Published:Updated:

"100 போட்டியாளர்கள்... ஜிமிக்கி கம்மல்... பத்மினி டான்ஸ்... தேசிய கீதம்... 3 டைட்டில்!" - காயத்ரி

"100 போட்டியாளர்கள்... ஜிமிக்கி கம்மல்... பத்மினி டான்ஸ்... தேசிய கீதம்... 3 டைட்டில்!" -  காயத்ரி
"100 போட்டியாளர்கள்... ஜிமிக்கி கம்மல்... பத்மினி டான்ஸ்... தேசிய கீதம்... 3 டைட்டில்!" - காயத்ரி

"ஆண்டுதோறும் `மிஸ் வேர்ல்டு' மற்றும் `மிஸ் யுனிவர்ஸ்' போட்டிகள் நடைபெறுவது பத்தி பலருக்கும் தெரியும். ஆனா, `மிஸஸ் வேர்ல்டு' மற்றும் `மிஸஸ் யுனிவர்ஸ்' போட்டி ஆண்டுதோறும் ஏதாவதொரு நாட்டில் நடைபெறுவது எத்தனை பேருக்குத் தெரியும்?"

கோயம்பத்தூரைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி நடராஜன், கடந்த ஆண்டு `மிஸஸ் இந்தியா எர்த்' போட்டியில் இரண்டாம் இடம்பிடித்திருந்தார். கடந்த வாரம், பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த `மிஸஸ் யுனிவர்ஸ்' போட்டியில் கலந்துகொண்டு, முத்திரைப் பதித்திருக்கிறார். சொந்த ஊர் திரும்பியிருக்கும் காயத்ரி, மகிழ்ச்சித் தருணத்தை உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

``ஒவ்வொரு ஆண்டும் நடக்கிற, `மிஸஸ் யுனிவர்ஸ்' நிகழ்ச்சி இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துச்சு. கடந்த டிசம்பர் 2 முதல் 11-ம் தேதி வரை நடந்த அப்போட்டியில் பங்குபெற்றது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. 100 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் அப்போட்டியில கலந்துகிட்டாங்க. கடந்த ஆண்டு, `மிஸஸ் இந்தியா' போட்டியில் இரண்டாம் இடம் பெற்றதால, `மிஸஸ் யுனிவர்ஸ்' போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைச்சுது. 

உலக அளவில் நடக்கிற நிகழ்வு என்பதால், நிறைய திறமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளணும். அதனால, `ரேம்ப் வாக்'குக்காக மும்பையைச் சேர்ந்தவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். பர்சனாலிட்டி டெவலப்மென்ட்டுக்காகவும் பயிற்சி எடுத்திருந்தேன். பல மாதங்களாக ஃபிட்னெஸ்ல கூடுதல் கவனம் செலுத்தினேன். நான் பரதநாட்டிய டான்ஸர்; நீச்சல் வீராங்கனை. சமூக சேவையிலயும் கவனம் செத்துறேன். மேலும், `மிஸஸ் இந்தியா' வெற்றிக்குப் பிறகு, மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வுக்கான பிராண்ட் அம்பாசிடராக தேர்வாகியிருந்தேன். அதன்படி, மாரத்தான், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்னு நிறைய நிகழ்வுகளைச் செய்திருந்தேன். அவையெல்லாம் அப்போட்டியில் எனக்குப் பெரிசாப் பயன்கொடுத்தது" என்கிறார். 

அப்போட்டியில் நடந்த நிகழ்வுகள் குறித்துப் பேசும் காயத்ரி, ``இன்டர்வியூ சுற்று, டேலன்ட் சுற்று, நேஷனல் காஸ்டியூம் சுற்று, நீச்சல் உடை போட்டோ ஷூட் (ஃபிட்னஸ் மற்றும் கான்ஃபிடன்ஸை சோதிக்க) சுற்று, ஃபேஷன் ஷோ சுற்று, போட்டோ ஷூட் சுற்று, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் எதனால் நடக்கின்றன? அதற்கான தீர்வுகள் குறித்து நடத்தப்பட்ட கான்ஃபரன்ஸ் சுற்று உள்ளிட்ட பல சுற்றுகள் நடந்துச்சு. தனித்திறமையை வெளிப்படுத்தும் சுற்றுல, `மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுக்குப் பரதநாட்டியம் ஆடினேன். முடிவில், எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டினாங்க. 

இதற்கிடையே சிறப்பு நிகழ்வாக, அந்நாட்டிலுள்ள ஆதரவற்ற குழந்தைகளைச் சந்திச்சோம். அதில், ஒவ்வொரு போட்டியாளரும் அவங்கவங்க நாட்டிலிருந்து வாங்கிட்டு வந்த பொருள்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினாங்க. ஜிமிக்கி, கம்மல், பொம்மைகள்னு நான் வாங்கிட்டுப் போயிருந்தப் பொருள்களை, குழந்தைகளுக்குக் கொடுத்தேன். குழந்தைகள் ரொம்ப  சந்தோஷப்பட்டாங்க. தவிர, ஒருநாள் நிகழ்வில், நம்ம தேசிய கீதத்தை மேடையில் என்னுடன் சேர்ந்து சில இந்தியர்கள் பாடினாங்க. முடிவில் அரங்கில் இருந்த எல்லோரும் எழுந்து நின்னு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினாங்க. கடைசி நாளான டிசம்பர் 11-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுச்சு. மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த போட்டியாளர், `மிஸஸ் யுனிவர்ஸ்'ஸாகத் தேர்வானார். `மிஸஸ் யுனிவர்ஸ் இன் ஈஸ்ட் ஏசியா', `மிஸஸ் யுனிவர்ஸ் ஹானஸ்டி', `பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்'னு மூணு டைட்டில்கள் எனக்குக் கிடைச்சுது. 

இந்நிகழ்ச்சி மூலம், பல நாடுகளைச் சேர்ந்த திறமையான பெண்கள்கிட்ட பேசவும், பழகவும் முடிஞ்சது. தவிர, அவங்களுடைய கலாசாரம், உணவுப் பழக்க வழக்கம், பாரம்பர்யம்னு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. எந்தப் பாகுபாடுகளும் இல்லாம எல்லா போட்டியாளர்களும் அன்புடன் பழகினாங்க. இந்தப் போட்டியில் நான் கலந்துகொள்ள, என் கணவர் ராம்குமார் ராமகிருஷ்ணன்  உடனிருந்து சப்போர்ட் பண்ணினார். 'மிஸஸ் யுனிவர்ஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு இன்னும் உத்வேகம் அதிகம் கிடைச்சிருக்கு. இனி, சமூக சேவையில் மேலும் கவனம் செலுத்த இருக்கிறேன். மார்பகப் புற்றுநோய் பாதித்த இந்தியர் அல்லது வெளிநாட்டினர், அவரவர் நாட்டில் அல்லது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நலமுடன் வாழக் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். ஆர்வமுள்ள திறமையான திருமதிகளை, `மிஸஸ் இந்தியா', `மிஸஸ் யுனிவர்ஸ்'னு பல போட்டிகள்ல கலந்துக்க ஊக்கப்படுத்தப்போறேன்" என்கிற காயத்ரி, தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்கிறார். 

ஆண்டுதோறும் `மிஸ் வேர்ல்டு' மற்றும் `மிஸ் யுனிவர்ஸ்' போட்டிகள் நடைபெறுவது பத்தி பலருக்கும் தெரியும். ஆனா, `மிஸஸ் வேர்ல்டு' மற்றும் `மிஸஸ் யுனிவர்ஸ்' போட்டி ஆண்டுதோறும் ஏதாவதொரு நாட்டில் நடைபெறுவது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்ம நாட்டில் திறமையாளர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா, அவங்களுக்குப் பல போட்டிகள் மற்றும் அதற்குத் தயாராவது பற்றிய விழிப்பு உணர்வுதான் குறைவாக இருக்கு. அந்நிலை மாறினால், நல்ல மாற்றம் கிடைக்கும். 

என் பிரதான வேலை, டாக்டர் பணி. நான் வேலை செய்ற அப்போலோ குழுமம் எனக்கு ரொம்ப சப்போர்ட்  செய்றாங்க. இசை, நடனம் உட்பட பல கலைகள் இருப்பதுபோல, நேர மேலாண்மையும் என்னைப் பொறுத்தவரை ஒரு கலைதான். அக்கலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் டாக்டர் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போக, மற்ற நேரத்தைச் சரியாக திட்டமிட்டு வேலை செய்றேன். இன்னும் நிறைய சாதிக்கணும்" என்று புன்னகையுடன் கூறுகிறார், காயத்ரி.

அடுத்த கட்டுரைக்கு