Published:Updated:

மதுர மக்கள்: ஓவியா, எஞ்சாயி எஞ்சாமி... லாக்டௌன் ஸ்ட்ரெஸ் போக்க பார்பிக்கு ஆடை வடிவமைக்கும் ஜெயஶ்ரீ!

பார்பி | மதுர மக்கள்
News
பார்பி | மதுர மக்கள்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: ஓவியா, எஞ்சாயி எஞ்சாமி... லாக்டௌன் ஸ்ட்ரெஸ் போக்க பார்பிக்கு ஆடை வடிவமைக்கும் ஜெயஶ்ரீ!

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

பார்பி | மதுர மக்கள்
News
பார்பி | மதுர மக்கள்

"எங்க வீடு அழகர்கோவிலுக்கு அடுத்து அப்பந்திருப்பதிங்கிற கிராமம்தான். ரோட்டு மேல தான் வீடு, சின்ன வயசுல இருந்து சாமி போறது, ஜனங்க கூட்டம்னு பார்த்து பார்த்து பழகிட்டோம். இந்த லாக்டௌன் வாழ்க்கைமுறை வந்ததுல இருந்து ரெண்டாவது தடவையா சித்திரைத் திருவிழாவை மிஸ் பண்ணிருக்கேன். ஒவ்வொரு தடவையும் அழகர் ஆத்துல இறங்குறப்போ இந்தக் கலர் பட்டு, அந்தக் கலர் பட்டு உடுத்தி ஆத்துல இறங்குனாருனு நியூஸ் படிப்போம்ல அந்த ஐடியாதான் வீட்டுல இருந்த ஒரு பார்பி பொம்மையை பார்த்தப்போ தோணுச்சு! சாமியே இங்க பட்டு உடுத்திட்டு போகுது இந்த பார்பிக்கு மட்டும் காலம் காலமா ஒரே மாதிரி அவுட்ஃபிட்ல பார்க்குறோமே வேற ஏதாச்சும் முயற்சி பண்ணலாமே தோணுனப்போ வந்த ஐடியாதான் இந்த பார்பி பொம்மைக்கான் வித்தியாசமான அலங்கார முயற்சி.

இது பார்பிக்கான முயற்சிங்கிறத விட லாக்டௌன் காலத்துல அதீத மன அழுத்தத்துக்கு ஆளான எனக்கே என்னைய கொஞ்ச கொஞ்சமா வெளில மீட்டெடுத்துக்க உதவுன ஒரு முயற்சினுதான் சொல்லணும். எனக்கு நானே லாக்டௌன் தெரபிஸ்ட்னு வச்சுக்கோங்களேன்." - பேசும் பார்பி பொம்மை போலவே புன்னகையுடன் விவரிக்கிறார் ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

"படிச்சது இளங்கலை கணிதம். ஆனா, இந்த ஆடை வடிவமைப்புல ஆர்வம் வந்ததுக்கு காரணும் என்னனு யோசிச்சா எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கும். என்னோட உடல் அமைப்புக்கு ஏத்த மாதிரி துணி எடுக்க போனா எங்கேயுமே சரியா அமையாது. உயரம் இருந்தா அகலம் இல்ல, அகலம் இருந்தா உயரம் இல்லைன்னு எதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கு. அப்போ எனக்காக நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். அதுதான் இப்போ இந்த பார்பி பொம்மைக்கிட்டயும் வந்துருச்சு. நிஜமாவே முதல் அலையில வந்த லாக்டௌன்ல ரொம்பவே மன ரீதியா ஒரு சோர்வு குடுத்துச்சு அப்போ இந்த பார்பிதான் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருந்துச்சு."

"முதன் முதல்ல 'விஸ்வாசம்' படத்துல நயன்தாரா கண்டாங்கி சேலை கட்டி வருவாங்க. பார்பிக்கு கண்டாங்கி கட்டி பார்ப்போம்னுதான் ஆரம்பிச்சேன். எங்க ஊரு மலையடிவாரத்துல இருக்க கிராமம். வீட்டைத் தொறந்தா பின்னாடியே வயல் இருக்கும். இந்தக் கண்டாங்கி சேலை கட்டிக்கிட்டு வயல்கிட்ட வச்சு போட்டோ எடுத்துக்கிட்டேன். என்கிட்ட இருக்கிறதே நாலு பொம்மைதான். அதனால அடுத்த கெட்டப் போடணும்னா இத எல்லாம் கழட்டணும். அதனால நினைவுகளைப் பத்திரப்படுத்திக்கணும்னு வீடியோவா எடுத்து ஸ்டோர் பண்ணிக்க ஆரம்பிச்சேன். அப்ப தொடங்கினதுதான் இந்த யூடியூப் சேனல்!

அதோட தொடர்ச்சியா ஓவியா ட்ரெஸ், 96 த்ரிஷா மாடல்னு வரிசையா பண்ண ஆரம்பிச்சேன். அதை பார்த்துட்டு நடிகை ஓவியா அவுங்க ட்விட்டர் பேஜ்ல ஷேர் பண்ணிருந்தாங்க. அது இன்னும் ஸ்வீட் சர்ப்ரைஸா இருந்துச்சு. கோவிட் தொற்றுல முன்களப்பணியாளார்களான மருத்துவத் துறை சார்ந்தவர்கள் அனுபவிக்கிற கஷ்டங்கள அவுங்களோட சேவைக்கு நன்றி செலுத்துற விதமா ஒரு செட்டப் பண்ணுனேன். அதுக்கு நிறைய ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. அதுக்கு பிறகு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவுங்கள மாடலா வச்சு பண்ணிக்குடுக்க சொல்லி கேட்பாங்க. அதோட முயற்சியா சில வேலைகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இதுல நிறைய நடைமுறை சிக்கல்களும் இருக்கு. இன்னும் சொல்லணும்னா நான் எனக்கு கூட கடை கடையா ஏறிபோயி துணி வாங்குனது இல்ல. ஆனா இந்த பார்பிக்காக விளக்குத்தூண், சித்திரைக்கார வீதி, மாசி வீதின்னு மதுரைய அலசாத ஏரியாவே இல்ல. சில நேரம் துணி கிடைச்சுரும். ஆனா அரை மீட்டர் எல்லாம் வெட்டிக்குடுக்க முடியாதுன்னு சொல்லிருவாங்க. பேஷன் டிசைனர் ஸ்டூடண்ட் பிராஜெக்ட்டுக்காக வேணும்னுனு எதாவது சொல்லி வாங்கிட்டு வந்துருவேன். சில நேரத்துல அம்மா பயன்படுத்திக்கிட்டு இருக்க சேலை முந்தானையையே அம்மாவுக்கே தெரியாம வெட்டி பார்பிக்கு மாட்டி விட்டுருக்கேன்.

ஓவியா கெட்டப் அப்போ ஓவியா தேவதை மாதிரி இருந்துருப்பாங்க. அப்போ பார்பியை தேவதையாக்கணும்னா இறகு வேணுமே! கடைசில பக்கத்து வீட்டு கோழி அதுவா இறகு உதிர்க்கிற வரை மூணு நாளா அந்த கோழிய ஃபாலோ பண்ணி றெக்கை செஞ்சேன். கேட்கவே காமெடியா இருக்குல்ல?!

ஒவ்வொரு கெட்டப்புக்கும் அதிகபட்சம் நாலுமணி நேரம் ஆகும். இப்போ சமீபத்துல 'எஞ்சாயி எஞ்சாமி' கெட்டப் போட்டேன். அதுல அந்த துணிய தைக்க மட்டும் ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதுபோக மினியேட்சருக்குத் துணி தைக்கிறதால அதுக்கான வேலை ரொம்பவேமிச்சம் தான். நம்ம வாழ்ந்த இந்தக் கோடை விடுமுறைகள் எல்லாம் நிறைய குழந்தை விளையாட்டுக்கள் இருக்குமே... கிச்சு கிச்சு தாம்பாளம், டிக் டிக் யாரதுனு பார்பி பொம்மைகள் விளையாடுவது போல வீடியோக்கள் எடுத்து வச்சுருக்கேன்.

எல்லோருக்கும் ஏதாவது வகையில தனிமை அல்லது இந்த லாக்டௌன் உங்களுக்கு சோர்வை குடுத்ததுன்னா உங்களுக்கு எது வரும் எது பிடிக்கும்னு பார்த்து அதுல ஈடுபடுத்திக்கிட்டா மனசுக்கும் உடம்புக்கும் இன்னும் நலம் என்பதுதான் என்னோட அனுபவத்துல நான் கத்துக்கிட்டது. இதை நீங்களும் முயற்சி பண்ணலாம்."