Published:Updated:

"கண்களுக்கு மை பூசும் பெண்களா நீங்கள்?"- இவற்றை கவனிக்க மறந்துவிடாதீர்கள்!

கண்கள்
கண்கள்

ஒருவரின் முக வசீகரத்தை எடுத்துக்காட்டுவதே கண்கள்தான். அவற்றை அலங்கரிப்பதென்பது சவாலான, நுணுக்கமான விஷயமும்கூட.

கண்கள்- நம் உடல்நலம், மனநலம் இரண்டையும் ஒருசேர பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்று சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பேசும் மொழிக்கு வார்த்தைகளே தேவையில்லை. காதலில் மிக அதிகமான பேச்சுவார்த்தையே இவற்றின் மூலம்தான் நடக்கும்!

கண்கள்
கண்கள்

அதுவும் நம் பெண்கள் இருக்கிறார்களே... சொல்லவே வேண்டாம்! அவர்களுக்குக் கண்களால் பேசும் வித்தை எல்லாம் சர்வ சாதாரணம். தங்களின் மகிழ்ச்சி, கவலை, வெறுப்பு, காதல், கோபம், ஏக்கம் என எல்லாவற்றையும் இரண்டே நொடிகளில் கண்களின் மூலம் அழகாக வெளிப்படுத்திவிடுவார்கள். இதனாலேயே பெண்களுக்கு எப்போதும் தங்கள் கண்கள் மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்கும். அவற்றை அலங்கரிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையே அதற்கு சாட்சி.

கண்கள் முக்கியம் பாஸ்! #MyVikatan

பெண்களுக்கான அலங்காரம் என்று வரும்போது கண்களுக்குச் செய்யும் அலங்காரம்தான் முதலிடம் பெறும். கண்களையும், புருவங்களையும் அழகுபடுத்திவிட்டாலே பாதி அலங்காரம் முடிந்துவிடும். ஒருவரின் முக வசீகரத்தை எடுத்துக்காட்டுவதே கண்கள்தான். அவற்றை அலங்கரிப்பதென்பது சவாலான, நுணுக்கமான விஷயமும்கூட.

பிளாக் அண்ட் வொயிட் காலத்துப் பெண்களிலிருந்து தற்போதுள்ள நவீன யுவதிகள்வரை, கண் மை மீது மையல் கொள்ளாதவர்கள் சொற்பம். ஆனால், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட `கண்மை' விளக்கெண்ணய், கரிசலாங்கண்ணி போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் எந்தவிதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண்மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருள்கள் வந்துவிட்டன. இவற்றில் உள்ள ரசாயனப் பொருள்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும்! இவற்றைத் தவிர்த்தும் கண்களை அலங்கரிக்க முடியாது.

பாதுகாப்பாக கண்களை அழகுபடுத்திப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தரும் குறிப்புகள்...

காஜல், மஸ்காரா, கணமை, ஐ லைனர் போன்ற அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கண்களை பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி?

கண்கள்
கண்கள்

வெளியில் செல்லும்போது இவற்றைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக்கொள்ளலாம். ஆனால், இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகத் தண்ணீரால் கழுவிவிட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கலாம்

இப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளை சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும், செய்திருந்த அலங்காரங்கள் கலைந்துவிடும். விளக்கெண்ணையையும் மேக்-அப் ரிமூவராகப் பயன்படுத்தலாம். பிறகு தண்ணீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறில்லாமல், கண்களில் அப்ளை செய்த மையை ரிமூவ் செய்யாமலேயே தூங்கச்சென்றுவிட்டால் கருவளையம், கண்களில் தொற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கண்கள் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த சில டிப்ஸ்!

கண்களில் ஏற்படும் கருவளையங்களை எவ்வாறு நீக்கலாம்?

கண்கள்
கண்கள்

போதிய நேரம் தூங்காமல் இருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்களுக்கடியில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காஜலை ரிமூவ் செய்யாமல் இருந்தாலும் கருவளையம் ஏற்படலாம். இதற்குத் தீர்வு பெற, சில எளிய வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளை வட்டமாக வெட்டி தினமும் தூங்கப் போகும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களிலும், கருவளையங்களிலும் வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும்... கருவளையங்கள் மறைந்துவிடும்.

கண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?

கண்கள்
கண்கள்

கண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை. அது மிகவும் சென்சிட்டிவ் ஏரியா என்பதால், விலை குறைவாக உள்ளது என்பதற்காகத் தரமில்லாத பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஐ மேக்கப் பொருள்களை வாங்கும்போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றை நிச்சயமாக கவனித்து வாங்க வேண்டும். குறிப்பாக, ஒருவர் பயன்படுத்திய கண்மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

தினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா?

கண்கள்
கண்கள்

``தினமும் செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் அழியாமல் இருக்கக்கூடிய வாட்டர் ப்ரூஃப் கண்மை, மஸ்காரா போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். பொதுவாக, தினமும் கண்களுக்கு மையிடுபவர்கள் வீட்டிலிருக்கும் நேரம், விடுமுறை நாள்கள் போன்றவற்றின்போது அதைத் தவிர்க்கலாம்.

புருவங்களைப் பராமரிப்பது எப்படி?

புருவங்கள்
புருவங்கள்

எவ்வளவு வசீகரமான கண்கள் இருந்தும் புருவங்கள் சரியாக இல்லையென்றால் எடுப்பாக இருக்காது. இதனால் புருவங்களைப் பராமரிப்பதும் அவசியம். இன்று பார்லர்களில் புருவங்களை வலி இல்லாமல் திருத்தம் செய்ய எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. சிலருக்குப் புருவங்களில் அடர்த்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு விளக்கெண்ணெயும், துளசி இலைச்சாறும் சிறந்த தீர்வாக இருக்கும். இவை இரண்டையும் சிறிதளவு கலந்து எடுத்துக்கொண்டு புருவங்களில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் புருவங்களின் அடர்த்தியும், கருமையும் கூடும்.

கண்களின் ஆரோக்கியத்துக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?

உணவுகள்
உணவுகள்

வைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இவை கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் பார்வைத்திறனையும் மேம்படுத்தும்.

கண்ணழகிகளே... அழகுடன் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மனதில் வைப்போம்!

பின் செல்ல