Published:Updated:

`லக்மே ஃபேஷன் வீக்' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?! #LakmeFashionWeek2019

`லக்மே ஃபேஷன் வீக்' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?! #LakmeFashionWeek2019
`லக்மே ஃபேஷன் வீக்' ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?! #LakmeFashionWeek2019

நாம் அன்றாடம் அணியும் கேஷுவல் உடையிலிருந்து ஒரு மணிநேரம் அணியும் திருமண உடை வரை எண்ணிலடங்கா ஆடைகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. இதில், உள்ளூர் படைப்புகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகளும் அடங்கும். இந்திய வடிவமைப்பாளர்களை அடையாளம் காணவும், அவர்களின் படைப்புகளை உலகளவில் கொண்டு சேர்ப்பதுக்கும் உறுதுணையாய் இருப்பது, ஃபேஷன் ஷோக்கள்தான். அந்த வகையில், இந்திய ஃபேஷன் ஷோக்களில் என்றுமே முதன்மையாய் இருப்பது `லக்மே ஃபேஷன் வீக்'. இந்த ஆண்டின் கோடைக்கால ஃபேஷன் வீக்கில் அடி எடுத்து வைத்திருக்கும் இதில், அப்படி என்ன ஸ்பெஷல்?

`ஃபேஷன்', `ஸ்டைல்' போன்றவற்றில் இந்தியா முன்னோக்கிச் செல்கிறது என்பதை உலகறியச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு Fashion Design Council of India (FDCI) என்ற ஆலோசனைக் குழு `ஃபேஷன் ஷோ' ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. இதன் விளைவாக IMG மற்றும் சர்வதேச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து முதல்முதலில் ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.  இதன் `டைட்டில் ஸ்பான்சராக' லக்மே தேர்ந்தெடுக்கப்பட்டது.

1999-ம் ஆண்டு, ஆகஸ்ட் 17 முதல் 23 வரை, டெல்லியிலுள்ள தாஜ் பேலஸ் கன்வென்ஷன் சென்டரில், `லக்மே இந்தியா ஃபேஷன் வீக் (LIFW)' என்ற தலைப்பில் முதல் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. சர்வதேச சூப்பர் மாடலான நவோமி கேம்ப்பெல், பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், மலைக்கா அரோரா கான், அர்ஜுன் ராம்பால் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்த 33 ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். அதில், பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர்களான மனிஷ் மல்ஹோத்ரா, ரோஹித் பால், தருண் தாஹிலியாணி, ரித்து பெரி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். `தீப்வீர்', `விருஷ்கா' ஜோடிகளின் திருமண ஆடைகளை வடிவமைத்த சபியாச்சி முகர்ஜி, இந்த ஃபேஷன் ஷோ மூலம்தான் அறிமுகமானார். 7 நாள்கள் நடைபெற்ற இந்த ஃபேஷன் வீக் நிகழ்ச்சியை 15,000 பேர் கண்டுகளித்தனர். சர்வதேச பத்திரிகைகளும் இந்த நிகழ்வைப் பதிவு செய்தன.

FDCI-யுடன் ஐந்தாண்டு ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், மும்பையை நோக்கிச் சென்றது லக்மே. 2006-ம் ஆண்டு, `லக்மே ஃபேஷன் வீக்' என்று தலைப்பிட்டு, தன் முதல் ஃபேஷன் வீக்கை கொண்டாடியது லக்மே. இதுவே இன்றுவரை உலகளவில் கொண்டாடப்படுகிறது. `Gen Next’, `Emerging Designer’ போன்ற புதுமையான நிகழ்வுகளை அறிமுகப்படுத்தி, பல்வேறு புதிய வடிவமைப்பாளர்களைக் கண்டுபிடித்து, ஊக்குவித்து வருகிறது LFW. இதன்மூலம், ஆடை வடிவமைப்பில் சர்வதேச அளவில் முன்னேறிச் சென்றவர்களும் ஏராளம்.

இந்த ஆண்டின் முதல் ஃபேஷன் வாரம் சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, வித்தியாசமான `ராம்ப்பில்', பிரமாண்ட ஆடைகளை அறிமுகப்படுத்தி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா. பாலிவுட் நடிகை தபு மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர், குப்தாவின் `ஷோ டாப்பராக' வந்து அசத்தினர்.

இந்த ஆண்டு Gen Next நிகழ்வில், நான்கு புதிய ஆடை வடிவமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்கள் நால்வரும் பெண்கள் என்பது ஸ்பெஷல் என்றால், இவர்களில் மதுமிதா எனும் 40 வயதை தொட்ட வடிவமைப்பாளரின் என்ட்ரி கூடுதல் சிறப்பாக அமைந்தது. காரணம், பொதுவாகவே Gen Next கேட்டகரியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இந்த விதிமுறைகளை உடைத்து தன் தனிப்பட்ட டிசைன்களால் மக்களின் மனதை ஈர்த்துள்ளார் மது. தங்களின் லட்சியத்தை அடைவதற்கு வயது, எந்தத் துறையிலும் தடை இல்லை என்பதை இவர் உணர்த்தியிருக்கிறார்.

பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஃபேஷன் வீக்கில் கங்கனா ரனாவத், கவுரி கான், கரிஷ்மா கபூர், யாமி கவுதம் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஷோ டாப்பராக களமிறங்கவுள்ளனர்.