தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

மேக்கப் ஆர்டிஸ்ட்... இது அழகுக்கலைஞர்களின் வெர்ஷன் 2.0

 தீபிகா சரண்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபிகா சரண்

வாய்ப்புகள் ஆயிரம்

ழகுக்கலை நிபுணர்களின் அடையாளம் அடுத்த வெர்ஷனுக்குத் தயாராகி வருகிறது. பியூட்டீஷியன் என அழைக்கப்பட்டவர்கள், ‘மேக்கப் ஆர்ட்டிஸ்ட்’ என அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் இணைகிறார் சென்னையைச் சேர்ந்த தீபிகா சரண்.

பெற்றோரின் விருப்பத்துக்காக எம்.டெக் முடித்தவர், தன் விருப்பத்துக்காகத் தேர்ந்தெடுத்தது மேக்கப் துறையை. படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் அதை ஒவ்வொரு நொடியும் ரசித்து செய்கிறார்.

அழகுக்கலை
அழகுக்கலை

``பி.டெக் முடிச்சிட்டு ஒரு கம்பெனியில ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அப்புறம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஃபுட் டெக்னாலஜியில் எம்.டெக் முடிச்சேன். கல்யாணம், குழந்தைன்னு தொடர்ச்சியா ஒரு பிரேக் வந்திருச்சு. அப்பதான் நானும் கணவரும் சேர்ந்து பிசினஸ் ஏதாவது தொடங்கலாம்னு யோசிச்சோம். பியூட்டி சலூன்களுக்கான ஃபிரான்ச்சைஸ் எடுத்து நடத்திட்டிருந்தோம். அப்படித்தான் மேக்கப் இண்டஸ்ட்ரி பக்கம் என் கவனம் திரும்பியது. டெல்லியில மேக்கப் பற்றி ஒரு ஸ்பெஷல் கோர்ஸ் முடிச்சேன். கடந்த ரெண்டு வருஷங்களா `விவாஷியல் பிரைடல் மேக் ஓவர்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன்’’ - அறிமுகம் சொல்லும் தீபிகா, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்பவர் யார் என நீண்ட விளக்கத்துடன் தொடர்கிறார்.

``மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ஸ்தான் இப்போ டிரெண்டில் இருக்கிறவங்க. முன்ன மாதிரி மாசக்கணக்குல பியூட்டீஷியன் கோர்ஸ் முடிக்கணும், அப்புறம் மேக்கப்ல ஸ்பெஷலைஸ் பண்ணணும்கிற நிலைமையெல்லாம் இன்னிக்கு இல்லை. அடிப்படையான ஸ்கின் கேர் பற்றித் தெரிஞ்சுகிட்டு நேரடியா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகிடலாம். ஸ்கின் டைப் எப்படியிருக்கு, அதுக்கு என்ன மாதிரியான மேக்கப் புராடக்ட்ஸ் உபயோகிக்கலாம்னு தெரிஞ்சுவெச்சிருக்கிறதுதான் அடிப்படைத் தகுதி. பிரபலங்கள் பலரும் இன்னிக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைத்தான் தேடறாங்க. மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டே பெரும்பாலும் ஹேர் டிரஸ்ஸராகவும் இருக்கிறதால ஹேர் ஸ்டைலையும் நாங்களே பார்த்துப்போம்’’ - ஆர்வமிருப்போருக்கு அழகிய தகவல் தருகிறார்.

 தீபிகா சரண்
தீபிகா சரண்

``இந்தத் துறையில உள்ள பெரிய சவால் வேலை நேரம். காலை முகூர்த்தம்னா, நடுராத்திரியிலேருந்து எங்க வேலை ஆரம்பமாகும். குடும்பச் சூழல் பெரிய அளவுல சப்போர்ட் பண்ணினாத்தான் சமாளிக்க முடியும். புதுமையான விஷயங்களைச் செய்யறாங்கன்னா அவங்களுடைய வேலை கவனிக்கப்படும். வாய்ப்புகள் தேடி வரும். வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறை இது. மணப்பெண்களுக்கு மட்டுமன்றி, மாடல்கள், நடிகைகள், பிரபலங்கள்னு பலரும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைத் தேடறாங்க இன்னிக்கு. போட்டோ ஷூட்டிலும் எங்களுடைய தேவை அதிகரிச்சிருக்கு’’ - நம்பிக்கையாகச் சொல் கிறவர், வாய்ப்புகளுக்கு இணையாக இந்தத் துறையில் போட்டிகளும் அதிகம் என்கிறார்.

``யார் வேணும்னாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகிடலாம்தான். ஆனா, அந்தத் துறையில திறமைகளை வளர்த்துக்கிட்டு, அப்டேட் பண்ணிட்டே இருக்கிறவங்களால மட்டும்தான் இந்தப் போட்டியில ஜெயிச்சுத் தாக்குப்பிடிக்க முடியும்’’ - ஜெயிக்கத் துடிப்பவர்களுக்கான பொதுவான வெற்றி ஃபார்முலா பகிர்பவர், சின்னத்திரை நடிகைகள், மாடல்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார்.

மேக்கப் தொடர்பாக பலருக்கும் எழும் பொதுவான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார் தீபிகா...

எத்தனை வகையான மேக்கப்?

சிம்பிள் மேக்கப், பார்ட்டி மேக்கப், போட்டோ ஷூட்டுக்கான மேக்கப், சினிமா மேக்கப், ஹெச்டி மேக்கப், ஏர்பிரஷ் மேக்கப், பிரைடல் மேக்கப்... இப்படி மேக்கப்பில் நிறைய வகைகள் உண்டு.

மேக்கப்
மேக்கப்

தினமும் மேக்கப் போடலாமா?

தாராளமாக தினமும் மேக்கப் போடலாம். செல்ஃப் க்ரூமிங் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சருமத்தைப் பராமரிக்க வேண்டியது முக்கியம். வேலைக்குச் செல்கிறவர்களுக்கும் குறைந்தபட்ச மேக்கப் தேவைப்படுகிறது.

தினசரிப் பயன்பாட்டுக்காகவே மைல்டான மேக்கப் சாதனங்கள் கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம். மேக்கப் போடுவது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியம் இரவில் மேக்கப்பை முழுமையாக நீக்குவது. தூங்கும்போது நம் சருமம் சுவாசிக்க ஏதுவாக மேக்கப்பின் மிச்சம் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தில் கவனம் தேவை...

உங்கள் சருமத்துக்கு எந்த மாதிரியான மேக்கப் தயாரிப்புகள் பொருந்தும் என்பதை மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அல்லது சரும மருத்துவர் அல்லது பியூட்டீஷியனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு உபயோகிக்க வேண்டும். தினமும் மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்ற நிலையிலிருப்பவர்கள், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான எல்லா விஷயங்களையும் பின்பற்ற வேண்டும். உதாரணமாக... இரவில் நைட் க்ரீம் பயன் படுத்துவது, காலையில் வைட்டமின் சி சீரம் உபயோகிப்பது, குறிப்பிட்ட இடைவெளிகளில் ஃபேஷியல் செய்வது, வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் உபயோகிப்பது போன்றவை அவசியம்,

மேக்கப்
மேக்கப்

தினமும் மேக்கப் போட்டால் சரும நிறம் கூடுமா?

அப்படியெல்லாம் இல்லை. நடிகைகள் மேக்கப் போட்டுப்போட்டு நிறம் கூடிவிட்டதாகப் பலருக்கும் ஓர் எண்ணம் உண்டு. தினமும் மேக்கப் செய்வதால் நிறம் கூடாது. நடிகைகளும் மாடல்களும் சருமத்தைப் பராமரிப்பதில் அதிகபட்ச அக்கறையைக் காட்டுவார்கள். உணவு, உறக்கம், உபயோகிக்கும் அழகு சாதனப் பொருள்கள் என எல்லாவற்றிலும் அதிக அக்கறை காட்டுவார்கள். அதனால்தான் பிரபலங்களின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. அவற்றைச் செய்கிற யாருக்கும் அந்த மேஜிக் நிச்சயம் நடக்கும்.

மேக்கப் சாதனங்களைத் தேர்வு செய்வது எப்படி?

ஆர்கானிக் தயாரிப்புகள் மிகச் சிறந்தவை. அவை கிடைக்காதபட்சத்தில் தரமான நிறுவனத் தயாரிப்புகளாகப் பார்த்து வாங்கவும்.

மேக்கப்
மேக்கப்

கொஞ்சம் மேக்கப் டிப்ஸ்...

  • தினசரி மேக்கப்புக்கு, பார்ட்டிக்கு என இரண்டு செட் வைத்துக் கொள்ளுங்கள்.

  • டின்ட்டெடு மாயிஸ்சரைசர் இப்போது பிரபலம். இதில் மாயிஸ்சரைசருடன் ஃபவுண்டேஷனும் சேர்ந்து வரும். நீண்ட நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

  • கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஃபவுண் டேஷனை பார்ட்டி மேக்கப்புக்குப் பயன் படுத்தலாம்.

மேக்கப்
மேக்கப்

எத்தனை மணி நேரம் மேக்கப்புடன் இருக்கலாம்?

ஒரு பார்ட்டிக்கோ, விசேஷத்துக்கோ போகிறோம் என்றால், அதற்கான மேக்கப்புடன் குறைந்தபட்சம் நான்கைந்து மணி நேரம் இருப்போம். மேக்கப் போடுவதற்கு முன் சருமத்தை அதற்குத் தயார்படுத்த வேண்டும்.

சிம்பிள் மேக்கப் ரொம்ப ஈஸி!

  • முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். பிறகு வாரம் இருமுறை ஸ்க்ரப் உபயோகிக்க வேண்டும். ஸ்க்ரப் செய்தால்தான் சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்குகள் வெளியேறும். அடுத்து மாயிஸ்சரைசர் தடவ வேண்டும். (காலை நேரத்தில் லைட் வெயிட் வாட்டர் பேஸ்டு மாயிஸ்சரைசரும், இரவில் கொஞ்சம் ஹெவியான மாயிஸ்சரைசரும் உபயோகிக்கலாம்.)

  • அடுத்து சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். அடுத்து ஃபவுண்டேஷன். டின்ட்டெடு மாயிஸ்சரைசர் உபயோகிப்பதானால் ஃபவுண்டேஷன் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். அடுத்து காம்பாக்ட் பவுடர் உபயோகிக்கலாம். கண்களுக்கு காஜல்,ஐ லைனர், மஸ்காரா எனக் கண்களுக்கான மேக்கப், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் உபயோகித்தால் மேக்கப் ஓவர். தினசரி உபயோகத்துக்கு நியூடு ஷேடு லிப்ஸ்டிக் உபயோகிக்கலாம். ஃபங்ஷன்களுக்கு விருப்பமான கலர்களைத் தேர்ந்தெடுக்கலாம். பார்ட்டி மேக்கப்புக்கு கூடுதலாக பிளஷ் ஆன் உபயோகிக்கலாம்.

ஹேண்ட்பேகில் இருக்கவேண்டிய அவசியமான மேக்கப் பொருள்கள்

காம்பாக்ட் பவுடர், டிஷ்யூ (வெட் மற்றும் டிரை டிஷ்யூஸ்), லிப் பாம், லிப்ஸ்டிக்... எக்ஸ்பைரி தேதியில் கவனம்

அழகு சாதனங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அதைத் தாண்டியும் அவற்றை உபயோகிப்பது சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

பகிராதீர்கள்

உங்கள் மேக்கப் பொருள்களை நீங்கள் மட்டுமே உபயோகியுங்கள். அடுத்தவருடன் பகிர வேண்டாம். தவிர்க்க முடியாது என்றால் உபயோகிக்கிற பிரஷ்ஷையாவது தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம்.