லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

ஆடைகள் பராமரிப்பு ஆலோசனைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடைகள் பராமரிப்பு ஆலோசனைகள்

ஹேப்பி குளோத்திங்!

இன்று மக்கள் அதிக பணத்தை ஆடைகளுக்காகச் செலவழிக்கின்றனர். அவ்வளவு பணம் போட்டு எடுக்கும் துணிகளை முறையாகப் பராமரிப்பதுதான், கொடுத்த பணத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

‘போன நியூ இயருக்கு வாங்கின மூணு புடவையும் இந்த நியூ இயருக்குள்ல அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடுச்சே...', `நாலாயிரம் ரூபாய்க்கு பொண்ணுக்கு வாங்கின லெஹெங்காவை அவ நாலு தடவைகூட போடல, பத்தாம போயிடுச்சுங்க...' - பழைய ஆடைகளை ரீடிசைன் செய்து நியூ லுக்குக்கு மாற்றவும், சைஸ் ஆல்டரேஷனுக்கும் எக்கச்சக்க டிப்ஸ் சொல்கிறார் ஃபேஷன் டிசைனர் பிரியா ரீகன்.

‘என்னோட ஒரு பட்டுப்புடவையில மடிப்புக்கு மடிப்பு துணி இத்துப்போயிருச்சு... இதை எப்படித் தவிர்க்கிறது...’ - என்று கேட்பவர்களுக்கு இன்னும் பல பட்டுப்புடவை பராமரிப்பு ஆலோசனைகளை வழங்குகிறார் ஃபேஷன் டிசைனர் கீதா.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

‘இந்த டிசைனர் டிரஸ்ஸை எல்லாம் எப்படித்தாங்க மெயின்டெய்ன் செய்றது?’ - நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளைச் சொல்கிறார் ஃபேஷன் டிசைனர் மற்றும் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சியாளர் சஜ்னா.

‘குழந்தைங்களோட சருமத்தை டிரஸ் சிரமப்படுத்தாம இருக்க என்னவெல்லாம் செய்யணும்... பெண்களுக்கான உள்ளாடைகள் விஷயத்துல எதையெல்லாம் கவனிக்கணும்...’ - பொதுநலன் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா சொல்லும் அறிவுரைகள் முக்கியமானவை.

‘சலவை செய்றதுலகூட இத்தனை விஷயங்கள் இருக்கா...’ - பல தகவல்களை இல்லத்தரசி மகாலட்சுமியிடம் தெரிந்துகொள்ள நீங்கள் ரெடியா?

‘இஸ்திரி பண்ணுறப்போ சொதப்பலாவே முடியுதே ஏன்...’ - தீர்வுக்கு இல்லத்தரசி ஷோபனா சொல்லும் செக்லிஸ்ட் சிறப்பு.

‘வார்ட்ரோப்ல துணியை கலையாம அடுக்கிவெச்சு எடுத்துப் பயன்படுத்துற அந்த மேஜிக்தான் என்னன்னு தெரியல...’ - சீக்ரெட்கள் சொல்கிறார் இல்லத்தரசி உஷாதேவி.

இந்த இணைப்பிதழில் உங்களுக்காக நாங்கள்

தேடித் தேடித் தொகுத்திருக் கும் ஆடைகள் பராமரிப்பு ஆலோசனைகளை நீங்கள் பின்பற்ற ஆரம்பிக்கும்போது, உங்கள் ஆடைகளும் வார்ட் ரோபும் உங்களுக்கு நிச்சயம் சொல்லும்... ‘தேங்க்ஸ்’!

பழைய டிரஸ்ஸுக்குக் கொடுக்கலாம் புதிய லுக்! - ஃபேஷன் டிசைனர் பிரியா ரீகன்

ஆசை ஆசையாக வாங்கிய பல புடவைகள், டிரஸ்கள் வார்ட்ரோபில் வருடங்களாக உறங்கிக் கொண்டிருக்கின்றனவா... ‘ஆனா அதெல்லாம் ஓல்டு ஃபேஷன் ஆகிடுச்சே’ என்கிறீர்களா... அதில் சின்னச் சின்ன வேலைப்பாடுகள் செய்து நியூ லுக்குக்குக் கொண்டு வர முடியும்.

பிரியா ரீகன்
பிரியா ரீகன்

புடவை ரீடிசைன் ஐடியாக்கள்

 • புடவைகளில் ஃபிரில்போல ரஃபில் (Ruffle) வைப்பது இப்போது டிரெண்ட். உங்கள் பழைய புடவைக்கு நியூ லுக் கொடுக்க, புடவையில் இருக்கும் பார்டரை எடுத்துவிட்டு, பார்டர் இருந்த இடத்தில் ரஃபில் வைத்து தைத்துவிட்டால் டிரெண்டில் கெத்துக் காட்டலாம்.

 • பழைய புடவைகளில் அங்கங்கே ஸ்டோன்கள் ஒட்டுவது, ஃபேப்ரிக் பெயின்டிங், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்வது எனக் கொஞ்சம் மெனக்கெட்டால் புதிய டிசைனில் பழைய புடவை தயார்.

 • வீட்டில் அம்மா காலத்துப் புடவைகள் நிறைய இருக்கின்றனவா? அந்தப் புடவையில் மேக்ஸி ஆடை தைத்து, ஒரு சில்க் துப்பட்டாவை மேட்ச் செய்தால் அசத்தலாக இருக்கும்.

 • செமி சில்க், அபூர்வா பட்டு, வெண்பட்டு என ஒவ்வொரு ஃபேஷனுக்கும் ஒரு புடவை எடுத்து, பயன்படுத்தாமல் அப்படியே இருக்கிறதா... இந்த ரகப் புடவைகளில் ஸ்கர்ட் - கிராப் (Crop) டாப் தைக்கலாம். அதை செட்டாகப் பயன்படுத்தாமல், அந்த ஸ்கர்ட்டுக்கு வேறு ஒரு கிராப் டாப், அந்த கிராப் டாப்புக்கு வேறு ஒரு ஸ்கர்ட் என்று மிக்ஸ் மேட்ச் செய்தால் இன்னும் சூப்பர்.

 • பட்டுப்புடவையின் உடல் பகுதியில் ஸ்கர்ட் தைத்து, முந்திப் பகுதியைத் தாவணியாக்கி, ஒரு கிராப் டாப்புடன் மேட்ச் செய்தால் டிரெண்டுக்கேற்ற லெஹெங்கா தயார்.

 • அனார்கலி டாப்கள் தைக்க சுங்குடி சேலைகள் பெஸ்ட் தேர்வு. புடவையில் பார்டர் இல்லையென்றால், அல்லது அது பிடிக்கவில்லை என்றால் புதிய பார்டர் அட்டாச் செய்து கொள்ளலாம். பொதுவாக, அம்மாவும் மகளும் ஒரே மாதிரி டிரஸ் செய்துகொள்ளும் டிரெண்ட் இங்கு ஹிட். இரண்டு சுங்குடி புடவைகள் இருந்தால் அம்மாவுக்கும் மகளுக்கும் அழகான அனார்கலி டாப் ரெடி.

 • இப்போது புடவைகளுக்கு பெல்ட் அணிந்து கொள்வதுதான் டிரெண்ட். எனவே பழைய பட்டுப்புடவைக்கு டிரெண்டியான வெஸ்டர்ன் பெல்ட் அணிந்து பாருங்கள்... நீங்கள்தான் டிரெண்ட் செட்டர்.

 • சிந்தடிக், கிரேப் சில்க் புடவைகள் நிறைய இருக்கிறது என்பவர்கள் அதை பலாஸோ பேன்ட் , பட்டர்ஃப்ளை பேன்ட், சராரா எனத் தைத்துக்கொண்டால் டிரெண்டியான பிரின்டட் பேன்ட்கள் தயார்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

மேட்சிங்... மெட்டீரியல்!

பழைய புடவைகளில் ஸ்கர்ட், அனார்கலி, சல்வார் என்று தைக்கும்போது, அதற்கான டாப், பேன்ட் போன்றவற்றை அதற்குப் பொருத்தமான மெட்டீரியலில் அணிய வேண்டும். உதாரணமாக, காட்டன் சல்வாருக்கு சின்தடிக் பேன்ட்டை தவிர்த்து, காட்டன் பேன்ட்டையே மேட்ச் செய்ய வேண்டும். பட்டு ரகத் துணிகளில் ஸ்கர்ட் தைக்கும்போது காட்டன் டாப்பைவிட, சில்க், ரா சில்க் எனப் பட்டு ரகத் துணிகளையே டாப் புக்குத் தேர்ந்தெடுக்கவும்.

‘புடவை பழசு, பிளவுஸ் புதுசு...’ டெக்னிக்!

 • பழைய புடவையானாலும் பிளவுஸில் வெரைட்டி காட்டினால் நியூ லுக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? டார்க் நிற மெட்டீரியல்களில் ஹை நெக், போட் நெக் என விதவிதமான டிசைன்களில் சில பிளவுஸ்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பழைய புடவைக்கு இது போன்ற பிளவுஸ்களை மேட்ச் செய்து அணியும்போது, புடவையின் மைனஸ் எல்லாம் மறைந்தேபோகும். பிளவுஸின் அட்ராக்‌ஷனில் ‘புதுசாயிருக்கே’ கமென்ட்கள் கிடைக்கும்.

 • ‘ஆசையா அத்தனை பட்டுப்புடவை வாங்கினேன்... இப்போ பட்டுப்புடவை கட்டுறதே பழைய டிரெண்ட் ஆகிடுச்சே’ என்பவர்கள், அந்தப் பட்டுகளுக்கு புதிய பிளவுஸ்கள் தைத்து, எல்போ லெங்த், பட்டர்ஃப்ளை என ஸ்லீவ்களில் வித்தியாசம் காட்டுங்கள்... ‘வாவ்’ என்பார்கள்.

 • பிளவுஸின் உயரத்தை இடுப்புவரை இறக்கித் தைத்து, புடவையை ஒரு ஜீன்ஸ் பேன்ட் அல்லது ஜெகின்ஸுடன் ‘பேன்ட் புடவை’ யாக உடுத்தி, ஆக்ஸிடைஸ்டு நகைகளை அணிந்தால், ஹாட் டிரெண்ட்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

டிரெண்டில் அப்டேட் ஆக..!

அதிக விலை கொடுத்து புடவைகளை வாங்கி அடுக்குவதைவிட, விதவித மெட்டீரியல்களில், டிசைன்களில் பிளவுஸ் தைத்து வைத்துக்கொண்டால் டிரெண்டில் அப்டேட்டடாகக் காட்டிக்கொள்ள முடியும்.

சல்வார், குர்திகளுக்கும் கொடுக்கலாம் நியூ லுக்!

‘புடவைகளுக்கு மட்டும்தான் நியூ லுக் கொடுக்க முடியுமா?’ என்ற உங்களின் கேள்விக்குப் பதில் இதோ....

 • பழைய குர்திகளை மடிப்புகள் நீங்கள் இஸ்திரி செய்துவிட்டு, இப்போது இருக்கும் டிரெண்டுக்கேற்ப பேட்ச் வொர்க் அல்லது பெயின்டிங் வொர்க் செய்யலாம்.

 • சல்வார், குர்திகளுக்கு டிரெண்டுக்கேற்ப உங்கள் பேன்ட் தேர்வுகளை மாற்றிக்கொண்டே இருப்பதும் நல்ல யோசனை.

 • நிறம் சற்று மங்கிய குர்தாக்களுடன் பளீர் நிற ஓவர் ஜாக்கெட் (Over Jacket), அல்லது ஓவர்லே (Overlay) அணிந்து, ஜீன்ஸ், பலாஸோ பேன்டுடன் மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.

 • சல்வார்கள் பழையதானாலும் அவற்றின் துப்பட்டாக்களை பத்திரப்படுத்தி வைத்தால் எந்த ஆடைக்கும் மிக்ஸ் மேட்ச் செய்துகொள்ள முடியும்.

 • மிரர் வைத்த சல்வார்களில் பழைய மிரர்கள் மங்கிப்போய் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு புது மிரர் அல்லது மிரர் இருந்த இடத்தில் ஸ்டோன் வேலைப்பாடுகள், எம்ப்ராய்டரி எனச் செய்தால் மீண்டும் பளிச் லுக் கிடைக்கும்.

 • பழைய ஸ்கர்ட்கள் நிறைய இருக்கின்றன என்பவர்கள் ஸ்கர்ட்களுக்கு கலம்காரி, புரோகேட், காட்டன், ரா சில்க் போன்ற மெட்டீரியல்களில் கான்ட்ராஸ்ட் நிறங்களில் கிராப் டாப் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். அவற்றை வெவ்வேறு டிசைன்களில் ஸ்லீவ், நெக் டிசைன் என வடிவமைத்துக் கொண்டால் குறைந்த செலவிலேயே டிரெடிஷனல், டிரெண்டி என நிறைய லுக் கொடுக்க முடியும். அதேபோன்று ஸ்கர்ட் மற்றும் பிளவுஸ் அணிந்து மெல்லிய ஓவர்லே பயன்படுத்தினால் நார்த் இந்தியன் லுக்கில் அசத்தலாம்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

அக்சஸரீஸ் ஹைலைட்!

