Published:Updated:

அழகிப் போட்டியில் திருநங்கைக்கு என்னவெல்லாம் நடக்கும்? - பகிர்கிறார் ப்ரவீனா

திருநங்கைகளுக்கு ஹார்மோன் மாறுதல்கள் அடிக்கடி நிகழும் என்பதால் ஒரே மாதிரியான உடல் எடையை மெயின்டெயின் பண்றதும் கஷ்டம்.

அழகிப் போட்டியில்  திருநங்கைக்கு என்னவெல்லாம்  நடக்கும்? - பகிர்கிறார் ப்ரவீனா
அழகிப் போட்டியில் திருநங்கைக்கு என்னவெல்லாம் நடக்கும்? - பகிர்கிறார் ப்ரவீனா

ழக்கறிஞர், நடிகை, லேப் டெக்னீஷியன் என்று திருநங்கைகள் தங்களுக்கான தடைகளை உடைத்துக்கொண்டு வெளிவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் மாடலிங் துறையில் பயணிக்கும் ப்ரவீனா மாயா.

``எனக்குச் சொந்த ஊர் மதுரை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் உடம்பில் ஒருவிதமான மாற்றத்தை உணர்ந்தேன். பொம்பளை புள்ளைங்க மாதிரி வீட்டு வேலைகள் செய்றது, அம்மா அப்பா வீட்டில் இல்லாத நேரம் அம்மா புடவையைக் கட்டிப்பார்க்கிறதுனு நான் ஏன் அப்படி பிஹேவ் பண்றேனு எனக்கே தெரியாமப் போச்சு. என் குரல், என் நடை, உடை, பாவனை எல்லாம் மாறிப்போச்சு.

`டேய் அப்படி நடந்துக்காதடா’னு வீட்ல திட்டியும் அடிச்சும் பார்த்தாங்க. ஆனா, உடம்புல நடக்குற ஹார்மோன் மாற்றத்துக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க... என்னோட உடல், மன தடுமாற்றத்தையெல்லாம் கட்டுப்படுத்திகிட்டு நான் பி.டெக் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சேன். காலேஜ் படிச்ச நாலு வருஷமும் என் பெண் தன்மையை யார்கிட்டேயும் வெளிக்காட்டினதில்லை. ஆனா நிறைய கேலி கிண்டலுக்கு ஆளானேன்.

என்னோட செயல்பாடுகளில் தெரிஞ்ச மாற்றத்தை உள்வாங்கிக்கிட்ட அப்பா... எனக்கு கவுன்சலிங் கொடுக்க டாக்டர்கிட்ட அழைச்சு போனாங்க. ஆனா, டாக்டரோ உங்க பையன் நடவடிக்கையை முழு மனசோட ஏத்துக்கோங்கனு சொல்லி அவங்களைத் திருப்பி அனுப்புவார். ஒரு கட்டத்தில் உணர்வுகளை அடக்க முடியாம நான் பொண்ணாவே மாறிட்டேன். அதுக்கு அப்புறமாதான் என்னைப் புரிஞ்சுகிட்டு எங்கள் வீட்டில் என்னை ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. நீ எப்படி இருந்தாலும் எங்க புள்ளையா உயிரோடு இருக்கணும்னு ஆப்ரேஷன் பண்ண அனுமதிச்சாங்க.

 ஆப்ரேஷன் செஞ்சதுக்கு அப்புறமா முதல் முறையா `2015 மிஸ் கூவாகம்’ நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் பண்ணி அந்தப் பட்டத்தை ஜெயிச்சேன். எல்லாரும் என்னோட பேஸ்கட் சூப்பரா இருக்கிறதா சொன்னாங்க. அதனால அடுத்தடுத்து ஃபேஷன் ஷோல கலந்துகிற ஆர்வம் வந்துச்சு. அப்பதான் மத்த திருநங்கைகளோட அறிமுகம் கிடைச்சது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்னை. அவங்களையெல்லாம் பார்க்கிறப்ப என்னை முழுசா ஏத்துக்கிட்டு வீட்லேயே வாழ அனுமதிச்ச என் அப்பா அம்மாவை நினைச்சு ரொம்ப பெருமையா ஃபீல் பண்ணுவேன்’’ என்றார். 

மாடலிங்தான் என் ஏரியானு முடிவானதும்... மேக்அப், டிரெஸ், காஸ்டியூம்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். தொடர்ந்து அதுக்கான பயிற்சிகள்ல ஈடுபட ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து ஃபேஷன் ஷோல கலந்துகிட்டதால எனக்கு டிரெஸ் ஸ்பான்சர் கிடைக்க ஆரம்பிச்சாங்க. 2017-ம் வருஷம் திருநங்கைகளுக்கான `மிஸ் சென்னை’ போட்டில ரன்னர் அப், அதுக்கு அடுத்த வருஷம் `மிஸ் பாண்டிச்சேரி'னு வெற்றியைக் கடுமையான உழைப்பால என் பக்கம் தக்க வைச்சுக்கிட்டேன்.

திருநங்கைகளுக்கான மாடலிங் வாய்ப்பு தெரிய வந்தப்பதான் அந்த அதிர்ச்சியையும் நான் எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். அதாவது திருநங்கைகள்னா காசு கம்மியா கொடுக்கலாம் அப்படிங்கிற எண்ணத்துல எங்களை மாடலிங் ஃபீல்டுல ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் நான் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒத்துக்க ஆரம்பிச்சேன். உண்மையைச் சொல்லணும்னா பொண்ணுங்களைவிட திருநங்கைகளுக்கு நளின உணர்வு கொஞ்சம் அதிகம். அதனாலேயே ரேம்ப் வாக்ல சக பெண்களோட வாக் பண்றப்ப தாழ்வுமனப்பான்மை வந்துடும். அதையெல்லாம் உடைச்சு எறிஞ்சுதான் இந்த ஃபீல்டு நாங்க நிலைச்சு நிற்க வேண்டியதிருக்கு’’ என்றவர், திருநங்கைகளுக்கு மாடலிங் மற்றும் உடலில் ஏற்படும் சிக்கல் பற்றிப் பகிர்ந்தார்.

``திருநங்கைகளுக்கு ஹார்மோன் மாறுதல்கள் அடிக்கடி நிகழும். அதனாலேயே உடல் எடை ஒரே மாதிரி இருக்காது. திடீர்னு கூடும், திடீர்னு குறையும். அதை மெயின்டெயின் பண்றது ரொம்ப கஷ்டம். எனக்கு 2018-க்குப் பிறகு உடல் எடை கூடியிருச்சு. இப்ப அதைக் குறைக்கிறதுக்காக ஜிம் போய் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்’’ என்கிறவர் 2020-ம் ஆண்டு நடக்கும் மிஸ் டிரான்ஸ்குயின் இந்தியா போட்டிக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.

முன்னேறி வாருங்கள்!