Published:Updated:

ஆன்லைன் 2020 ஆலாபனைகள்

ரஞ்சனி-காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
ரஞ்சனி-காயத்ரி

படங்கள்: எஸ்.ஹேமமாலினி, சுரேஷ் கோபாலன்

ஆன்லைன் 2020 ஆலாபனைகள்

படங்கள்: எஸ்.ஹேமமாலினி, சுரேஷ் கோபாலன்

Published:Updated:
ரஞ்சனி-காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
ரஞ்சனி-காயத்ரி
நிழல் நிஜமான மியூசிக் அகாடமியில் ஆன்லைன் இசை விழா தொடக்கம். அதே துல்லியம், அதே ‘நாத தநுமநிசம்’ கடவுள் வாழ்த்தாக! எதிரில் காலி நாற்காலிகள் இருப்பினும், ‘உலகம் பூராவும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்’ என்ற பெருமையுடன் என்.முரளியின் வரவேற்பு. தமது அலுவலக அறை நாற்காலியில் அமர்ந்து தொடக்க உரை வாசித்தார் HCL நிறுவனத்தின் சேர்பெர்சனான ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா.

மேடையில் திரும்பிய பக்கமெல்லாம் அகாடமியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கோயில் டியூப்லைட்களில் வழங்கியவரின் பெயர் எழுதி வைப்பதுபோல், இசைக்குழுவினர் உட்காரும் சின்னச்சின்ன மேடைகளிலும் அகாடமியின் பெயர். கலைஞர்களின் நெற்றியில் மட்டும்தான் நிறுவனப் பெயர் எழுதவில்லை!

ரஞ்சனி-காயத்ரி
ரஞ்சனி-காயத்ரி

வைரஸ் நெருங்கிவிடாமல் தடுக்க மேடையில் போதுமான சமூக இடைவெளி. தம்புரா கலைஞர்கூட இரண்டு கிலோமீட்டர் தள்ளியே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

இங்கு பாடிய ரஞ்சனி- காயத்ரி சகோதரிகளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் விர்ச்சுவல் கச்சேரி. கொரோனா வந்திறங்கிய சில மாதங்களுக்குள் மொட்டை மாடியிலும் வீடுகளிலும் பாடிப் பதிவேற்றம் செய்தவர்கள்... சபா மினி ஹாலை வாடகைக்கு எடுத்து ஆளில்லாத ஹாலில் கச்சேரி செய்து வான்சர்ட்ஸ் மூலம் பொதுவெளிக்கு வந்தவர்கள். இவையெல்லாம் வலைப்பயிற்சி மாதிரி அமைந்துவிட, இப்போது டிசம்பரில் ஆன்லைனில் வராளி ராக ஆண்டாள் பாசுரத்தையும் மணிரங்குவில் புரந்தரதாசரையும் பாடிய வண்ணம் இருந்தார்கள்.

அக்கரை சகோதரிகள் வாய்ப்பாட்டு
அக்கரை சகோதரிகள் வாய்ப்பாட்டு

டிசம்பர் 25. வைகுண்ட ஏகாதசியன்று இவர்களின் அகாடமி கச்சேரி வெப்காஸ்ட் ஆனது. மெயினாக காம்போதியை காயத்ரி கோடிட்ட உடனேயே ஸ்ரீரங்கத்தில் அரங்கனின் அனந்தசயனம் கண்முன் விரிந்தது. தியாகராஜரின் ‘ஓரங்கசாயீ’தான் பாடப்போகிறார்கள் என்று மும்பை அங்கிள் செல் வழியே சத்தியம் செய்தார்!

காம்போதியைக் கீழ் ஸ்தாயியில் தொடங்கி, ரன்வேயில் விமானம் ஓடுவது மாதிரி சங்கதிகளுடன் நிதானமாகப் பயணித்து, டேக் ஆஃப் ஆனதும் உயர்தர காம்போதி என்னும் சீட் பெல்ட் அணிந்து உயரே உயரே பறந்தார் காயத்ரி. ராகத்துக்கேற்ற கணீர்க் குரல் இவருக்கு!

வயலின் டூயட்
வயலின் டூயட்

சரணத்தில் வரும் ‘பூலோக வைகுண்ட மிதியதி’ வரியை நிரவலுக்குக் கையிலெடுத்து ரஞ்சனியும் காயத்ரியும் மாறி மாறி சடுகுடு ஆடியபோது, காம்போதியின் அத்தனை சங்கதிகளும் அடுக்கடுக்காக நம்மீது சந்தனமாகத் தெளித்துக்குளிர்வித்தன. 90 நிமிடக் கச்சேரியை 150 நிமிடங்களுக்குக் கேட்ட உணர்வைக் கொடுத்த ர-காவுக்குப் பூங்கொத்து!

ண்மையில் ஒரு நாள் ‘சகி பிராண...’ என்கிற செஞ்சுருட்டி ராக ஜாவளியை - தர்மபுரி சுப்பராயர் எழுதியது - இன்ஸ்டாவில் பாடிக் கொண்டிருந்தார் என்.ஜெ.நந்தினி. உடன் பாடியவர் சக பாடகர் விஷ்ணுதேவ். இரு குரலில் ஜாவளி கேட்க ரொம்ப ஜோர். திருவனந்தபுரவாசியான நந்தினி, பரஸ்சால பி.பொன்னம்மாவிடமும், பேராசிரியர் குமாரகேரள வர்மாவிடமும் இசை பயின்று வருகிறார். மாணவிகளுக்குப் பாட்டு கற்பிக்கிறார் ஆல்பங்கள் வெளியிடுகிறார். QFR-ல் ‘ஆஹா... இன்ப நிலாவினிலே’ பாடுகிறார்.

பரத் சுந்தர்
பரத் சுந்தர்

விஷயத்துக்கு வருகிறேன்... சார்சுர் கலை அறக்கட்டளைக்காகப் பாடினார் என்.ஜெ.நந்தினி. இங்கே எல்லோருக்கும் தரப்பட்ட பொதுத்தலைப்பு: சக்தி. (Shakti என்று தும்மல் வருவது போல் போடுகிறார்கள்!) தொண்டைக்குள் கலப்படமற்ற தேன் உற்பத்தி ஆவது மாதிரி இனிமையான குரல் நந்தினி. அதில் அங்கங்கே எம்.எல்.வி சாயல்! பாடுவதில் விஷய ஞானம் தெரிகிறது. முகாரியும், தன்யாசியும், சுத்த ஸாவேரியும் காதுகளில் வண்டு புகுந்துவிட்ட மாதிரி குடையாமல் மென்மையாக இருந்தன.

இவர் பாடும்போது, ஒரு மணி நேரம் ஒர்க் அவுட் செய்துவிட்டு வந்து மேடையேறியது போல் நிறைய மூச்சிரைக்கிறது. தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்தால் இந்தப் பிரச்னையை மூச்சிரைக்க ஓடச் செய்துவிடலாம்!

என்.ஜெ.நந்தினி
என்.ஜெ.நந்தினி

நிற்க, சென்னை சபாக்கள் அபூர்வமாக மட்டுமே என்.ஜெ. நந்தினிக்கு வாய்ப்பு கொடுப்பதேன்? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு சாரே!

