Published:Updated:

இரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராளிகள் கொலை - `மத நம்பிக்கைக்காக மனிதர்களைக் கொல்வதா?’

ஹிஜாப்

சர்வ நிச்சயமாக இது கண்டிக்கப்பட வேண்டியது. மதவாத அரசியலின் மோசமான விளைவு இது. இன்றும் உலகில் மதவாத அரசியல் நீடித்து வருவது மாபெரும் அவமானம். இது மனித நாகரிகத்துக்கே எதிரானது.

இரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராளிகள் கொலை - `மத நம்பிக்கைக்காக மனிதர்களைக் கொல்வதா?’

சர்வ நிச்சயமாக இது கண்டிக்கப்பட வேண்டியது. மதவாத அரசியலின் மோசமான விளைவு இது. இன்றும் உலகில் மதவாத அரசியல் நீடித்து வருவது மாபெரும் அவமானம். இது மனித நாகரிகத்துக்கே எதிரானது.

Published:Updated:
ஹிஜாப்

இரான் நாட்டில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்நாட்டு அரசால் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டும் சிறைத்தண்டனைக்கு ஆட்படுத்தப்பட்டும் இருக்கின்றனர். இஸ்லாமிய மத நம்பிக்கை அடிப்படையில், பெண்கள் அனைவரும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற அரசு உத்தரவுக்கு எதிராகவே இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்படி போராடியவர்கள் கொல்லப்படுவதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. பெண்ணியம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் இரான் அரசின் இச்செயலை எப்படிப் பார்க்கலாம் என்பது பற்றி பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியாவிடம் கேட்டோம்...

``சர்வ நிச்சயமாக இது கண்டிக்கப்பட வேண்டியது. மதவாத அரசியலின் மோசமான விளைவு இது. இன்றும் உலகில் மதவாத அரசியல் நீடித்து வருவது மாபெரும் அவமானம். இது மனித நாகரிகத்துக்கே எதிரானது. 18-ம் நூற்றாண்டிலேயே மதமும் அரசியலும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிற மகத்தான முடிவுக்கு வந்ததால்தான் நாம் இன்று இவ்வளவு பெரிய அறிவியல் வளர்ச்சியையும், நாகரிக வளர்ச்சியையும் எட்டியுள்ளோம். இல்லையெனில், இந்த வளர்ச்சி நடந்திருக்க முடியாது.

பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா.
பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா.

மதவாதிகளின் வறட்டுப் பிடிவாதத்தால் 1300 ஆண்டுகளாக அறிவியல் வளர்ச்சிக்கான முயற்சிகளே எடுக்க முடியாமல் போனது. அந்தக் காலகட்டத்தில்தான் கலிலியோ போன்ற அறிவியலாளர்கள் மத நம்பிக்கைக்கு எதிரானவர்கள் எனக் கொல்லப்பட்டனர். இந்தப் பிழைகளுக்குப் பிறகுதான் மதம் என்பது அரசிலும், தனிமனித விருப்பு, வெறுப்புகளில் தலையிடக் கூடாது, தனிமனித தேர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் உருவானது. அதனால்தான் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தினாலும் எதிர்க்கிறோம், அணியக் கூடாது என்று கூறினாலும் எதிர்க்கிறோம்.

அரசின் வேலை இதுவல்ல, இது ஒரு தனிநபரின் பிரச்னை. என் தனிப்பட்ட  கொள்கையின்படி ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவமானம் எனக் கருதினால் அதற்கு மகிழ்ச்சியடைவேன். அதை ஓர் அரசு ஆணையின் மூலமாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது. அதேபோலத்தான், இங்கு நடைபெறுவதைவிட பல மடங்கு கொடூரம் இரானில் அரங்கேறியுள்ளது.

ஹிஜாப் அணிவதற்கு எதிராக இங்கு நடைபெற்ற இந்து மதவாத அரசியலைக் காட்டிலும் இரானில் நடந்திருப்பது பெரும் தவறு. இரண்டுமே தவறுகள்தான் என்றாலும், இரண்டையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. போராட்டத்துக்கு எதிராக மனிதர்களைக் கொல்வது ஏற்கத்தக்கது அல்ல. மனிதன் தன் ஆயுளை எப்படி பெருக்கிக்கொள்ளலாம் என்ற அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த யுகத்தில், மனித உயிர்களை மதத்தின் பெயரால் எடுத்திருப்பது மாபெரும் சோகம். இந்தச் செயலை உலக பெண்கள் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றவரிடம், ஹிஜாப் அணிவதை அவரவர் விருப்பம் என்கிற அளவில் பார்க்கலாமா எனக் கேட்டதற்கு...

இரான்
இரான்

``ஹிஜாப் அணிவதை ஒரு தனிநபர் விருப்பமாக மட்டும் பார்த்துக் கடந்துவிட முடியாது. ஹிஜாப் அணிவது பெண்ணடிமைத்தனம் எனத் தொடர்ந்து பிரசாரம் செய்கிற கடமை எனக்கு இருக்கிறது. ஹிஜாப் அணிந்தே ஆக வேண்டும் / ஹிஜாப் அணியவே கூடாது என ஓர் அரசு கட்டாயப்படுத்தும் நிலையில்தான் அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்று சொல்கிறோம். 

தாலி கட்டுவது எப்படி பெண்ணடிமைத்தனமோ அதேபோல், ஹிஜாப் அணிவதும் பெண்ணடிமைத்தனம்தான். அரசு தாலி கட்டிக்கொள்ளக் கூடாது என இங்கு சட்டம் போட முடியாது. ஓர் அரசாங்கம் பெண்ணை தாலி கட்டிக்கொள்ள வற்புறுத்தக் கூடாது என்று சொன்னால் ஏற்க முடியும். தாலி கட்டிக்கொள்ளும் பெண்களுக்கு ஜெயில் தண்டனை என ஒரு சட்டம் கொண்டு வந்தால் அச்சட்டத்தையும் கண்டிக்க வேண்டும். ஒரு பெரியாரியவாதியாக நான் தாலியையும் எதிர்க்கிறேன், ஹிஜாப் அணிவதையும் எதிர்க்கிறேன். என்னுடைய கொள்கையை வன்முறையாக யார் மீதும் திணிக்க முடியாது, திணிக்கவும் கூடாது" என்கிறார் ஓவியா.