் சிவா பாடுவதைக் கேட்கும்போது ஏற்பட்டது ஒருவித ஜிலுஜிலு உணர்வு!
உசேனி ராக ஆலாபனையில் விஜய் சிவாவும், வயலினில் லால்குடி விஜயலட்சுமியும், ‘அட, இந்த ராகத்தை இப்படியும் பாட முடியுமா, இப்படியும் வாசிக்க முடியுமா’ என்று மாறிமாறி வியக்க வைத்தார்கள்.
மெயினாக அலச தோடி, தோதான ராகம். விஜய் சிவா ஆலாபனையில் அவரின் குரு டி.கே.ஜெயராமனையும், வயலின்போது லால்குடி ஜெயராமனையும் கேட்டு அனுபவிக்க முடிந்தது. தீட்சிதரின் ‘ஸ்ரீகாளஹஸ்தீஸ...’ அருமையான சாய்ஸ். மொத்தக்கச்சேரியில் விஜய் மற்றும் விஜி அளித்த ஹை கிளாஸ் சங்கதிகளை மஞ்சள் பையில் நிரப்பிக்கொண்டு சென்றார்கள் இசைப் பிரியர்கள்!
ஜெ.வைத்தியநாதனின் மிருதங்க வாசிப்பைக் குறிப்பிடவேண்டும். பாடலுக்கும், முக்கியமாக ஸ்வரங்களுக்கும் இவரது மிருதங்கம் கூடவே பாடிக்கொண்டு வந்த உணர்வைத் தந்தது. கடம் சந்திரசேகர சர்மா.

ஒவ்வொரு வருடமும் கச்சேரிகளைப் பதிவு செய்ய விநோதமான லொகேஷன்களைத் தேடி அலைபவர் MadRasana மகேஷ். இந்த முறை அவர் தேடலுக்குச் சிக்கியது புதுவைக்கு அருகே ஆரோவில் சுற்றுவட்டாரம். சமீபத்தில் வெளுத்து வாங்கிய மழை நாள்களில் சென்னையிலிருந்து கலைஞர்களை வரவழைத்திருக்கிறார். படப்பிடிப்புக் குழு மழையில் நனைந்து சகதியில் நடந்தெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் வந்திருக்கிறார்கள். ஒரு நாள் இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விட்டதாம். ம்... கலைச் சேவை!
இந்த சீசனில் ஆகச்சிறந்த கச்சேரிகளில் ஒன்று MadRasana பேனரில் நடந்த சாருமதி ரகுராமன் (வயலின்), ரமணா பாலசந்திரன் (வீணை), அனந்தா ஆர்.கிருஷ்ணன் (மிருதங்கம்) கூட்டணி வாசித்த கச்சேரி.மேடையின் நடுநாயகனாக மிருதங்கத்துடன் அனந்தா; அவரது வலது பக்கம் வயலின் சாருமதி; இடதுபக்கத்தில் வீணை ரமணா.
பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளில் சில பகுதிகள் எடுத்து ‘மெட்லி' மாதிரியாக கதம்பத்தில் ஆரம்பித்தார்கள். சாருமதியும், ரமணாவும் அடுத்தடுத்து சங்கதிகளை வீசியபோது, விம்பிள்டனில் mixed doubles டென்னிஸ் பார்க்கும் உணர்வு. சுவாமி பார்த்தசாரதி நடத்திவரும் வேதாந்த அகாடமியில் படிக்கும் மாணவர்போல் இருக்கிறார் ரமணா. பகவான் ரமணரின் அதிதீவிர பக்தர் இவர்.
நவராத்திரி காலத்தில் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடு மாதிரியான சூழலில் ‘த்வைதமு ஸுகமா, அத்வைதமு ஸுகமா’ என்ற தியாகராஜரின் தத்துவ ஆராய்ச்சிப் பாடல். ரீதிகௌள ராகத்தில் வயலினும் வீணையும் சொக்கின. மயிலிறகால் வருடி விடுவது போன்ற ஆலாபனை.

ராகம் - தானம் - பல்லவிக்கு ஷ்யாம் கல்யாண் ராகத்தைத் தேர்வு செய்து அந்த ராகத்தின் வழியே ஆலாபனையிலும் தானத்திலும் வீணைக்கும் வயலினுக்கும் கடும் போட்டி. மெஸ்மரைஸ் செய்வதில் நூலிழை வெற்றி சாருமதிக்கு! வயலின் மும்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த புரபசர் டி.என்.கிருஷ்ணனின் மாணவியான சாருமதியின் bowing சூப்பர் கிளாஸ். ஒவ்வொரு சங்கதியிலும் அவ்வளவு தெளிவு. ரமணா தன் பங்குக்கு வீணையிலிருந்து சித்தார், சாரங்கி, சரோட் என்று பலப்பல நாதங்களைப் பிறப்பித்தார்.
அனந்தா லேசுப்பட்டவர் கிடையாது. தனி ராஜாங்கமே நடத்தினார். கோர்வைகளின்போது கோலாட்டம் போட்டார். ஆங்காங்கே தபலா effect வேறு! மொத்தத்தில் மூவர் கூட்டணிக்கு அமோக வெற்றி!
என்ன கொடுமை சரவணன் இது! மியூசிக் அகாடமியில் ஜூனியர், சப் சீனியர் என்ற இரண்டு ஸ்லாட்களுக்கும் ஒரு மணி நேர அவகாசம்தான் தரப்பட்டது. அந்த நாள் பல்லவன் பஸ் டிக்கெட்டுக்குப் பின்பக்கம் இவர்களது சாங் லிஸ்டை எழுதிவிடலாம். ஆன்லைனில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பார்க்க மாட்டார்கள் என்று இவர்களாகவே முடிவு செய்து விட்டால் யார் என்ன செய்ய முடியும்!

முதல் நாள் இரண்டாவது ஷோ, திருவனந்தபுரம் என்.ஜெ.நந்தினி. ஸ்ரீராம் ஸ்ரீதர், கார்த்திக் கணேஷ்ராம் வயலின், மிருதங்கம்.
வெள்ளிக் கம்பியைவிட மெலிதான குரல் நந்தினிக்கு. பன்னீர் மாதிரி தெளிக்கும் குளுமையான சங்கதிகள். பாடும்போது சென்ற வருடம் காணப்பட்ட மூச்சிரைப்பு இந்த முறை இல்லை என்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம். ஆயுர்வேத சிகிச்சையோ?
‘யாருக்குத்தான் தெரியும் அவர் மகிமை’, ‘கடைக்கண் வைத்தென்னை ஆளம்மா’ என்று அடுத்தடுத்து தமிழில் பாடினார் இந்தக் கேரளத்துப் பெண். பிரதானமாக வராளியைச் சற்று விரிவாக ஆலாபனை செய்துவிட்டு, ‘மரகதமணிவர்ண ராம நந்நு..' என்ற தியாகராஜர் பாடல். நிரவலுக்கு ‘ப்ரேமரஸமு த்யாகராஜுகீ...’ வரிகள். எல்லாமே இனிமை ரஸமு! முத்தாய்ப்பாக மலையாள மொழிப் பாடல்.
கடந்த ஜூன் மாதம் தமது 96 வயதில் மறைந்த சீனியர் கர்னாடக இசைப்பாடகி பரஸ்சால பொன்னம்மாளின் மாணவி நந்தினி. பிஹெச்.டி ஆய்வை மிக விரைவில் நிறைவு செய்யப் போகிறார். ஐம்பதுக்கும் கூடுதலான மாணவ-மாணவிகளைத் தயாரித்து வருகிறார். பொன்னம்மாள் டீச்சர் பற்றிப் பேச்செடுத்தால் உருகுகிறார்.

‘‘கனிவுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பொன்னம்மா டீச்சர். பாட்டு கிளாஸுக்கு வருவதாகச் சொன்னால் எங்களுக்காக சின்னக் குழந்தை மாதிரி காத்திருப்பார். ‘நீ பெரிய ஆளா வருவே' என்று ஆத்மார்த்தமா அவர் ஆசீர்வதிக்கும்போது அது சரஸ்வதியின் வாயிலிருந்து வரும் வார்த்தை போலிருக்கும்’’ என்ற நந்தினி மேலும் தொடர்ந்தார்.
‘‘பழவகைகள்ல வாழைப்பழம்னா எனக்கு எப்பவும் இரண்டாம் பட்சம்தான். ஒவ்வொரு கிளாஸ் முடிஞ்சதும் நான் பழம் சாப்பிடணும்னு டீச்சர் வற்புறுத்துவாங்க. ஒரு பழம் கொடுத்து சாப்பிடச் சொல்லி அன்பா கட்டாயப் படுத்துவாங்க... ‘வீட்டுக்குப் போய் சாப்பிடறேன்’னு சொன்னா விட மாட்டாங்க. ‘நீ திங்க மாட்டே... என் முன்னாடியே திங்கணும்... டீச்சர் சொன்னா கேட்கணும்’னு பொன்னம்மா டீச்சர் சொல்றப்போ நான் கலங்கிடுவேன்’’ என்றார் திருவனந்தபுரம் என்.ஜெ.நந்தினி.
குரு லேக யெடுவண்டி..!
- ஆலாபனைகள் தொடரும்