ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் மெட் காலா (Met Gala) எனும் மிகப்பெரிய ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தின் மேல் ஃபேஷனான உடைகளை அணிந்து வலம் வருவார்கள். 2022-ம் ஆண்டிற்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க் நகரத்தில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியத்தில் நடைபெற்றது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில், தொழிலதிபரும் மாடலுமாகப் பிரபலமான கிம் கர்தாஷியன் பங்கேற்றார். 1962-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பாடியபோது மர்லின் மன்றோ அணிந்திருந்த உடையை, இந்நிகழ்வில் கிம் கர்தாஷியன் அணிந்திருந்தார். மன்றோ அணிந்திருந்த உடையை தான் அணிவதற்காக மூன்று வாரங்களில் தனது உடல் எடையில் சுமார் 7.3 கிலோவை குறைத்ததாகவும், இதற்காக கடுமையாக தனக்குதானே உணவு கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
உணவு கட்டுப்பாடு குறித்த கிம் கர்தாஷியன் சித்தரிப்பு பொறுப்பற்றது என பிரிட்டிஷ் டயட்டடிக் அசோசியேஷனில் பணிபுரியும் நிக்கோலா லுட்லாம்-ரெய்ன் தெரிவித்து உள்ளார். சமூக வலைதளத்திலும் இவரின் உணவு கட்டுப்பாடு குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பல மக்களும் தொடர்ந்து இவரை கவனித்து வரும் நிலையில், 10 நிமிடத்திற்கு மர்லின் மன்றோவின் உடையை அணிய மூன்று வாரங்களில் அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதாகக் கூறுவது பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும், குறுகிய காலத்தில் அதிகப்படியான எடையைக் குறைத்ததாகச் சொல்வது அபத்தமாக உள்ளதாகவும், உடைக்காக இவ்வளவு பெரிய மெனக்கெடல் தேவையா எனவும் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.