
ஃபர்ஸ்ட் ரைடு: கேடிஎம் டியூக் 200
கேடிஎம், இந்தியாவில் கொண்டுவந்த முதல் பைக் டியூக் 200. இந்த பைக்கின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 8 ஆண்டுகளாக இதில் எந்தப் பெரிய மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்து வந்தது கேடிஎம்.
தற்போது எல்லா வாகனங்களும் BS-6 ஆக மாற்றப்படவேண்டும் என்ற இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, டியூக் 200 பைக்கில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது கேடிஎம்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த பழைய டிசைனை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு, இப்போது டியூக் 250போல, 200-ஐயும் ஷார்ப்பான டிசைனுக்கு மாற்றியிருக்கிறது கேடிஎம். அதே ட்ரெல்லிஸ் ஃப்ரேம். ஆனால் இதில், LED DRL உடன் ஹாலோஜன் ஹெட்லைட், அகலமான டேங்க் ஷிரவுட், புது டெயில் டிசைன் வருகிறது. பெட்ரோல் டேங்க் அளவு மூன்று லிட்டர் அதிகரித்துவிட்டது. சீட் இன்னும் அகலமாகவும், நீளமாகவும் மாறியிருக்கிறது. இதனால், உயரமான ரைடர்களுக்கும் டேங்க்கில் கிரிப் நன்றாகவே கிடைக்கிறது. இந்த மாற்றங்கள் நம்மை ரைடிங்கில் அதிக நேரம் என்கேஜ்டு ஆக வைத்திருக்கிறது.

பைக்கை ஸ்டார்ட் செய்த உடனேயே, இன்ஜின் சத்தம் மாறியிருப்பதை உணர முடிகிறது. முன்பைவிட இப்போது ஸ்மூத்தாகவும், அமைதியாகவும் இருக்கிறது. அதிர்வுகளும் குறைந்துவிட்டன. இன்ஜினும் BS-6 ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் பைக்கின் எடை 11 கிலோ உயர்ந்து 159 கிலோவாகியுள்ளது. எக்ஸாஸ்ட்டின் ரூட் மாற்றப்பட்டுள்ளதால் கிரவுண்டு கிளியரன்ஸும் 20மிமீ குறைந்துவிட்டது. இந்த அப்டேட்டுகள், பைக்கின் விலையை ரூ.10,000 வரை அதிகரித்திருக்கின்றன. பாசிட்டிவான விஷயம் என்னவென்றால் இப்போது டியூக் 200-ல் டூயல் சேனல் ஏபிஎஸ் வருகிறது.
டியூக்கிடம் முன்பு இருந்த சில அடாவடி கேரக்டர்கள் இப்போது இல்லை. இதனால், பழைய கேடிஎம் புள்ளிங்கோக்களுக்கு இந்த பைக் திருப்தி தராமல் இருக்கலாம். ஆனால், முன்பை விட அதிக வசதிகளோடு, சொகுசான ரைடிங் அனுபவமும், புதிய ஸ்டைலும் நிறைய இளைஞர்களை இந்த 200 ஈர்க்கும்.

கேடிஎம் 390 டியூக்
டியூக் 200 போல 390-யும் கொஞ்சம் மாறியுள்ளது. ஸ்டைல் மாற்றங்கள் என்று பார்த்தால் இரண்டு புது நிறங்கள் வந்திருப்பது மட்டுமே. அதிலும், மேட் கிரே கலர் அதிகம் கவனம் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. பவர் மற்றும் டார்க்கில் மாற்றம் இல்லை. கேட்டலிட்டிக் கன்வர்ட்டரோடு எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும் விதமும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், எடை 4 கிலோ அதிகரித்திருக்கிறது. கூடவே கிரவுண்டு கிளியரன்ஸ் 24 மிமீ குறைந்திருக்கிறது.
ரேஸ் டிராக்கில் இந்த பைக்கை ரசிக்கத் தூண்டும் விஷயம், இதன் பை-டைரக்ஷனல் க்விக் ஷிஃப்ட்டர். இது டியூக்கை ரேஸ் டிராக்கில் வேகமாக்குவது மட்டுமில்லை, சிட்டியில் ஓட்டவும் சுலபமாக்குகிறது. இந்த ஷிஃப்ட்டருக்கு ட்யூனிங் தேவை. காரணம், அதிக இன்ஜின் RPM-ல் கியர் மாற்றும்போது ஸ்மூத்தாக இருக்கிறது.

குறைவான வேகங்களில் மாற்றும்போது, கொஞ்சம் திணறுவதுபோல தெரிகிறது. 390 டியூக்கின் விலை ரூ.5000 வரை அதிகமாகிவிட்டது. இந்த அப்டேட்டுக்கு இது ஏற்ற விலைதான்.