Published:Updated:

டெல்லியைக் கலக்கிய `கருப்பசாமி வீச்சரிவாள்' ஆட்டம்!'- அசத்திய ராமநாதபுரம் சுட்டிகள்

நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 850-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற இந்தக் கலை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஜவஹர் மன்றத்தினர் நடத்திக் காட்டிய கருப்பசாமி வீச்சரிவாள் ஆட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

குழந்தைகள் தினம் நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் ஆட்சியர்
குழந்தைகள் தினம் நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் ஆட்சியர் ( உ.பாண்டி )

குழந்தைகள் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஜவஹர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்ற கருப்பசாமி வீச்சரிவாள் ஆட்டம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

குழந்தைகள் தினம் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சுட்டிகள்.
குழந்தைகள் தினம் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சுட்டிகள்.
உ.பாண்டி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆண்டு தோறும் டெல்லியில் தேசிய குழந்தைகள் தின கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்சிகளும் இடம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த தேசிய குழந்தைகள் தின கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையத்தினர் ராமநாதபுரம் ஜவஹர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த குழந்தைகளை தேர்வு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஜவஹர் சிறுவர் மன்றத்தின் திட்ட அமைப்பாளர் லோகசுப்பிரமணியன் தலைமையில் நிவேதாஶ்ரீ, பிரஜின்குமார், கேசவநித்தீஷ், சுதர்சன், எஸ்தர் அந்தோணி, யோகித், புவனேஷ், முகிலன், ஹரீஸ், சிலம்பொலி ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் தமிழகத்தின் பாரம்பர்ய கலைகளான சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் முன் நிகழ்த்தி காட்டினர்.

குழந்தைகள் தினம் கலை நிகழ்ச்சியில் தமிழக சுட்டிகள்
குழந்தைகள் தினம் கலை நிகழ்ச்சியில் தமிழக சுட்டிகள்
உ.பாண்டி

நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 850-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற இந்தக் கலை நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஜவஹர் மன்றத்தினர் நடத்திக்காட்டிய கருப்பசாமி வீச்சரிவாள் ஆட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து கருப்பசாமி வேட்டமிட்டு வீச்சரிவாள் ஆட்டம் ஆடிய சிலம்பொலியை மற்ற மாநிலங்களிலிருந்து வந்திருந்த சிறுவர் மன்ற குழந்தைகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த குழந்தைகள் கருப்பசாமி வேடமிட்ட சிலம்பொலியுடன் ஆர்வத்துடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

கருப்பசாமி வேடமிட்ட சுட்டியுடன் மற்ற மாநில குழந்தைகள்
கருப்பசாமி வேடமிட்ட சுட்டியுடன் மற்ற மாநில குழந்தைகள்
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளைப் பாராட்டி சான்று வழங்கினார். தேசிய குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய ராமநாதபுரம் ஜவஹர் சிறுவர் மன்ற குழந்தைகள் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.