ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

தேனாம்பேட்டை மெக்கானிக் + நேஷனல் சாம்பியன்!

ரேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேஸ்

ரேஸர்: நேஷனல்/ஒன்மேக் சாம்பியன் (நோவிஸ்)

ரேஸைப் பொருத்தவரை வெங்கட் என்கிற வெங்கடேசன் இரண்டு வயதுக் குழந்தைதான். ஆனால், ரேஸ் வரலாற்றில், அடுத்த நேஷனல் சாம்பியன்ஷிப்பில் ஜெகன், ராஜீவ்சேது, கெவின் கண்ணன், K.Y.அஹமது போன்ற பெரிய ரேஸ் ஜெயன்ட்களுடன் மோதவிருக்கிறார் வெங்கட். ரேஸ் ஃபீல்டில் இவரை `வெங்கட் மோட்டோமேனியாக்’ என்றுதான் அழைக்கிறார்கள்.

அதாவது, மோட்டோமேனியாக் எனும் டீமுக்காக ரேஸ் ஓட்டும் வெங்கட்தான், இப்போதைய 165 ஸ்டாக் கேட்டகிரியில் நேஷனல் போட்டியிலும் - 200சிசி அப்பாச்சி ஒன்மேக்கிலும் சாம்பியன். இரண்டுமே நோவிஸ் கேட்டகிரி. ``இனிதான் எக்ஸ்பெர்ட் ஆகணும்’’ என்கிறார் வெங்கட்.

ரேஸ்
ரேஸ்

2018-ல் ரேஸ் ட்ராக்கில் கால் பதித்த இந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இரண்டு சாம்பியன்ஷிப்களுக்குச் சொந்தக்காரராகி விட்டார் வெங்கட்.நோவிஸ் கேட்டகிரி என்பது, புதிதாக ரேஸில் நுழையும் நண்டுசிண்டுகளுக்கான ரேஸ்.

நண்டுசிண்டு என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஆம், 14 வயது முதல் 22 வயதினருக்கான ஆரம்ப கேட்டகிரிதான் நோவிஸ் கேட்டகிரி. 24 வயதில் இருந்து எக்ஸ்பெர்ட் கேட்டகிரிக்கு மாறிவிட வேண்டும்.

ரேஸ்
ரேஸ்

அதாவது, ரேஸ் எக்ஸ்பெர்ட்டுகளுடன் ட்ராக்கில் மோத வேண்டும். வெங்கட்டுக்கு இப்போது வயசு 22. பெரிய பின்னணி எல்லாம் இல்லாத வெங்கட், தனது மெக்கானிக் தொழில் மூலம் கிடைத்த வருமானத்திலும், ரேஸில் தொடர்ந்து ஜெயித்து அதில் கிடைத்த பணத்தையும் வைத்து மட்டும்தான் ரேஸிங்கில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

பக்கா சென்னைக்காரரான வெங்கட், தேனாம்பேட்டையில் ஒரு பைக் மெக்கானிக். கொரோனா லாக்டவுன் என்பதால், கிடைக்கும் நேரத்திலெல்லாம் ஒர்க்அவுட் செய்து கொண்டிருப்பதாகச் சொன்ன வெங்கட், தண்டால்களோ, கார்டியோ ஒர்க்-அவுட்டோ செய்துகொண்டு இருந்திருக்க வேண்டும். மூச்சு வாங்கியபடி போனில் பேசினார். ``சின்ன வயசிலிருந்தே பைக்னா எனக்குப் பிடிக்கும். 8 வயசுலயே நான் பைக் ஓட்டணும்னு அடம்பிடிச்சேன். அப்பாதான் என்னை முன்னாடி உட்கார வெச்சு சும்மா கிளட்ச் ஆப்பரேட் செய்யச் சொல்றது, ஆக்ஸிலரேட்டர் முறுக்க வைக்கிறதுனு சொல்லிக் கொடுத்தார். சைக்கிளில் வீலிங் பண்றது ரொம்பப் பிடிக்கும். பீச்ல அப்படிப் பண்ணிக்கிட்டிருக்கும்போதுதான் ஜெகன் அண்ணாவும் சைக்கிள் வீலிங் பண்ணிக்கிட்டிருந்தார். அவரைப் பார்த்துத்தான் எனக்கு ரேஸிங்கில் ஆர்வம் வந்துச்சு.

தேனாம்பேட்டை மெக்கானிக் + நேஷனல் சாம்பியன்!

அப்புறம் பன்னீர் செல்வம்னு ஒரு அண்ணாகிட்டதான் மெக்கானிக்கா வேலை பார்த்தேன். எனக்குச் சம்பளம் கிடையாது. அதுக்குப் பதிலா எனக்கு ரேஸில் நுழையறதுக்கு என்ட்ரி கட்டினா போதும்னு சொல்லித்தான் வேலை பார்த்தேன்.

2017-ல் கடைசி ரவுண்டில் பன்னீர் அண்ணாதான் 10,000 ரூபாய் என்ட்ரி கட்டி, நேஷனல் ரேஸில் நுழைய வெச்சார். 2018 வரைக்கும் பன்னீர் அண்ணாவோட டீம் ராக்கர்ஸுக்காக ஓட்டினேன். 2019-ல் ஒரு சின்ன மனவருத்தம். அதிலிருந்து வெளியே வந்துட்டேன். என் நண்பன் மணியோட `டீம் மோட்டோ மேனியாக்’ டீமுக்காக ரேஸ் ஓட்டினேன். மணி, சுதாகர் அண்ணா, எலிசபெத் அக்கானு நிறைய பேர் உதவி பண்ணினாங்க. ஃபர்ஸ்ட் என்ட்ரி மட்டும் கட்டினாங்க. இதில் தோத்துட்டா அடுத்த ரேஸுக்குக் கைல காசு இல்லை. அதில் ஜெயிச்சு அதில் வர்ற காசை வெச்சுத்தான் அடுத்தடுத்த நேஷனல், ஒன்மேக்னு ஓட்டி, எப்படியோ ஜெயிச்சுட்டேன்!’’ என்று போனே சூடாகும்படி பேசினார் வெங்கட்.

ரேஸ்
ரேஸ்

2018-ல் நுழைந்த வேகத்திலேயே சாம்பியன் ஆக வேண்டியது – சில ஆர்வக் கோளாறுகளாலும், டீம் குளறுபடிகளாலும் 2018 சாம்பியன்ஷிப் பறிபோனதைக் கவலையோடு குறிப்பிடுகிறார் வெங்கட். 2019-ல்கூட இரண்டு போட்டிகளிலும் `ஜீரோ’ பாயின்ட்ஸில்தான் ரேஸையே தொடங்கினார் வெங்கட். அதாவது, முதல் ரவுண்டிலேயே பைக் க்ராஷ் ஆகி சொதப்பித் தள்ளிவிட்டது.

இரண்டாவது ரவுண்டிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. நடுவில் வார்ம்-அப் ரேஸ் என்று நினைத்து கிரிட்டுக்குள் வெங்கட் வர, சிவப்புக் கொடி காட்டப்பட்டது அவருக்கு. அதாவது, சிவப்புக் கொடி காட்டப்பட்ட வீரர், மொத்த வீரர்களும் கிளம்பிய பிறகுதான் ரேஸை ஸ்டார்ட் பண்ண வேண்டும். 48 ரைடர்களும் கிளம்பிய பிறகே ரேஸை ஸ்டார்ட் செய்து, 6-வது இடம் பிடித்தது… இப்படி ஏகப்பட்ட சொதப்பல்கள். இத்தனைக்கும் இரண்டு போட்டிகளிலுமே 5-வது ரேஸில் இரண்டாவது ரவுண்டில் பைக் கோளாறு வேறு. போனில் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே `கிர்’ அடித்தது.

ரேஸ்
ரேஸ்

அதற்கப்புறம் நடந்த 3 ரேஸிலும், (ஒரு ரேஸுக்கு இரண்டு ரவுண்டுகள்) கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, `நேஷனல் - ஒன்மேக்’ என இரண்டு போட்டிகளிலும் முதலிடத்தில் வந்து போடியம் ஏறி வெங்கட் சாம்பியன் அடித்ததுதான் இந்தக் கட்டுரை வரக் காரணம். சிவப்புக் கொடி காட்டப்பட்ட ஒரு வீரர், கடைசியில் வெற்றிக்கொடி நாட்டுவதெல்லாம் சிறப்புக் கட்டுரைதானே!

ஒரு ரேஸ் வீரர், ஏதாவது ஒரு ரேஸில் மட்டும்தான் கான்சென்ட்ரேட் பண்ண முடியும். ஆனால், ஒன்மேக்-நேஷனல் என மாறி மாறி, இரண்டு ரேஸ்களிலும், இரண்டு நாட்களில் மொத்தம் 12 ரவுண்டிலும் முதலிடம் வந்தது, ஒரு தன்னம்பிக்கைக்கான கதைக்கரு.

``ரேஸில் என்னைப் பொறுத்தவரை ராம், சுதாகர் அண்ணா ரெண்டு பேரும்தான் குருக்கள். 2019 போட்டியில், செகண்ட் ரவுண்டிலேயே நம்பிக்கை போயிடுச்சு. வழக்கம்போல் ஸ்பார்க்ஸ் ரேஸிங் ஆளுங்கதான் ஜெயிப்பாங்கனு நினைச்சேன். 7 வருஷம் அவங்கதான் நோவிஸில் சாம்பியன். அந்த டீமில் ஒரு ரைடர், என்னை ரொம்ப அவமானப்படுத்தினார். அது என்னை வெறியேத்திவிட்டுடுச்சு. அப்புறம், சுதாகர் அண்ணாவும், ராம் அண்ணாவும் சொன்ன சில டெக்னிக்ஸ்தான் என்னை போடியம் ஏற வெச்சது!’’ என்கிறார் வெங்கட்.

பொதுவாக ரேஸர்கள் சொல்வதுபோல் வெங்கட், ``மோட்டோ ஜீபிதான் என்னோட லட்சியம்’’ என்று சொல்லவில்லை. ``ராஜீவ் சேது மாதிரி ஆசியாவுக்காக ஓட்டணும். அது போதும்! சரிண்ணா, ஒர்க்-அவுட் நேரமாச்சு.. போனை வெச்சுடறேன்!’’ என்று மறுபடியும் மூச்சு வாங்கப் போய்விட்டார் வெங்கட்.