ச்சேரி முடியும் சமயம், ‘பார்த்துக் கடன் கொடுங்கள்... மனிதரைப் பார்த்துக் கடன் கொடுங்கள்...’ என்று எச்சரித்து அனுப்பினார் பரத் சுந்தர். (12 சபா கூட்டமைப்பு) காபி ராகத்தில் கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய பாடல் இது. ஆரம்பத்தில் தியாகராஜரின் ‘ஆடமோடி கலதே’வில் சாருகேசி ராக ஸ்வரங்களை நீளமாக பரத் பாடிக் கொண்டிருந்த நேரம், நான் ஆன்லைன் நுழைந்தேன். திருவாரூர் பக்தவத்சலத்தின் மிருதங்கமும், குருபிரசாத்தின் கடமும், நாகை ஸ்ரீராமின் வயலினும் கைகோக்க, ஒரு சில நிமிடங்களுக்கு ஸ்பீடு ஸ்வரங்களில் ஒரே ரகளை!

பிலஹரிக்கு ஆலாபனையில் அலங்காரம் செய்துவிட்டு, ஸ்ரீராமன் வில்லால் கொடுத்த பதிலடிகளை புன்னகைத்தவாறு பெற்றுக்கொண்டு விட்டு பரத் பாடியது லட்சுமிமயமான தீட்சிதர் கீர்த்தனை. இதில் காஞ்சி லட்சுமியை, காமாட்சி, வரலட்சுமி, கமலாட்சி, ஜெயலட்சுமி என்றெல்லாம் விளிப்பார் தீட்சிதர். பாடலின் காலப்பிரமாணம் சரவெடிக்கெல்லாம் இடம் தராது. வித்தியாசமான, சற்றே வழவழப்பு கொண்ட தனது குரலில் பரத் பாடியது இனிப்பும் துவர்ப்புமிக்க ஸ்வீட் பச்சடி!

அமிர்தா முரளி
அமிர்தா முரளி

நிறைய குருமார்களிடம் நேர்முகமாக இசை பயின்று வந்தவர், வருபவர் அமிர்தா முரளி. இன்றைய தேதியில் வயலின் ஆர்.கே.ஸ்ரீராம்குமார், இவருக்குப் பாட்டு வாத்தியார். சார்சுரில் இவரது கச்சேரிக்கு சக்தி மிகுந்த பக்கவாத்தியம். ஆர்.கே.ஸ்ரீராம்குமார் - அருண்பிரகாஷ் - குருபிரசாத்.

தியான சுலோகத்துடன் எந்தக் கச்சேரியையும் தொடங்குவது அமிர்தா முரளிக்கு வாடிக்கை. (உச்சரிப்பிலும் வடமொழி என்றால் ஜாலி) சம்பிரதாயத்திலும் முழுக்கவனம் செலுத்துவது இவருக்குப் பிடிக்கும். கூட்டம் கூடுவதும், கைத்தட்டல்கள் விழுவதும் தற்செயலானவை என்று நினைப்பவர். அர்ப்பணிப்புடன் பாடி வரும் சீரியஸ் மாணவி!

கலாக்ஷேத்திராவின் ருக்மிணி அரங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கச்சேரியில் மகா வைத்தியநாத சிவனின் ஜனரஞ்சனி ராகப் பாடல் ஆரம்பம். புரந்தரதாசரின் மத்யமாவதி பாடலுடன் முடிவு. அமிர்தா பாடிய வராளியில் எல்லாமே உயர்வான சங்கதிகள். கீழ் ஸ்தாயியில் சங்கடமில்லாமல் தொடங்கி, நிறுத்தி நிதானமாக மேல் ஆக்டேவ் வரை பயணித்து முடித்தபோது, பக்கத்தில் வயலினுடன் இருந்த குரு ஸ்ரீராம்குமார் மகிழ்ந்திருப்பார் - எதையும் வெளியே காட்டிக்கொள்ளாதவராக! தான் எழுதி மெட்டமைத்த ‘சாரதே...’ என்னும் யமுனா கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலையும் சிஷ்யை பாடியபோது குருவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்!

‘தீமாடிக்’ கச்சேரி என்பதால் கொல்கத்தா வரை பயணித்து காளியை வங்கமொழியில் கும்பிட்டுவிட்டு வந்தார் அமிர்தா முரளி.

