ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

உங்களுக்கான உள்ளாடைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களுக்கான உள்ளாடைகள்

துப்பட்டா அணியாமல் ஆடைகள் அணியும்போதும், துப்பட்டா இல்லாத ஆடைகள் அணியும்போதும் மார்பகத் தோற்றம் மற்றும் நிப்பிள் வெளிப்படும் எனச் சிலர் அசௌகர்யமாக உணரலாம்.

பொதுவாக நம்மில் பலர் ஆடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை உள்ளாடைகளுக்குக் கொடுப்பதில்லை. ‘உள்ள போடுறதுதானே... எப்படி இருந்தா என்ன’ என்ற மனநிலை, உள்ளாடைகளைக் கடைகளில் பொதுவெளியில் தேர்வு செய்வதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு அவசர கதியில் கையில் கிடைப்பதை வாங்குவது, உள்ளாடைதானே என்று விலை குறைந்த மலிவான துணிகளில் வாங்குவது என்று இந்த மனோபாவம் இன்றும் பலரிடம் இருக்கிறது.

நாம் அதிக பணத்தை ஆடைகளுக்காகச் செலவழிக்கிறோம். ஆனால், அந்த ஆடைகளின் ஃபிட்டிங் அழகாக வெளிப்பட உள்ளாடைத் தேர்வும் மிகவும் அவசியம். ‘நான் ஃபிட்டா தான் இருக்கேன். ஆனா, எந்த ஆடையும் அமைப்பா இருக்கிறதில்லையே...’ என்பவர்கள் பலர்.

ஆடையின் வெளித்தோற்றம் நாம் தேர்வு செய்யும் உள்ளாடையைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள் ஸ்டைலிஸ்ட்கள். மேலும், உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சார்ந்ததும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 அர்ச்சனா
அர்ச்சனா

உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்வது எப்படி? உள்ளாடையின் துல்லிய அளவை அறிவது எப்படி? உள்ளாடைகளில் எத்தனை வகைகள் உள்ளன? உள்ளாடை வாங்கும் போது கவனிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? உள்ளாடைகள் தோற்றத்துக்கு மட்டுமன்றி ஆரோக்கியத்துக்கும் எந்தளவுக்கு முக்கியமானவை? இப்படி உள்ளாடை தொடர்பாக ஏ டு இஸட் விஷயங்களை இந்த இணைப்பிதழில் தொகுத்துள்ளோம். அழகும் ஆரோக்கியமும் மெருகேற வாழ்த்துகள்!

உள்ளாடைகளின் அளவு முதல் உடை களுக்கு ஏற்ற உள்ளாடைகள் வரை ஆலோ சனைகள் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.

அளவு மாறிக்கொண்டே இருக்கும்!

நம்மில் சிலர் சரியான அளவில் உள்ளாடை அணியாமல் இருக்கலாம். பல வருடங்களாக ஒரே சைஸில் அணிந்துகொண்டிருப்பது, ‘எனக்கு என்ன சைஸ் வாங்கலாம்’ என்று கடையில் சேல்ஸில் இருப்பவரிடம் கேட்டு, அவர் குத்துமதிப்பாக எடுத்துக் கொடுக்கும் உள்ளாடையை அணிவது எனப் பொருத்தமில்லாத அளவுகளில் உள்ளாடை அணிபவர்கள் பலர். நம் உடல் அமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதால், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உள்ளாடை வாங்கும்போதும் அளவெடுத்து வாங்குவது நல்லது.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!
Александр Медведев

எப்படி அளவெடுப்பது?

இப்போது கடைகளிலேயே உள்ளாடைப் பிரிவில் டேப் இருக்கிறது. அதில் அளந்துகொள்ளலாம் அல்லது வீட்டிலேயே அளந்து சைஸை குறித்துக்கொண்டு ஷாப்பிங் செல்லலாம். `பேன்ட்டி' (Panty) வாங்கும்போது, அடி வயிற்றின் அளவு, மேல் தொடையின் அளவு ஆகியவற்றை அளந்து சைஸை அறிய வேண்டும். `பிரேஸியர்' (Brassier) வாங்கும்போது, மார்பகத்தின் கீழ் உள்ள சுற்றளவை ஒருமுறை அளந்து கொள்ளுங்கள். இது பிராவின் அளவு. உதாரணமாக மார்பகச் சுற்றளவு 34 இன்ச்கள் இருக்கிறது என்றால், பிராவின் சைஸ் 34. ஆனால், 34 சைஸிலேயே பல கப் சைஸ்கள் உள்ளன. 34A, 34B, 34C, 34D, 34E, 34F, 34G, 34H... இப்படி 35, 36 என ஒவ்வொரு சைஸுக்கும் கப் சைஸ்கள் உண்டு. இதில்

A என்பதை சிறிய கப் சைஸ், அப்படியே அதிகரித்துச் சென்று H என்பது பெரிய கப் சைஸாக முடியும். எனவே, மார்பகச் சுற்றளவுடன் கப் சைஸையும் கவனித்து பிராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுக்கமாக பிரா அணிந்தால் தோள்பட்டை வலி ஏற்படலாம், தளர்வாக அணிந்தால் உள்ளாடையின் பலனே குறைந்துபோகும் என்பதால் சரியான அளவில் பிராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த ஆடைக்கு என்ன பிரா..?

