Published:Updated:

உடைப் பராமரிப்பு

உடைப் பராமரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
உடைப் பராமரிப்பு

காஸ்ட்யூம் & அக்சஸரீஸ்

குந்தன், சமிக்கி, ஜர்தோஸி என்று வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்காவையும், டிசைனர் புடவைகளையும் ஆசைப்பட்டு வாங்கிவிடுகிறோம். அதன் பிறகோ, டிசைனர்  உடைகளை வீட்டிலேயே துவைக்கலாமா, முறுக்கிப் பிழியலாமா, கொலுசில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க லெஹங்காவில் ஃபால்ஸ் வைக்கலாமா என்று வரிசைகட்டி நிற்கின்றன சந்தேகங்கள். தெளிவாக விளக்குகிறார் ஃபேஷன் டிசைனர் தபு.

டிசைனர் டிரஸ்களை ஒருமுறை உடுத்திய பின்னர் துவைக்க வேண்டுமா?

வேண்டவே வேண்டாம். ஒருமுறை உடுத்தியதும், விரித்துவிட்டு ஃபேனில் உலரவிடுங்கள். வியர்வை உலர்ந்ததும் மடித்து வார்ட்ரோபில் வையுங்கள். வியர்வை வாடை ஒருவேளை தொந்தரவு செய்வதாக இருந்தால், வெள்ளை பெட்ரோலைப் பஞ்சால் தொட்டு, வியர்வைபட்ட இடங்களில் துடைத்து, உலரவிடுங்கள். வெள்ளை பெட்ரோல் கொண்டு துடைக்கும்போது, வாடையுடன் வியர்வையினால் துணியில் ஏற்பட்ட கறையும் நீங்கிவிடும். பட்டு ஜாக்கெட்டுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம். வெள்ளை பெட்ரோல் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்.

டிசைனர் டிரஸ்களை வீட்டிலேயே துவைக்கலாமா?

மெட்டீரியல் மற்றும் வொர்க்கைப் பொறுத்து சிலவற்றை வீட்டில் துவைக்கலாம்; சிலவற்றைக் கூடவே கூடாது. சமிக்கி வொர்க், மிரர் வொர்க் மற்றும் த்ரெட் வொர்க் செய்யப்பட்ட  டிரஸ்களை வீட்டிலேயே கையால் துவைக்கலாம். ஆனால், வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாது. கைகளால் முறுக்கிப் பிழியவும் கூடாது. அப்படிப் பிழிந்தால் வேலைப்பாடுகள் தளர்வாகும் அல்லது அறுந்துபோகும்.

வீட்டிலேயே துவைக்கக்கூடியது டிசைனர் டிரஸ்தான், ஆனால், சாயம் போகக்கூடியது என்றால், முதல் சலவையை டிரை க்ளீனிங் கொடுத்துவிட்டு, இரண்டாவது சலவையில் இருந்து  வீட்டில் துவைக்கலாம்.

ஜர்தோஸி வொர்க் செய்யப்பட்ட உடைகளை, எக்காரணம் கொண்டும் வீட்டில் துவைக்கவே கூடாது. அவை தண்ணீர்பட்டால் கறுத்துவிடும்.

உடைப் பராமரிப்பு

ஜர்தோஸி வேலைப்பாடுகள் கொண்ட உடை அணியும்போது, பெர்ஃப்யூம் பயன்படுத்தக்கூடாது என்பது உண்மையா?

உண்மைதான். பெர்ஃப்யூம்பட்டால் ஜர்தோஸி கறுத்துவிடும். அதனால், முதலில் பெர்ஃப்யூம் போட்டுக்கொண்டு பின்னர் ஜர்தோஸி வேலைப்பாடுகள் கொண்ட ஆடையை அணியவும். ஜரி வொர்க், ஜர்தோஸி வொர்க் செய்யப்பட்ட புடவைகளைப் பீரோவில் வைக்கும்போது, நாப்தலின் பால்ஸ் போட்டுவைத்தால்கூட வேலைப்பாடுகள் கறுத்துவிடும் என்பதால், அதையும் தவிர்க்கவும்.

டிசைனர் டிரஸ்களை எப்படி மடிக்க வேண்டும்?