பழைய புடவைகள், ஆடைகளை ரீடிசைன் செய்து உடுத்தும்போது கம்மல், வளையல், நெக்பீஸ் என்று அக்சஸரீஸ்களுக்கு அதிக கவனம் கொடுத்தால் ஹைலைட்டாக அமையும்.

குழந்தைகள் ஆடைகள்... சைஸ் ஆல்டரேஷன்!

 • பெண் குழந்தைகளுக்குப் பட்டுப்பாவாடை தைக்கும்போது பெட்டிகோட் வைத்துத் தைத்திருப்பீர்கள். குழந்தை வளர்ந்ததும் பெட்டிகோட் பகுதி இறுக்கமாகி பயன்படுத்த முடியாமல் போய்விட்டால், பெட்டிகோட்டை எடுத்துவிட்டு, பாவாடையில் நாடா அல்லது எலாஸ்டிக் வைத்து தைத்துக்கொள்ளலாம். கலக்கலாக இருக்கும்.

 • ஆண் குழந்தைகளுக்கு பேன்ட் உயரம் போதாமல் போனால், அந்த இடுப்பளவு பெண் குழந்தைகளுக்குச் சரியாக இருக்கும் எனில், அதை 3/4 பேன்டாக வெட்டித் தைத்து அவர்களைப் பயன்படுத்த வைக்கலாம்.

 • மேக்ஸி, லெஹெங்கா என ஆயிரங்கள்போட்டு வாங்கிய உடைகளை குழந்தைகள் வருடத்தில் 4, 5 முறைதான் போட்டிருப்பார்கள். அதற்குள் வளர்ந்து உயரம் போதாமல் போயிருக்கும். அப்படியான விலையுயர்ந்த ஆடைகளில், அந்த மெட்டீரியலுக்கேற்ற ரஃபில் வைத்துத் தைத்து உயரத்தை அதிகரித்து அவர்களை உடுத்த வைக்கலாம். லெஹெங்காவின் சோலி இறுக்கமாகி, உயரம் குறைந்திருந்தால் அதேபோன்ற மெட்டீரியலில் புது சோலி தைத்துக்கொள்ளலாம்.

பட்டுப்புடவைகளின் பொலிவு குறையாமல் இருக்க, ஆயுள் அதிகரிக்க..! - ஃபேஷன் டிசைனர் கீதா

பட்டுப்புடவை பெண்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. பல ஆயிரங்கள் செலவழித்து எடுக்கும் பட்டை பராமரிக்க கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். என்னவெல்லாம் செய்ய வேண்டும்... பார்ப்போம்...

கீதா
கீதா
 • பட்டுப்புடவையை உடுத்திய பிறகு, அப்படியே மடித்து வைக்கக் கூடாது. வியர்வையின் ஈரப்பதம் புடவையில் இருந்தால் ஜரிகை சீக்கிரம் கறுத்துவிடும். எனவே, புடவையை நன்கு விரித்துவிட்டு ஃபேன் காற்றில் உலர்த்தவும். சிலர் வியர்வை வாடை நீங்க புடவையில் பெர்ஃப்யூம் அடிப்பார்கள். அதிலுள்ள கெமிக்கல்களால் புடவையின் ஜரிகை வீணாகிவிடும் என்பதால் அதைத் தவிர்த்து புடவையை நிழலில் உலர்த்துவதே சிறப்பானது.

 • உடுத்திய பட்டை உலர்த்திய பின்னர், இஸ்திரி செய்து வார்ட்ரோபில் வைக்கக் கூடாது. ஏனெனில், இஸ்திரி செய்த மடிப்புகளில் பட்டு நூல் அழுந்தி உடைந்து, மடிப்புகளில் புடவை விட்டுப்போகலாம். எனவே, கைகளால் மடித்து வைத்தாலே போதுமானது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புடவையை மாற்றி மடித்து வைக்க வேண்டும். பிறகு, எப்போது அந்தப் புடவையை உடுத்துகிறீர்களோ, அப்போது இஸ்திரி செய்துகொள்ளலாம்.

 • பல தடவை உடுத்திய பட்டு என்றால், துவைப்பதைத் தவிர்த்து, டிரை வாஷுக்குக் கொடுக்கலாம். பட்டுப்புடவையை எக்காரணம் கொண்டும் தண்ணீரில் ஊறவைத்துத் துவைக்கக் கூடாது, ஜரிகை கறுத்து புடவை வீணாகிவிடும்.

 • டிரை வாஷ்ஷுக்குக் கொடுக்கும்போது, பார்டர், முந்தியில் உள்ள நிறங்கள் புடவையின் உடம்புப் பகுதியில் இறங்கிவிடக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லிக் கொடுங்கள்.

 • பட்டுப்புடவை வாங்கிய உடனேயே பார்டரின் நிறத்தில் ஃபால்ஸ் வைத்து தைத்துவிட்டால், உடுத்தும்போது அழகாக இருக்கும் என்பதுடன் பார்டர் பகுதி அழுக்காகாமலும், நூல் சேதமடையாமலும் இருக்கும்.

 • பட்டுப்புடவையில் அதிக ஊக்குகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதனால் சின்னச் சின்ன ஓட்டைகள் விழுந்து புடவையை சேதப்படுத்திவிடும். அவசியம் எனில் புடவை களுக்கான க்ளிப்களைப் பயன்படுத்தலாம்.

 • பட்டுப்புடவையில் கறை படிந்துவிட்டால் அந்த இடத்தில் சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தி சுத்தம் செய்யக் கூடாது. ஒரு பாத்திரத்தில் சில பூந்திக்கொட்டைகளை ஊறவைத்து, அந்த நீரை வடித்து, அதை வெண்ணிற காட்டன் துணியில் லேசாக நனைத்தெடுத்து, கறையைத் துடைத்து எடுக்கவும். பின்னர் புடவையை நன்றாக உலர்த்தி மடித்து வைக்கவும்.

 • பட்டுப்புடவைகளுக்கான பிளவுஸ் தைக்கும்போது மலிவான லைனிங் துணியைப் பயன்படுத்தினால் அதன் சாயம் பிளவுஸில் இறங்கி பாழாக்கிவிடும். எனவே, தரமான காட்டன் துணியையே லைனிங்குக்குப் பயன்படுத்தவும்.

 • பட்டுப்புடவைகளை இரும்பு பீரோவில் வைப்பதைவிட மர பீரோ அல்லது சூட்கேஸில் வைப்பதே நல்லது. வாய்ப்பில்லாதவர்கள் புடவையை மடித்து அதன் மேல் ஒரு காட்டன் துணியைச் சுற்றியோ, துணிப்பையில் வைத்தோ பத்திரப்படுத்தலாம். பட்டுப்புடவைகளுக்கு மேல், அதிக எடையுள்ள பொருள்களை வைக்கக் கூடாது. வைத்தால் அந்த அழுத்தத்தில் புடவை மடிப்புகளில் நூல் சேதமடைய வாய்ப்புள்ளது.

 • பட்டுப்புடவையை வீட்டில் இஸ்திரி செய்யும்போது குறைந்த அளவு ஹீட் வைத்து, புடவையின் மீது ஏதேனும் ஒரு துணியை விரித்து இஸ்திரி செய்யவும்.

 • பட்டுப்புடவைகள் வைக்கும் ஷெல்ஃபில் பூச்சிகள் அண்டாமல் இருக்க நாப்தலின் உருண்டைகளை நேரடியாகப் போடாமல் ஒரு துணியில் கட்டிப்போட வேண்டும். சில கிராம்புகளையும் துணியில் கட்டி வைக்கலாம்.

 • புடவையில் எங்கேனும் ஜரிகை பிரிந்துவந்தால், அந்த நூலை கத்தரித்துவிட்டு, புடவையைப் பின்புறமாகத் திருப்பி அந்த நூல் மேலும் பிரியாமல் முடிச்சிட்டுக்கொள்ளவும்.

ஒரிஜினல் பட்டு... எப்படிக் கண்டறிவது?

முன்பெல்லாம் பட்டு என்றாலே அதிக கனத்துடன் இருக்கும். அதன் ஜரிகையின் நிறத்தை வைத்தே ஒரிஜினல் பட்டுதானா என்பதைக் கண்டறிந்துவிடலாம். ஆனால், தற்போது பெண்களின் வசதிக்காக லைட் வெயிட் பட்டு, செமி சில்க், சாஃப்ட் சில்க் என நிறைய வகைகள் வந்துவிட்டன. ஜரிகையிலும் தங்கம், வெள்ளி, செம்பு என வகைகள் உள்ளன. இந்நிலையில், ஒரிஜினல் பட்டை எப்படிக் கண்டறிவது...

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

பட்டுப்புடவையின் முந்தியிலிருக்கும் ஒரு நூலை மட்டும் தனியாக எடுத்து நெருப்பில் காட்டினால், முடியை நெருப்பில் இட்டால் வருவதுபோன்ற ஒரு வாசனை வந்தால், அது ஒரிஜினல் பட்டு. இப்படியெல்லாம் ஜவுளிக்கடையில் எப்படிச் செய்துபார்ப்பது என்ற உங்கள் கேள்வி கேட்கிறது. கடைகளில் இருக்கும் லைட்டின் வெளிச்சத்தில் புடவையைப் பார்க்காமல் வெளியில் எடுத்து வந்து ஜரிகையின் நிறத்தை ஒருமுறை செக்செய்து கொள்ளலாம். அவசியம் எனில், ஒரிஜினல் பட்டைக் கண்டறிய பட்டு கூட்டுறவு சங்க கடைகளில் உள்ள ஆய்வகங்களில் புடவையைக் கொடுத்து செக் செய்து கொள்ளலாம். ஜரிகை இல்லாமல் முழுவதும் பட்டு நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்குவது நல்ல பரிந்துரை.

வேலைப்பாடு ஆடைகளா... இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்! - ஃபேஷன் டிசைனர் மற்றும் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சியாளர் சஜ்னா

எம்ப்ராய்டரி, ஸ்டோன்வொர்க் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை அணியும்போதும், அதைப் பத்திரப்படுத்தும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் கொடுத்தே ஆக வேண்டும்.

சஜ்னா
சஜ்னா

ஒரு நூல் பிரிந்தால்...

 • வேலைப்பாடு ஆடைகளில் ஆபரணங்கள் மாட்டிக்கொண்டால் பிடித்து இழுத்து அதை விடுவிக்கக் கூடாது. மெதுவாக எடுத்து விட வேண்டும். பொதுவாக, இந்த வேலைப்பாடுகள் எல்லாமே சங்கிலிபோன்று ஒரே நூலை மையமாகக் கொண்டே அமைக்கப்படும். அதில் ஓர் இடத்தில் வேலைப்பாடு பிரிந்தாலும் அந்த வரிசை முழுவதும் பாதிப்பு அடைந்துவிடும் என்பதால் கவனமாக இருங்கள்.

 • ஒவ்வொரு முறை அணியும்போதும், எங்கேனும் நூல் பிரிந்திருக் கிறதா என்பதை செக் செய்து சரிசெய்துவிடவும்.

 • வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை வெயிலில் காயப்போட்டால், அதில் இருக்கும் கலர், சில்க் நூல் மற்றும் ஸ்டோன்கள் சீக்கிரமே வெளுத்துவிடும் என்பதால் எப்போதும் நிழலிலேயே உலர்த்துங்கள்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!
 • ஜர்தோஸி, குந்தன், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்த துணிகளை அடிக்கடி துவைக்கக் கூடாது. உடுத்திய ஆடையை பின்புறமாகத் திருப்பி ஒரு நாள் முழுவதும் நிழலில் உலர்த்துங்கள். பின் மிதமான சூட்டில் இஸ்திரி செய்து வையுங்கள்.

 • வேலைப்பாடுகள் செய்த ஆடைகளை ஊறவைத்துத் துவைக்கக் கூடாது; பிரஷ் பயன்படுத்தக் கூடாது.

 • ஸ்டோன் போன்ற அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை துவைக்கக் கூடாது, டிரை வாஷ்தான் செய்ய வேண்டும்.

 • ஸ்டோன் வேலைப்பாடுகள் இல்லாத, சில்க் த்ரெட் நூலினால் டிசைன் செய்யப்பட்ட ஆடைகள் எனில் லிக்விட் சலவை சோப் பயன்படுத்தி பிரஷ் பயன்படுத்தாமல் துவைத்து, நிழலில் காயவைக்கலாம்.

 • சாஃப்ட் சில்க் மெட்டீரியல்கள் சீக்கிரமே தொய்ந்துவிடும் என்பதால் அதில் வேலைப்பாடுகள் செய்வதைத் தவிர்த்து விடவும்.