பிராவைப் பொறுத்தவரை பல வகைகள் உள்ளன.

டீன்ஏஜ் பிரா (Teenage Bra)

டி-ஷர்ட் பிரா (T-Shirt Bra)

அண்டர் வயர் பிரா (Under wire Bra)

நான் வயர் பிரா (Non wire Bra)

பிராலட் பிரா (Bralette Bra)

பேடட் பிரா (Padded Bra)

நான் பேடட் பிரா (Non padded Bra)

டெமி கப் பிரா (Demi cup Bra)

லாங் லைன் பிரா (Long line Bra)

புஷ் அப் பிரா (Push up Bra)

ஸ்டிக் ஆன் பிரா (Stick on Bra)

ஸ்போர்ட்ஸ் பிரா (Sports Bra)

ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless)

மெட்டர்னிட்டி பிரா (Maternity Bra).... இப்படிப் பயன்பாட்டுக்கு ஏற்ப பிராவில் நிறைய வகைகள் உள்ளன. இதன் வடிவமைப்பு மற்றும் இவற்றில் யார், எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!
dannikonov

டீன்ஏஜ் பிரா

பதின் பருவப் பெண்கள் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கும்போது, அவர்களுக்கு ஃப்ரெண்ட்லியாக இருக்கக்கூடிய பிரா டைப் இது. ஹூக் இல்லாமல், ஸ்ட்ரெச்சபிளாக (Stretchable), சாஃப்ட் காட்டன் துணியில் இருப்பதால் அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும். மார்பக வளர்ச்சியின் ஆரம்ப வருடங்களில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு இதை வாங்கிக் கொடுக்கலாம்.

டி-ஷர்ட் பிரா

மெலிதான துணியிலான டி-ஷர்ட் அணியும்போது, உள்ளாடையின் அச்சு வெளித்தெரியாத வண்ணமும், மார்பகங்களுக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கும்படியும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த டி-ஷர்ட் பிராவைத் தேர்ந்தெடுக்கலாம். டி-ஷர்ட் மட்டுமல்ல, டாப்ஸ், ஷர்ட் என எந்த மெலிதான துணியிலான ஆடைக்கும் இதை அணியலாம்.

அண்டர் வயர் பிரா

பிராவின் அடிப்பாகத்தில், மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் மெட்டல் வயர் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிராவை அண்டர் வயர் பிரா என்பார்கள். இதில் பேட்கள் இணைக்கப்பட்டு இருக்கும். சில பெண்களுக்கு மார்பகங்கள் சற்றுத் தளர்வாகி, தொங்கியது போன்ற தோற்றமளிக்கும். அவர்களுக்கு இந்த வகை பிரா நல்ல சப்போர்ட் கொடுக்கும். குறிப்பாக, தாய்ப்பால் புகட்டிய தாய்மார்கள் அதை நிறுத்திய பிறகு அடுத்த சில மாதங்களுக்கு அண்டர் வயர் பிராவைப் பயன்படுத்தலாம்.

நான் வயர் பிரா

இதில் கப் மற்றும் பேட் இருக்கும். மெட்டாலிக் வயர்கள் இருக்காது. மார்பகங்கள் தளர்வு இல்லாமல் ஃபிட்டாக இருக்கிறது என்று உணர் பவர்கள் நான் வயர் பிராவைத் தேர்வு செய்யலாம்.

பிராலட் பிரா

`டீப் வி' (Deep V) நெக் கொண்ட வெஸ்டர்ன் ஆடைகள் பயன் படுத்துபவர்கள் பிராலட் பிராவைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

பேடட் பிரா

துப்பட்டா அணியாமல் ஆடைகள் அணியும்போதும், துப்பட்டா இல்லாத ஆடைகள் அணியும்போதும் மார்பகத் தோற்றம் மற்றும் நிப்பிள் வெளிப்படும் எனச் சிலர் அசௌகர்யமாக உணரலாம். அவர்கள் பேடட் பிரா அணியும்போது அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். சல்வார், கவுன், குர்தி என எந்த ஆடைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

நான் பேடட் பிரா

இதில் கப் இருக்கும், பேட் இருக்காது. புடவைக்கு நார்மலான பிளவுஸ் அணியும்போது, இரவு நேரப் பயன்பாட்டுக்கு என இதைப் பயன்படுத்தலாம் என்றாலும் கூடுமானவரை இரவு நேரத்தில் பிரா பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

டெமி கப் பிரா

பெரும்பாலான பெண்கள் டெமி கப் பிராக்களைத்தான் பயன்படுத்து வார்கள். இது செமி (பாதி) கப் வடிவமைப்புடன் மார்பகத்தை முழுமையாக கவர் செய்யும். மார்பகத்தை எடுப்பாக, பெரிதாகக் காட்டாமல் இயல்பாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இதைத் தேர்வு செய்ய லாம். சல்வார், குர்தி போன்ற எல்லா ஆடைகளுக்கும் டெமி கப் பொருத்தமாக இருக்கும்.

லாங் லைன் பிரா

பிரா அணியும்போது, சிலருக்கு மார்பகத்துக்கும் அக்குள் பகுதிக்கும் இடையில் சதைப்பகுதி திரட்சியாக இருக்கும். இவர்கள் மார்பகத்தை அக்குள் வரை முழுமையாக கவர் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த லாங் லைன் பிராவைத் தேர்வு செய்யலாம்.

புஷ் அப் பிரா

சிறிய மார்பகங்களை எடுப்பாகக் காட்ட விரும்புபவர்கள் புஷ் அப் பிராக்களைத் தேர்வு செய்யலாம். புடவைக்கு அணியும் பிளவுஸுக்கும் இது எடுப்பான தோற்றம் கொடுக்கும். பேடட் பிராவில் பேட் இணைக்கப் பட்டு இருக்கும், மார்பகங்களைப் பெரிதாகக் காட்டும். அதுவே புஷ் அப் பிராவைப் பொறுத்தவரை பேட் மற்றும் சில சாஃப்ட் மெட்டீரியல்களும் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஸ்டிக் ஆன் பிரா

`பேக்லெஸ்' (Backless) ஆடைகள் அணியும்போது, முன் பகுதி மட்டும் கவர் ஆனால் போதும் என்பவர்கள் ஸ்டிக் ஆன் பிராவைத் தேர்வு செய்யலாம். இது பக்கவாட்டில் மற்றும் மார்பகத்தோடு ஒட்டிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். முதுகுப் பகுதியில் ஸ்ட்ராப் இருக்காது. ஸ்டிக் செய்யும் மாடலால் சிலருக்கு சரும அலர்ஜி ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்போர்ட்ஸ் பிரா

வேகமாக நடக்கும்போது, ஓடும்போது, கடினமான வேலைகள் செய்யும் போது, விளையாட்டுப் பயிற்சிகளின்போது மார்பக அசைவுகளால் சிலருக்கு வலி ஏற்படலாம். அந்த அசைவையும் வலியையும் தவிர்த்து நல்ல சப்போர்ட் கொடுக்க, ஸ்போர்ட்ஸ் பிரா கைகொடுக்கும். வொர்க் அவுட், ஜிம், கிரவுண்ட் எனச் செல்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

ஸ்ட்ராப்லெஸ் பிரா

நெக் டிசைன் `டீப் வி' (Deep V) ஆக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஓப்பன் நெக் ஆடைகளை அணியும்போது, ஸ்ட்ராப் இல்லாத பிராவை அணிய வேண்டியிருக்கும். அந்த வகை ஆடைகளுக்கு ஏற்றது ஸ்ட்ராப்லெஸ் பிரா. இதில் ஸ்ட்ராப் இல்லாமல், பின்புறம் ஹூக் அல்லது எலாஸ்டிக் வடிவமைப்பில் இருக்கும். விரும்பினால், டிரான்ஸ்பரன்ட் ஸ்ட்ராப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மெட்டர்னிட்டி பிரா

பாலூட்டும் தாய்மார்கள் ஃப்ரன்ட் ஹூக் பிராவைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், மார்புக் காம்புப் பகுதியில் திறந்து மூடும் வகையில் ஓப்பன் உள்ள மெட்டர்னிட்டி பிராவும் கடைகளில் கிடைக்கிறது.

அண்டர்வேர்... உங்கள் சாய்ஸ் எது?

அடுத்ததாக, அண்டர்வேர் ரகங்கள் பற்றிப் பார்க்கலாம்.

பாய் ஷார்ட்ஸ் (Boy Shorts)

க்ளாஸிக் ப்ரீஃப் (Classic Brief)

ஹிப்ஸ்டர்ஸ் (Hipsters)

ஃபிரெஞ்சு கட் (French cut)

பீரியட் அண்டர்வேர் (Period Underwear) என பேன்டியில் தேவைக்கேற்ற வகைகள் உள்ளன.

பாய் ஷார்ட்ஸ்

இது சிறிய சைஸ் டிரவுசர் போல இருக்கும். ஷார்ட் ஸ்கர்ட் அல்லது பிற ஷார்ட் ஆடைகளுடன் அணிய இதைத் தேர்வு செய்யலாம்.

க்ளாஸிக் ப்ரீஃப்

இது முன், பின் பக்கங்களில் முழுமையான கவரேஜ் உடன் இருக்கும். ஜீன்ஸ் அணிபவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

ஹிப்ஸ்டர்ஸ்

பாய் ஷார்ட்ஸுக்கும் பிகினிக்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும். ஃபார்மல் காட்டன் பேன்ட்கள் மற்றும் லோ ஹிப் பேன்ட் அணிபவர்கள் இதைத் தேர்வு செய்யலாம்.

ஃபிரெஞ்சு கட்

இதில் கவரேஜ் குறைவாக இருக்கும், இடுப்பு உயரமாக இருக்கும். லோ வெயிஸ்ட் பேன்ட்டுக்கு தவிர்த்து ஹை வெயிஸ்ட் பேன்ட்கள் அணியும்போது அணியலாம்.

பீரியட் அண்டர்வேர்

இந்த உள்ளாடை கொஞ்சம் தடிமனாக இருக்கும். மாதவிடாய் நாள் களில் பேடு, டாம்பூன் பயன்படுத்தினாலும் சிலருக்கு உதிரப்போக்கு ஆடைகளில்படும்போது அசௌகர்யமாக உணரலாம். அவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

உள்ளாடைகள்... ஆரோக்கியத்துக்கும் அவசியம்!

உள்ளாடைகள் அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி விவரிக்கிறார் மகப்பேறு மருத்துவர் நந்தினி ஏழுமலை.

உள்ளாடைகள் அணிவதன் முக்கிய நோக்கம், தனிநபர் சுகாதாரத்தைப் பராமரிப்பது. ஆனால் பலரும் அதை வெளித்தோற்றத்துக்கான முக்கியத் துவமாக மட்டுமே நினைக்கிறார்கள். அது சார்ந்த சுகாதாரம் பற்றிய விஷயங்களை அறிவதுகூட இல்லை. எனவே, உள்ளாடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது தோற்றத்துக்கான விஷயமாக மட்டும் பார்க்காமல், உடல்நலத்துக்கும் ஆரோக்கியமானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நமக்கு என்ன வகை பொருந்துகிறது, எந்தத் துணி ரகம் சௌகர்யமாக இருக்கிறது, ஃபிட்டிங் சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் முன்னிறுத்தி உள்ளாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளாடை வாங்குவதில் குறிப்பிட்ட நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வது அவசியம். இன்னும் சொல்லப்போனால், உள்ளாடைகளுக்கென்றே தனியாக ஒருநாள் ஷாப்பிங் சென்றால் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வாங்கி வர முடியும். இல்லையென்றால், எல்லா ஷாப்பிங்கையும் முடித்த பிறகு அவசரத்தில் கடைசியாகக் கைக்குக் கிடைக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டு பில் செய்யச் சென்றுவிடுவார்கள் பலர்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

போஸ்ச்சர் முதல் முதுகுவலி வரை!

பிரா அணியும்போது மார்பகங்களுக்கு ஒரு சப்போர்ட் கிடைக்கும். இதனால் மார்பகங்களில் வலி ஏற்படுவது தவிர்க்கப்படும். குறிப்பாக, பாலூட்டும் காலத்தில் இந்த சப்போர்ட் மார்பகங்களுக்கு மிகவும் அவசியம். பாலூட்டும் காலத்தில் பிரா அணியத் தேவையில்லை என்பது தவறான நம்பிக்கை.

பிராவை மிகச் சரியாகப் பொருந்தும் அளவில் அணியும்போது, நிற்கும் நிலை (Posture) மேம்படும்.

பிரா, மார்பகங்களுக்குத் தேவையான சப்போர்ட் கொடுப்பதால் முதுகு வலி ஏற்படாது.

அதிக இறுக்கமாகவோ அதிக தளர்வாகவோ பிரா அணியக் கூடாது. பிராவை மீறி தசை வெளியே தெரியாமல் இருக்கும்படி அமைய வேண்டும். பிராவின் பட்டை அழுத்தி உடலில் தடம் விழக் கூடாது. இவைதான் சரியான பிரா அணிந்திருப்பதை அளவிடும் அளவுகோல்.

பேன்டி... அந்தரங்க சுகாதாரம்!

பேன்டி அணிவதன் மூலம் வெஜைனா பகுதி உலர்வாகப் பராமரிக்கப் படும். பாக்டீரியாக்கள், அசுகாதாரம் போன்றவற்றை தவிர்க்கும். இதனால் அந்தப் பகுதியில் எரிச்சலுணர்வு, அரிப்பு போன்றவை ஏற்படாது. பொதுவாகப் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன், பின் நாள்களில் டிஸ்சார்ஜ் இருக்கும். அது ஆடைகளில் படியாமல் உள்ளாடை தவிர்க்கும். மாதவிடாய் நேரத்தில் கச்சிதமான அளவில் பேன்டி அணியும்போது, நாப்கின் இடம்விலகுவது, சுருங்குவது, உள்ளாடையில் கறைபடுவது போன்ற பிரச்னைகள் ஏற்படாது என்ற தன்னம்பிக்கை உணர்வு ஏற்படும்.

ஒரு நாளைக்கு ஓர் உள்ளாடையா?

ஒரு நாளில் இரு வேளை குளிக்கும் நல்ல பழக்கம் உள்ளவர்கள், அப்போது உடைகளைப் போல உள்ளாடையையும் மாற்றிவிட வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு ஓர் உள்ளாடைதான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. உடற்பயிற்சி, அதிக வியர்வை, மழையில் நனைவது போன்ற சூழல்களில் உள்ளாடையையும் உடனடியாக மாற்ற வேண்டும். உள்ளாடைகள் ஈரப்பதத்துடன் இருந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். மேலும், வெளுத்துப் போகும்வரை, கிழிந்து போகும்வரை என உள்ளாடை களைப் பயன்படுத்தக்கூடாது. ஓர் உள்ளாடையை அதிகபட்சம்

90 தடவைக்கு மேல் பயன்படுத்தாமலிருப்பதுதான், உடல் சுகாதாரத்துக்கு நல்லது.

துவைக்கும்போது..!

உள்ளாடைகளைப் பிற ஆடைகள் மற்றும் பிறர் ஆடைகளுடன் சேர்த்து வாஷிங்மெஷினில் துவைக்கும்போது, அதிலிருக்கும் பாக்டீரியா போன்றவை பிற ஆடைகளுக்கும் பரவலாம். எனவே, உள்ளாடைகளைத் தனியாக ஊறவைத்துத் துவைக்க வேண்டும். அதிக ரசாயனம் சேர்க்கப்பட்ட வாஷிங் திரவங்கள், கிருமிநாசினி போன்றவற்றை பயன் படுத்தக் கூடாது. இந்த ரசாயனங்கள், சென்சிட்டிவ்வான அந்தரங்கப் பகுதியில் எரிச்சலுணர்வு, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.. எனவே சாதாரண சோப், டிடர்ஜென்ட் பயன்படுத்தித் துவைத்தால் போதுமானது. உள்ளாடைகளை சோப் போகும் வரை நன்றாக அலச வேண்டும்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

நிறங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா?

மருத்துவ ரீதியாக, உள்ளாடைகளின் நிறங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் பெரிய சம்பந்தமில்லை. கறுப்பு நிற பிரா அணிந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்ற நம்பிக்கை தவறானது. அதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கோடைக்காலத்தில் கறுப்பு போன்ற அடர் நிறத்திலான ஆடைகள் அணியும்போது சூரிய ஒளியை ஆடைகள் அதிகம் கிரகித்துக்கொள்ளும் என்றாலும் அது வெளியில் அணியும் ஆடைகளுக்குத் தான் பொருந்துமே தவிர, உள்ளாடைகளுக்கு இல்லை.

வெளிர் நிற உள்ளாடைகள்... டிக்!

பொதுவாக, அடர் நிற உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதைத்தான் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், அடர் நிறம் எனும்போது அதில் அதிக அளவில் சாயமேற்றப்பட்டிருக்கும். அதுவே தரமில்லா துணியாக இருந்தால், சாயம் போகும். அந்தச் சாயம் சருமத்தில் எரிச்சலுணர்வை ஏற்படுத்தலாம். மேலும், அடர் நிற பேன்டி அணியும்போது வெள்ளைப்படுதல், திரவக்கசிவு போன்றவை ஏற்பட்டால் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற கசிவு இருந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். வெளிர் நிறத்தில் உள்ளாடைகள் அணியும்போது இதுபோன்ற பிரச்னைகளைத் தவறாமல் கண்டறிந்துவிடலாம். அந்தரங்க சுகாதாரத்தைப் பேணுவதற்கும் இது அதிக அளவில் கைகொடுக்கும்.

எந்த வகை உள்ளாடை ஆரோக்கியமானது..?

காற்றோட்டமுள்ள வகையில் துணி மற்றும் வடிவமைப்பு கொண்ட உள்ளாடையே சிறந்தது. அந்த வகையில், காட்டன்தான் சிறந்தது. நைலான், பாலிஸ்டர் போன்ற சிந்தடிக் மெட்டீரியல் வகை உள்ளாடைகளில் ஈரம்பட்டால் அதை உறிஞ்சிக்கொள்ளாது. இது பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தி, வெள்ளைப்படுதலை அதிகப்படுத்தலாம். எனவே, இதுபோன்ற துணி ரகங்களால் ஆன உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிவதைத் தவிர்க்கவும். வடிவமைப்பை பொறுத்தவரை பிகினி, பாய் ஷார்ட்ஸ், க்ளாஸிக் பிரீஃப், ஹிப்ஸ்டர், ஃப்ரென்ச் கட் என எந்த வடிவமைப்பை தேர்ந்தெடுத்தாலும், அதிலுள்ள ‘கட்’ இறுக்கமாக இருப்பது போல உணர்ந்தால், அதைத் தவிர்த்துவிட்டு வேறு சௌகர்யமன மாடலை தேர்வு செய்யலாம். அதிக இறுக்கம், அந்தரங்கப் பகுதியில் எரிச்சலுணர்வு, அரிப்பை ஏற்படுத்தலாம்.

24 மணி நேரப் பயன்பாடு நல்லதா?

இரவு உறங்கச் செல்லும்போது உள்ளாடைகள் அணிவதைத் தவிர்ப்பதால் இறுக்கம், உராய்வு இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். பகலில் இருந்த இறுக்கம் தளர்ந்து, தசைகளும் தளர்ந்து, அழுத்தம் (Pressure) இல்லாமல் ரத்த ஓட்டமும் சீராகும்.

இறுக்கமான உள்ளாடைகளால் உடலின் மைய தட்பவெப்பம் (Core Temperature) அதிகரிக்கும். இந்த தட்பவெப்பம் வேறுபாட்டால், தூக்க முறை தொடங்கி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் `மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறையலாம். விளைவாக தூக்கத்தின் தரமும் குறையலாம். இரவில் தளர்வான ஆடைகள் அணிவதால் இவையெல்லாம் மேம்படும். அதனால்தான் இரவு ஆடைகள் தளர்வாக உருவாக்கப்படுகின்றன.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!
dardespot

கர்ப்பகாலமும் தாய்ப்பாலூட்டும் காலமும்!

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு 10 - 12 கிலோ எடை அதிகரிக்கும் என்பதால் மார்பகங்களும் இடுப்புச் சுற்றளவும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். குறிப்பாக, மார்பகங்களின் அளவு மூன்று மடங்கு அதிகரிக்கும். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் பெரிய வித்தியாசம் தெரியாது. அதற்குப் பிறகு மார்பகங்கள் பாரமாக இருப்பதும், வலி ஏற்படுவதும் சிலருக்கு இருக்கும். உள்ளாடைகளால்தான் இந்த அசௌகர்யம் என்று சிலர் உள்ளாடைகளை அந்தக் காலகட்டத்தில் தவிர்க்க ஆரம்பிப்பார்கள். ஆனால், அது இயல்பான உடலியல் மாற்றங்கள், மற்றும் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படும் அசௌகர்யமே என்பதை உணர்ந்து, சரியான அளவுகளில் உள்ளாடை அணிய வேண்டும். சொல்லப் போனால், கருத்தரித்த பிறகு கர்ப்பகால ஆடைகள், உள்ளாடைகளுக்காகத் தனியாக ஷாப்பிங் செய்வது அவசியம்.

கர்ப்பகாலத்தில் அணியக்கூடிய ஆடைகள், உள்ளாடைகள் தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளன. இக்காலகட்டத்தில் இறுக்கமாகவோ, மிகவும் தளர்வாகவோ இல்லாமல் மேல் வயிறு வரை சப்போர்ட் செய்வது போன்று கிடைக்கும் கர்ப்பகால பேன்டியைப் பயன்படுத்தலாம். அதே போல, பிரசவத்துக்குப் பிறகு தளர்வாகிப் போயிருக்கும் வயிற்றை சப்போர்ட் செய்யும் பேன்டியும் கிடைக்கிறது.

கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டும் காலத்தில் மெல்லிய ஸ்ட்ராப் பிராவைத் தவிர்க்க வேண்டும். பட்டையான ஸ்ட்ராப் கொண்ட பிராவாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மார்பகங்களின் அளவு விரிவடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதுதான் நல்ல சப்போர்ட் கொடுக்கும். தேவைக்கு ஏற்ப ஸ்ட்ராப்பை அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் அதிகரித்திருந்த உடல் எடை, சிலருக்குப் பிரசவத்துக்குப் பின் குறைந்திருக்கும். ஆனால், பாலூட்டுவதால் மார்பக அளவு அதிகரித்திருக்கும். எனவே, சுற்றளவு, கப் சைஸ் என்று இரண்டையும் கவனத்தில்கொண்டு பிராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தாய்ப்பாலூட்டும் காலத்தில், நிப்பிளில் மட்டும் திறந்து மூடக்கூடிய ஓப்பனிங் இருக்கும் வகையிலான வடிவமைப்புக் கொண்ட ஃபீடிங்/நர்ஸிங் பிராவைப் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகின்றனர். பொதுவிடத்தில் பாலூட்ட நேரும்போது இது வசதியாக இருப்பதாகப் பலர் உணர்கிறார்கள். அதேபோல, தாய்ப்பால் வெளியே கசிவதைத் தடுக்கும் வகையில் பேட் (Pad) பொருத்தப்பட்டிருப்பதும் தாய்மார்களை இதைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது என்றாலும், சிறிய துவாரம் வழியாகப் பாலூட்டும்போது உள்ளாடையின் விளிம்புப் பகுதி குழந்தையின் முகத்தில், வாயில் படும் என்பதால் அது குழந்தைக்கு அசௌகர்யத்தைக் கொடுக்கிறதா என்று கவனித்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

காலகட்டத்துக்கு ஏற்ற உள்ளாடைகள்!

மாதவிடாய், கர்ப்பகாலம் முதல் மெனோபாஸ் வரை அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்ற உள்ளாடைகள் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டன. மாதவிடாய் பேன்டி, கறை ஆடைகளில் படாத வகையில் சற்று கனமாக இருக்கும். எனினும், மாதவிடாய் நாள்களில் நாப்கின் மாற்றுவது போல, வாய்ப்பிருப்பவர்கள், கறை பட்டால் அந்த ஈரப்பதத்தைத் தவிர்க்க பேன்டியையும் மாற்றிவிடலாம். மேலும், நாப்கின் வைப்பதற்கு ஏற்ற வடிவமைப்பு கொண்ட பேன்டிகளும் உள்ளன.

மெனோபாஸ் காலகட்டத்தில் சிறுநீர்க் கசிவு மிகவும் பொதுவான பிரச்னையாகும். சிரித்தால், தும்மினால்கூட சிறுநீர்க் கசியும். மெனோபாஸ் நிலையில் உள்ளவர்கள் அலுவலகம், வெளியே செல்லும் நேரங்களில் அடிப்பாகம் கனமாக வடிவமைக்கப்பட்ட, எளிதாக உலரும் தன்மை கொண்ட பேன்டியைப் பயன்படுத்தலாம். சிறுநீர்க் கசிவு தரும் அசௌகர்யத்தைத் தவிர்க்கும் வகையில், நாப்கின் வைப்பதற்கான வசதியுள்ள பேன்டியையும் பயன்படுத்தலாம். நாப்கினும் பயன்படுத்தலாம்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

வயதாக ஆக பல பெண்கள் உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க ஆரம்பிப்பார்கள். ஆனால், பிரா அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தொய்வடையும் மார்பகங்களுக்கு அது தரும் சப்போர்ட்டும் முக்கியம் என்பதால் அதைத் தவிர்க்கக் கூடாது. அதேபோல, நீரிழிவு, சிறுநீர்ப்பாதை தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அந்தரங்கப் பகுதியில் தொற்றின் காரணமாக ஈர உணர்வு ஏற்படும். இது எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் பேன்டி அணிவது அவசியம். மேலும், ஏற்கெனவே சொன்னதுபோல திரவக்கசிவு, ரத்தக்கசிவு போன்றவை ஏற்பட்டாலும் எளிதாகத் தெரிய வரும்; இதனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

உளவியலும் உள்ளாடையும்!

பல ஆயிரம் செலவழித்து ஒரு பட்டுப்புடவை உடுத்தினாலும், சரியான உள்ளாடை அணியவில்லை என்றால் அசௌகர்யமாகத்தான் தோன்றும். வெளியில் பார்ப்பவர்களுக்கு விலையுயர்ந்த ஆடை அழகாகத் தெரியலாம். ஆனால், உள்ளாடையின் ஃபிட்னெஸ்தான் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். உள்ளாடை அணிவதற்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சரியான அளவிலான பிரா அணியும்போது பொதுவெளியில் நேராக நிமிர்ந்து நிற்கவும், நாலு பேர் மத்தியில் நின்று பேசுவதற்கும், இயல்பாக இயங்குவதற்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

பழைய உள்ளாடைகளுக்கு டாட்டா சொல்லுங்கள்!

