Published:Updated:

ஆன்லைன் ஆலாபனைகள் 2020

சஞ்சய் சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
சஞ்சய் சுப்பிரமணியன்

படங்கள்: முத்ரா பாஸ்கர், எஸ்.ஹேமமாலினி, நிக் ஹெயின்ஸ்

ஆன்லைன் ஆலாபனைகள் 2020

படங்கள்: முத்ரா பாஸ்கர், எஸ்.ஹேமமாலினி, நிக் ஹெயின்ஸ்

Published:Updated:
சஞ்சய் சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
சஞ்சய் சுப்பிரமணியன்

“எத்தனையோ தடவை நீங்க வந்தீங்க... இப்ப உங்க வீட்டுக்கு நாங்க வர்றோம்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த மாதிரியே அந்த சனிக்கிழமை மிகச் சரியாக மாலை ஆறு மணிக்கு குழுவினருடன் வீட்டில் வந்து இறங்கினார் சஞ்சய் சுப்பிரமணியன். காபி கொடுத்து வரவேற்க இயலவில்லை. காரணம், அவர் வந்தது லேப்டாப் திரையில்!

கடந்த இரண்டு வருடங்களாக மியூசிக் அகாடமி அரங்கில் ‘தமிழும் நானும்’ என்று பிரத்யேகமாக தாய்மொழிப் பாடல்களுடன் கச்சேரி நடத்தினார் சஞ்சய். கூட்டம் அப்பியது. இந்த முறை நியூ நார்மலுக்குக் கட்டுப்பட்டு விர்ச்சுவலாகப் பாடினார்.

நிஷா ராஜகோபாலன்
நிஷா ராஜகோபாலன்

பாடகரின் முதுகுக்குப் பின்னால், மெயின் ஸ்பான்சரின் விளம்பரப் பதாகைகள். கண்ணாடியின் வழியே மேகத்தைத் தொட்டு விடுவது மாதிரி உயரமான கட்டடங்கள். நவீனப் பின்னணியில் பழம்பெரும் தமிழ்ப்பாடல்கள்!

கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டக்காரர்கள் மாதிரி வெள்ளை வெளேர் சீருடையில் சஞ்சய் குழுவினர். எஸ்.வரதராஜன், நெய்வேலி வெங்கடேஷ் வயலின், மிருதங்கத்துடன். சீடர் ஸ்வர்ண ரேதஸ் தம்புரா இன்சார்ஜ்!

கல்யாணவசந்தம் ராகத்தில் டி.எம்.தியாகராஜனின் வர்ணத்துடன் ஆரம்பித்தார் சஞ்சய். சட்டையில் காலர் மைக். விநாயகரிடம் சரணடைந்துவிட்டு சரஸ்வதி ராகத்தில் கலைமகளைக் காத்தருள வேண்டினார். எம்.எம்.தண்டபாணி தேசிகரின் பாடல்.

உமையாள்புரம் சிவராமன்
உமையாள்புரம் சிவராமன்

ரொம்பவும் தாட்பூட் தஞ்சாவூரெல்லாம் இல்லாமல் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்த கச்சேரியை காயகப்பிரியா ராகத்தில் தொடர்ந்தார் சஞ்சய். அடுத்து, வரதராஜனும் உருக, பகுதாரியில் உருக்கினார். ‘ராமசாமி தூதன் நானடா’ என்று ராவணனை ‘டா’ போட்டு அனுமன் அதட்டும் பாடல். அருணாசலக் கவியின் வரிகளில் உற்சாகத் துள்ளல் போட்டு மிரட்டினார் பாடகர்.

தொடர்ந்தது எட்டு நிமிட விளம்பர இடைவேளை, பிரித்துக் கொரிக்க கைவசம் பாப்கார்ன்கூட இல்லை.

பட்தீப் ராகத்தில் ராகம் - தானம் - பல்லவி.அசத்தலான ஆலாபனை. பாண்ட்யா - ஜடேஜா கூட்டணி மாதிரி வரதுவுடன் சேர்ந்து தானத்தில் தூள் கிளப்பினார் சஞ்சய். ஆலாபனையின் நடுவில் இரண்டொரு நிமிடங்கள் தொழில்நுட்பப் பிரச்னையால் சஞ்சய் பாடும்போது லிப் சிங்க் இல்லாமல்போனது பரிதாபம்!

நிரம்பிய ஹாலில் ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு நடுவே சஞ்சய் கச்சேரிகளைத் திருவிழாவாகக் கொண்டாடியவர்களுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக அவர் பாடியதைத் தனி ஆளாக வீட்டு ஹாலில் உட்கார்ந்து கேட்டது அத்தனை சுவையானதாக இருந்திருக்காது.

சந்தீப் நாராயணன்
சந்தீப் நாராயணன்

எனக்கொரு டவுட், சஞ்சய் சுப்பிரமணியன், சுதா ரகுநாதன் போன்றவர்களின் பயோபிக் எடுக்கும் எண்ணம் ஏன் இதுவரை யாருக்கும் தோன்றவில்லை?

பெரும்பாலான கச்சேரிகளை ஆன்லைனில் கேட்பதற்கு உள்ளே செல்வதற்குள் மூச்சு முட்டுகிறது. ரெஜிஸ்ட்ரேஷன் லிங்க், மெயில் ஐடி, யூசர் ஐடி, பாஸ்வேர்டு என்று அடுக்கடுக்கான படிக்கட்டுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. வழியில் தடுக்கி விழ நேர்ந்தால், பக்கத்து வீட்டில் விரல்நுனியில் கம்ப்யூட்டர் விவகாரம் அத்துப்படியான காலேஜ் இளைஞரை அழைக்க வேண்டியதாகிறது.

‘நாத இன்பம்’ நடத்திவரும் ஆன்லைன் கச்சேரிகளில் இந்த பேஜாரெல்லாம் கிடையாது. பரிவாதினியின் யூடியூப் சேனலுடன் இவர்கள் டை-அப் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே யூடியூபில் நுழைந்து தேடினால், ஜஸ்ட் ஒரு தட்டு. தேடுவது மடியில் வந்து விழுந்து விடுகிறது.

இன்றைய இளவட்டங்களில் இசையை முழுநேரத் தொழிலாக எடுத்துக்கொள்ளாதவர்கள் ஒருசிலர். இந்தச் சின்னப் பட்டியலில் அஸ்வத் நாராயணன் ஒருவர். தஞ்சை சாஸ்திரா கல்லூரியின் பொறியியல் பட்டதாரி. எம்.என்.சி கம்பெனி ஒன்றில் வேலை. கூடவே பாட்டிலும் பட்டொளி வீசுகிறார். மறைந்த மேதை கே.வி.நாராயணசுவாமியிடம் 1998-ம் ஆண்டு முதல் 2002 வரை இசை பயின்று பாரம்பர்யம் காத்து வருகிறார்.

நாத இன்பத்தில் தேவாமிர்தவர்ஷினி ராகத்தில் தியாகராஜரின் ‘எவரநி நிர்ணயிஞ்சிரிரா...’, சரஸாங்கியில் ராமசுவாமி சிவனின் ‘நீ கேட தயராது...’ என்று ஒவ்வொன்றிலும் அஸ்வத்தின் இசைஞானம் வெளிப்பட்டது. மெயினாக கரகரப்பிரியாவில் பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீனிவாஸ தவ சரணம்’ கனமும் மணமும் கமழ கணீர்க் குரலில் பாடி மகிழ்வித்தார்.

 ஆன்லைன் ஆலாபனைகள் 2020

வயலின் வரதராஜனின் வாசிப்பு, முழுக் கச்சேரியையும் கும்மென்று தூக்கி நிறுத்துகிறது. சரசாங்கி ராக ஸ்வரங்களில் பாடகருடன் ஷட்டில் விளையாடினார். கரகரப்பிரியா ஆலாபனையைக் கலப்படமற்ற தேனில் குழைத்துக் கொடுத்தார். ‘ஓஹோ’ வாசிப்பு!

மனோஜ் சிவா (மிருதங்கம்) புருஷோத்தமன் (கஞ்சிரா) சத்தம் போட்டு ஊரைக்கூட்டாமல் நிதானமாக வாசித்தது சிறப்பு.

முத்ராவில் 31 நாள்கள், 62 கச்சேரிகள். பாலம் டிவியில் தினமும் காணக்கிடைக்கும் இரண்டு கச்சேரிகளில் ஒன்று புத்தம் புதிது. இரண்டாவது, பரணிலிருந்து எடுக்கப்பட்ட பழைய பொக்கிஷங்கள். முதல் நாள் மாலை கச்சேரிகள் மறுநாள் காலை ரிப்பீட். கரடுமுரடு பாதைகள் இல்லை. எனவே பாலத்தைச் சென்றடைவது ஈஸி!

பாலமுரளிகிருஷ்ணா - கார்த்திகேயன்
பாலமுரளிகிருஷ்ணா - கார்த்திகேயன்

கால் சலங்கையைக் கழுத்தில் தொங்க விட்டிருப்பது போல் தடிமனான செயின் அணிந்து பாடினார் நிஷா ராஜகோபாலன். வகுத்து வைத்த சிலபஸ் விட்டு வெளியே செல்லாமல் பாடிவரும் நிஷாவின் பைரவி அத்தனை சுத்தம். ஆலாபனையை அவர் வளர்த்துச்சென்ற விதத்தில் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் பிழை கண்டறிய முடியவில்லை. தியாகராஜரின் ‘ரக்ஷ பெட்டரே’ பாடலை நிரவல்... ஸ்வரங்களுடன் தெளிவாகப் பாடி முடித்தார் நிஷா.

இவரிடம் மசாலாத் தூவல்களை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயலின் சாயீ ரக்ஷித், கன்யாகுமரியின் இன்னொரு தயாரிப்பு. தரமான வாசிப்பு, தொடர்ந்து கவனிக்கப்படவேண்டிய புதுவரவு.

பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணியின் சுருதி லய கேந்திராவின் 33வது குளிர்கால இசைவிழா. ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் ஒரேநாளில் துவக்க/விருது வழங்கும் விழாவையும் மூன்று கச்சேரிகளையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, வேறொரு நாளில் வெப் காஸ்ட் செய்தார்கள்.

டிராமா டி.வி வரதராஜனும் வயலின் வி.எஸ்.நரசிம்மனும் உற்றார் உறவினர் இன்றி ரகசியமாக விருது வாங்கிச் சென்றார்கள்.

பாடகர் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா உடன், படுவேகமாக முன்னேறி வரும் நாகஸ்வர வித்வான் மயிலை கார்த்திகேயன். தஞ்சாவூர் முருகபூபதியும் குரு பிரசன்னாவும் இவருடன் லயத்தில் இணைந்து நால்வரானார்கள். குரலும் கருவியும் ஒன்றையொன்று காலை வாரி விட்டுக் கொண்டிருக்காமல் கரம்பிடித்துச் சென்று, கேட்க கேட்க இன்பம் ஊட்டினார்கள். தியாகராஜரின் ‘மாரவைரி ரமணி’ பாடல் ஒரு வரி பல்லவி, ஒரு வரி அனுபல்லவி, இரண்டே வரிகளில் சரணமென்று சின்னஞ்சிறிய பாடல். இருவரும் குழைத்துக் கொடுத்தார்கள்.

அஸ்வத் நாராயணன்
அஸ்வத் நாராயணன்

‘கிருஷ்ணா நீ பேகனே வா’ அன்றைய பெஸ்ட். யமுனா கல்யாணி ராகத்தை இருவரும் மேலேயும் கீழேயும் பயணித்து மெஸ்மரைஸ் செய்தார்கள். முக்கியமாக தனது மனோதர்மத்தை வெளிப்படுத்த கார்த்திகேயனுக்கு நல்ல வாய்ப்பு.

என்றும் இல்லாத திருநாளாக சென்னையின் 12 சபாக்கள் ஒன்றிணைந்து மனிதச்சங்கிலி மாதிரி ஆன்லைன் இசை விழா நடத்தி வருகிறார்கள். காலை 6 மணிக்குத் திருப்பாவை ஆரம்பித்து நாம சங்கீதம், பாட்டு, டிராமா, டான்ஸ் அனைத்தையும் கலந்து ‘யுவர்ஸ் ட்ரூலி மார்கழி’ என்று ரகளையாக ஒரு மாத கோலாகலம்.

ஆறு மணிக்குத் திருப்பாவை, 11 மணி முதல் மற்ற நிகழ்வுகளில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம். அல்லது தூற்றவும் செய்யலாம். கலாகேந்திரா.காம் இவர்களுடன் சேர்ந்திருக்கிறது. மட்டுமல்லாமல் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கேன்டீனும் உண்டு. போரூர் சாஸ்திரா கேட்டரர்ஸ் ஏற்பாடு. அங்கே போய் சாப்பிட்டு வரலாம். பார்சல் வாங்கி வரலாம். அல்லது வீட்டுக்கு வரவழைத்து மியூசிக் பார்த்துக்கொண்டே வயிறு நிரப்பிக்கொள்ளலாம்.

முதல்நாள் ஹைதராபாத்திலிருந்து வெங்கய்யா நாயுடு ஆன்லைனில் கலந்துகொண்டு ‘ட்ரூலி மார்கழி’யைத் தொடக்கி வைக்க, தொடர்ந்து சந்தீப் நாராயணன் பாடினார். எனக்குத் தெரிந்து மாஸ்க் அணிந்து மிருதங்கம் வாசிப்பது உமையாள்புரம் சிவராமன் மட்டுமே. இவரின் வயதை (வயது 85) மனதில்கொண்டு டாக்டர் கொடுத்த அட்வைஸ்தான் முகக்கவசம். இவரின் வாசிப்புக்கு 25 வயது.

90 நிமிடங்களுக்கு நிறைவான கச்சேரி. தோடியைச் சிறப்பாகப் பாடினார் சந்தீப். அதைவிடச் சிறப்பாக இருந்தது அவர் பாடிய த்வஜாவந்தி. துளியும் டல்லடிக்காத ஆலாபனை. ‘அகிலாண்டேஸ்வரி’ பாடலுக்கான ஸ்வரங்களில் வித்தை காட்டினார். மேடைக் கச்சேரியில் கிராஜுவேஷன் முடித்து மாஸ்டர்ஸ் லெவலுக்கு வந்துவிட்டார் சந்தீப்.

வயலின் மைசூர் ஸ்ரீகாந்துக்குத் தலைமுடி காடாக வளர்ந்துவிட்டது. கோவிட் பாதுகாப்பு கருதி 10 மாதங்களாக சலூன் பக்கமே போவதில்லை போலிருக்கிறது.

- ஆலாபனை தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism