Published:Updated:

ஆளை அசத்தும் ஆண்டிபட்டி சேலைகள்! - நூல் முதல் புடவை வரை ஸ்பாட் விசிட்

சேலை
பிரீமியம் ஸ்டோரி
News
சேலை

சேலை காதல்

பெண்களின் புடவைக் காதலில் காட்டன் புடவைகளுக்கு எப்போதும் தனியிடம். காரைக்குடி, எமனேஸ்வரம், நெகமம் எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தறி புடவைகள் தயாராகின்றன. பாரம்பர்யமிக்க இந்த ஊர்ப்பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது ஆண்டிபட்டி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், சண்முகசுந்தராபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் காட்டன் புடவை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தினமும் சுமார் 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம்வரை மதிப்பிலான புடவைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. மதுரை, ஈரோடு, விருதுநகர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், குஜராத், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய வெளிமாநிலங்களுக்கும் ஆண்டிபட்டி சேலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பெருநகரங்களிலிருக்கும் பிரமாண்ட ஜவுளிக்கடைகளுக்கு, ஆண்டி பட்டி நெசவாளர்களிடம் ஆர்டரின் பேரில் மொத்தமாகப் புடவைகள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மவுசு குறையாத ஆண்டிபட்டி புடவைகளின் உற்பத்தி முதல் விற்பனை வரை பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டிருக்கின்றனர் என்பது தனிச்சிறப்பு. நூல் முதல் புடவை வரை என்னென்ன பணிகள் நடக்கின்றன அங்கு என அறிந்துகொள்ள ஆண்டிபட்டிக்குச் செல்வோமா?

 பாண்டியம்மாள் -  முத்துமாரி -  முத்தம்மாள்
பாண்டியம்மாள் - முத்துமாரி - முத்தம்மாள்

``சேலை நெசவு வேலையில முதல் இடம், கண்டு சுத்துற இடம். அதாவது நூல கோன்ல சுத்திக் கொடுப்போம்” என விளக்கம் கொடுத்துப் பேச ஆரம்பித்தார் சக்கம்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள்... ‘`சேலைக்கான ஆர்டர் தறி வெச்சிருக்கிறவங்களுக்கு வரும். ஆர்டர் கொடுக்கிறவங்க சில நேரங்கள்ல நூலையும் கையில கொடுத்துடுவாங்க. சிலர் ஆர்டரை மட்டும் கொடுக்கும்போது, தறிக்காரங்க சேலைக்குத் தேவையான கலர் நூல்களைக் கடையில வாங்கி, கட்டுக் கட்டா எங்ககிட்ட கொடுப்பாங்க. அந்த நூல் கட்டுகளை ‘களி’ன்னு சொல்வோம். களியை மரச் சட்டத்துல மாட்டி, பிளாஸ்டிக் கோன்ல சுத்துவோம். சிலர் தகர டப்பாக்கள்ல சுத்துவாங்க. இதை ‘டப்பா சுத்துறது’ன்னு சொல்லுவாங்க. ஒரு களியில 100 நூல்கண்டு சுத்தலாம். முன்னயெல்லாம் மோட்டார் இல்லாதப்போ, மரச்சட்டத்துல களியை மாட்டி கையாலதான் கோன்ல சுத்தணும். அஞ்சாறு பேர் சேர்ந்தாதான் ஒரு நாள்ல 100 நூல்கண்டுகளைச் சுத்த முடியும். இப்போ மோட்டார் வந்துட்டதால, கரன்ட் போகாம இருந்தா ஒரு நாளைக்கு 100 நூல்கண்டையும் ஒருத்தரே சுத்தி முடிச்சிடலாம். ஒரு நாளைக்கு 150 ரூபாயிலயிருந்து 200 ரூபாய் வரை கிடைக்கும்.

அடுத்தபடியா, நூல்கண்டை பாவு சுத்தணும். அதாவது, தறியிலயிருக்கிற பெரிய சைஸ் கோன்ல சுத்தணும். சேலையோட டிசைன் முடிவு செய்யப்படுறது இங்கதான். சின்னச் சின்ன கலர் நூல்கண்டுகளை, சேலையோட டிசைனுக்கு ஏத்ததுபோல, எந்த இடத்துல என்ன கலர் நூல் இருக்கணும்னு தறிக்காரங்ககிட்ட கேட்டு, அதுக்கேத்தாப்புல கண்டுகளை வரிசையா வெச்சு, பாவுல சுத்தணும். ஒருமுறை பாவு சுத்தி முடிக்க ரெண்டு நாள் ஆகும். அதுல அஞ்சு சேலை நெய்யலாம். இதுக்கு அடுத்ததா பாவு, பன்னேற்றம் செய்யுற இடத்துக்குப் போகும். அது என்னன்னு தெரிஞ்சுக்க, பக்கத்துல முத்துமாரியை போய் பாருங்க” என்றார் பாண்டியம்மாள்.

 கார்த்திக்
கார்த்திக்

அடுத்த தெருவில் பெண்கள் கணவர்களுடன் அமர்ந்து தறி வேலை பார்த்துக்கொண்டிருக்க, முத்துமாரி பேசினார்... ‘`ஒரு தறிக்கு நாலு சட்டம் இருக்கும். ஒரு சட்டத்துக்கு 1,000 கம்பினு, மொத்தம் 4,000 கம்பி. ரொம்ப சின்னக் கம்பி, அதுல ஒரு சின்ன ஓட்டை இருக்கும். ஒருத்தர் பாவுல இருந்து நூலை எடுத்துக் கொடுக்க, ஒருத்தர் கம்பி துளையில நூலை கோக்கணும். இதுதான் ‘பன்னேற்றம்’.இது லேசான காரியமில்ல. ரெண்டு பேரு கவனம் சிதறாம பார்த்தாதான் வேலையை முடிக்கலாம். கண்ணு வலிக்கும். ஒரு பாவை பன்னேற்றம் செஞ்சு முடிக்க ஒரு நாள் ஆகும். 600 ரூபாய் கிடைக்கும். ரெண்டு பேருங்கிறதால, ஆளுக்கு 300 ரூபாய். எல்லாம் முடிஞ்சதும், பாவையும், தறிச்சட்டத்தையும் சேர்த்துக் கட்டி தறிக்காரங்ககிட்ட கொடுப்போம். அவங்க அதைத் தறியில மாட்டி, நெய்து, சேலையா எடுப்பாங்க” என்ற முத்துமாரி, “பெரும்பாலும் விசைத்தறி பாவுதான். சில நேரங்கள்ல கைத்தறி பாவும் வரும். கைத்தறி சட்டத்துல கம்பிக்குப் பதிலா நைலான் கயிறு இருக்கும். அதுலயிருக்கிற துளையும் ரொம்ப சின்னதா இருக்கும். அதுக்குள்ள நூலை கோக்கறது சவாலான வேல’’ என்று அவர் சொல்ல, கைத்தறி வைத்திருந்த முத்தம்மாள் வீட்டுக்குச் சென்றோம்.

‘‘ஆண்டிபட்டி வட்டாரத்துல பெரும்பாலான நெசவாளர்கள் விசைத்தறிக்கு மாறிட்டாங்க. எங்களை மாதிரி சிலர்தான் கைத்தறி வெச்சிருக்கோம். விசைத்தறியில ஒரு நாளைக்கு நாலஞ்சு சேலைவரை நெய்யலாம். கைத்தறியில நாள் முழுக்க உட்கார்ந்தாலும் ஒரு நாளைக்கு ரெண்டு சேலைதான் முடியும். எல்லா செலவும்போக, ஒரு சேலைக்கு 80 ரூபாய் கிடைக்கும். டிசைன் சேலை ஆர்டர்கள் வரும்போது வேலை அதிகமா இருக்கும். டிசைன் சேலைகள் பெரும்பாலும் விசைத்தறிக்குப் போகும். சாமிக்கு ஒரு நாளுனு, மாசத்துல கார்த்திகை நாள் மட்டும் தறியைத் தொட மாட்டோம். மத்த எல்லா நாளும் வேலை நடந்துக்கிட்டேதான் இருக்கும்’’ என்றார் முத்தம்மாள்.

ஆளை அசத்தும் ஆண்டிபட்டி சேலைகள்! - நூல் முதல் புடவை வரை ஸ்பாட் விசிட்

ஒரு புடவையை நெய்வதில் இத்தனை பேரின் உழைப்பு அடங்கியுள்ளது. அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை. அதுவும் இந்தக் கொரோனா ஊரடங்குக் காலத்தில், ஆண்டிபட்டி வட்டாரத்தில் மட்டும் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான சேலைகள், வேஷ்டிகள் சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியது. இது நெசவாளர்களைப் பெரிதும் பாதித்தது. ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில், தீபாவளி ஆர்டர்கள் வந்திருக்கின்றன.

ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி கார்த்திக், “ஊரடங்கால எங்களோட மொத்த ஜவுளி உற்பத்தி 30 சதவிகிதத்துக்கும் கீழ போயிடுச்சு. உற்பத்தி செஞ்ச ஜவுளிகளையும் சந்தைப்படுத்த முடியாம நஷ்டப் பட்டோம். இப்போ நிலைமை சீராகிட்டு வருது. எங்க பெரிய எதிர்பார்ப்பே தீபாவளிதான்.

கொரோனா பிரச்னை காரணமா, சூரத் உட்பட வடமாநில ஜவுளி உற்பத்தி இடங்கள்லயிருந்து தமிழகத்துக்கு ஜவுளி வரத்து குறையும். அதனால காட்டன் புடவைகளுக்கு, குறிப்பா எங்க ஆண்டிபட்டி காட்டன் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கிறோம். மக்கள், தறி நெசவாளர்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பருத்தி புடவைகளை வாங்கணும்’’ என்றார்.

பெண்களின் புடவைத் தேர்வு, இந்தப் பாரம்பர்ய தொழில் பிழைக்க, தழைக்க கைகொடுக்க வேண்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூபாய் 400 முதல்!

ஆண்டிபட்டியில் பல வகையான காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், புட்டா காட்டன், பட்டு ஜரிகை காட்டன், பிளைன் காட்டன் எனப் பட்டியல் நீள்கிறது. இதில், பிளைன் காட்டன் சேலை களில் வண்ணப்படங்களை பிரின்ட் செய்து கொடுக்கவும் செய்கின்றனர் நெசவாளர்கள். ஜவுளி நிறுவனங்களின் மொத்த வியாபாரம் தவிர, பொது

மக்களும் ஜவுளி வியாபாரிகளிடமும்,

நெசவு நடக்கும் வீடுகளிலும் உற்பத்தி விலையில் புடவைகள் எடுத்துச் செல்கிறார்கள். குறைந்தபட்சம் 400 ரூபாய் முதல் இங்கு தரமான காட்டன் புடவைகள் கிடைக்கின்றன. இதே புடவைகள்

பெரிய ஜவுளிக்கடைகளில் இரண்டு, மூன்று மடங்கு விலைவைத்து விற்கப் படுகின்றன.