Published:Updated:

`மீம்' டிரெஸ்தான் இப்போ டிரெண்ட்... பாரிஸ் ஃபேஷன் வீக் 2019!

`மீம்' டிரெஸ்தான் இப்போ டிரெண்ட்... பாரிஸ் ஃபேஷன் வீக் 2019!
`மீம்' டிரெஸ்தான் இப்போ டிரெண்ட்... பாரிஸ் ஃபேஷன் வீக் 2019!

மக்களின் விருப்பத்துற்கேற்ப ஆடைகள் வடிவமைப்பதிலிருக்கும் சவாலே, ஆடை வடிவமைப்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், தற்போது ட்ரெண்டிங்கிலிருக்கும் பல `மீம்ஸ்' வாக்கியங்களை, தங்களின் `அவான்ட் கார்ட் (Avant Garde)' ஆடைகளில் பிரின்ட் செய்து பல கைதட்டல்களை அள்ளினர் ஃபேஷன் வடிவமைப்பாளர்களான விக்டர் ஹோர்ஸ்ட்டிங் மற்றும் ரோல்ஃப் ஸ்னோரன்.

நாம் உடுத்தும் ஆடைகள் அனைத்தும் ஏதோ ஒன்றின் இன்ஸ்பிரேஷனாகத்தான் இருக்கும். நிறமாகட்டும், டிசைனாகட்டும் எதிலுமே நம் உணர்வுகளின் தாக்கம் அடங்கியிருக்கும். சிலருக்கு, நிறம் பிடித்திருந்தாலே ஆடைகளை வாங்கிவிடுவார்கள். பலருக்கு, நிறம், டிசைன், பேட்டர்ன் என அத்தனையும் பிடித்திருந்தால் மட்டுமே `பில்லிங்' கவுன்ட்டர் வரை அந்த ஆடைகள் செல்லும். இப்படி மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதிலிருக்கும் வடிவமைப்பாளர்களின் திறமையைக் கெளரவப்படுத்துவது ஃபேஷன் ஷோக்கள்தான். 

`ஃபேஷன்' பிறப்பிடமான பாரிஸில் கடந்த சில நாள்களாக பல்வேறுவிதமான ஃபேஷன் ஷோக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதில் `Haute Couture' கலெக்‌ஷனுக்கான ஃபேஷன் ஷோ புதன்கிழமை நடைபெற்றது. பொதுவாக இந்த வகையான ஃபேஷன் ஷோவில், ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் விலை உயர்ந்த ஆடைகளை அரங்கேற்றுவார்கள்.

இதற்காக வடிவமைக்கப்படும் ஆடைகள் முழுவதும் ப்ரீமியம் க்ளாஸ் மக்களை மனதில்கொண்டு வடிவமைக்கப்படுபவை என்பதால், பொதுமக்கள் வாங்குவது கடினம். பல நேரங்களில் ப்ரீமியம் க்ளாஸ் மக்களும் வாங்குவதுக்கு யோசிப்பதுண்டு. ஆனால், விக்டர் மற்றும் ரோல்ஃப் வடிவமைத்த ஆடைகள் அனைத்தும், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன. காரணம், சமூக வலைதளங்களில் மக்களால் அதிகம் பகிரப்பட்டுவரும் `மீம்ஸ்' வாக்கியங்களை, அவர்கள் வடிவமைத்த ஆடைகளில் அச்சிட்டிருப்பதுதான்.

`No Photos Please', `Go to Hell', `I’m not shy I just don’t like you', `Trust me I am a liar' போன்ற துணிச்சலான வாக்கியங்கள் முதல் `Whatever', `No' போன்ற ஷார்ட் ஆண்டு ஸ்வீட் வார்த்தைகள் வரை அத்தனையும் இங்கு `ஹைலைட்'. இதில் சங்ககால கவுன் வகைகள் முதல் அதிக அடுக்குகளைக்கொண்ட Ruffle and Tulle டிரெஸ் வரை 17 வெவ்வேறு வித்தியாச உடைகள் அடங்கும். கண்களைக் கவரும் மிட்டாய் நிறங்கள், புதிய ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டை உருவாக்கியது. இப்படிப் பல புதுமைகளை உள்ளடக்கிய இந்த இணை ஆடை வடிவமைப்பாளர்களின் வேலைப்பாடுகள்தான் இணையத்தின் தற்போதைய வைரல்.

வடிவமைப்பாளர்கள் இணையதளத்திலிருந்து டிசைனிங் ஐடியாக்களை எடுப்பது புதிதல்ல என்றாலும், மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் இதுபோன்ற வாக்கியங்களை, ப்ரீமியம் க்ளாஸ் மக்கள் வரை கொண்டுசேர்த்திருப்பது இதுவே முதல்முறை. இந்தப் புதுமையான கலெக்‌ஷனை வெளியிட்ட பிறகு, ``விசித்திரமான முரண்பாட்டைப் படைப்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. இணையதளத்தில் ஹாட் ட்ரெண்டில் இருக்கும் அனைத்து வாக்கியங்களையும் இங்கு நீங்கள் பார்க்கலாம். வித்தியாசமான உடைகளின் மீதிருக்கும் வாக்கியங்கள் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்" என்று அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார் ஸ்னோரன்.

உடைகள் என்பது, பலருக்குக் கவசம்; சிலருக்கு அடையாளம். அன்னை தெரசா முதல் எலிசபெத் ராணி வரை, பலரின் ஐகானிக் உருவங்களை வரையறுப்பது அவர்களின் உடைகள்தான். அந்த வரிசையில் இந்தக் காலத்து இளைஞர்களின் `மைண்ட் வாய்ஸ்களை' விலை உயர்ந்த ஆடைகளில் பதித்து ட்ரெண்ட்செட் செய்த இவர்களின் முயற்சி, இனிவரும் காலங்களில் ரெடிமேட் ஆடைகளிலும் அதிகளவில் காணலாம்.