
ஷாப்பிங் செய்து பழகிய வாடிக்கையாளர்கள், கொரோனா காரணமாக நீண்டகாலமாக எதையும் வாங்காமல் இருந்ததே காரணம் என்கிறார்கள்.
சென்னையில் நடந்த சம்பவம்தான் அது. மூன்று காவலர்கள் வருகிறார்கள். மூடப்பட்டிருந்த அந்தச் சின்னக் கடையின் ஷட்டரைத் திறக்கிறார்கள். சில நூறு சதுர அடிகளே இருக்கும் அந்தக் கடைக்குள் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில், எந்தச் சமூக இடைவெளியும் இல்லாமல் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல் அந்தக் கடை இயங்கியிருக்கிறது. திடீரென காவலர்கள் வந்ததால் ஷட்டரை மூடியிருக்கிறார் அதன் உரிமையாளர். காரணம் வாடிக்கையாளர்களுக்கும் தெரியும். ஆனால், அவர்களும் கடைக்காரருடன் சேர்ந்து ஒளிந்திருக்கிறார்கள். கடையைத் திறக்கும் காவலர்களுக்கு அதிர்ச்சி. வெளியே அதைவிட மோசம். அங்கே உள்ளேயிருப்பதைப் போல இரண்டு மடங்கு கூட்டம் கடைக்குள் நுழையக் காத்திருக்கிறது. இத்தனைக்கும் அந்தக் கடையில் இலவசமாக எதுவும் தரப்படவில்லை. தள்ளுபடி என்ற அறிவிப்பு மட்டும்தான். ஏன் இந்தக் கூட்டம் என்பதைப் பற்றிப் பேசும்முன், சீனாவில் சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்றையும் பார்த்துவிடலாம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிராண்டு ஒன்று, சீனாவில் தனது கிளையொன்றை கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஏப்ரலில் மீண்டும் திறந்தது. அதன் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு சீனர்கள் வாங்கிக் குவித்தனர். சீன வரலாற்றிலே இது மிகப்பெரிய சாதனை என்கிறார்கள். இதற்கு ‘ரிவெஞ்ச் ஷாப்பிங்’ என்று பெயர்.
ஷாப்பிங் செய்து பழகிய வாடிக்கையாளர்கள், கொரோனா காரணமாக நீண்டகாலமாக எதையும் வாங்காமல் இருந்ததே காரணம் என்கிறார்கள். வாய்ப்பு கிடைத்ததும் ஆசைப்பட்டு வாங்கிக்குவிப்பதைத்தான் `ரிவெஞ்ச் ஷாப்பிங்’ எனக் குறிப்பிடுகிறார்கள். ஷாப்பிங்குக்கு அடிமையானவர்களுக்கு என்ன பொருள் வாங்குகிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான். வாங்க வேண்டும் என்பதே முதன்மை. எனவே அவர்களின் அந்த ஆசையை ஊரடங்கிலும் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. ஆனால், கடை கடையாய் ஏறி இறங்கி, பேரம் பேசி, பொருள்களைத் தொட்டுப் பார்த்து வாங்கும் ஷாப்பிங் ஆசைக்குத்தான் கொரோனா வேட்டு வைத்தது. எனவே இப்போது கடைகளுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள்.

அன்றாடத் தேவைக்கான பணமே இல்லாதவர்கள் இதைச் செய்வதில்லை என நீங்கள் நினைத்தால், ஐ ஆம் சாரி... இந்த ரிவெஞ்ச் ஷாப்பிங் செய்வதற்குப் பொருளாதார நிலைமையும் தடை இல்லை. வீட்டுச் செலவிற்கு வைத்திருந்த காசில் புடவை வாங்கும் பெண்களும். ஒரு மாத சம்பளத்தை அப்படியே கொடுத்துப் புது போன் வாங்கும் ஆண்களும் இன்னும் இருக்கிறார்கள். இன்றிருக்கும் சூழலில் இது நிச்சயம் பிரச்னைக்குரியதே; அதுவும் இந்தியர்களுக்கு இது பிரச்னையே எனப் பல தொழில்சார் வல்லுநர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் நெட்டிசன்கள் ‘இதையாவது செய்துகொள்கிறோம். இல்லையேல் மன அழுத்தம்தான் அதிகமாகிறது’ என்கிறார்கள். ஆனால் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க மறந்து ஷாப்பிங்குக்கு வெளியே போகும்போது கொரோனாவையும் இலவசமாக நாம் வாங்கி வரக்கூடும்.
இதற்குத் தீர்வாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். ஏதேனும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, 50% தள்ளுபடியா, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமா? எல்லாம் சரி... அது அத்தியாவசியத் தேவையா என்பதை மட்டும் ஒரு நிமிடம் நின்று நிதானித்து யோசனை செய்துவிட்டுப் புறப்படுங்கள்.
1. நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் இப்போது அத்தியாவசியமானதா?
a. ஆம்
b. இல்லை
2. நீங்கள் வாங்க விரும்பும் பொருளுக்கு உங்கள் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா?
a. ஆம்
b. இல்லை
3. தள்ளுபடி, இலவசம் போன்ற விளம்பரங்களைப் பார்ப்பதற்கு முன்பே இந்தப் பொருளை வாங்குவது என முடிவு செய்தீர்களா?
a. ஆம்
b. இல்லை
4. என்ன பொருள் வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டு, அந்தக் குறிப்பிட்ட பொருள் வாங்க மட்டுமே ஷாப்பிங் செல்லத் திட்டமிட்டி ருக்கிறீர்களா?
a. ஆம்
b. இல்லை
5. மன அழுத்தம், பொழுதுபோக்கு இவ்வாறான காரணங்கள் இன்றி, பொருளுக்கான தேவை இருப்பதால் ஷாப்பிங் செல்கிறீர்களா?
a. ஆம்
b. இல்லை
மேற்கண்ட கேள்விகளில் இரண்டு கேள்விகளுக்கு மேல் இல்லை என்ற பதிலைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் செய்வது ரிவெஞ்ச் ஷாப்பிங்தான். சிந்தித்துச் செயல்படுங்கள்!