 • நுட்பமான, மெல்லிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை மற்ற ஆடைகளுடன் சேர்த்து மடித்து வைக்கும்போது, அவற்றை எடுக்கும் போது தவறுதலாக ஏதேனும் இழுபட்டு நூல் பிரிந்துவிட வாய்ப்பு இருப்பதால், அவற்றை துணிப்பைகளில் சுற்றி வைக்கவும்.

 • நூல் அல்லது ஸ்டோன்கள் ஏதேனும் ஓர் இடத்தில் பிரிந்து வருகிறது எனில் ஃபேப்ரிக் க்ளூ பயன்படுத்தி அந்த இடத்தை மட்டும் ஒட்டிவிடலாம்.

 • சில ஆடைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டோன்கள் விழுந்துவிட்டால், அதை எடுத்து பத்திரப்படுத்தி ஒட்டிக் கொள்ளலாம். அல்லது அதேபோன்ற ஸ்டோன்களை கடையில் வாங்கிப் பயன்படுத்தலாம். பெரிய, ஹைலைட்டிங் ஸ்டோன்கள் எனில், விழாமல் இருக்க ஊசி, நூல் கொண்டு ஒரு தையல் இட்டுக் கொள்ளலாம்.

 • ஆடை தரையில் இழுபடாமல் இருக்க ஹீல்ஸ் அணிந்துகொள்ளலாம். சாப்பிடும்போது ஒரு துணியை ஆடை மீது விரித்துக்கொண்டு சாப்பிடலாம்.

 • உடுத்திய ஆடையை அப்படியே போட்டு வைக்காமல் ஹேங்கரில் கோத்து விட்டால் பாதுகாப்பாக இருக்கும்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

வியர்வையால் பாழாகாமல் இருக்க...

வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ்களை அதிக விலைகொடுத்து வாங்கியிருப்போம். அதிகமான வியர்வை காரணமாக அதில் அக்குள் பகுதி சீக்கிரமே நைந்து, கிழிந்து போக வாய்ப்பு உண்டு. எனவே, விலையுயர்ந்த பிளவுஸ் அல்லது ஆடைகளை உடுத்தும்போது அண்டர் ஆர்ம்ஸ் பேட் பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகளின் ஆடைகள், உள்ளாடைகள்... கவனிக்க! - பொதுநலன் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா

ஆனந்தப்பிரியா
ஆனந்தப்பிரியா

குழந்தைகளின் ஆடைகளைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, அவர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும். இன்னொன்று, பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

 • குழந்தைகளுக்கு எம்ப்ராய்டரி, சமிக்கி போன்ற வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளாகப் பார்த்து வாங்க வேண்டும்.

 • கைக்குழந்தை சிறுநீர் கழித்த ஆடைகளை அவ்வப்போது துவைத்துவிட வேண்டும். இல்லையெனில், கிருமித்தொற்று உண்டாகலாம்.

 • குழந்தைகளின் ஆடைகளைத் தனியாக ஊறவைத்துத் துவைக்கவும்.

 • குழந்தைகளின் ஆடைகளுக்கு பவர்ஃபுல் டிடர்ஜென்ட் சோப்பு களையும் வாசனை திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது.

 • துணி நாப்கின்களைத் துவைத்த பின்னர் வெயிலில் காயவைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்.

 • உல்லன் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் போன்றவற்றைத் தினமும் துவைக்கவில்லை என்றாலும், வெயிலில் காயவைத்து எடுத்தே பயன்படுத்த வேண்டும்.

 • கைக்குழந்தைகளுக்குப் புத்தாடையை துவைத்த பின்னரே அணிவிக்க வேண்டும்.

 • குழந்தைக்கு மூன்று, நான்கு ஆடைகள் ஒரே நேரத்தில் எடுத்தால், ஓர் ஆடையை குழந்தையின் அடுத்த சைஸில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

 • குழந்தைகளுக்கு பாலியஸ்டர், இறுக்கமான ஆடைகள் தவிர்த்து சற்று தளர்வான காட்டன் ஆடைகளைப் பயன்படுத்துவது நல்லது.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

கறை நல்லதல்ல!

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கைத்துண்டுகள், டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தக் கற்றுக்கொடுங்கள். அதேபோல பேனா, பெயின்ட்கள் போன்றவை ஆடையில் படாமல் பார்த்துக்கொள்வதற்கும் கற்றுக்கொடுத்து, அதைப் பின்பற்ற வலியுறுத்துங்கள். இயல்பிலேயே அவர்களுக்கு ஆடையின் மேல் அக்கறையை ஏற்படுத்த முடியும்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

உள்ளாடைகள்... நான்கு மாதங்களே ஆயுள்!

 • ஓர் உள்ளாடையை அதிகபட்சம் நான்கு மாதங்கள்வரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

 • எலாஸ்டிக் தளர்ந்துபோன உள்ளாடைகளைப் பயன்படுத்துவதால் பலனில்லை என்பதால் டிஸ்போஸ் செய்துவிடவும்.

 • உள்ளாடைகளை எப்போதும் தனியாகத் துவைத்து, வெயிலில் காய வைக்கவும்.

 • மாதவிடாய் நாள்கள் பயன்பாட்டுக்கு ஒரு செட் பேன்டிகளை தனியாக வைத்துக்கொள்ளவும்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

துணிகளைத் துவைக்கும்போது... - இல்லத்தரசி மகாலட்சுமி

சலவை செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருந்தால், ‘அய்யோ புது புடவை சாயம் போனதால வீணா போச்சே’ போன்ற புலம்பல்களைத் தவிர்க்கலாம்.

 • புது ஆடை என்றால் முதன்முறை துவைக்கும்போது சோப்பு, சலவைத்தூள் பயன்படுத்தாமல், ஊற வைக்காமல் வெறும் தண்ணீரில் அலசி காய வைக்கவும்.

 • சாயம்போகும் ஆடைகளை வெயிலில் காயவைத்தால் நிறம் வெளுத்து பழைய துணிபோல ஆகிவிடும் என்பதால் நிழலில் உலர்த்துங்கள். சாயம் போகும் ஆடைகளை ஊற வைக்காமல் துவைப்பதும் முக்கியம்.

 • வெள்ளை ஆடைகளை சாயம்போகும் ஆடைகளுடன் சேர்த்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும். வெள்ளை ஆடைகள் கூடுதல் பளிச் ஆக, வெந்நீரில் வாஷிங் சோடாவை சேர்த்துக் கலக்கி, அதில் 10 நிமிடம் ஊற வைத்துத் துவைக்கவும்.

 • எந்த வகை துணியாக இருந்தாலும் அரை மணிநேரத்துக்கு மேல் ஊறவைக்கக் கூடாது.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!
 • அதிக அழுகுள்ள துணிகளை அடித்துத் துவைக்கும்போது பட்டன்கள் அறுந்துபோகலாம், துணியும் விரைவில் பழையதுபோல் ஆகிவிடலாம். எனவே, அழுக்கு ஆடைகளை அடித்துத் துவைப்பதற்குப் பதில் லேசாக பிரஷ் போடலாம்.

 • கிரீஸ் ஆடையில் பட்டுவிட்டால் அந்த இடத்தில் முகத்துக்குப் பயன்படுத்தும் பவுடரை சிறிது தேய்த்து, பின்னர் வாஷிங் சோடா சேர்ந்த வெந்நீரில் துவைக்க, கிரீஸ் கறை காணாமல் போகும்.

 • துணிகளில் ஐஸ்க்ரீம், சாக்லேட் கறைகளை நீக்க ஸ்டெயின் ரிமூவர்கள் பயன்படுத்தி அந்த இடத்தை மட்டும் சுத்தப் படுத்தினால் போதும்.

 • மாதவிடாய் துணிகள், குழந்தைகள் வாந்தி எடுத்த துணிகள் போன்றவற்றைக் கட்டாயமாகத் தனியாக ஊறவைத்துத் துவைக்கவும்.

 • ஜீன்ஸ் மற்றும் காட்டன் துணிகளில் சோப்புப் பயன்படுத்தி துவைக்கும்போது, கூடுதலாகக் தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். இல்லையெனில், துணிகளில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் கறை இருப்பதுபோன்ற தோற்றம் இருக்கும்.

 • வாஷிங் மெஷினில் துவைக்கும்போது குழந்தைகளின் ஆடைகள், பெரியவர்களின் உடைகள் என்று தனித்தனியாக அதற்கென்று இருக்கும் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி துவைக்க வேண்டும். கறைகளை கையால் நீக்கிவிட்டு மெஷினில் போடவும். துவைத்த துணிகளை மெஷினிலேயே நீண்டநேரம் விட்டுவைக்கக் கூடாது. வேலைப்பாடுகள் உள்ள துணிகளை மெஷினில், டிரையரில் போடுவது கூடாது.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

ஈரத்துக்கு நோ!

ஆடைகளை எப்போதும் ஈரப்பதத்துடன் மடித்து வைக்கக் கூடாது. மழை, குளிர் காலத்தில் காய நேரம் எடுக்கிறது என்றாலும் அவசரமில்லாமல் கூடுதல் நேரம் உலர்த்தி நன்கு காய்ந்தபின்னரே மடிக்கவும். ஈரப்பதமான துணிகளில் பூஞ்சைகள் வளர வாய்ப்பாகும் என்பதுடன் துணியும் ஸ்டிஃப்னஸ் இல்லாமல் தொய்ந்துபோய் இருக்கும்.

 ஷோபனா
ஷோபனா

இஸ்திரி... செக்லிஸ்ட்! - இல்லத்தரசி ஷோபனா

இஸ்திரி செய்வதில் இந்த செக் லிஸ்ட்டை சரிபார்த்துக் கொண்டால், அதில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க் கலாம்.

 • இஸ்திரி செய்ய லாண்டரி, இஸ்திரிமேனிடம் கொடுக்கும்போது ஆடைகளை எப்போதும் எண்ணிக் கொடுத்து, எண்ணிய பின்னரே டெலிவரி வாங்கவும்.

 • லினன், ப்யூர் காட்டன் போன்ற ஆடைகளைக் குறைந்த அளவு ஹீட்டில் வைத்து இஸ்திரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கொடுக்கவும்.

 • நல்ல வெளிச்சம் உள்ள அறையில் அமர்ந்து இஸ்திரி செய்யவும். அயர்னிங் போர்டு அல்லது சமதளமாக இருக்கும் பரப்பில் வைத்து இஸ்திரி செய்யவும்.

 • அயர்னிங் போர்டை பயன்படுத்துபவர்கள் உங்கள் உயரத்துக்கேற்ப அதை செட் செய்துகொள்ளவும். இல்லையெனில், அதிக ஆடைகளை இஸ்திரி செய்யும்போது முதுகுவலி வரக்கூடும்.

 • வீட்டில் இஸ்திரி செய்பவர்கள் அயர்ன் பாக்ஸில் இருக்கும் ஆப்ஷன்களை முழுவதுமாகத் தெரிந்துவைத்துக் கொள்ளவும்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

அயர்ன் பாக்ஸ் ஹீட்!

 • அயர்ன் பாக்ஸில் இருக்கும் ஹை, மீடியம், லோ ஹீட் ஆப்ஷன்களை, இஸ்திரி செய்யப்போகும் துணிக்கேற்ப தேர்ந்தெடுக்கவும். பொதுவாக, நாம் இஸ்திரி செய்யும் பெரும்பாலான துணிகளுக்கு மீடியம் ஹீட் செட் ஆகும். லினன், பட்டுத்துணிகளை இஸ்திரி செய்யும்போது லோ ஹீட் ஆப்ஷனைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

 • நிறைய துணிகளை இஸ்திரி செய்யும்போது, முன்னதாக அதன் தன்மைக்கேற்ப லோ, மீடியம், ஹை ஹீட்டில் இஸ்திரி செய்ய வேண்டிய ஆடைகள் பிரித்து வைத்துக்கொண்டு, லோ ஹீட்டில் இருந்து ஆரம்பித்தால் வேலை எளிதாக இருக்கும்

 • ஒவ்வொரு முறை இஸ்திரி செய்யத் தொடங்கும்போதும், வீட்டிலிருக்கும் ஏதேனும் ஒரு பழைய துணியை இஸ்திரி செய்து செக் செய்துகொள்வது துணிகளுக்குப் பாதுகாப்பானது.

 • அயர்னிங் போர்டில் அலுமினிய ஃபாயில் பேப்பர் ஒன்றை ஒட்டி வைத்துவிட்டால் லேசான ஆடைகளை இஸ்திரி செய்யும்போது ஒருபுறம் மட்டும் இஸ்திரி செய்தால் போதுமானது.

 • காட்டன் ஆடைகளின் மீது லேசாகத் தண்ணீர் ஸ்பிரே செய்து கொண்டால் எளிதாக இஸ்திரி செய்யலாம்.

