Published:Updated:

பருத்தியில் மஞ்சனத்தி, அரளி, பீட்ரூட் சாயம்... குழந்தைகளுக்கான உடைகளில் புதிய முயற்சி!

``இயற்கை சாயம் என்பதால் குறிப்பிட்ட சில வண்ணங்களில்தான் ஆடைகளைச் சாயமேற்ற முடியும். என்றாலும், அது பிடித்துப்போய் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம்."

பருத்தியில் மஞ்சனத்தி, அரளி, பீட்ரூட் சாயம்... குழந்தைகளுக்கான உடைகளில் புதிய முயற்சி!
பருத்தியில் மஞ்சனத்தி, அரளி, பீட்ரூட் சாயம்... குழந்தைகளுக்கான உடைகளில் புதிய முயற்சி!

``கைக்குழந்தைகளுக்குக்கூட சாட்டின், நெட், லேஸ், வேலைப்பாடுகள் என ஆடம்பர ஆடைகளைப் பெற்றோர் போட்டுப்பார்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் குட்டீஸோ, `குத்துதும்மா', `வலிக்குதும்மா' என்று அதைப் போட அடம்பிடிப்பார்கள். இதற்கு, இயற்கையோடு இணைந்த தீர்வுதான் எங்களின் `அம்பரம்' ஆடைகள்'' என்று ஆர்வத்துடன் பேசுகிறார் அருண். மதுரையைச் சேர்ந்த இவர் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்குத் தூய பருத்தி ஆடைகளை, செயற்கை சாயம் இல்லாத இயற்கை வண்ணங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்         .

``எனக்குச் சொந்த ஊர் மதுரை. படித்தது இளநிலை கணிதம். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும், அதை எனக்கான அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது என் கனவு. அதுதான் இன்று `அம்பரமா'க வளர்ந்து நிற்கிறது" என்று குழந்தைகளுக்கான பருத்தி ஆடை தயாரிப்பில் இறங்கிய கதையைப் பகிர்கிறார். 

``எனக்கு இயற்கை மேல் ஆர்வம் அதிகம். படிப்பு முடிந்ததும் சென்னையில் வெப்-டெவலப்பராகப் பணியாற்றினேன். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து நிறைய இடங்களுக்குப் பயணிப்பேன். சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இயற்கை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவேன். இயற்கை மீதான காதலால் பார்ப்பவர்களிடம் இயற்கை சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது என்னுடைய இயல்பு. அப்படி ஒருநாள் நண்பர்களுடன் குழந்தைகளுக்கான பருத்தி ஆடைகள் பற்றிய பேச்சு வந்தது. முன்பு மாதிரியெல்லாம் இப்போது ஆடைகள் மிருதுவாக இருப்பதில்லை, டிரெண்ட் என்ற பெயரில் குழந்தைகளுக்கான ஆடைகளை ஆயிரக்கணக்கில் விலைவைத்து விற்கின்றனர் என நண்பர்கள் சொல்ல, குழந்தைகளுக்குத் தூய்மையான பருத்தி ஆடை தயாரிக்கும் எண்ணம் மனசுக்குள் உதித்தது.

என்னுடைய இந்த ஐடியாவைச் சொன்னதும் நிறைய பேர் சிரித்தனர். என்னதான் அதிக விலை இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிராண்டான ஆடை அணிவித்துவிடத்தான் விரும்புவார்கள் என்றார்கள். ஆனால் ஃபேஷன் டிசைனரான என் தங்கை பொன்மணி என் கருத்துக்கு ஆதரவு அளித்து, பிறந்த குழந்தைகளுக்கான தூய பருத்தி ஆடை என்று ஒரு புது முயற்சி எடுத்துப் பார்ப்போம் எனத் தோள் கொடுத்தாள். கடையில் பருத்தித் துணி வாங்கி, பட்டன், ஊக்கு, எம்பிராய்டரி, எலாஸ்டிக் என எந்த ஆடம்பரமும் இல்லாத எளிமையான சில ஆடைகளை வடிவமைத்தோம். 

இயற்கையுடன் எளிமை சேர்ந்த ஆடைகள் மனசுக்குப் பிடித்த மாதிரி வர, நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகளுக்குக் கொடுத்து ட்ரையல் பார்க்கும் படி கூறினேன். மேலும், எங்களின் இந்தப் புது முயற்சி பற்றி முகநூல் பக்கத்திலும் பதிவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆர்டர்களும் வந்தன. ஆர்டர்கள் வரத்தொடங்கிய பின்னர், கைத்தறியால் நூற்ற பருத்தித் துணியில் ஆடைகள் வடிவமைக்கத் தொடங்கினோம்.

சில பெற்றோர்கள், வெண்மை தவிர்த்து வண்ண ஆடைகளையும் எதிர்பார்த்தனர். எனவே மஞ்சனத்தி, அரளி, பீட்ரூட் என இயற்கையான பொருள்கள் மூலம் கிடைக்கும் வண்ணத்தைக் கொண்டு ஆடைகளுக்கு நிறம் ஏற்றி வண்ண ஆடைகளுக்கு முயன்றோம். இயற்கை சாயம் என்பதால் குறிப்பிட்ட சில வண்ணங்களில்தான் ஆடைகளைச் சாயமேற்ற முடியும். என்றாலும், அது பிடித்துப்போய் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம்" என்ற அருண் தன் அடுத்தகட்ட நகர்வுகளைப் பகிர்கிறார்.

 .

``தங்கை திருமணமாகி திருவண்ணாமலையில் வசிக்கிறார். ஒவ்வொரு முறையும் ஆடைகள் அங்குச் சென்று தைக்கப்பட்டு மீண்டும் மதுரை வருவதால் அந்தச் செலவையும் ஆடையில் ஏற்ற வேண்டியிருந்தது. எனவே, தங்கையிடமிருந்து வடிவமைப்பு மற்றும் துணி தைக்கும் முறையைக் கற்றுக்கொண்டேன். பின்னர் எங்கள் ஊரில் பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்குத் தையல் பயிற்சி அளித்து, என்னுடைய பிசினஸில் பங்குகொள்ள வைத்தேன். இன்று மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு எங்களின் ஆடைகள் பயணிக்கின்றன. ஆரம்பத்தில், பிறந்தது முதல் ஆறுமாத குழந்தைகளுக்கு மட்டுமே ஆடைகள் வடிவமைத்தோம். இப்போது இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடைகள் தயார் செய்கிறோம். அடுத்தகட்டமாக இன்னும் நிறைய பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் விதமாக ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடைகள் தயாரிக்க உள்ளோம். வருமானம் குறைவு என்றாலும் புதுமையுடனும் சமூக நோக்கத்துடனும் `அம்பரம்' இன்னும் வளரும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.