பலருக்கும் விருப்பமான பொம்மைகளில் பார்பி பொம்மையும் ஒன்று. அதை வாங்கி விளையாட ஆசைப்படுபவர்கள் மத்தியில், பார்பி பொம்மையைப் போன்றே தன்னை மாற்றிக்கொள்ளப் பெண் ஒருவர் ஆசைப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் (Jazmyn Forest) என்பவர் உண்மையான பார்பியைப் போல மாற சுமார் 1,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 82.81 லட்சம் ரூபாய்) செலவு செய்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறைக்காகச் செல்லும்போது, தன்னுடைய 18-வது வயதிலேயே மார்பகத்தைப் பெரிதாக்குவதற்கான (Breast Augmentation) சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் மேற்கொண்டார்.
வயிறு, கைகள், உள்தொடைகள், மேல் மற்றும் கீழ் முதுகு, கன்னம் மற்றும் முதுகு ஆகியவற்றில் இருக்கும் கொழுப்புகளை அகற்றி தசைகளை இறுக்கும் வாசர் லைபோசக்ஷன் (Vaser liposuction) சிகிச்சையைச் செய்தார். தன்னுடைய கனவு பார்பியின் உருவத்தை அடைய பலமுறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
இது குறித்து ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் கூறுகையில், ``பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதைப் பற்றி முதலில் நினைத்தபோது நான் இளையவளாக இருந்தேன். அப்போதிருந்து நான் என் உடலில் முதலீடு செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
ஒவ்வோர் அறுவைசிகிச்சையின்போதும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் நான் சிறப்பாக நடத்தப்படுகிறேன், அதே நேரத்தில் என் நம்பிக்கையும் உயர்ந்து வருகிறது.

நான் குளிப்பதற்கு முன் ஒரு நாளைக்கு இரண்டு முறை என் உடலைப் பார்க்கிறேன். நான் பல் துலக்கும்போது ஒரு நாளில் இரண்டு முறை என் முகத்தைப் பார்க்கிறேன்; அது உண்மையில் என் சுயமரியாதைக்கு உதவுகிறது. உலகம் பார்க்கும் உங்களது உடலிலும் முகத்திலும் முதலீடு செய்வது மிகவும் மதிப்பு வாய்ந்தது'' என்று தெரிவித்து இருக்கிறார்.
தனக்கு விருப்பமான உருவத்தை அடைய வேண்டும் என்பதற்காக சிகிச்சை செய்பவர்கள் குறித்து உங்களின் கருத்து என்ன... கமென்ட்டில் பதிவிடுங்கள்!