கார்ஸ்
Published:Updated:

இன்னும் ஜேசிபி மட்டும்தான் ஓட்டலை!

ஷர்மிளா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷர்மிளா

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

இன்னும் ஜேசிபி மட்டும்தான் ஓட்டலை!

“அண்ணா சாரிங்ணா… டிரைவிங்ல இருந்தேனுங். டிரைவிங்ல நம்ம போன் எப்பவும் நாட் ரீச்சபிள்தான். கடவுளே கூப்பிட்டாலும் டிரைவிங்கில் இருக்கறப்போ பேசமாட்டேன்!” - வண்டியை ஸ்டார்ட் செய்து சில நொடிகளில் டாப் கியரில் பாய்வதைப்போல படபடவெனப் பேசினார் ஷர்மிளா.

‘‘என்ன, போன் எடுக்கமாட்றீங்க.. ஹெட் வெயிட் ஆகிட்டீங்க’னு சில பேரு சொல்றாங்க. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. 150 - 200 பேர் டிராவல் பண்ற பஸ்ஸை என்னய நம்பிக் குடுத்துருக்காங்க. எனக்கு ஏதாச்சுனா அது என் குடும்பத்தை மட்டும்தான் பாதிக்கும். அதுவே மக்களுக்கு ஏதாவதுனா அது எல்லாரையும் பாதிக்கும். நான் ரொம்ப எக்ஸ்பெர்ட் டிரைவர் எல்லாம் இல்ல. செல்போன் எல்லாம் ஒரு செகண்ட்ல கவனத்தைச் சிதறடிச்சுடும். அதனால டிரைவிங்ல ஸ்ட்ரிக்டா செல்போனுக்கு நோதான்!’’ எனும் ஷர்மிளாவை நேரில் பார்த்தால், யாரும் ஹெட்வெயிட் என்று சொல்லமாட்டார்கள்.

கோவையின் சமீபத்திய ட்ரெண்டிங் ஷர்மிளா. பெண்கள் கியர் பைக் ஓட்டினாலே அழகாக இருக்கும்; கிட்டத்தட்ட 9 டன்னுக்கும் மேல் எடை கொண்ட… 11 மீட்டருக்கு மேல் நீளமான அத்தனை பெரிய பேருந்தை, டிரைவர் சீட்டில் உட்கார்ந்து தனது மெல்லிய கைகளால் ஸ்டீயரிங் திருப்பி…இடது வலது என ஷர்மிளா லேன் மாற்றி ஓட்டுவது… அத்தனை அழகு மட்டுமில்லை; தன்னம்பிக்கையும்கூட!

பைக் ஓட்டுவதற்கே பெண்கள் இன்னும் முழுமையாக வெளியே வராத இந்தச் சூழ்நிலையில், ஹெவி வெஹிக்கிள் லைசென்ஸ் எடுத்து கோவை மாவட்டத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகி உள்ளார் ஷர்மிளா. உங்களுக்கு கோவை காந்திபுரம் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து சோமனூர் செல்லும் 20A பேருந்தில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தால்… ஹர்மிளாவின் டிரைவிங்கை ரசிக்க வாய்ப்பும் கிடைக்கும்.

“சின்ன வயசுல இருந்து வண்டிகள் மேல ஆர்வம் அதிகம். எங்ககிட்டஒரு ஹீரோ ஹோண்டா பைக் இருக்கு. அதுலதான் பைக் ஓட்டிப் பழகினேன். அப்பா மகேஸ் மினிடோர்ல சிலிண்டர் டெலிவரி பண்ணிட்டு இருக்காங்க. 7–ம் க்ளாஸ் படிக்கறப்ப பல்ஸர் 220, யமஹா FZ ஓட்டப் பழகிட்டேன். பைக்கையே ஓட்டினா எப்படினு அப்பதான் அப்பாவோட மஹிந்திரா மேக்ஸிமோ பிக்–அப் ட்ரக் எடுத்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமா வண்டிய மூவ் பண்ணிட்டு… ஃபர்ஸ்ட் கியர்ல வண்டிய எங்க ஏரியாக்குள்ளயே ஓட்டுவேன். அப்பா பக்கத்துல இருந்து அப்படியே கியர் மாத்தறது எல்லாம் சொல்லிக் கொடுத்தார். 8–ம் க்ளாஸ் வரப்ப வண்டிய ஒரு ரவுண்ட் நல்லா ஓட்டி நிறுத்தற அளவுக்குப் பழகிட்டேன். ஆனா, லைசென்ஸ் இல்லையே! அதனால் கட்டுப்பாடோட இருந்தேன்.

எங்ககிட்ட கார் இல்ல. இருந்தாலும் ஆசையா இருந்துச்சு. லோடு வண்டியவிட கார் ஈஸினு சொன்னாங்க. மாமாவோட கார்ல ஓட்டிப் பழகினேன். யார் வந்தாலும் அவங்க வண்டில ஒரு ரவுண்ட் அடிச்சுடுவேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்து அவங்களே, ‘இந்தாடா ஓட்டிப் பாரு’னு குடுக்க ஆரம்பிச்சாங்க.

இன்னும் ஜேசிபி மட்டும்தான் ஓட்டலை!
இன்னும் ஜேசிபி மட்டும்தான் ஓட்டலை!

அப்பவே எல்லோரும் ‘ரைடர்’னுதான் கூப்பிடுவாங்க. (… அதான் இன்ஸ்டாவில் ரைடர் ஷர்மிளானு ஐடி க்ரியேட் பண்ணியிருக்கீங்களா!) எப்போடா 18 வயசு ஆகும்னு காத்திருந்தேன். 18 வயசு முடிஞ்சப்போ – 2 வீலர், 4வீலர் ரெண்டுக்கும் சேர்த்து உடனே லைசென்ஸ் எடுத்தேன்.

எனக்கு பைக்கில் பல்ஸர் 220 ரொம்பப் பிடிக்கும். கார்ல இனோவாதான் ரொம்பப் பிடிக்கும். நான் ரொம்ப தூரம் எல்லாம் டிராவல் பண்ணதில்ல. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பைக் வாங்கிட்டு பக்கத்துல பொள்ளாச்சி, கேரளா வரை போயிட்டு வந்துருக்கேன். ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்கி ஓட்டணும்னு ஆசை. அப்பாவும் டிரைவர்னால சின்ன வயசுல இருந்தே எந்த டிரைவரைப் பார்த்தாலும் டாடா காட்டறது, அவங்ககிட்ட, ‘எப்படி இருக்கீங்க’னு எல்லாம் விசாரிப்பேன். நிறைய வொர்க் ப்ரஷர் இருக்கறதால, என்கிட்ட பேசறப்ப அவங்களைச் சிரிக்க வைக்கணும்னு நினைப்பேன். ‘நீ இதுக்கு ஆசைப்படாத; நீ வெள்ளைச் சட்டை போடணும்’னு அப்பா சொன்னார். எனக்கு வெள்ளை மேல ஈர்ப்பு இல்லை. காக்கிதான் பிடிச்சுது. பார்மஸி படிச்சு முடிச்சுட்டு கொஞ்ச நாள் ஆம்னி வேன்ல ஸ்கூல் ட்ரிப் எடுத்துட்டு இருந்தேன். கொரோனா காலத்துல அது தடையாகி, ஆட்டோ வாங்கி ஓட்டத் தொடங்கினேன். ஆட்டோ ஓட்டுறது ரொம்ப ஈஸி. என்ன முதுகு வலி மட்டும் அதிகமா இருக்கும். கொரோனா நோயாளிகளுக்காக ஆட்டோ ஓட்டின அனுபவம் எல்லாம் மறக்கவே முடியாது.

அப்புறம், பஸ் ஓட்ட ஆசைப்பட்டு ஹெவி வெஹிக்கிள் லைசென்ஸ்க்குப் பயிற்சி எடுத்தேன். இருந்தாலும் இவ்வளவு பெரிய பஸ்ஸை என்னால ஓட்ட முடியுமானு பயம் வந்துச்சு. அப்பாதான், ‘உன்னால முடியும். பழகப் பழக எல்லாம் ஈஸி’னு சொன்னாரு. முதல் நாள் பயிற்சில நான் சீட்ல உட்காராம பயந்து வெளிய நின்னுட்டேன். பயிற்சியாளர் மோகன் சார்தான் ஊக்கம் கொடுத்தார். 100 மீட்டர் வரை கை கால் நடுக்கம் இருந்துச்சு. அப்பறம் நம்பிக்கை வந்துடுச்சு.

நான் லைசென்ஸ் வாங்கினப்ப என்கூட மொத்தம் 15 பேர் எடுத்தாங்க. எல்லாரும் ஆண்கள். நான் மட்டும்தான் பொண்ணு. ரொம்ப ஆச்சர்யமா பார்த்தாலும் யாரும் பேசாம ஒதுங்கி ஒதுங்கி இருந்தாங்க. நான் எல்லார்கிட்டயும் ஈஸியா பழகிடுவேன். அவங்ககிட்ட நானா போய் பேசினேன். எல்லாருக்கும் பிடிச்சுப் போய் டிரைவிங்ல டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆட்டோ ஓட்டறப்ப வேகமா கட் அடிச்சு, கட் அடிச்சுப் போயிடுவேன். எதைப் பத்தியும் யோசிக்க மாட்டேன். இப்ப ஹெவி வெஹிக்கிள் ஓட்டறப்பதான் அந்த வலி புரிஞ்சுது. இனி அந்தத் தப்பைப் பண்ணமாட்டேன். சின்ன வண்டி மாதிரி ஹெவி வெஹிக்கிளை டக்குனு நிறுத்த முடியாது. அதனால இனி ஆட்டோ ஓட்டறப்ப முதல்ல ஹெவி வெஹிக்கிளுக்கு வழி விட்டுருவேன்.

பொதுவா டிராபிக் அதிகமா இருக்கறப்ப ரைட்லயே போகணும்னு சொல்லுவாங்க. ஆனா, லெஃப்ட்லயே மெய்ன்டெய்ன் பண்ணிப் போனா டிராஃபிக்ல சிக்காமப் போயிடலாம்னு அப்பா சொல்லிக் குடுத்துருக்கார். அந்த டிரிக் எனக்கு ரொம்பவே உதவியா இருக்கு. எல்லாம் ரைட்ல ஏறிப் போய் டிராஃபிக்ல சிக்கிடறாங்க. நான் அப்படியே லெஃப்ட்லயே மெய்ன்டெய்ன் பண்ணி சீக்கிரம் போய்டுவேன்.

கோயம்புத்தூர் தாண்டி மத்த ஊர்ல வண்டி ஓட்டினது ரொம்பக் கம்மி. அதிகமா குடும்பத்தோட கோயிலுக்குத்தான் போவேன். நான் ஊட்டிகூடப் போனதில்ல. குடும்பத்தோட ஒருநாள் ஊட்டி போயிட்டு வரணும். இப்ப ஜே.சி.பி தவிர எல்லா வண்டியும் ஓட்டுவேன். சீக்கிரமே ஜேசிபியும் ஓட்டக் கத்துக்குவேன். நான் முன்னாடி 10 மீட்டர் பஸ் ஓட்டிட்டு இருந்தேன். இது 12 மீட்டர் பஸ். நல்லா பெரிய வண்டி. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. இப்ப வண்டி என் பேச்சைக் கேக்க ஆரம்பிச்சுருச்சு. வெயிலும், இன்ஜினோட சூடும்தான் தாங்க முடியல. டிரைவிங்கில் ஒவ்வொரு நாளும் நிறையக் கத்துக்கிட்டே இருக்கேன்.

இப்ப என்னைப் பார்க்கற எல்லோரும் ரொம்பப் பெருமையா பேசறாங்க. ஆம்புலன்ஸ் வண்டிக்குக் கிடைக்கற மரியாதை நமக்குக் கிடைக்குது. கோவையே எனக்கு வழிவிடுது. இதே அங்கீகாரம் எல்லா டிரைவர்களுக்கும் கிடைக்கணும். எவ்வளவோ ப்ரஷர், பிரச்னைளை எல்லாம் வெளிக்காட்டமா நம்மளப் பாதுகாப்பா கூப்பிட்டுப் போற டிரைவர்கள் கண்ணுக்குத் தெரியற கடவுள் மாதிரி. அவங்களைக் கஷ்டபடுத்தாம இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கணும்!” என்றார் ஹெட்வெயிட் இல்லாமல் ரைடர் ஷர்மிளா!

போலாம் ரைட்..!