Published:Updated:

`இந்த வரலாறு தெரிஞ்சா இனி யாரையும் `புடவைய கட்டிக்கோ'னு திட்டமாட்டீங்க!' - ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா

Photoshoot ( Photo: Artmode_in/ Instagram )

சமீபத்தில் ஓர் ஆண் புடவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அந்தப் புகைப்படத்துக்கான கான்செப்ட்டை உருவாக்கியது மற்றும் ஸ்டைலிங் செய்தது அர்ச்சனாதான்.

`இந்த வரலாறு தெரிஞ்சா இனி யாரையும் `புடவைய கட்டிக்கோ'னு திட்டமாட்டீங்க!' - ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா

சமீபத்தில் ஓர் ஆண் புடவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அந்தப் புகைப்படத்துக்கான கான்செப்ட்டை உருவாக்கியது மற்றும் ஸ்டைலிங் செய்தது அர்ச்சனாதான்.

Published:Updated:
Photoshoot ( Photo: Artmode_in/ Instagram )

``சாப்பாட்டில் இருந்து அணியும் ஆடை வரை நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான வரைமுறைகளும் நாமே உருவாக்கிக் கொண்டவை. இவைதான் நாளடைவில் கட்டுப்பாடுகளாக மாறுகின்றன. இவற்றை உடைத்து எறியாவிட்டால், நம் வாழ்க்கையை அடுத்தவர்களின் எதிர்பார்ப்புக்காகப் பறிகொடுக்க வேண்டியதுதான்" - ஆவேசமாகப் பேசுகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. சமீபத்தில் ஓர் ஆண் புடவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அந்தப் புகைப்படத்துக்கான கான்செப்ட்டை உருவாக்கியது மற்றும் ஸ்டைலிங் செய்தது அர்ச்சனாதான். ஆடை கலாசாரம் பற்றியும் போட்டோஷூட்டின் பின்னணி குறித்தும் அர்ச்சனாவிடம் பேசினோம்.

புடவை
புடவை

``பெண்களின் ஆடைகள் எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளானால் அவளின் ஆடைகளைத்தான் முதலில் குறை சொல்கிறார்கள். சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவதால் ஓர் ஆடையை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும் என்பதே முதல் கேள்வியாக என் மனதில் விழுந்தது. அதற்கான பதிலைத்தான் இந்தப் போட்டோஷூட் மூலம் தந்திருக்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆணும் பெண்ணும் சமம் என்பதே நம் கலாசாரத்தில் இருந்திருக்கிறது. கலாசார மாறுபாடுகள்தான் பெண் அடிமைத்தனத்துக்கு முக்கியமான காரணம். உண்மையில் ஓர் ஆணிடம் புடவையைக் கட்டிக்கோ என் கிண்டல் செய்பவர்கள் யாரும் புடவையின் வரலாறு தெரிந்தால் அப்படிப் பேச மாட்டார்கள். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த எல்லா அரசர்களுமே புடவையையே தங்களின் மேலாடையாக அணிந்தார்கள். ஆணும் பெண்ணும் புடவையை அணிந்து கொள்ளும் விதம் மட்டும்தான் வித்தியாசமானது. இதற்கு கோயிலில் உள்ள சிற்பங்களும் ஓவியங்களும்தான் சான்றுகள்.

போட்டோஷூட்
போட்டோஷூட்
Photo: Artmode_in/ Instagram

புடவை கட்டிக்கொண்டதற்காக அரசர்களின் வீரம் குறையவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் இன்று பெண்களின் அடையாளமாக நாம் பார்க்கும் அனைத்து ஆபரணங்களையும் அரசர்கள் அணிந்திருந்தனர். பெண்கள் என்றாலே மேக்கப் என்று சொல்கிறோம். அந்த மேக்கப் கலாசாரம் கூட, எகிப்திய அரசர்களிடம் இருந்துதான் முதலில் வந்தது. புடவை கட்டி ஆட்சி செய்த அரசர்களை வீரத்தின் அடையாளமாகக் கொண்டாடும் நாம், பெண்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த ஒரு காரணத்துக்காகப் புடவையைக் குறைத்து மதிப்பிடுவது எப்படி நியாயம் ஆகும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெறும் உடம்பில் மேலாடை, கீழாடை என வழக்கத்தில் இருந்த நம் கலாசாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஆட்சி. அவர்கள் குளிர்ப் பிரேதசங்களில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களின் ஆடை வடிவமைப்பே வித்தியாசமாக இருக்கும். அவர்கள் நம்மை ஆண்டதால், அது போன்ற ஆடை அணிபவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று நாமே உருவாக்கிக்கொண்ட கலாசாரம்தான் மேலாடை, பிளவுஸ், பேன்ட் - ஷர்ட் போன்றவை. கலாசாரம் பற்றி முழுமையான புரிந்துணர்வு இல்லாமல், கலாசார சீர்கேடுகள் பற்றிப் பேசுபவர்கள்தான் இங்கு அதிகம்.

Saree
Saree
Image by Deankez from Pixabay

உண்மையில் நாம் அணியும் ஆடை நம்முடைய ஆண் தன்மையையோ, பெண் தன்மையையோ அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யாது. அப்புறம் ஏன் பெண் ஆடைகளை வசை பாடுவதையும், ஆண் ஆடைகளை அணியும் பெண்களைக் கிண்டல் செய்வதையும் செய்ய வேண்டும். ஆண் உடையை அணிந்தால் ஒரு பெண் ஆண் தன்மைக்கு மாறிவிடுவாள் எனச் சொல்வதெல்லம் எங்கும் நிரூபிக்கப்படாத ஒன்று.

இவையெல்லாவற்றையும் தாண்டி, ஆடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், வசதியைப் பொறுத்தது. அதில் கட்டுப்பாடுகள் எதற்கு? ஓர் ஆணுக்கு புடவை அணிய எல்லா உரிமையும் இருக்கிறது. அது அவரின் தனிப்பட்ட விருப்பம். இதில் பாலின ரீதியாகக் கிண்டல் செய்ய ஒன்றும் இல்லை. ஒரு ஸ்டைலிஸ்டாக மக்கள் மனதில் சின்ன மாற்றத்தையாவது கொண்டு வர வேண்டும் என்பதற்கான சின்ன முயற்சிதான் இந்த போட்டோஷூட்" என்ற அர்ச்சனா போட்டோஷூட் பற்றி பேச ஆரம்பித்தார்.

`இந்த வரலாறு தெரிஞ்சா இனி யாரையும் `புடவைய கட்டிக்கோ'னு திட்டமாட்டீங்க!' - ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா
Photo: Artmode_in/ Instagram

``ஏற்கெனவே இதே போன்று விழிப்புணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சில போட்டோஷூட்கள் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. மக்களுக்கு அந்த போட்டோ ஷூட்டுக்கான அர்த்தமே புரியாமலிருந்தது. ஆனாலும் தொடர்ந்து பேசினால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது என்னுடைய கருத்து. அதனால் தொடர்ந்து ஆடைகள் பற்றியும், நிறங்கள் பற்றியும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தேன்.

இதற்கான கான்செப்ட்டை தயார் செய்துவிட்டு ஆண் மாடலிடம் முதலில் சொன்னேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனே ஓ.கே சொன்னார். கறுப்பு நிற பனாரஸி புடவை, ஆபரணங்கள் என நிறைய நுணுக்கமான விஷயங்களைப் புகைப்படத்தில் காட்டியிருக்கிறோம். ஆண் புடவை கட்டிக்கொள்வது ஃபேஷன் என்று சொல்ல வரவில்லை. ஆடை தொடர்பான மக்களின் பார்வையில் இது ஒரு மாற்றத்துக்கான ஆரம்பமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

மக்களிடம் நிறைய எதிர்ப்புகள் வரும் என நினைத்தேன். நெகட்டிவ் கமென்ட்ஸை விட பாசிட்டிவ் கமென்ட்ஸ் அதிகமாக வந்திருக்கின்றன. மக்கள் மனதில் மாற்றம் வந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருவரை அவரின் ஆடையை வைத்தோ, நிறத்தை வைத்தோ மதிப்பிடுவதை விட்டுவிட்டு, அவரின் உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பார்க்கும் பார்வை மாறினால் அது சமூக மாற்றமாக நிச்சயம் இருக்கும்" என்று விடைபெற்றார் அர்ச்சனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism