ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களைத் தனியாக அடையாளப்படுத்த, சீருடைகள் அவசியம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்களில் பின்பற்றப்படும் சீருடைகள், அவற்றை அணிபவருக்கு அசௌகர்யத்தைக் கொடுக்கும்படியே இருக்கின்றன. இது விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். பிரிட்டிஷ் ஏர்வேஸ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழியர்களுக்கான சீருடைகளை மாற்றியுள்ளது. அதுவும் தங்களின் ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துள்ளது.

முதன்முறையாக ஒரு விமான நிறுவனம் பெண் ஊழியர்களுக்கான ஜம்ப் சூட்டை (jump suit) வடிவமைத்துள்ளது. ஜம்ப் சூட் அணிய விருப்பமில்லாத பெண்கள் பாவாடை மற்றும் கால் சட்டை அணியலாம். ட்யூனிக் (Tunic) மற்றும் ஹிஜாப் அணிவதற்கான வசதிகளும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பணியின் தன்மைகளைக் கவனித்த புகழ்பெற்ற `Savile Row’ நிறுவனத்தின் தையல்காரர் `Ozwald Boateng' இந்த ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
விமான நிறுவனத்தில் பணிபுரியும் 1,500 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எந்த மாதிரியான டிசைன் வைக்கலாம் என ஆலோசித்து, அதன்பின் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் போட்டுப் பார்த்து சோதனைசெய்து ஆடை தயாரிப்பில் தங்களது பங்களிப்பை ஆற்றியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சீன் டாய்ல், இந்தப் புதிய சீருடை குறித்துக் கூறுகையில், ``நவீன பிரிட்டனின் சிறப்பை இந்தச் சீருடைகள் பேசும்" என்று தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் தரை செயல்பாட்டு முகவர்கள் வசந்த காலத்தில் இருந்து புதிய சீருடையை முதலில் அணிவார்கள் என்றும், கேபின் ஊழியர்கள், விமானிகள் மற்றும் செக் - இன் ஏஜென்ட்கள் இந்தாண்டு கோடையில் இருந்து புதிய சீருடைக்கு மாறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.