டிசைனர் புடவைகளைக் கடைகளில் மடிப்பதுபோல, பெரிய செவ்வக வடிவத்தில் மடித்து, பருத்திப் பைகளில் வைத்து, மர அலமாரியில் படுக்கை வசத்தில் வைக்கவும். ஹெவி வெயிட் டிசைனர் டிரஸ்களை ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள். அப்படித் தொங்கவிட்டால், வேலைப்பாடுகளின் வெயிட் காரணமாக டிரஸ்களில் இருக்கிற நூல்களுக்கிடையே இடைவெளி விழுந்து, உடை வீணாகிவிடும்.

அப்படியே பட்டுப் புடவைகளைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். பட்டுப் புடவைகளைக் கடைகளில் மடிப்பதுபோல சின்ன செவ்வக வடிவத்தில் மடித்து, புடவை வைப்பதற்கென்றே கிடைக்கிற பருத்திப் பைகளில் வைத்து, மர அலமாரியில் வைத்தால் நிறம் மங்காமல் பளிச்சென்று இருக்கும். மடித்த பட்டுப் புடவையை, பையினுள்ளே வைக்காமல் அப்படியே இரும்பு பீரோவுக்குள் வைத்தால், புடவையின் நிறம் மங்கிவிடும். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை மடித்து வைத்த பட்டுப்புடவைகளை விரித்து, ஏற்கெனவே மடித்ததற்கு எதிர்ப்புறமாக மடித்துவைத்தால், மடிப்பு இருக்கிற இடங்களில் புடவை இற்றுப்போகாது.

டிசைனர் உடைகளை வெயிலில் உலர வைக்கலாமா?

நேரடி சூரிய வெளிச்சத்தில் டிசைனர்  உடைகளை உலர வைக்கக் கூடாது. வெயிலில் உலர்த்தத்தான் வேண்டுமென்றால், துணிகளை நிழலில் விரித்துப் போட்டு, சூரியனின் கதிர் துணியின்மேல் படுவது போல பார்த்துக்கொள்ளுங்கள். நேரடி வெயில்பட்டால், அடர்நிற டிசைனர் டிரஸ்கள் வெளுத்துவிடும்.

டிசைனர் டிரஸ்களில் நகைகள் மாட்டிக் கொள்வதைத் தவிர்ப்பது எப்படி?

காதுகளுடன் ஒட்டியபடி இருக்கிற கம்மல்களையும், கழுத்துடன் ஒட்டியபடி இருக்கிற நெக் பீஸ்களையும் தேர்ந்தெடுப்பதுதான் இதற்கு ஒரே வழி. இன்றைக்குச் செயற்கை நகைகள் விதவிதமாகக் கிடைப்பதால், உடையைக் கிழிக்காதபடி நகையைத் தேர்ந்தெடுப்பது எளிதுதான். இதுபோலவே, பிளவுஸில் முடிக்கற்றைகள் மாட்டாதபடி கொண்டை ஸ்டைலில் தலையலங்காரத்தைச் செய்துகொள்ளுங்கள்.

லெஹங்காவுக்கு ஃபால்ஸ் வைத்துத் தைக்கலாமா?


அவசியமில்லை. அதற்குப் பதில் ‘கேன் கேன்’ (can can) மெட்டீரியலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப ஓர் உள்பாவாடை தைத்து அணிந்துகொண்டு, அதன் மேல் லெஹங்காவை அணிந்துகொண்டால், கொலுசுகளால் லெஹங்கா பாழாகாது; லெஹங்கா அழகாக விரிந்து உங்களுக்கு ஒரு ராணியின் வசீகரத்தையும் கொடுக்கும்!

அக்குள் பேட்...  யூஸ் அண்டு த்ரோ நல்லதா?

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகிற அக்குள் பேட்களை பயன்படுத்தினால், ஜாக்கெட் துணி அந்தப் பகுதியில் மட்டும் தளர்ந்துவிடும். பர்மனென்ட் பேட்தான்  டிசைனர் ஜாக்கெட்டுகளுக்கு நல்லது.

பேடட் சோளியில் பேடை எடுத்துவிடலாமா, அப்படியே பயன்படுத்தலாமா?


சோளிக்கு அட்டாச் செய்யப்பட்ட பேட்ஸ் எல்லோருடைய உடல்வாகுக்கும் செட்டாகாது. அது ஒருபக்கம், உங்கள் உடம்பு ஒருபக்கம் என்று இருக்கும். பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதால் அதை நீக்கிவிட்டு, தேவைப்பட்டால் பேடட் பிரா பயன்படுத்தலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ஆ.சாந்திகணேஷ்

படம் : அசோக் அர்ஸ்