சிலர் உள்ளாடையை வருடக்கணக்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். நாளாக நாளாக உள்ளாடை தரும் சப்போர்ட் மற்றும் ஃபிட்னெஸ் குறைந்துகொண்டே போகும். எலாஸ்டிக் தளர்ந்து, ஸ்ட்ராப் லூஸாகி, ஹூக் விழுந்து என்ற நிலைகளில் இருக்கும் உள்ளாடைகளைப் பயன்படுத்துவதில் பலனில்லை. கூடுமானவரை ஆறு மாதங்களில் இருந்து எட்டு மாதங்கள்தான் ஓர் உள்ளாடையைப் பயன்படுத்தலாம். பின்னர் அதைக் கழித்துவிட்டு புதியது வாங்கிவிடவும். குறிப்பாக, பிராவைப் பொறுத்தவரை உடல் அமைப்பு மாறும்போதெல்லாம் மாற்ற வேண்டும். கர்ப்பகாலத்தில் பயன்படுத்திய பிராக்களைத் தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பயன்படுத்தக் கூடாது, தாய்ப்பால் புகட்டியபோது பயன்படுத்திய பிராக்களைத் தாய்ப்பாலை நிறுத்திய பின்னரும் பயன்படுத்தக் கூடாது. உங்கள் உடலமைப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் பிராக்களை உரிய அளவில் தேர்வு செய்து வாங்குங்கள்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

இதைச் செய்யாதீர்கள்!

ஒரே சைஸ்தான் என்றாலும் எல்லா பிராண்டிலும் ஒரே வடிவமைப்பு இருக்காது. எனவே, ஒவ்வொரு பிராண்டிலும் எந்த அளவு உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லா பிராண்டிலும் ஒரே சைஸ், ஒரே கப் சைஸ் என்று வாங்கக் கூடாது.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

ஷேப்வேர்... 8 மணி நேரத்துக்கு மேல் நோ!

சிலர் தொப்பை, பின்புறம் போன்றவற்றை குறைத்துக் காட்டும், இறுக்கமான `ஷேப்வேர்' (Shapewear) உள்ளாடைகளை அணிவார்கள். உடலை இறுக்கப் பிடித்தபடி இருக்கும் இந்த ஷேப்வேர் உள்ளாடையை நீடித்த நேரம் அணியக் கூடாது. அப்படி அணியும்போது அந்தப் பகுதியில் உள்ள சருமத்தில் எரிச்சலுணர்வு, வரித்தழும்பு, பூஞ்சைத் தொற்று, அரிப்பு ஏற்படலாம். மேலும் நீண்ட நேரம் இறுக்கமாக ஷேர்ப்வேர் அணியும்போது ரத்த ஓட்டமும் பாதிக்கப்படலாம். அதிகபட்சம் 8 மணி நேரத்துக்கு மேல் ஷேப்வேர் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

வெயிலில் காயவைக்க வேண்டும்!

இன்றும் பல பெண்கள் சங்கோஜத்தினால் உள்ளாடைகளை வெளியிலோ, மொட்டை மாடியிலோ காய வைக்காமல், பிறர் கண்படாதபடி இருக்க வேண்டும் என நிழலில் அல்லது ஒரு துணிக்கு அடியில் காயப்போட்டு உலர்த்துகிறார்கள். உள்ளாடைகளை சூரிய ஒளி நேரடியாகப்படும் வகையில் காயவைக்க வேண்டும். அப்போதுதான் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். புடவை, சுடிதார் போல இதுவும் ஓர் ஆடை என்று அதை இயல்பாக்க வேண்டும்.

உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!
உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!

தாம்பத்யம்... கூடுதல் ஈர்ப்பு!

உள்ளாடைக்கும் ரொமான்ஸுக்கும் தொடர்பு உண்டு என்று அறிவோம். மேலும், ஒருவர் தான் சுகாதாரமாக இருப்பதை தன் பார்ட்னருக்கு உணர்த்தும் ஓர் அம்சமாக உள்ளாடை அமையும். கலர், டிசைன் என சற்று சிரத்தை எடுத்து ஃபேன்ஸி உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து அணியும்போது, தம்பதிகளின் தாம்பத்ய நெருக்கம் அதிகரிக்கும். ஆணும் பெண்ணும் மேட்சிங்காக அணியக்கூடிய ‘கபுள் அண்டர்வேர்’ வரை சந்தையில் கிடைக்கின்றன. மேலும், மேட்சிங்கான பிரா - பேன்டி செட் அணிவதுகூட கூடுதல் ஈர்ப்பைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய பெட்ரூம் சீக்ரெட்.

இனி ஷாப்பிங்கில் உள்ளாடைகளுக்கும் உரிய கவனம் கொடுப்போம்!