 • அடர்நிற ஆடைகளை இஸ்திரி செய்யும்போது சில நேரங்களில் அதிக சூட்டின் காரணமாக ஆடைகளில் ஆங்காங்கே வெள்ளை நிறமாக இருக்கும். எனவே, அவற்றை உட்புறமாக இஸ்திரி செய்துவிட்டு, லேசாக மட்டும் வெளிப்புறம் இஸ்திரி செய்யவும்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

புடவை, பேன்ட், ஷர்ட்!

 • பட்டுப்புடவை, வேலைப்பாடுகள் செய்த ஆடைகள் ஆகியவற்றின் மீது ஒரு காட்டன் வேஷ்டியைப் போட்டு இஸ்திரி செய்யவும்.

 • ஷர்ட்களை முதலில் பின்பக்க காலர், அதன் பின் முன்பக்க காலர், கைகளின் உள்புறம், வெளிப்புறம், தோள்பட்டையிலிருந்து கீழ் பட்டன்வரை என்ற ஆர்டரில் இஸ்திரி செய்து ஹேங்கரில் மாட்டினால் சுருக்கங்கள் இல்லாமல் கடையில் இஸ்திரி செய்தது போன்றே இருக்கும். இது சல்வாருக்கும் பொருந்தும்.

 • பேன்ட்களை முதலில் உட்புறம் திருப்பி பாக்கெட் மற்றும் இடுப்புப்பகுதியை இஸ்திரி செய்து, பிறகு, வெளியே திருப்பி இஸ்திரி செய்தால் எளிதாக இருக்கும்.

 • புடவைகளை இஸ்திரி செய்யும்போது அயர்ன் பாக்ஸை ஆஃப் செய்துவிட்டு, அதிலிருக்கும் சூட்டிலேயே முந்தானையை இஸ்திரி செய்துகொள்ளவும். பின் உடல் பகுதியை பகுதி பகுதியாக விரித்து இஸ்திரி செய்யவும். காட்டன் புடவை எனில் லேசாகத் தண்ணீர் ஸ்பிரே செய்து இஸ்திரி செய்யவும். கிராண்டு பார்டர்கள் கொண்ட புடவை எனில், பார்டர்களில் லேசாக இஸ்திரி செய்யலாம் அல்லது ஒரு துப்பட்டாவை பார்டரின் மீது விரித்து துப்பட்டாவின் மீது இஸ்திரி செய்யலாம்.

 • இஸ்திரி செய்துமுடித்த கையோடு அயர்ன் பாக்ஸ் ஸ்விட்சை ஆஃப் செய்து, பிளக்குடன் எடுத்து உயரமான இடத்தில் வைத்து விடுவதில் கவனக்குறைவு வேண்டவே வேண்டாம்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

பிரின்டட் டிசைன், எழுத்துகள் உள்ள ஆடைகளை இஸ்திரி செய்யும்போது அது சூட்டில் உருகி அயர்ன் பாக்ஸில் ஒட்டிக் கொள்வதுடன், அதே அயர்ன் பாக்ஸால் இஸ்திரி செய்யும்போது ஆடைகளின் பிற பகுதிகள் மற்றும் பிற ஆடைகளிலும் படலாம். எனவே, அவ்வகை ஆடைகளை பின்புறம் திருப்பி இஸ்திரி செய்யவும். ஆடையில் ஏதேனும் கறை இருந்து இஸ்திரி செய்தால் சில நேரம் கறை அப்படியே ஆடையில் பிடித்துக்கொள்ளும் கவனம்.

 உஷா தேவி
உஷா தேவி

வார்ட்ரோப் நேர்த்தி... கொஞ்சம் மெனக்கெட்டால் போதும்! - இல்லத்தரசி உஷா தேவி

வார்ட்ரோப் பராமரிப்பை ஒரு கலை என்றுகூட சொல்லலாம். வார இறுதி நாள்களில் மணிக்கணக்கில் நேரம் செலவழித்து வார்ட்ரோபை சுத்தம் செய்து, ஒன்றுபோல் அடுக்கி வைத்திருப்போம். ஆனால், அடுத்த நாளே அனைத்து துணிகளும் கலைந்திருக்கும். இதைத் தவிர்க்க, நீங்கள் வார்ட்ரோபில் துணியை அடுக்கும் விதத்தை மாற்ற வேண்டும்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

குழந்தைகளுக்கான ஷெல்ஃப்

 • முதலில் வார்ட்ரோபில் எத்தனை பேருடைய துணி இடம்பிடிக்கப் போகிறது என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். கணவன், மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே வார்ட்ரோப், எனில் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட வேண்டும். குறிப்பாக, வார்ட்ரோப் பராமரிப்பில் இருக்கும் சவாலே, குழந்தைகள்தாம். தங்களின் ஆடைகளைத் தேடி எடுக்கிறேன் என்ற பெயரில் எல்லோருடைய ஆடைகளையும் கலைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். எனவே, குழந்தைகளுக்கு என்று தனி ஷெல்ஃப் அல்லது வளர்ந்த குழந்தைகள் எனில் தனி அலமாரி கொடுத்துவிடுவது நல்லது.

 • குழந்தைகளுக்கு அவர்கள் உயரத்துக்கு ஏற்ப கீழ் ஷெல்ஃபை கொடுத்துவிட்டு, ஆடைகளைக் கலைக்காமல் தேடியெடுக்கவும் கற்றுக்கொடுத்துவிட்டால், வார்ட்ரோப் எப்போதும் நீட்டாகவே இருக்கும்.

 • மடித்து வைத்த துணிகளைக் குழந்தைகள் எடுக்கும்போது, கடைசியாக இருக்கும் சட்டையை உருவி எடுத்தால் மொத்த அடுக்கும் கலைந்துவிடும். இதற்குத் தீர்வாக, குழந்தைகளின் அலமாரியில் நான்கு வார்ட்ரோப் பாக்ஸ்களை வைத்து, அவற் றில் மேல்சட்டை, லோயர், உள்ளாடைகள், இரவு நேர ஆடைகள் எனத் தனித்தனியாக மடித்து வைக்கவும். அடுக்கு சரியாமல் அவர்களால் நினைத்த ஆடையை எடுத்துக்கொள்ள முடியும்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

ஹேங்கர்கள் பயன்படுத்தும்போது...

 • துணிகளை ஹேங்க் செய்ய மட்டுமேயான அலமாரியைப் பயன் படுத்தும்போது, முதலில் உயரமான ஆடையில் தொடங்கி உயரம் குறைந்த ஆடைகள் என்ற வரிசையில் தொங்கவிடுங்கள்.

 • புடவைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள், ஒரு வாரத்துக்கு நீங்கள் கட்டப்போகும் புடவையைத் தேர்வு செய்து, மேட்ச்சிங் பிளவுஸுடன் இணைத்து ஹேங் செய்துவிட்டால் எடுத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஹேங்கர் இல்லாதவர்கள் பிளவுஸை புடவையின் உட்புறமே சேர்த்துவைத்துவிட்டால் கடைசி நேரப் பரபரப்புகள் இல்லாமல் கிளம்பலாம்.

 • வரிசையாக ஆடைகளை ஹேங் செய்யும்போது, அடுத்தடுத்து கான்ட்ராஸ்ட் நிறங்கள் வருவதுபோல பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பளிச் என ஆடை வரிசை இருக்கும். கறுப்பு, அடர் நீலம் என்று அடுத்தடுத்துத் தொங்கவிட்டால், இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும். அதுவே கறுப்பு, மஞ்சள், அடர் பச்சை, பிங்க் என்றிருந்தால் பார்த்து எடுக்க வசதியாக இருக்கும்.

 • ஹேங்கரின் கீழ் இருக்கும் ஷெல்ஃபில் சிலர் துணிகளை மடித்து வைப்பார்கள். ஆனால், ஹேங்கரை நகர்த்தினால் அவை கலந்துபோகக்கூடும். எனவே, அந்த செல்ஃபில் நான்கு வார்ட்ரோப் பாக்ஸ்கள் வைத்து, ஹேங்கரில் மாட்டியிருக்கும் ஆடைகளுக்குப் பொருத்தமான பேன்ட்கள், ஸ்கர்ட்களை அதில் மடித்துவைத்துக் கொள்ளலாம்; சிரமமில்லாமல் தேடி எடுக்கவும் முடியும்.

 • வார்ட்ரோப்பின் கதவுகளில் ‘S’ வடிவ ஹூக் மாட்டி, அதில் மல்டி பாக்கெட் பையைத் தொங்கவிட்டுக் கொள்ளவும். ஒவ்வொரு பையிலும் ஸ்கார்ஃப், ஸ்டோல், சாக்ஸ் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம்.

 • சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும் டோர் ஹேங்கிங் ஹூக்கை வாங்கி வார்ட்ரோப் கதவின் உட்பகுதியில் ஒட்டி வைத்துக்கொண்டால் துப்பட்டாக்கள், பெல்ட்களை அதில் மாட்டிக்கொள்ளலாம்.

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!

உள்ளாடைகளை இப்படி மடித்து வையுங்கள்!

 • உள்ளாடைகளை மடித்து வைப்பதற்கென்றே பிரத்யேக வார்ட்ரோப் பாக்ஸ்கள், பவுச்கள் கிடைக்கின்றன. பல தடுப்புகளாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் இதில், ஒவ்வொரு தடுப்பிலும் ஒவ்வொரு உள்ளாடை என்று மடித்து வைத்து, எடுத்துப் பயன்படுத்த சுலபமாக இருக்கும். மேலும், பேடட் பிரேஸியரை (Padded Brassiere) மடித்து வைக்கும்போது அந்த பேட் அழுந்தி தொய்வு ஏற்படாத வண்ணம் அவற்றை ஸ்டோர் செய்வதற்கான பிரத்யேக பாக்ஸ்களும் உள்ளன. பெண்கள் தங்களின் உள்ளாடை வைக்கும் செஃல்பிலேயே இன்னொரு பாக்ஸ் வைத்து, சானிட்டரி நாப்கின்கள், பேன்டி லைனர்களை ஸ்டோர் செய்யலாம்.

 • எல்லாருடைய உள்ளாடைகளையும் ஒரே இடத்தில் வைக்காமல், அவரவரின் ஆடைகள் இருக்கும் ஷெல்ஃப்/வார்ட்ரோபில் பாக்ஸ்கள், பவுச்களில் மடித்துவைக்கலாம்.

 • தங்க நகைகள், முக்கியமான டாக்குமென்ட்களை அலமாரி லாக்கரில் வைப்பது அவசியம். மெடிக்கல் ரிப்போர்ட்கள், முக்கியமான மருந்து, மாத்திரை சீட்டுகளை ஒரு ஃபைலில் போட்டு பத்திரப்படுத்தி அந்த ஃபைலையும் லாக்கரில் வைக்கலாம். லாக்கர் இல்லாத வார்ட்ரோப் எனில், அவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

 • வீட்டில் உள்ள அனைவரின் ஆடை கலெக்‌ஷனிலும், நல்ல நிலையில் இருக்கும் கேஷுவல் ஆடைகளை ஆண்டுக்கு ஒருமுறை சேகரித்து, வீட்டில் வேலைசெய்பவர்கள், இல்லங்களில் உள்ளவர்கள் எனத் தேவையிருப்பவர் களுக்குக் கொடுக்கலாம்.

ஆடைகளின் நீடித்த ஆயுளுக்கு... க்விக் டிப்ஸ்...

ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!
ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்!
 • விலைக்கேற்பவே பொருள் இருக்கும். சலுகை, இலவசம், விலைக் குறைப்பு என்று மலிவான மெட்டீரியல் ஆடைகளை வாங்குவதைத் தவிருங்கள்.

 • ஆடைகளைச் சேதப்படுத்தாமல் துவையுங்கள். வெயில் காலங்களில் டிரையர் பயன் படுத்துவதைத் தவிருங்கள்.

 • பேனா கறை, சமையல் கறை என்று துணிகளை பாழாக்காமல், ‘வீட்ல போடுற டிரஸ்தானே... கறை இருந்தால் என்ன...’ என்று நினைக்காமல், ஆடைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

 • பிரிந்த தையலை சரி செய்வதிலிருந்து அறுந்த வேலைப்பாடுகளை சீராக்குவது வரை ஆடை களில் ஏற்படும் சேதங்களை அவ்வப்போது சரி செய்துவிடுங்கள்.

 • சில மெட்டீரியல்கள் அயர்ன் பாக்ஸ் ஹீட்டில் தொய்ந்துபோகும் என்பதால், அந்த வகை ஆடைகளை அடிக்கடி இஸ்திரி செய்வதைத் தவிர்த்து சுருக்கங்கள் நீக்கி மடித்து வையுங்கள்.

 • உடுத்திய உடைகளையே மீண்டும் மீண்டும் உடுத்துவது, சில ஆடைகளை உடுத்தாமலே இருப்பது என்றில்லாமல், ரெகுலரான சுழற்சியில் அனைத்து உடைகளையும் பயன்படுத்துங்கள்.

ஹேப்பி குளோத்திங்!