
போட்டோகிராபி
கானுயிர் புகைப்படக்கலையில் இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கிறார், வருண் ஆதித்யா. கோயம்புத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞரான இவர், `National Geographic Nature Photographer of the Year’ என்ற விருதை 2016-ம் ஆண்டு பெற்றவர். மேலும், சோனி நிறுவனத் தூதுவராகவும், ஆப்பிள் நிறுவன பிராண்டு இன்ஃப்ளூயன்சராகவும் இருக்கிறார். புகைப்படப் பயணத்துக்காக 20 நாடுகளிலுள்ள வன விலங்குகள் சரணாலயங்களுக்குச் சென்றிருக்கிறார். கேமராக் காதலன் வருண், கானுயிர் புகைப்படப் பயணத்தை சுவாரஸ்யமாக விவரிக்க விவரிக்க, விலங்குகள்மீது நமக்கும் நேசம் அதிகரிக்கிறது.

``தற்போதைய வேகமான உலகத்துல, ஒரு போட்டோவை ஒருத்தர் தொடர்ந்து ஐந்து விநாடிகள் பார்த்தாலே பெரிய விஷயம். அதுக்கு அந்தப் போட்டோ குறைந்தபட்சம் ஒரு விஷயத்தை உணர்த்தணும். அப்படியான புகைப்படங்களை எடுக்கத்தான் ஏழு வருஷமா அலைஞ்சுகிட்டிருக்கேன். ஒவ்வொரு ட்ரிப்லயும், 200 போட்டோக்களுக்கு மேல் எடுப்பேன். ஆனா, அதில் ஐந்து போட்டோக்கள்தான் கதை சொல்லும். திருப்தியைக் கொடுக்கும். மற்ற போட்டோக்கள் எல்லாம் நல்லாவே இருந்தாலும், எல்லாத்தையும் அழிச்சுட்டு எனக்கு நானே தண்டனை கொடுத்துப்பேன். அதனாலதான், என் போட்டோகிராபி பயணத்துல தேடலும் நேர்த்தியும் அதிகமாகிட்டே இருக்கு” - உரையாடலின் தொடக்கத்திலேயே நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் வருண்.

``என் பூர்வீகம், கோயம்புத்தூர் வடவள்ளி. பசுமை நிறைந்த இந்த ரம்மியமான பகுதியில் வளர்ந்ததால, சிறு வயதிலேயே எனக்கு இயற்கைமீது நேசம் உண்டாகிடுச்சு. வங்கி அதிகாரிகளாக வேலை செய்த என் பெற்றோருக்கு, அதிக பயணச் சலுகைகள் கிடைக்கும். பள்ளிக் காலம் முடியறதுக்குள்ளேயே என் பெற்றோருடன் இந்தியா முழுக்க டிராவல் பண்ணிட்டேன். பி.காம் முடிச்சதும், எக்ஸாம் சிஸ்டம் கிடையாதுன்னு, லண்டன்ல எம்.பி.ஏ படிச்சேன். அங்க, போன்லயே விதவிதமா போட்டோஸ் எடுத்து, ஆர்குட் மற்றும் ஃபேஸ்புக்ல பதிவிடுவேன். அதற்குக் கிடைச்ச பாராட்டுகள் எனக்கு ஊக்கமா அமைஞ்சது.

படிக்கும் நேரம் தவிர, எல்லா நேரமும் கேமராவும் கையுமா பூங்காக்கள், காடுன்னு ஊர் ஊராச் சுத்தினேன். என் ஒவ்வொரு போட்டோவையும் தெரிஞ்சவங்ககிட்ட காட்டிக் கதை சொல்வேன். போட்டோஸ், கதை சொல்லும்படியா இருந்தால்தான் பார்வையாளர்களைக் கவர முடியும்னு அப்பதான் உணர்ந்தேன். புது கேமரா வாங்கி, போட்டோகிராபி பத்தி தினமும் ஒவ்வொரு விஷயமா கூகுள் பண்ணிக் கத்துக்கிட்டேன். படிப்பு முடிஞ்சு கோயம்புத்தூர் திரும்பி, போட்டோகிராபியில ஈடுபட்டேன்.
ஒரு போட்டியில நான் எடுத்த போட்டோ ஒண்ணு தேர்வாகி, கோஸ்ட்டாரிக்கா மற்றும் பனாமாவிலுள்ள சரணாலயங்களுக்குப் போக 50 சதவிகித கட்டணச் சலுகை கிடைச்சது. அந்த 15 நாள்கள் பயணத்துல, நிறைய அனுபவங்கள் கிடைச்சது. பிறகு, 2013-ம் ஆண்டு, வைல்டுலைஃப் போட்டோகிராபியை என் கரியரா தேர்வு செய்தேன். தொடர்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள சரணாலயங்களுக்குப் போய் விலங்குகளை போட்டோஸ் எடுத்திட்டிருந்தேன்.” - உற்சாகம் குறையாமல் பேசுகிறார், விலங்குகளின் நேசனான வருண்.

``எனக்குப் பெரிய பலமே, பெற்றோர்தான். வைல்டுலைஃப் போட்டோகிராபி, காஸ்ட்லியான ஹாபி. கேமரா, லென்ஸ்னு இதுவரை பல லட்ச ரூபாய் செலவழிச்சிருக்கேன். ஒவ்வொரு முறையும் பெற்றோர் லோன் வாங்கிக் கொடுக்க, அதைப் படிப்படியா அடைப்பேன். `போட்டோகிராபியை விட்டுட்டு, நிரந்த வருமானம் வரும் வேலைக்குப் போ’ன்னு என் திறமைக்கு எதிர்மறையா ஒருநாளும் பெற்றோர் பேசினதேயில்லை. என்மேல நம்பிக்கைவெச்சு, சுதந்திரமாச் செயல்பட ஊக்குவிச்சாங்க. வைல்டுலைஃப் போட்டோகிராபியை ரசிச்சுச் செய்தேன்.

இந்த நிலையில, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள அம்போலி காட்டில், பறக்கும் `மலபார் கிளைடிங்’ (Malabar Gliding) வகை தவளைகளை போட்டோஸ் எடுக்கப் போயிருந்தேன். அங்கே, ஜூன் - ஆகஸ்ட்வரை தினமும் 10 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும். அந்த வகைத் தவளைகளையும், கிரீன் வைன் பாம்புகளையும் மழை நேரத்தில் அரிதாகவே பார்க்க முடியும். மழையில் நனைந்தபடி கீழே சகதியில் படுத்து, தவளையை போட்டோ எடுத்துட்டிருந்தேன். அப்போ கிரீன் வைன் பாம்பு ஒண்ணு தென்பட, உடனே லென்ஸை மாத்தி, அதைப் பக்கத்துல இருந்து போட்டோ எடுத்தேன். தலா ஒரு பாம்பு மற்றும் தவளை போட்டோவை `நாட்ஜியோ’ போட்டிக்கு அனுப்பினேன்.

பாம்பு போட்டோவுக்கு, `National Geographic Nature Photographer of the Year’ என்கிற விருதுடன், 2,500 அமெரிக்க டாலர் பரிசும் கிடைச்சது. வைல்டுலைஃப் போட்டோகிராபியில், இரண்டாவது உயரிய விருது இதுதான். `எங்களை மறந்து, நீங்க எடுத்த போட்டோவை நீண்ட நேரம் பார்த்துட்டிருந்தோம்’னு விருதுக் குழுவினர் என்கிட்ட சொன்னது பெருமையா இருந்துச்சு. நான் போற பாதை சரின்னு உணர்த்தியது அந்த விருதுதான்.

பிறகு, `Expanded Expeditions’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். போட்டோகிராபியில ஆர்வமுள்ளவர்களைக் குழுவாகவும் தனியாகவும் சரணாலயங்களுக்கு அழைச்சுட்டுப் போய், பயிற்சியும் கொடுக்கிறேன். ஃப்ளாஷ் போடாம, மாறுபட்ட நேச்சுரல் லைட்டிங் மற்றும் பருவநிலையில் விலங்குகளை போட்டோஸ் எடுக்கிறதில்தான் எனக்கு அலாதியான ஆர்வம்.

இந்தியாவில் சஃபாரிக்கு அனுமதியுள்ள எல்லாச் சரணாலயங்களுக்கும், ஏராளமான வெளிநாடுகளுக்கும் போட்டோஸ் எடுக்கப் போயிருக்கேன். இயற்கை மற்றும் விலங்குகள்கிட்ட இருந்து நிறைய பொறுப்புணர்வுகளைக் கத்துக்கிறேன். அதனால, ஒவ்வொரு முறையும் புதுசா சரணாலயத்துக்குப் போற உணர்வுதான் ஏற்படுது” என்கிற வருணின் சமூக வலைதளப் பக்கங்களைப் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

சவாலான பயணம் ஒன்றை நினைவுகூர்பவர், ``கரடிகள் மற்றும் ஓநாய்களை போட்டோ எடுக்க, ஒருமுறை பின்லாந்து போயிருந்தேன். பனிச்சாலைகளில் 41 மைல் கடந்து, சரிவரத் தூங்கக்கூட இடவசதியில்லாத ஒரு டென்ட்டில் தனியா தங்கினேன். மைனஸ் 15 டிகிரி செல்ஷியஸ் குளிர். தண்ணீர் மட்டுமே குடித்துப் பல மாதங்கள் உயிர் வாழும் அங்கிருக்கும் கரடிகள், பெரும்பாலும் குகைகளிலேயே வசிக்கும். நாலு நாள்கள் ஏமாற்றத்துக்குப் பிறகு, ஐந்தாவது நாள்தான் சில கரடிகளை போட்டோஸ் எடுக்க முடிஞ்சது. ஆனா, ஓநாய்கள் கண்ல சிக்கலை. இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் விளம்பரத்துக்காக நான் எடுத்த மூன்று வைல்டுலைஃப் போட்டோக்களைத் தேர்வுசெஞ்சு இந்த ஆண்டு உலகின் பல நாடுகளில் விளம்பரப்படுத்தியது. அது எனக்குப் பெருமையான விஷயம். இப்போ 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களைப் பயன்படுத்துறேன். வருமானத்துக்கான வழிகளையும் அதிகப்படுத்திட்டிருக்கேன். இன்னும் பெரிய அளவுக்கு உயரணும். நான் எடுத்த படங்களைப் பலர் பாராட்டினாலும், இன்னும் என்னால சிறப்பா போட்டோஸ் எடுக்க முடியும். எனக்குத் தன்னிறைவு வந்த பிறகுதான், நான் எடுத்த படங்களைக் கொண்டு கண்காட்சி அமைப்பேன்.

காடுகளுக்குள் சென்றாலே நம்மை அறியாமல் புத்துணர்ச்சி கிடைக்கும். விலங்குகளை நேசிக்க ஆரம்பிச்சா, அவற்றின் வாழ்வும் நல்லா இருக்கும்; மனிதர்களும் மன அழுத்தம் இல்லாம, மகிழ்ச்சியா இருக்கலாம். வைல்டுலைஃப் போட்டோகிராபிக்கு நம்ம செல்போனே போதுமானதுதான். பார்த்ததுமே ஒரு விலங்கை போட்டோ எடுக்காம, சில விநாடிகள் காத்திருந்து கொஞ்சம் வித்தியாசமான கோணத்துல `க்ளிக்’ பண்ணணும். நம்ம போட்டோ கதை சொல்லணும். அப்படி நிகழ்ந்தால், எல்லோருமே சிறந்த வைல்டுலைஃப் போட்டோகிராபர்தான்.” - புன்னகையுடன் விடைபெறும் வருண், `நேஷனல் ஜியோகிராபிக்’ நிறுவனத்துடன் இணைந்து விரைவில் பணியாற்றவிருக்கிறார்.
வாழ்த்துகள் வருண்!