Published:Updated:

`தத்ரூபமாக இருக்கணும்னு நினைத்தார், சிக்கினார்!-ஏஞ்சலினா ஜோலியை இழிவுபடுத்தியதாக இரான் பெண் கைது

இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ போட்ட இரான் பெண்ணைக் கைது செய்துள்ளது காவல்துறை.

ஏஞ்சலினா ஜோலி - சகர் தபார்
ஏஞ்சலினா ஜோலி - சகர் தபார்

விருப்பமான நடிகரைப் போல வேடமிட்டு, அதை வீடியோவாகவோ புகைப்படமாகவோ ஃபேஸ்புக் - இன்ஸ்டாகிராம் - டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதென்பது, இன்றைய டெக் உலகில் மிகச் சாதாரணமான விஷயம். மிகத் தத்ரூபமாக வீடியோ செய்தால், மக்கள் மத்தியில் பாராட்டு அதிகம் கிடைக்கப்பெறலாம் என்ற ஆசையில் தன்னை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டு வீடியோ செய்பவர்கள், ஏராளம்.

இரான் பெண்மணி, சகர் தபார்
இரான் பெண்மணி, சகர் தபார்

இரானியப் பெண்மணியான, சகர் தபாரும் பாராட்டுக்காக ஏங்கும் அப்படியான ஒரு நபர்தான். ஆனால் பாராட்டுக்காக இவர் செய்த ஒரு செயல், இப்போது அவரை சிறைக்கம்பிகளுக்குள் தள்ளியுள்ளது. இரானிய இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர், ஏஞ்சலினா ஜோலியைப் போல வேடமிட்டு, அதைப் புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஏஞ்சலினா ஜோலியைப்போல தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடந்த மாதங்களில் காஸ்மெடிக் சர்ஜரியைச் செய்துள்ளார் சகர். அவர் எதிர்பார்த்தது போலவே, புகைப்படம் வைரலாகிவிட்டது.

இரானைப் பொறுத்தவரை, சமூக வலைதள உபயோகத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த மட்டுமே அனுமதி உண்டு!
``இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்!" - ஏஞ்சலினா ஜோலி

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக, சகரின் இந்தச் செயல் காவல்துறையின் பார்வைக்குப் போய்விட்டது. சகரின் இப்படியான செயல்கள் தவறென்றும், தவறான வழியில் பெயர், புகழ், பணம் போன்றவற்றை சகர் சம்பாதித்துள்ளார் என்றும் கூறி அவரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

சகரின் இந்த நடவடிக்கை வருங்காலத் தலைமுறையினரை, இவரைப் போலவே தவறான வழியில் செயல்படத் தூண்டும் என்பதால் அவரைக் கைது செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர் காவல்துறை அதிகாரிகள். `இப்படியான மேக் அப் மூலம், ஏஞ்சலினா ஜோலியை இழிவுபடுத்தியுள்ளார்' என்ற குற்றச்சாட்டும் சகர் மேல் வைக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி

இரானைப் பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம் பயன்படுத்த மட்டுமே அனுமதி உண்டு. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற மற்ற சமூக வலைதளங்கள் அனைத்துக்கும் அங்கு ஸ்ட்ரிக்ட்லி `நோ'தான். அனுமதியுள்ள ஒரு `ஆப்'புக்கும், தற்போது வரைமுறைகள் விதிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!