முழங்கால், முழங்கைகளில் படரும் கருமை... நீக்குவது எப்படி? - நிபுணர் சொல்லும் தீர்வுகள்

அழுத்தங்கள்தான் மூட்டு உராய்வு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இதுவே, அந்தப் பகுதியைக் கருமையாக மாற்றுகிறது.
'முழங்கால் மற்றும் முழங்கைகளில் படரும் கருமையால், ஷார்ட் ஹேண்ட் சட்டை, ஷார்ட் ஸ்கர்ட், ஷார்ட்ஸ் போன்ற உடைகள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கின்றன' என்று புலம்புபவர்கள் இங்கு ஏராளம்.

உடலின் மற்ற இடங்களைவிட, இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் எதனால் நிறம் மாறுகிறது, இதைச் சரிசெய்வது எப்படி என்பன உள்ளிட்ட பல கைடன்ஸ்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், அழகுக்கலை நிபுணர் பிரியா பாலாஜி.
"பெரும்பாலான இந்திய மக்கள் எதிர்நோக்கும் சருமப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இதற்கு, ஏராளமான வீட்டு வைத்தியம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. எந்த சிகிச்சை முறையைப் பின்பற்றுவதற்கு முன்பும், எதனால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

சிகிச்சைகள் மூலம் மூட்டுகளில் ஏற்படும் இந்தக் கருமையை 100% சரிசெய்துவிட முடியுமா என்றால், நிச்சயம் முடியாது. ஆனால், அதன் அடர்த்தியைக் குறைக்க முடியும். இந்த நிற மாற்றம் ஏராளமான காரணங்களால் ஏற்படுகிறது.
காரணம் 1
இந்தக் கருமை நிற மாற்றத்திற்கு முதன்மைக் காரணம், மூட்டுகளில் ஏற்படும் உராய்வு. உடலின் மற்ற பகுதிகளைவிட கை, கால் மூட்டுப் பகுதிகள் எப்போதும் தடிமனாக இருக்கும். இந்தப் பகுதிகள், உடலின் அதிகமான அழுத்தங்களைத் தாங்கக்கூடியவை என்பதால், அதன் செயல்பாடுகளும் அதிகமாகவே இருக்கும்.
உதாரணத்திற்கு, நாற்காலி, சோஃபா போன்றவற்றில் உட்காரும்போதும், மண்டியிட்டுத் தொழுகை அல்லது பிரார்த்தனை செய்யும்போதும், முழங்கை மற்றும் முழங்காலின் செயல்பாடுகள் அதிகம் இருக்கும். இதுபோன்ற அழுத்தங்கள்தான் மூட்டு உராய்வு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன. இதுவே, அந்தப் பகுதியைக் கருமையாக மாற்றுகிறது.
காரணம் 2
சிலர், கருமையை நீங்க வேண்டும் என்பதற்காக மூட்டுப் பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்துக் குளிப்பார்கள். அளவுக்கு மீறித் தேய்த்தால், பாதகமான விளைவுகள்தான் ஏற்படும். இது, மேலும் அந்தப் பகுதியைக் கருமையாக மாற்றும்.

காரணம் 3
இதற்கு மற்றொரு காரணம், ஹைப்பர் பிக்மென்டேஷனாகக்கூட (Hyper Pigmentation) இருக்கலாம். மெலனின் நிறமி சிலருக்கு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால், கருமையான பேட்சஸ் ஆங்காங்கே இருக்கும்.
காரணம் 4
அடுத்து, நாம் உட்கொள்ளும் மருந்து வகைகளும் இதுபோன்ற கருமை நிற மாற்றத்திற்குக் காரணமாக இருக்கும். ஹார்மோன் இம்பேலன்ஸ் இருந்தாலும் இதுபோன்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.


Also Read
அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்!
வீட்டிலிருந்தபடியே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தக் கருமைப் பிரச்னையைச் சரிசெய்யலாம்.
டிப்ஸ் 1
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து, கருமையான இடங்களில் அப்ளை செய்து, 3 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தமாகக் கழுவலாம். வாரம் இருமுறை இந்த முறையைப் பின்பற்ற வேண்டும்.

சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏதாவது இருக்கலாம். அவர்கள், இந்த பேக்கை யோசிக்காமல் பயன்படுத்தலாம். எலுமிச்சைச் சாற்றில் ஆன்ட்டி-பேக்டீரியல் ஏஜென்ட் மற்றும் de-pigmentation காம்பௌண்டு இருப்பதால், நிறத்தைக் கட்டுப்படுத்துவதோடு சருமத்தையும் பாதுகாப்பாக வைக்க உதவும்.
டிப்ஸ் 2
சுத்தமான காட்டனை மோர் அல்லது பாலில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்று செய்துவரலாம். இதில் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.

டிப்ஸ் 3
உபயோகித்த, குளிர்ந்த கிரீன் டீ பேகை (Bag), கருமையான இடங்களில் வைத்து 2 நிமிடங்களுக்கு மென்மையாகத் தேய்த்து வந்தால், கருமை நீங்கும். இதை தினமும் இருமுறை செய்துவந்தால், பாசிட்டிவ் ரிசல்ட் நிச்சயம்.
டிப்ஸ் 4
கற்றாழை ஜெல்லில் அலோயின்(Aloin) எனும் de-pigmentation காம்பௌண்டு இருக்கிறது. இது, சருமத்தின் கருமை நிறத்தை நீக்குவதற்குச் சிறந்த மருந்து. தூய்மையான கற்றாழை ஜெல்லை தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து, காலையில் கழுவலாம். இப்படி தினமும் 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும்.

டிப்ஸ் 5
வினிகர் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டீஸ்பூன்
தற்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் ஆப்பிள் சிடார் வினிகர் கிடைக்கிறது. இதில் de-pigmentation காம்பௌண்ட்ஸ் அதிகமாக இருப்பதால், கருமை மறைந்து சருமம் புத்துணர்வு பெறும். வினிகரை அதே அளவிலான தண்ணீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்து, ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
டிப்ஸ் 6
சிலர், சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவார்கள். மூட்டுகளில் கருமை நிறம் அதிகமாக இருப்பவர்கள், சன்ஸ்க்ரீன் மையப் பொருள்களில் zinc oxide அதிகமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இது, சருமத்தின் கருமையை அகற்றும் ஆற்றல் கொண்டது. அதேபோல், SPF 30 - 50 அளவுகளில் இருப்பது சிறந்தது."

சலூன் அல்லது சரும நிபுணர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன?
உங்களின் சருமம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால், நிச்சயம் சரும நிபுணரின் ஆலோசனை பெற்று, தகுந்த சிகிச்சை முறையைப் பின்பற்றுவது சிறந்தது. பார்லர்களிலும் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் உண்மையில் வல்லுநர்களா என்பதை சரிபார்த்த பின் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
சிகிச்சை 1
க்ளைகாலிக் ஆசிட் (Glycolic Acid) பயன்படுத்தி சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும் ஒருவித சிகிச்சை முறை 'கெமிக்கல் பீல்'. இது, கருமை படிந்திருக்கும் லேயரை அகற்றி, சருமத்தின் நிறத்தை வெண்மையாக்குகிறது. இந்த சிகிச்சைமுறை தற்போது பெரும்பாலான பார்லர்களில் செய்யப்பட்டாலும், சரும நிபுணரிடம் கலந்து ஆலோசித்த பிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

சிகிச்சை 2
'மைக்ரோ டெர்மாபிரேஷன் (Microdermabrasion)' எனும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறை தற்போது எல்லா சலூன்களிலும் பின்பற்றப்படுகிறது. இது, மெலனின் எண்ணிக்கையைக் குறைத்து, சருமத்தின் நிறத்தைப் புதுப்பிக்கச் செய்கிறது. தற்போது, பல இளைஞர்களின் சாய்ஸும் இதுதான்.
சிகிச்சை 3
சரும சுருக்கங்களைக் குறைத்து, சீரற்ற நிறங்களைச் சரிசெய்யும் லேசர் ரீ-சர்ஃபேசிங் (Laser Resurfacing) சிகிச்சையை, சரும நிபுணர்களிடம் செய்துகொள்வதே சிறந்தது. பாதிக்கப்பட்ட இடங்களைக் குளிர் சிகிச்சைமூலம் சரிசெய்யும் க்ரையோதெரபி (Cryotherapy) முறையின் மூலமும் கருமை நிறத்தை முழுவதுமாக நீக்க முடியும்."