
‘உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்வதென்று சொல்லிக் கொடுங்கள் அம்மாக்களே’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
பெண்களுக்கு தலைகுனிந்து நடக்கக் கற்றுக் கொடுத்தோம்; புழுங்கும் மாதங்களிலும் இழுத்துப் போர்த்திக் கொள்ளப் பழக்கினோம்; அடக்க, ஒடுக்கம் பயிற்றுவித்தோம். எந்தப் பயிற்சியுமே பாலியல் தொல்லையிலிருந்து பெண்களைக் காக்கவில்லை என்பதால், `பெப்பர் ஸ்பிரே' கண்டுபிடித்தோம். கைப்பை யில் கொஞ்சம் மிளகாய்த்தூளை மடித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தினோம். கூட்டுப் பாலியல் வன்கொடுமையிடம் மிளகும், மிளகாயும் தோற்றுப் போயின. மனம் தளராத சமூகம், ‘உன்னோட ஜாக்கெட் ஓர் இன்ச் இறங்கியிருந்தது; உன்னோட ஸ்கர்ட் ஓர் இன்ச் ஏறியிருந்தது; இருட்டுன பிறகு உன்னை யாரு வெளியே போகச் சொன்னது’ என்று பெண்கள் பக்கமே குற்றத்தைத் திருப் பியது. பச்சிளம் குழந்தைகளும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பாததால், அவர்களுக்கு குட் டச், பேட் டச் வகுப்பெடுத்தது.

சமீப வருடங்களாக, ‘உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்வதென்று சொல்லிக் கொடுங்கள் அம்மாக்களே’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அரசாங்கமும் சட்டமும் 1091, 1098, காவலன் செயலி, போக்சோ, விசாகா, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால், ‘திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்’ என்கிற நிலைமைதான் இன்று வரை தொடர் கிறது. பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளும் போராட் டத்தில் எதிர்பாராதவிதமாக சம்பந்தப்பட்ட ஆணின் உயிருக்கு ஊறு விளைவித்து விட்டாலோ அல்லது அந்த ஆணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்கு தாக்கி விட் டாலோ, சட்டமும் காவல்துறையும் அந்தப் பெண்ணை எப்படி நடத்தும் என்பதை விளக்கத்தான் இந்தக் கட்டுரை.

உங்களுக்கு தண்டனை தரப்பட மாட்டாது!
வழக்கறிஞர் சாந்தகுமாரி, ‘`தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை எல்லா உயிர் களுக்கும் உண்டு. ஒருவன் என்னைக் கொல்ல வருகிறான்; அவன் அடித்தால் நான் இறந்து விடுவேன்; என் மீது ஆசிட் வீச வருகிறான்; என்னை வெட்ட வருகிறான்; என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வருகிறான்; என்னைக் கடத்த முயற்சி செய்கிறான்... இப்படிப்பட்ட ஆபத் தொன்றில் சிக்கிக்கொண்ட பெண்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தில் எதிராளி யைத் தாக்குவது தற்காப்பு. அந்தப் போராட்டத்தில் தன்னைத் தாக்க வரும் ஆணுக்கு உயிராபத்து ஏற்படுத்திவிட்டாலும், அது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. சம்பந்தப்பட்ட பெண் கொலைக் குற்றவாளியும் கிடையாது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 100 இப்படித்தான் சொல்கிறது’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

எதிர்பாராமல் நிகழ்ந்ததா?
மனநல மருத்துவர் ஷாலினி, ‘`இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது தற்செயலாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்தாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சில நேரம் மனநல மருத்துவரின் கருத்தையும் காவல் துறையினர் நாடுவர். மனநல மருத்துவர் செய்யும் உண்மை அறிந்துகொள்ளும் பரிசோதனையும் ‘எதிர்பாராமல் நிகழ்ந்தது’ என்கிற உண்மையை உறுதிப்படுத்தும்’’ என்று அச்சம் போக்குகிறார்.

குற்றம் குற்றமாகாத சந்தர்ப்பம் இது!
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி, ‘`இந்திய தண்டனை சட்டத்தின் பெருமைகளில் ஒன்று இந்த செக்ஷன் 100. ஆபத்தில் சிக்கிக் கொண்டவர் மட்டுமல்ல, ஆபத்திலிருக்கிறவரை காப்பாற்ற முயற்சி செய்பவர் ஏற்படுத்தும் கொடுங் காயமும், உயிராபத்தும்கூட மன்னிக்கப்பட வேண்டும் என்கிறது இந்த செக்ஷன். குற்றம் குற்றமாகாத சந்தர்ப்பம் இது என்கிறது இந்திய தண்டனை சட்டம். பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பவம் நடந்தவுடன் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடையலாம். அங்கே தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தாக்கினேன் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். அடுத்து, உதவி கண்காணிப்பாளர், காவல் உதவி ஆணையர் போன்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்து அந்தப் பெண் சொல்வது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவார்கள். படிப்பு, வேலை என பல இடங்களுக்கும் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பெண்களுக்கு, சட்டப் படி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் தெரிய வேண்டும்’’ என்கிறார்.

செக்ஷன் 100-ன் கீழ் ஒரு பெண்ணை விடுதலை செய்தேன்!
2012-ல் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை செக்ஷன் 100-ன் கீழ் காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் விடுவித்தது, அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டது. அதுகுறித்து அவரிடம் பேசினோம்.
‘`அந்தச் சம்பவம் நடந்தபோது நான் மதுரை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்தேன். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவரின் கணவர், தங்கள் மகளையே வன்புணர்வு செய்ய முயல்வதைப் பார்த்திருக்கிறார். மகளைக் காப்பாற்றுவதற்காகக் கையில் கிடைத்த கிரிக்கெட் மட்டையால் கணவனைத் தாக்கியிருக்கிறார். அதில் கணவர் உயிரிழந்துவிட, அவரே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து கணவரின் உடலை அனுப்பி விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார். முதல்கட்டமாக இரண்டு சப் இன்ஸ் பெக்டர்களை வைத்து அந்தப் பெண்ணை விசாரணை செய்தேன். விசாரணையின் முடிவில், ‘இந்த ஆள் இதற்கு முன்னாலும் மகளை வன்புணர்வு செய்ய முயற்சி செய்திருக்கிறான். ஊரில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது’ என்றனர். அடுத்தகட்ட விசாரணையை டிஎஸ்.பி, அடிஷனல் எஸ்.பி லெவலில் இருந்த அதிகாரிகளின் மூலம் செய்ய வைத்தேன். அந்தப் பெண் சொன்னதும், சப் இன்ஸ்பெக்டர்கள் விசாரணையில் சொன்னதும் உறுதியானது. உடனே, அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டு, மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்தேன். அவர்கள் என்னை இந்திய தண்டனை சட்டம் 100-ஐ வாசிக்கும்படி வழிகாட்டினார்கள். அதன்படி, அந்தப் பெண்ணை விடுதலை செய்தேன்.
கணவரின் தரப்பில் உயர் நீதிமன்றம் வரை சென்றார்கள். அந்தக் கணவரின் இயல்பு, இதற்கு முன்னரும் அவர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது, எப்படிப்பட்ட சூழலில் அவர் மனைவி இப்படிச் செய்தார், பிணக்கூராய்வு சான்றிதழ், அந்தப் பெண்ணுடைய மகளின் அறிக்கை என அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பித்தோம். அந்த இறுதி அறிக்கையை மதுரை நீதிமன்றம், ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தது’’ என்றார்.
குற்றம், குற்றமாகாத சூழலில் தற்காப்பால் உந்தப்படுவோம்!