க்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி - ஸ்வர்ணலதாவின் வாய்ப்பாட்டு டூயட், வயலின் டூயட் இரண்டையும் ஒரே நாளில் அடுத்தடுத்து கேட்க முடிந்தது. டிசம்பர் ஆன்லைன் விழாவுக்கு நன்றி! வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்துவரும் சகோதரிகளின் திறமைக்கும் பாராட்டு!

அன்று முன்மாலைப் பொழுதில் சார்சுருக்கான வாய்ப்பாட்டுக் கச்சேரி. தோடி ஸ்வரஜதியுடன் போணி போட்டுவிட்டு, சஹானாவைக் கையில் எடுத்தார் இளையவர் ஸ்வர்ணலதா. ஆண்டாள் சைஸில் குட்டியாக உட்கார்ந்து இவர் பாடுவதைப் பார்ப்பதே கொள்ளை அழகு! வித்தியாசமான குரலில், கிரிபை மற்றும் ஈவஸுத பாடல்களில் தியாகராஜர் தவழவிட்டிருக்கும் சஹானா சங்கதிகளை நடுநடுவே புகுத்தி ஸ்வர்ணலதா செய்த ஆலாபனையில் அவ்வளவு குழைவு.

சுப்புலட்சுமி தனக்காக ஒதுக்கி வைத்துக்கொண்டது பூர்விகல்யாணி. பலருக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்து சேமித்து வைத்திருக்கும் அனுபவம், தவிர பிறவி ஞானம் எல்லாம் துணைக்கு இருக்க, பூர்விகல்யாணியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அலசினார் அக்கா! இவரது வாசிப்பில் வீணை, மாண்டலின், ஷெனாய் இன்னபிற வாத்தியங்களின் ஒலியும் இழையோடுவது சேமியாப் பாயசத்தில் உலர் திராட்சை!

பின்மாலைப் பொழுதில் சகோதரிகளின் வயலின் டூயட், MadRasana-வுக்காக. சாய்கிரிதர் - கிருஷ்ணாவின் மிருதங்கம் / கடம் காம்பினேஷன் சும்மா துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

உடன்பிறப்புகள் இருவருக்கும் bowing டெக்னிக் நன்றாக வசப்பட்டிருக்கிறது. மிகத்தெளிவான, துல்லியமான நாத அலைகள். அதுவும் சுப்புலட்சுமியின் வாசிப்பில், மறைந்த வயலின் மும்மணிகள் எம்.எஸ்.ஜி., லால்குடி, டி.என்.கிருஷ்ணன் ஆகிய மூவரின் தாக்கம் தெரிந்தது.

தங்கள் தாத்தா சுசீந்தரம் சிவசுப்ரமணியன் இயற்றிய அமிர்தவர்ஷிணி ராகப் பாடல் முடிந்ததும், பைரவி சங்கதிகளை அழுத்தமாக வெளிக்கொணர்ந்தார் ஸ்வர்ணலதா. தியாகராஜரின் லால்குடி பஞ்சரத்தினங்களில் ஒன்றான ‘லலிதே...’வில் இருவரும் பொழிந்தது கானமழை!

ராகம், தானம், பல்லவிக்கு இவர்கள் தேர்வு செய்த ராகம் நீலாம்பரியா, சாருகேசியா, லதாங்கியா, கனகாங்கியா அல்லது ரஸவாங்கியா? இவற்றில் எதுவுமில்லை. இரு வயலின்களிலிருந்து புறப்பட்டு வந்தது ரிஷபப்ரியா! கபாலி கோயில் உற்சவத்தில் மாட வீதிகளைச் சுற்றும் ரிஷப வாகனம் மாதிரியாக அத்தனை கம்பீரம்!

இந்த டூயட் வயலின் இசை அடுத்த மார்கழி வரையில் மனதில் சுழன்றுகொண்டிருக்கும்!

- நிறைவு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism