Published:Updated:

How to series: How to get rid of oily skin? | எண்ணெய்ப்பசையான சருமம்; விடுபடுவது எப்படி?

``முகத்தில் எண்ணெய் வழிதல் எல்லா சீஸனிலும் நடக்கிற விஷயம்தான். அதுதான் நம் முகத்துக்குப் பளபளப்பைத் தருகிறது. வெயில் காலத்தில் சருமத் துவாரங்கள் இன்னும் பெரிதாகத் திறந்துகொள்வதால், எண்ணெய் வழிவது அதிகமாகி, முகப்பரு வந்துவிடுகிறது."

வெயில் காலம் ஆரம்பிக்கும்போதே, முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னை, `யெஸ் ஐ யம் கம்மிங்' என்று பிசுபிசுக்கும். ``முகத்தில் எண்ணெய் வழிதல் எல்லா சீஸனிலும் நடக்கிற விஷயம்தான். அதுதான் நம் முகத்துக்குப் பளபளப்பைத் தருகிறது. வெயில் காலத்தில் சருமத் துவாரங்கள் இன்னும் பெரிதாகத் திறந்துகொள்வதால், எண்ணெய் வழிவது அதிகமாகி, முகப்பரு வந்துவிடுகிறது. இதைச் சின்னச் சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்'' என்கிறார், `அரோமா தெரபிஸ்ட்' கீதா அசோக்.

* முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிகிறபோது, குழாய்த் தண்ணீரை கைகளில் பிடித்து, முகத்தில் வேகமாக அடித்துக் கழுவி, அழுத்தமாகத் துடைத்தெடுங்கள். சோப், ஃபேஸ்வாஷ் எதுவும் வேண்டாம். இப்படி வேகமாக அடிக்கிறபோது, சருமத்தில் இருக்கும் துளைகளுக்குள் நீர் சென்று, அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும்.

* முகத்தை வாஷ் செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் டோனருடன் குளிர்ச்சியான மினரல் வாட்டரைக் கலந்து, முகத்தில் ஸ்பிரே செய்துகொண்டால், அடுத்த 3 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியாது.

Skin care (Representational Image)
Skin care (Representational Image)
How to Series: கற்றாழையின் மருத்துவ குணங்கள் என்னென்ன? உபயோகிப்பது எப்படி? | How to use Aloe Vera?

* மேக்கப் கட்டாயம் போடக்கூடிய வேலையில் இருப்பவர்கள், ஐஸ் க்யூபை மெல்லிய காட்டன் துணியில் சுற்றி, முகம் முழுக்க வட்ட வட்டமாகத் தேயுங்கள். சருமத் துவாரங்கள் அடைபட்டு, எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

* ஈரமான டிஷ்யூவில் ஐஸ் கியூபைச் சுற்றி, முகத்தில் தேய்த்தாலும் எண்ணெய் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

* வெயில் காலத்தில் முகத்துக்கு எந்த வகை பேக் போடுவதாக இருந்தாலும், கொரகொரப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கொரகொரப்பான பேக்குகளைப் போடுவதால், முகம் முதிர்ச்சியாக, வயதானது போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.

* வெயில் காலங்களில் பாசிப்பருப்பு மாவு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் முகத்தில் அப்ளை செய்வதைத் தவிர்க்கவும். இவை இரண்டுமே, வெயில் காலங்களில் சருமத் துவாரங்களை அடைத்து, முகத்தில் சின்னச் சின்ன கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும்.

* அரிசி மாவுக்கு எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், வெண்ணெய் இல்லாத மோர் சேர்த்துக் குழைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பசையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் காயவிடுங்கள். காய்ந்த பிறகு, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு முகம் முழுக்கத் தடவி, ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். குறைந்தது 3 மணி நேரத்துக்கு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

* விழாக்களுக்குச் செல்ல வேண்டும். 5 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியக் கூடாது என்பவர்கள், சிறிதளவு சோளமாவில், விதையில்லாத தர்பூசணித் துண்டுகள் மற்றும் 5 சொட்டு லைம் ஆயில் சேர்த்து, குழைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, ஐஸ் வாட்டரால் முகத்தைக் கழுவுங்கள். விழா முடியும் வரை பளிச் முகத்துடன் இருப்பீர்கள்.

முகப்பருக்கள் (Representational Image)
முகப்பருக்கள் (Representational Image)

* சம்மரில் சிலருக்கு முகத்தில் திட்டுத்திட்டாக கறுத்துவிடும். இவர்கள், ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு அல்லது அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு காய்ச்சாத பால் சேர்த்து மிக்சியில் அரையுங்கள். இதை, முகத்தில் பேக்காகப் போடுங்கள். தாமரைப்பூ கிடைக்காதவர்கள் அதற்குப் பதில், லோட்டஸ் ஆயில் வாங்கிப் பயன்படுத்தலாம்.

* மஞ்சள்பூசணியுடன் தேங்காய்ப்பால், ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசி மாவு சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால், முகம் பாலிஷ் போட்டதுபோல மாற ஆரம்பிக்கும். எண்ணெய் வடிவதும் கட்டுப்படும்.

* மேலே சொன்ன டிப்ஸை எல்லாம் செய்ய நேரமில்லையா? காய்ச்சாத பாலில் ஒரு பிரெட்டை ஊறவைத்துப் பிசைந்து, முகத்தில் தினமும் பேக்காகப் போட்டு வாருங்கள். பிரெட்டில் இருக்கும் ஈஸ்ட், முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்திப் பொலிவாக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எண்ணெய்ப்பசை பிரச்னை குறித்து இன்னும் சில தகவல்களைப் பகிர்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்கள் பால் பொருள்களையும், இனிப்பையும் அறவே தவிர்க்க வேண்டும். வே புரோட்டீன் (whey protein) எடுத்துக்கொள்பவர் என்றால் அதையும் தவிர்க்க வேண்டும்.

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

சருமப் பராமரிப்பில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) அல்லது கிளைகாலிக் அமிலம் (Glycolic Acid) உள்ள ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். நியாசினமைடு சீரம் ( Niacinamide Serum) உபயோகித்து அதைத் தொடர்ந்து ஜெல் வடிவ மாயிஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். சன் ஸ்கிரீனிலும் ஜெல் வடிவிலுள்ளதையே பயன்படுத்த வேண்டும்.

சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். கூந்தலில் எண்ணெய்ப் பசை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாரத்துக்கு மூன்று நாள்கள் தலைக்குக் குளிக்கவும். பொடுகு இருந்தால் பருக்கள் வரும். பொடுகை கட்டுப்படுத்த ஆன்டிடாண்டிராஃப் ஷாம்பூ உபயோகிக்கலாம்.

கூந்தல் முகத்தில் படியாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நகங்களும் சருமத்தில் படாதபடி அவற்றை வெட்டிவிட வேண்டும். தலையணை உறைகள், ஹேர் பேண்டு, டவல் போன்றவற்றை அடிக்கடி துவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்துக்கும் போதுமான அளவுக்கும் தொடங்க வேண்டியது மிக முக்கியம்.

சரும மருத்துவரை அணுகி பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸை அகற்ற பீல் (Peel) சிகிச்சை செய்துகொள்ளலாம்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு