
#Utility
தனித்துவமாகவும் பொலிவாகவும் தெரிய வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கும். அணியும் ஆடை, ஆபரணங்கள், மேக்கப் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தனித்துவமாக, பொலிவாகக் காட்டிக்கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறார் ‘இ புவனா’ பொட்டிக்கின் உரிமையாளர் பிரபாவதி.

அளவு முக்கியம்
எந்த ஆடையாக இருந்தாலும், அதன் அளவு உங்களின் உடல் அளவுக்கு கச்சிதமாகப் பொருந்த வேண்டும். எனவே, சரியான தையற்காரர் அல்லது ஆடை வடிவமைப்பாளரைத் தேர்வு செய்வது அவசியம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய அளவு எடுத்துக்கொள்வது நல்லது. ரெடிமேட் ஆடைகள் வாங்குகிறீர்கள் என்றால் டிரையல் பார்த்து வாங்கவும். சில ஆடைகள் பார்த்தவுடன் பிடித்துவிடும். பெரிய அளவாக இருந்தாலும் ஓகே என்று வாங்கி ஆல்ட்ரேஷன் செய்வார்கள் சிலர். அப்படிச் செய்யும்போது அந்த ஆடைக்கான மொத்த அளவும், வடிவமைப்பும் மாறி விடும். மிகவும் இறுக்கமான ஆடைகள் அசெளகரியமாக இருப்பதுடன், உங்களின் நம்பிக்கையையும் குறைக்கும். எனவே, அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
மெட்டீரியல் தேர்வு
எந்த நிகழ்ச்சிக்காக அணிகிறீர்கள், பகல் நேரமா, இரவு நேரமா என்பதைப் பொறுத்து மெட்டீரியலைத் தேர்வு செய்ய வேண்டும். கேஷுவல் லுக் என்றால் காட்டன், ரேயான் போன்றவை பெஸ்ட் சாய்ஸ். டிரெடிஷனல் லுக் பிரியைகள் ரா சில்க், சில்க், டஸ்ஸர் சில்க் போன்ற மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம். பார்ட்டிக்கான ஆடைகள் என்றால் கிரேப் சில்க், ஜார்ஜெட், சாட்டின். ஆர்கென்ஸா போன்ற மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம். இண்டோவெஸ்டர்ன் எனில், மெட்டீரியல் தேர்வைவிட, ஆடையை எப்படி வடிவமைக்கப் போகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இண்டோ வெஸ்டர்ன் ஆடைகளைப் பொறுத்தவரை வெஸ்டர்ன் ஆடைகளை இந்தியன் வகை ஆபரணங்கள், காலணிகளுடன் மேட்ச் செய்யலாம்.

நிறங்கள்
இப்போது டிரெண்டில் இருக்கும் பேஸ்டல் நிறங்கள் எல்லா ஸ்கின் டோனுக்கும் பொருந்தும் பகல் நேர நிகழ்ச்சிக்குச் செல்லும்போது பேஸ்டல் நிறங்கள் அல்லது லைட் ஷேடு நிறங்களும் இரவு நேர நிகழ்ச்சிக்கு டார்க் ஷேடு, பிரைட் நிறங்களும் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். உங்களுக்கு ஒரு நிறம் பிடிக்கும் என்பதற்காக ஒரே நிறத்திலேயே எல்லா ஆடைகளையும் வாங்கி வார்ட்ரோபை நிறைக்காதீர்கள். எல்லா நிற ஆடைகளும் கலந்திருக்கும்போது உங்களின் ஸ்டைலிங் தனித்துவமாக இருக்கும். ஒரே ஷேடு நிறங்களில் ஆடை அணியும் `மோனோடோனஸ் டிரஸ்ஸிங்' இப்போது டிரெண்டில் உள்ளது. வெஸ்டர்ன் ஆடைகளை மோனோடோனஸாக அணிந்தால் கூடுதல் அழகாக இருக்கும்.

அதிக அக்சஸரீஸ் வேண்டாமே...
ஆடைகள் கிராண்டாக இருக்கும்போது அதிக அளவு அக்சஸரீஸ் அணிவதைத் தவிர்க்கலாம். பெரிய காதணிகள் அணிந்தால் நெக் பீஸைத் தவிர்க்கலாம். நெக் பீஸ் கிராண்டாக இருந்தால் காதணிகளைத் தவிர்க்கலாம். வெஸ்டர்ன் ஆடைகள் அணியும்போது லெதர் பெல்ட்கள், டிசைனர் பெல்ட்கள், ஷூக்களில் கவனம் செலுத்தவும். பொதுவாக கறுப்பு, சில்வர், கோல்டன் நிற காலணிகள் எல்லா ஆடைகளுக்கும் பொருந்தும். காலணிகள் வாங்கும்போது ஸ்டோன் வேலைப்பாடுகள் இல்லாமல் தேர்வு செய்தால் ஒரே காலணியையே வெஸ்டர்ன் மற்றும் டிரெடிஷனல் என இரண்டு அவுட் லுக்குக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உள்ளாடைகளில் கவனம்
சரியான அளவில் உள்ளாடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள். ஆடைக்கேற்ப உள்ளாடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக டிரான்ஸ்பரன்ட்டான ஆடைக்கு ஸ்ட்ராப் இல்லாத உள்ளாடையைத் தேர்வு செய்யலாம்.
மிக்ஸ் மேட்ச்
ஆடைகளில் அதிகமான பணத்தை முதலீடு செய்யாமல் குறைந்த பட்ஜெட்டிலேயே வெரைட்டியான லுக் கொடுக்க மிக்ஸ் மேட்ச் உங்களுக்கு கைகொடுக்கும். வெஸ்டர்ன் அல்லது கேஷுவல் லுக் பிரியைகளின் வார்ட்ரோபில் ஜீன்ஸ், விதவிதமான ஸ்கார்ஃப், லெகின்ஸ், ஊதா, கறுப்பு, மல்டி நிற ஓவர் லேக்கள் இருக்க வேண்டியது அவசியம். உங்களுடைய டாப் கிராண்ட் லுக்கில் இருந்தால் பேன்ட் சிம்பிளாக இருப்பது அவசியம்.
டிரெடிஷனல் லுக் பிரியைகள் என்றால் ஊதா, கறுப்பு, மெரூன் போன்ற பொதுவான நிறங்களில் போட் நெக், காலர் நெக், ஹை காலர், ரவுண்ட் நெக் என வெவ்வெறு விதமான பிளவுஸ்களை வடிவமைத்துக்கொண்டால் எந்தப் புடவைக்கும் மேட்ச் செய்துகொள்ளலாம். பனாரஸி போன்ற மெட்டீரியல்களில் சில துப்பட்டாக்கள் வாங்கி வைத்துக்கொண்டால் வெவ்வேறு குர்தாவுடன் மிக்ஸ் மேட்ச் செய்து கொள்ளலாம். எந்த ஆடையை மிக்ஸ் மேட்ச் செய்யும்போதும் இப்போது எந்த ஸ்டைல் டிரெண்டில் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்களின் வார்ட்ரோபை சுத்தம் செய்து, தேவையில்லாத ஆடைகளை எடுத்து விடலாம். பழைய ஆடைகளில் எம்ப்ராய்டரி, ஸ்டோன், பெயின்டிங் வேலைப்பாடுகள் செய்து நியூ லுக்கில் அணிந்து கொள்ளலாம்.