Published:Updated:

`கமலின் பிக்பாஸ் கதர் காஸ்ட்யூம் இப்படித்தான் உருவானது!' - அனுபவம் பகிரும் டிசைனர் அம்ரிதா

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கதர் என்பது வயதானவர்களோ, அரசியல்வாதிகளோ, அணியும் உடை என்று நம் மனதில் பதிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கதரில் எல்லா வகையான ஆடைகளுக்கும் ஸ்டைலுக்கும் உயிர்கொடுக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கதர் காந்திய கால ஆடை என்று எண்ணி அதை ஓரங்கட்டிவிட்டோம். டிசைனர் ஆடைகளில் கவனம் செலுத்தும் நமக்கு கதர் ஆடைகள் நம் பாரம்பர்யம் என்பதே மறந்துவிட்டது. கதர் என்பது வயதானவர்களோ, அரசியல்வாதிகளோ, அணியும் உடை என்று நம் மனதில் பதிந்ததே காரணம். ஆனால், உண்மையில் கதரில் எல்லா வகையான ஆடைகளுக்கும் ஸ்டைலுக்கும் உயிர்கொடுக்க முடியும். அதற்கான முயற்சியை கையில் எடுத்துள்ளார் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அம்ரிதா ராம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஹைஃபை ஃபேஷனில் வரும் நடிகர் கமல், கடந்த இரண்டு வாரங்களாக நம் பாரம்பர்யமான கதர் உடைகளில் வந்து கலக்கினார். மேலும், கதர் குறித்த தகவல்களையும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார். மெல்லிய பருத்தி நூலில் கமல் அணிந்திருந்த கோட் சூட் கதர் என்றதுமே அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். இந்த ஆடை வடிவமைப்பு குறித்தும், கதருக்கான ஸ்டைலிங் வாய்ப்பு குறித்தும் அமிர்தா ராம் பகிர்ந்துகொண்ட தகவல்கள்...

``ஃபேன்ஸியான துணிகளில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள்தான் டிரெண்டுனு நாம் கொண்டாடுறோம். வெளிநாட்டு பொருள்கள்மேல இருக்கும் ஒருவித ஈர்ப்புதான் இதுக்குக் காரணம். பகட்டான ஆடைகள் நம்ம ஸ்டேட்டஸை உயர்த்திக் காட்டுதுன்னு நம்பறோம். ஆனா, அதுக்காக நாம பலி கொடுக்குறது நம்மளோட பாரம்பர்ய கலையையும் அந்தக் கலைஞர்களோட வாழ்வாதாரத்தையும்தான். கைத்தறி நெசவாளர்கள் இங்கே ஆயிரக்கணக்குல இருக்காங்க. அவங்களும் இப்போ வேற தொழில்களுக்குப் போன காரணம், நெசவில் பெரிய அளவு லாபம் இல்லாததுதான். நாம ஒவ்வொருவரும் நினைச்சா இந்த நிலையை மாற்றி கதரை உலகளவிலான ஃபேஷனாக்கலாம். நெசவுத் தொழிலையும் நெசவாளர்களையும் மீட்டு எடுக்கவும் முடியும். அதற்கான முதல் கட்ட முயற்சிதான் கமல் சாருக்காக கதரில் கோட் சூட்டை வடிவமைச்சது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

வேலை விஷயமா ஹைதராபாத் போயிருந்தேன். அங்க, கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அமைப்பை பார்த்தேன். நம்ம அடையாளமும் பாரம்பர்யமும் இன்னும் மறையாம இருக்க காரணமான கைத்தறி நெசவாளர்கள் பலர், அங்க வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களோட கலையையும் உழைப்பையும் பார்த்து அசந்துபோய் உடனடியா சில கைத்தறி துணிகளை வாங்கினேன். அங்கேயே அதுக்கான சாயம் தோய்ச்சு, கமல் சார்கிட்ட காட்டி, இந்த வாரம் கைத்தறி துணியில ஒரு டிரெஸ் ரெடி பண்ணட்டுமான்னு கேட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தத் துணியையும் நிறத்தையும் பார்த்து அசந்துபோன கமல் சார், தயங்காம `சரி'ன்னு சொல்லிட்டார். பொதுவாக, கைத்தறின்னாலே வேஷ்டிதான் உருவாக்க முடியுங்கிற எண்ணத்தை மாத்துற மாதிரி ஓர் ஆடையை வடிவமைக்கணும்னு நினைச்சேன். பலகட்ட சிந்தனைக்குப் பிறகு வடிவமைக்கப்பட்டதுதான் நீங்கள் டிவியில் பார்த்த கோட் சூட். இதுவரை நிறைய ஆடைகளை வடிவமைச்சுருக்கேன். ஆனா, இந்த கதர் ஆடையை வடிவமைக்கும்போது, ஏதோ ஒரு மாற்றத்துக்கு அடித்தளம் போட்ட மாதிரி ஓர் உணர்வு இருந்துச்சு.

வண்ணத்தில் தோய்க்கப்பட்ட நூல்
வண்ணத்தில் தோய்க்கப்பட்ட நூல்

கமல் சார் மாதிரியான ஒரு பிரபலம் கைத்தறி பற்றி எடுத்துச் சொல்லும்போது அது அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்னு நம்பிக்கை இருந்துச்சு. சென்ற வாரம் இன்டர்நேஷனல் ஃபேஷனான கார்ட்ராயர் மெட்டீரியலை கதரில் நெய்தது சவாலாக இருந்துச்சு. அதைத் தொடர்ந்து இந்த வாரம் டெனிம் ஸ்டைலை கதரில் உருவாக்கியிருக்கிறோம். கமல் சார்,  `கதருக்கு இந்த ஷோவுடன் முற்றுப்புள்ளி வைக்காமல் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லணும்'னு அறுவுறுத்தினார். அதன்படி கதரை `ஃப்யூச்சர் பேஷனாக' கொண்டு செல்லும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

கைத்தறியில் நெய்த துணியின் விலை அதிகம். அதை எப்படி எல்லாரும் வாங்கி அணிய முடியும்ங்கிறதுதான் எல்லாருடைய கேள்வியாகவும் இருக்கும். அதிகமான ஆடைகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்போது, அதன் விலை குறையும். உற்பத்தியை அதிகரிக்க நாம உதவி செஞ்சோம்னா கைத்தறி துணிக்கான விலை கைக்குள்ளேயே அடங்கிடும்" என்ற அம்ரிதா ராமிடம், லினன் காட்டன், ஜியார்ஜெட் மாதிரியான கண்களைக் கவரும் துணிகளோட கைத்தறியால போட்டி போட முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அம்ரிதா ராம்
அம்ரிதா ராம்

கைத்தறி நெசவாளர்கள் கிடைக்கும் நூலையும் நிறங்களையும் வைத்துதான் துணிகளை நெய்து கொடுக்கறாங்க. நல்ல தரமான நூல், டிரெண்டில் இருக்கும் கண் கவரும் கலர்களை கொடுத்தால், வெளிநாட்டுத் துணிகளோடு கைத்தறியும் போட்டிபோட்டு ஜெயிக்க முடியும்.

கிளாடியேட்டர் ஷூஸ், லினன் ஓவர் லே... கமலின் `செம கூல்' பிக்பாஸ் லுக் சீக்ரெட்ஸ்!

கைத்தறி துணியில ஆண்களுக்கான கோட் சூட், ஃபேஷன் உடைகள் டிசைன் செய்யுற மாதிரி, பெண்களுக்கு கைத்தறின்னாலே புடவைன்னு இருக்குற நிலையை மாற்றி லெஹெங்கா முதல் இப்போ டிரெண்டில் இருக்கும் மேக்ஸி டிரெஸ் வரை எல்லா வகையான உடைகளையும் டிசைன் செய்ய முடியும். நம் பாரம்பர்யத்தைக் காக்கும் கடமை, நம்ம எல்லாருக்கும் இருக்குதுங்கிறதை உணர்ந்து, கதர் ஆடைகள்ல டிரெண்ட் செட்டரா வலம் வருவோம்" - என்கிறார் அமிர்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு