கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பஜாஜ் ஸ்கூட்டரில்… பில்லியன் சீட்டில் அம்மாவுடன்… இந்தியாவின் கடைசிக் கிராமம் வரை!

ஆன்மிகப் பயணம்: பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகப் பயணம்: பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்

ஸ்கூட்டரில் இந்தியா முழுதும் தாயுடன் ஆன்மிகப் பயணம் போகும் கிருஷ்ணகுமார்!

பஜாஜ் ஸ்கூட்டரில்… பில்லியன் சீட்டில் அம்மாவுடன்…
இந்தியாவின் கடைசிக் கிராமம் வரை!

‘யார் ஃபர்ஸ்ட்ல போறாங்குறது முக்கியம் இல்லை; லாஸ்ட்ல யார் ஃபர்ஸ்ட வர்றாங்கிறதுதான் முக்கியம்!’ – இது போன்ற கன்னாபின்னா டயலாக்குகள் ரேஸுக்கு வேண்டுமானால் பொருந்தும்; பயணங்களுக்குப் பொருந்தாது. அதிலும் சாதனைப் பயணங்களுக்கு எல்லாமே முக்கியம்தான். ஓட்டும் வாகனத்தில் இருந்து போகும் தூரம் வரை எல்லாமே முக்கியம்! குழப்பமா இருக்கா!

முதலில் எனக்கும் கிருஷ்ணகுமாரைப் பார்த்தும் குழப்பமாகத்தான் இருந்தது. தாடியும், ஹிப்பித் தலையுமாய் ஆள் பார்க்கிறதுக்கே சாமியார் மாதிரி இருந்தார். அவர் ஒரு பிரம்மச்சாரி. ஆனால், காதலிக்கிறாராம்(!)... மறுபடியும் குழப்பம்.

‘‘ஹலோ, நான் காதலிப்பது பயணத்தை; என் வாகனத்தை; என் தாடியை!’’ என்று ‘துணிவு’ அஜித் மாதிரி தன் வெள்ளித் தாடியைத் தடவியபடி மீண்டும் குழப்பினார்.

ஆனால், மனிதர் வெறித்தனமான வாண்டர்லஸ்ட்! பயணங்களை ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ணும் புத்திசாலி! அதுவும் சாதா பயணங்கள் இல்லை; எல்லாமே தாதா பயணங்கள்! லேட்டஸ்ட்டாக, இந்தியா – சீனா எல்லையில் இருக்கும் கடைசிக் கிராமம் வரை பயணித்து விட்டு வந்திருக்கிறார்; அதுவும் தனது அம்மாவைத் தனது பில்லியன் சீட்டில் உட்கார வைத்து! அதுவும் ஒரு ஸ்கூட்டரில்! அதுவும் வின்டேஜ் வாகனமாகக் காத்திருக்கும் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரில் என்றால், அவர் புத்திசாலிதானே!

என்ஹெச்7–ல் வடக்கு நோக்கிய வழியில் தன் எடை மொத்தத்தையும் சைடு ஸ்டாண்டில் முட்டுக்கொடுத்து 'ஹெட்லேம்ப்' பார்வை கீழ் நோக்கியவாறு நின்றது பஜாஜ் சேட்டக். ஸ்கூட்டரைப் பார்த்த மாத்திரத்திலேயே, ‘இதையெல்லாம் இன்னுமாடா யூஸ் பண்றாங்க’னு எனும் நமது மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்து கொண்டிருக்க வேண்டும். ‘‘ஹலோ, இதுதான் என் செல்லம்!’’ என்று, யாருக்கோ உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் கிருஷ்ணகுமார்.

‘கர்நாடக மாநிலப் பதிவு எண், பழைய ஸ்கூட்டர், ஆளு வேற ஒரு டைப்பா இருக்காரு, பாட்டியம்மா இருக்கு, 7 பேக் வச்சிருக்காரு!’ என்கிற எனது மைண்ட் வாய்ஸ் குழப்பங்களை மறுபடியும் புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

‘‘நான்‌ கிருஷ்ணக்குமார். இது என்னோட அம்மா சூடாரத்னம்மாள். நாங்க கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவங்க. மைசூரிலிருந்து ஆரம்பித்து வட இந்தியா முழுக்க ஆன்மிகப் பயணம் முடித்து, தற்போது தமிழ்நாட்டுக்குள் பயணம் போய்க் கொண்டிருக்கிறோம்.

என் அப்பா 2015–ல் இறந்து போயிட்டாரு. அதன் பிறகு அம்மா தனிமையாகிட்டாங்க. தினசரி இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அம்மாவோட குறைகளைக் கேட்குறது என்னோட வழக்கம்! அதன்படி ஒரு சமயம் பேசும்போது பக்கத்திலிருக்கும் கோயிலுக்குக்கூட நான் போனது கிடையாதுன்னு சொன்னாங்க. அதைக் கேட்டப்ப என் அம்மா இவ்வளவு காலமும் எவ்வளவு ஆசைகளைத் தனக்குள்ள போட்டுப் புதைச்சிக்கிட்டு வாழ்ந்திருக்காங்கன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. அப்பா உயிரோடு இருந்தவரைக்கும் குடும்பம், கடமைனு இருந்துட்டாங்க. இப்போ அவங்க இல்லாத நிலையிலும்கூட தனக்காக இது வேணும்னு அம்மா ஒருநாளும் கேட்டதில்ல. நானாகக் கேட்கப் போய்தான் அம்மாவின் அந்த ஏக்கமும் கூட வெளிப்பட்டுச்சு. அதனால அவங்களோட மிச்சமிருக்குற வாழ்க்கைக்குள்ள மனநிறைவான அனுபவங்களைத் தர முடிவு செஞ்சேன்.

அப்போ ஆரம்பிச்சதுதான் இந்த ஆன்மிக யாத்திரை. இந்த யாத்திரையை ஸ்கூட்டர்ல போகணும்னு முடிவு எடுத்ததுக்கும் ஒரு காரணம் உண்டு. பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர், எங்க அப்பா எனக்காகக் கொடுத்த முதல் பரிசு. அப்பா இருந்த வரைக்கும் எனக்கும், அம்மாவுக்கும் எவ்வித வருத்தங்களும் இருந்ததில்ல. ஆனால், அவர் இறந்தபின்பு அம்மாவின் ஆசைக்காக நான் ஆன்மிக யாத்திரை போலாம்னு முடிவு செஞ்சப்போ அப்பாவின் இடத்தைப் பூர்த்தி செய்ய எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் இந்த வண்டிதான்.

அதனால், அப்பாவின் நினைவாக, அப்பாவும் எங்களோடு சேர்ந்தே இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கு கொள்ள வேண்டுமென ஆத்மார்த்தமாகப் பிரியப்பட்டு, ஸ்கூட்டரில் போக முடிவு செஞ்சோம். அம்மாவுக்கு வயசாயிடுச்சு, அவங்களால ஸ்கூட்டரில் பயணம் செய்ய முடியுமான்னு ஒரு நிமிஷமும் நான் தயங்கி நிக்கல. கடந்த 2018 ஜனவரி 16-ந்தேதி, மைசூரிலிருந்து ஆன்மிக யாத்திரை கிளம்பினேன். ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேஷ், உத்தரபிரதேஷ், டெல்லி, காஷ்மீர், சத்தீஸ்கர், பஞ்சாப், பீகார், ஹரியானா, ராஜஸ்தான், நேபால், பூடான், மியான்மர், சீன எல்லை இப்படி வட இந்தியா முழுக்க 2.5 வருஷம் ஸ்கூட்டர்லேயே கோயில்களுக்குப் போயி அம்மாவுக்குச் சுற்றி காண்பிச்சேன்.

பஜாஜ் ஸ்கூட்டரில்… பில்லியன் சீட்டில் அம்மாவுடன்…
இந்தியாவின் கடைசிக் கிராமம் வரை!
பஜாஜ் ஸ்கூட்டரில்… பில்லியன் சீட்டில் அம்மாவுடன்…
இந்தியாவின் கடைசிக் கிராமம் வரை!

இந்தியா-சீன எல்லையில் இருக்குற கடைசி கிராமமான தவாங், இந்தோ - சீனா வார் மெமோரியல் வரைக்கும் அம்மாவை அழைச்சிட்டுப் போனேன். இந்தோ-சீனா வார் மெமோரியல் முன்னே நின்னு போட்டோ எடுக்குறதுக்கு ஸ்கூட்டர் அனுமதிக்க மாட்டோம்னு இந்திய ராணுவம் சொல்லிடுச்சி. அங்குள்ள கமாண்டிங் ஆபிசர்கிட்ட எங்களுக்கும் இந்த வண்டிக்குமான சென்ட்டிமென்டைச் சொன்னபிறகு அதிகாரிங்க அனுமதியோட என்னோட ஸ்கூட்டரை வார் மெமோரியல் பக்கத்துல வரைக்கும் கொண்டு போய் போட்டோ எடுத்துகிட்டோம்.

எல்லாரும் எங்களைப் பார்த்து, ‘இந்த வண்டில எப்படி இவ்வளோ தூரம் வந்தீங்க’னு ஆச்சரியமா கேட்பாங்க. ஆனா, என்னோட நம்பிக்கையை எந்த இடத்துலேயும் இந்த ஸ்கூட்டர் பொய்யாக்கினது இல்லனு சொல்லுவேன். 150 சிசி திறன், 2ஸ்ட்ரோக் இன்ஜின்தான். ஆனா, இப்பவும் ஒரே கிக்கில் வண்டி ஸ்டார்ட் ஆகும். நாங்க போன எல்லா இடத்துலேயும் எங்களுக்கு என்ன வரவேற்பு இருந்துச்சோ, அதைப்போலவே ஸ்கூட்டருக்கும் மாலை, மரியாதை செஞ்சி வரவேற்பு கிடைச்சதுனா நம்புவீங்களா!

பஜாஜ் ஸ்கூட்டரில்… பில்லியன் சீட்டில் அம்மாவுடன்…
இந்தியாவின் கடைசிக் கிராமம் வரை!
பஜாஜ் ஸ்கூட்டரில்… பில்லியன் சீட்டில் அம்மாவுடன்…
இந்தியாவின் கடைசிக் கிராமம் வரை!

மிசோரம் மாதிரி கடினமான சாலை வசதியுள்ள இடங்களிலும் பஞ்சர் ஆகாமல் கடந்து வந்திருக்கேன். உச்சபட்மாக 13,700 அடி உயரம் இந்த வண்டியில் மலையேற்றம் செஞ்சிருக்கேன். எங்கேயும் சிரமம் தரல. 2020 மார்ச் மாதம் பூடானில் ஆன்மிக பயணத்தில் இருக்கும்போதுதான்‌ கொரோனா ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. 1 மாதம் 21 நாள் நானும் அம்மாவும் அங்கேயே தங்கியிருந்தோம். அதுக்கப்புறம், என்னோட நிலைமையைத் தெரிஞ்சிக்கிட்டு அங்கிருந்து வெளியேற மாநில அரசே உதவி செஞ்சாங்க. மத்திய-மாநில அரசுகள் அனுமதியோட ஊரடங்கின்போது 7 நாட்கள் தொடர்ச்சியா பயணம் செஞ்சோம். 2,673 கி.மீ கடந்து கர்நாடக எல்லையை வந்து சேர்ந்தோம். மூன்று நாட்கள் தொடர்ச்சியா 400 கிமீ மேல் இந்த ஸ்கூட்டரில் பயணம் செஞ்சிருக்கோம். அதிகபட்சமா நாள் ஒன்றுக்கு 427 கிமீ பயணம் செஞ்சதுதான் எங்க சாதனை. இப்போ 2022, 4–வது வருஷமா தொடர்ந்து பயணம் போயிட்டு இருக்கோம். இதுவரைக்கும் 61,052 கி.மீ. பயணம் செஞ்சிருக்கேன்.

ஸ்கூட்டர் பயணங்கறதால வண்டியில் ஆயில், ஏர், பிரேக் எல்லாம் சரியா இருக்கானு ஒவ்வொரு முறையும் செக் பண்ணிருவேன். இதுக்காக சின்னச் சின்ன மெக்கானிக் வேலையையும் கத்துக்கிட்டேன். ஸ்கூட்டரில் கார்புரேட்டர் க்ளீன் பன்றது, ப்ளக் மாத்துறது, ஸ்டெஃப்னி டயர், பஞ்சர் இப்படி எல்லாத்தையும் தேவையான சமயங்களில் நானே சரி செஞ்சிருவேன். இப்ப வரைக்கும் எந்தவித மேஜர் கம்ப்ளைன்ட்டும் நான் வர விட்டது கிடையாது.

எங்களை எவ்வளவு ஆரோக்கியமா கவனிச்சிக்கிறனோ, அதுபோலத்தான் இன்னமும் என்னுடைய அப்பாவின் ஜீவனா பாவிக்கிற ஸ்கூட்டரையும் பாத்துப்பேன். வட இந்தியா முழுவதும் டூர் முடிச்சிட்டு கேரளா வழியா தமிழ்நாட்டுக்குள்ள எனது பயணத்தை ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நிறைய இடங்கள் சுற்றிப் பார்க்கணும். இந்தப் பயணத்துல எந்தவித விதிமீறலும் இருக்கக்கூடாதுனு என்னோட ஸ்கூட்டருக்கு 2026 வரைக்கும் எஃப்சி ரென்யூவல் வச்சிருக்கேன். இன்சூரன்ஸூம் கரன்ட்ல இருக்கு.

இந்தப் பயணத்துக்கு, நான் பேங்க்ல சேமிச்சு வைச்ச பணத்துக்குக் கிடைக்குற வட்டித் தொகையைத்தான் செலவு செய்றேன். செலவு செய்ற பணத்துக்கு நான் எந்தக் கணக்கும் வச்சிக்கிறது இல்ல. ஏன்னா இந்தப் பயணம் என்னோட அம்மாவின் ஏக்கத்தைத் தணிப்பதற்காக செய்றேன். ஆகவே அது தீரும் வரை எனது பயணம் தொடரும்!" என நெகிழ்ந்து கூறினார் கிருஷ்ணகுமார்.