Published:Updated:

உலகெலாம் மெஹந்தி!

உலகெலாம் மெஹந்தி!
பிரீமியம் ஸ்டோரி
உலகெலாம் மெஹந்தி!

வாய்ப்புகள் ஆயிரம்பிரேமா வடுகநாதன்

உலகெலாம் மெஹந்தி!

வாய்ப்புகள் ஆயிரம்பிரேமா வடுகநாதன்

Published:Updated:
உலகெலாம் மெஹந்தி!
பிரீமியம் ஸ்டோரி
உலகெலாம் மெஹந்தி!
உலகெலாம் மெஹந்தி!

ம்பானி வீட்டு ஆடம்பரக் கல்யாணமாகட்டும், அடுத்த வீட்டு சிம்பிள் திருமணமாகட்டும்... அவசியம் இடம்பெறும் சம்பிரதாயம் மருதாணிவைப்பது. முற்போக்கு, வெஸ்டர்னைசேஷன் என்கிற பெயர்களில் நம் பாரம்பர்யத்துடன் தொடர்புடைய எத்தனையோ விஷயங்களை இழந்துவிட்டோம், மறந்துவிட்டோம். கல்யாணத்துக்கு வெஸ்டர்ன் டிரஸ் அணிவதிலிருந்து, கல்யாணத்துக்கு முதல் நாளே ரிசப்ஷன் வைப்பதுவரை எல்லாமே மாறிவிட்டன. ஆனாலும், தலைமுறைகள் கடந்தும் விட்டுக்கொடுக்காமல் தொடரும் ஒரு விஷயம் மெஹந்தி சடங்கு. மாடர்னாக வளர்ந்த பெண்களுமே கல்யாணத்துக்கு மெஹந்தி போட்டுக்கொள்ள மறுப்பேதும் சொல்வதில்லை.

நம்மூர் பெண்கள் இப்படி இருப்பதில் ஆச்சர்யமில்லை. வெளிநாட்டுப் பெண்களிடமும் மருதாணி மோகம் அதிகமிருக்கிறது. சென்னை அடையாறில் வசிக்கும் பிரேமா வடுகநாதனின் வீடே சாட்சி. சென்னையின் முக்கியமான மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்டான பிரேமாவிடம் மெஹந்தி பயிற்சி எடுப்பவர்கள் அத்தனை பேரும் அயல்நாட்டினர்!

‘`மெஹந்தி போட்டுக்கிறது நமக்கு ஒரு சடங்கு... பொழுதுபோக்கு. வெளிநாட்டில் பலருக்கோ அது பிழைப்பு. என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்ட பல பெண்களும் அவங்கவங்க நாடுகளில் மெஹந்தி ஆர்ட்டை முழுநேரத் தொழிலா பண்ணிட்டிருக்காங்க’’ - பெருமையோடு சொல்கிற பிரேமா, அடிப்படையில் அழகுக்கலை நிபுணர்.

உலகெலாம் மெஹந்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`கொஞ்சநாள் பியூட்டிஷியனா இருந்தேன். அதுல மெஹந்தி போடறதும் ஒரு பிரிவு. சௌகார்பேட்டையில வடஇந்தியப் பெண் ஒருத்தர்கிட்ட மெஹந்தி போடக் கத்துக்கிட்டேன். அதுல என் ஆர்வம் அதிகமானது. எதேச்சையா ஒரு நண்பர் வீட்டுக் கல்யாணத்துல மணப்பெண்ணுக்கு மெஹந்தி போட்டுவிட்டேன். அந்த டிசைன் ரொம்பப் பிடிச்சுப்போய் எல்லாரும் என்னைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. மாற்றுத் திறனாளிகளுக்கு மெஹந்தி பயிற்சிகள் கொடுத்திட்டிருந்தேன்.

எங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் மருதாணி வாசனை அடிக்கிறமாதிரி, என் கைகளிலும் எப்போதும் மெஹந்தி வாசமும் டிசைனும் இருக்கும். ஷாப்பிங் மாலில் ஜப்பானியப் பெண் ஒருத்தங்க என் கைகளைப் பார்த்து வியந்து போனாங்க. அது என்ன, ஏதுனு விசாரிச்சாங்க. மெஹந்தி ஆர்ட் பத்தி அவங்களுக்கு மினி லெக்சரே கொடுத்தேன். ‘எனக்கும் சொல்லித் தருவீங்களா’னு கேட்டாங்க. சும்மா விளையாட்டா கேட்கறாங்கன்னு நினைச்சா, அடுத்த நாளே வீட்டுக்கு வந்துட்டாங்க. மருதாணியைப் பத்தி எதுவுமே தெரியாத நிலையிலும் ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. அவங்க மூலமா எனக்கு நிறைய பாரின் ஸ்டூடன்ட்ஸ் வர ஆரம்பிச்சாங்க.

எங்க வீட்டுக்குப் பக்கத்துல இன்டர்நேஷனல் ஸ்கூல் இருக்கு. அங்கே குழந்தைகளைக் கொண்டு விட நிறைய பாரினர் அம்மாக்கள் வருவாங்க. என்னைப் பத்திக் கேள்விப்பட்டு கிளாசுக்கு வருவாங்க. குழந்தைங்களுக்கு ஸ்கூல் முடியற வரைக்கும் வெயிட் பண்ற நேரத்துல பயிற்சி எடுத்துப்பாங்க’’ என்கிறவருக்கு ஜப்பான், மெக்ஸிகோ, ஹங்கேரி, கொரியா, ஈராக், ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல நாடுகளிலிருந்தும் மாணவிகள் உண்டு!

வடஇந்தியர்களிடம் மட்டுமே வழக்கமாக இருந்த  மெஹந்தி பங்ஷன், இன்று தமிழ்க் குடும்பங்களிலும் ஊடுருவிவிட்டது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தார்கூட மெஹந்தி பங்ஷன் வைக்கிறார்கள்.

‘`அந்தக் காலத்துக் கல்யாணங்கள் மூணு நாள்களுக்கு விமரிசையா நடக்கும். இன்னிக்கு ஒரு நாள் கல்யாணமா மாறிடுச்சு. மண்டபம் கிடைக்கிறதுல சிக்கல், செலவுனு இதுக்கு நிறைய காரணங்கள். அப்படி மிஸ் பண்றதை மெஹந்தி பங்ஷன் மூலமா ஈடுகட்ட நினைக்கிறாங்க பலரும். இந்த பங்ஷனுக்கு வரும் எல்லாருக்கும் மெஹந்தி போடுவாங்க. கல்யாண தீம் சம்பந்தப்பட்ட ஆடல், பாடல், அமர்க்களப்படும்.

அந்தக் காலத்துல கல்யாணப் பெண்களுக்கு மெஹந்தி போட வலியுறுத்தினதுக்கு அழுத்தமான காரணம் வெச்சிருந்தாங்க. கல்யாணப் பெண்ணுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும். அதன் காரணமா உடல் சூடும் அதிகமாகும். மருதாணி வைக்கிறது மூலமா மன அழுத்தம் குறைவதோடு, உடம்பும் குளிர்ச்சியாகும்’’ - மருதாணி மகத்துவம் பகிர்கிறார்.

மெஹந்தி போட்டுக்கொள்ள விரும்பினால் உடனே சாத்தியம் இன்று. அனைத்து நகரங்களிலும் பிரதான ஏரியாக்களின் நடைபாதைக் கடைகளில் வரிசையாகக் காத்திருக்கும் மெஹந்திவாலாக்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களிடம் மெஹந்தி போட்டுக் கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை என்கிறார் பிரேமா.

‘`அவங்களுக்குனு குறிப்பிட்ட சில பேட்டர்ன் வெச்சிருப்பாங்க. திரும்பத் திரும்ப அதே டிசைன்களைத்தான் எல்லாருக்கும் போடுவாங்க. மிக்ஸ் பண்ற மெஹந்தியை அந்த வாரம் முழுக்க யூஸ் பண்ணுவாங்க. சிலர் நல்லா கலர் வரணும் என்பதற்காக கோன்களில் பாரா பினெலெனடையாமின் கலந்திருப்பாங்க. அது சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.  அதனால வீட்டுலயே மிக்ஸ் பண்ற மெஹந்தியைப் போட்டுக்கிறது பாதுகாப்பானது. வெளியில் ரெடிமெடு கோன்கள் வாங்கி உபயோகிச் சாலோ, வெளியாட்களிடம் மெஹந்தி போட்டுக்கிட்டாலோ, பேட்ச் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு பிறகு மெஹந்தி போட்டுக்கிறது பாதுகாப்பானது’’ - எச்சரிக்கிறவர், மெஹந்தி டிசைன்களில் இப்போதைய டிரெண்ட் என்னவென்றும் சொல்கிறார்.

உலகெலாம் மெஹந்தி!

‘`மொராக்கன் மெஹந்தி மொராக்கோ நாட்டில் ரொம்பப் பிரபலம். ஜியாமெட்ரிக்கல் பேட்டர்ன்ஸில் வரையப்படற இது அவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். அது இப்போ நம்ம ஊருக்கும் வர ஆரம்பிச்சிருக்கு. அடுத்தது மண்டலா டிசைன்ஸ். மண்டலா ஆர்ட்டை அடிப்படையாவெச்சு வரையப்படற டிசைன் இது.

கல்யாணப் பெண்களுக்கு புறங்கைப் பகுதிகளில் இந்த டிசைன்லதான் மெஹந்தி போடறோம். ஆர்ணமென்ட்டல் மெஹந்தி ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட். சிம்பிளா சொல்லணும்னா ஜிமிக்கி கம்மல் பேட்டர்ன். உள்ளங்கையிலேருந்து புறங்கைப் பகுதிக்கு வரும்படியான டிசைன் இது. பின்பக்கத்துல ஜிமிக்கி தொங்கற மாதிரி வரைவோம். கல்யாணப் பெண்கள் மத்தியில இதுதான் இப்போ ஹாட்.

சூடான் பெண்கள் ஸ்பெஷலான சூடானிக் மெஹந்தியும் இப்போ இங்கே வர ஆரம்பிச்சிருக்கு. அவங்க நிஜ மெஹந்தி பவுடரோடு கொஞ்சம் ஹேர் டை கலந்து கறுப்பா போடுவாங்க. அது ரொம்ப காலம் இருக்கும். பேங்கிள் ஸ்டைல் மெஹந்தியும் புதுசு. கைகளில் வளையல் அணிந்த மாதிரியும், செயினோடு சேர்த்த பிரேஸ்லெட் போட்டுக்கிட்ட மாதிரியும் தெரியும்.’’

ஒன்பது வருடங்களாக மெஹந்தி பயிற்சி வகுப்புகள் எடுக்கும் பிரேமா, ஸ்காட்லாந்திலும் ஜப்பானிலும் மெஹந்தி வொர்க்‌ஷாப் நடத்தியிருக்கிறார்.

``இந்தியன் ஆர்ட்டான இதை உலகம் முழுவதிலும் பிரபலமாக்கணும். அதுதான் என் ஆசை, லட்சியம் எல்லாம். மெஹந்தி போடறதை முழுநேரத் தொழிலாகச் செய்யலாம். கத்துக்கிறது ஈஸி. அதை எப்படி கிரியேட்டிவா, புதுப்புது ஐடியாக்களோடு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக முடியும்னு யோசிக்கிறதுலதான் இருக்கு அவங்க திறமையே...’’

பயிற்சிக்கு வந்திருக்கும் கொரியன் மாணவிகளிடம் அவர்கள் மொழியில் உரையாடிக்கொண்டே, பயிற்சியைத் தொடர் கிறார் பிரேமா. கோடுகளும் வட்டங்களும் உருவங்களாவதைக் காண்கிற அந்தப் பெண்களின் முகங்களில் மருதாணியை மிஞ்சும் சிவப்பும் சிரிப்பும்!

சாஹா,
படங்கள் : பா. காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism