கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இதுக்கு மேல் ஹிமாலயனில் என்ன வேணும்?

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-6
பிரீமியம் ஸ்டோரி
News
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-6

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-6

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் - BS-3 வெர்ஷனில் முதன்முதலாக வந்த இந்த அட்வென்ச்சர்/ஆஃப்ரோடு/டூரர் பைக், 3 தலைமுறைகள் தாக்குப்பிடித்து இப்போது BS-6 ஆக மாறிவிட்டது.

வந்த புதிதில் இந்த பைக்கின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் அளவுக்குப் பிரச்னைகள் இருந்தன. அதை அடுத்த வெர்ஷனில் சரிசெய்துவிட்டது ராயல் என்ஃபீல்டு. அதேபோல இந்த BS-6 எடிஷனில் சில மேம்படுத்துதல் வேலையைச் செய்திருக்கிறோம் என்றது ராயல் என்பீல்டு. என்னவென்று பார்க்க, சென்னையில் இருக்கும் ஃபார்ம் எனும் ஆஃப்ரோடு மைதானத்தில் பைக்கை ஓட்டிப்பார்த்தோம்.

BS-4 வெர்ஷனிலேயே Fi வந்துவிட்டதால், இந்த முறை பைக்கில் பவர் மற்றும் டார்க் குறையவில்லை. BS-6 ஆக இந்த பைக்கை மாற்றுவதற்கு கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரைக் கூடுதலாகப் பொருத்தி, சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். இன்ஜினில் பெரிய மாற்றத்தை உணரமுடியவில்லை. முன்பு இருந்ததைப் போலவே பவர் டெலிவரி சீராக இருக்கிறது. நெடுஞ்சாலையில் தொடர்ந்து 100 கி.மீ வேகத்திலேயே செல்லலாம். 120 கி.மீ வேகத்தைத் தாண்டும்போது பைக்கில் ஏற்படும் அதிர்வுகள் குறைந்திருப்பது தெரிகிறது. எக்ஸாஸ்ட் சத்தமும் சற்று குறைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-6
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-6

பெரிய மாற்றம் என்றால், அது பிரேக்கில்தான். ஏபிஎஸ் வந்தபிறகு பிரேக்கின் ஃபீட்பேக் சிறப்பாக இல்லை எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தோம். அதை இந்த முறை சரிக்கட்டிவிட்டார்கள்.

Royal Enfield Himalayan BS-6
Royal Enfield Himalayan BS-6

பிரேக் பிடிக்கும் நேரத்தை முன்பை விட நன்றாகவே உணரமுடிகிறது. இதனால், பிரேக்கின் மீது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. ஆஃப்ரோடு விரும்பிகளுக்காக ரியர்வீல் ஏபிஎஸ் ஆஃப் செய்யும் வசதி உண்டு. பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் இருக்கும் ஏபிஎஸ் பட்டனை 5 நொடிகள் அழுத்திப்பிடித்தால் ஏபிஎஸ் லைட் ஒரு முறை கண்ணடிக்கும். அவ்வளவுதான் ஏபிஎஸ் ஆஃப் ஆகிவிட்டது என்று அர்த்தம். ஏபிஎஸ் இருப்பதைவிட ஆஃப் செய்துவிட்டு ஓட்டுவதுதான் இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதிலும், ஆஃப்ரோடில் டிரிஃப்ட் அடித்து ஓட்டுவது வேற லெவல்.

சில சின்னச் சின்ன அப்டேட்களும் உண்டு. பைக்கில் ஹஸார்டு லைட் மீண்டும் வந்துவிட்டது. ஹிமாலயனில் லடாக் சென்றிருந்தபோது, பைக்கை சமதளம் இல்லாத பகுதிகளில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. அதிலும் முக்கியமாக உயரம் குறைவான ரைடர்களுக்கு இது இன்னும் சிரமம். அந்தப் பிரச்னையையும் இப்போது சரிக்கட்டிவிட்டது ராயல் என்ஃபீல்டு. சைடு ஸ்டாண்டை மூன்று டிகிரி வரை சாய்வாக வைத்திருக்கிறார்கள். சியட் நிறுவனத்தின் Gripp XL டயர்கள் வருகின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இருந்த மலைபோன்ற டிசைனைக் காணவில்லை.

இதுக்கு மேல் ஹிமாலயனில் என்ன வேணும்?

ஆஃப்ரோடை அடையாளப்படுத்த வெறும் மேட் ஃபினிஷில் வந்துகொண்டிருந்த ஹிமாலயன், இரண்டு புதிய பளிச் நிறங்களோடு வருகிறது. கிராவல் கிரே என்ற மேட் ஃபினிஷ் பெயின்ட்டும் புதுசு. புதிய அப்டேட்கள் ஹிமாலயனை முன்பைவிட இன்னும் சிறப்பான பைக்காக மாற்றியிருக்கிறது என்று முழுமனதோடு சொல்லமுடியவில்லை. ஆனால், இந்த அப்டேட்கள் கவர்ச்சிகரமானவை.

ஹிமாலயன்தான் இந்தியாவின் பர்ஃபெக்ட் அட்வென்ச்சர் டூரர் பைக்கா என்ற கேள்விக்குப் பதில், அதற்கு இன்னும் பல மைல் கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த விலையில், ஹிமாலயன் கொடுக்கும் பன்முகத்தன்மையான ரைடிங் அனுபவத்தைக் கொடுக்க இதுவரை இந்தியாவில் வேறு எந்த பைக்கும் இல்லை என்பது உண்மை.